கடந்த வெள்ளிக்கிழமை இரவு காட்சிக்கு விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு சென்றேன். படம் பார்த்துட்டு வரும்போது எனக்கு ஒன்னு மட்டும் தெளிவா புரிஞ்சிது.. கௌதம் மேனன் காலேஜ் படிச்சிட்டு சினிமா இயக்குனராக முயற்சித்த வேளையில் ஒரு ஓமன பெண்ணை “வீட்டை தாண்டி வருவாயா” ன்னு கேட்டு இருக்கார். மேடம் வரவில்லை. அந்த பீலிங்க்ஸ் தான் இப்போ “விண்ணைத்தாண்டி வருவாயா” வாக வெள்ளித்திரையில்… இது முழுக்க முழுக்க கௌதம் மேனனின் சுயசரிதம். சுயசரிதம்னு சொல்றத விட அந்த பொண்ணு இந்த படத்த பார்த்து பீல் பண்ணனும்ன்னு எடுத்திருப்பார் போல.. “நான் ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்ணினேன்? நான் ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்ணினேன்?” படம் முழுக்க ஒரே பீலிங்குதான். எது எப்படியோ… அவர் ஒரிஜினல் மனைவி அவர பார்த்து வடிவேலு தோனியில “ஏய்… என்ன பீ…லிங்கு? ராஸ்கல்”ன்னு கேட்காமல் இருந்தால் சரி.. அவ்வளோ உருகி இருக்கார் மனுஷன்….
சரி படத்துக்கு வருவோம்…. படம் நல்லா இருக்கா இல்லையா? ஓடுமா ஓடாதா? பதில்.. படம் “ஓடும் ஆனா ஓடாது” ரகம். எப்படின்னு கேட்கறீங்களா?… உங்களுக்கு ஏற்கனவே ஒரு முதல் காதல் தோல்வியில் முடிந்து உள்ளதா? அதுவும் கேரள பெண்ணா? மென்மையான காதல் படம் பிடிக்குமா? அட இதை விட ஒரு சூப்பர் படம் உலகத்துல இல்லை. காதலை பத்தி இதுக்கு மேல மென்மையாக, கவிதைத்துவமாக யாராலும் எடுக்க முடியாது. அவ்ளோ நுணுக்கமான எமோசனல் பிலிம்.
உங்களுக்கு காதல் தோல்வி வந்தது இல்லையா? மென்மையான(!!??) காதல் பிடிக்காதா? உங்களுக்கு பொறுமையாக படம் பார்க்க முடியாதா? காமடி, சண்டை வச்ச மசாலா படம் தான் புடிக்குமா? நீங்கள் அந்த ரகம் என்றால் தயவு செஞ்சு போயிடாதீங்க.. இத விட பெரிய மொக்கை படம் உலகத்து இல்லைன்னு பீல் பண்ணுவீங்க. படம் முழுக்க கடைசி வரைக்கும் சிம்பு திரிஷா பேசிகிட்டே இருப்பாங்க. என்ன பேசறாங்க எதுக்கு பேசறாங்கன்னு உங்களுக்கு சத்தியமா புரியாது.. சோ வேணாம் விட்டுடுங்க.
முதலில் சொன்ன ரசிகர்களுக்கு படத்தை பற்றி மேலும்.. இது ஒரு இசை விருந்து.. ரஹ்மான் பின்னி இருக்கார். பின்னணி இசை மனதை வருடும் ரகம். கேமரா அருமையோ அருமை.. அதுவும் முக்கியமாக கேரளாவில் எடுக்கப்பட்ட காட்சிகள்.. சிம்பு படத்திற்கு தேவையான அளவு நடித்திருக்கிறார்.. பெரிய பிளஸ் அது.. இந்த படத்திற்கு பிறகு சிம்புவிற்கு ரசிகர் பட்டாளம் அதிகரிக்கும் என்பது நிச்சயம். ஆனா த்ரிஷாவ பத்தி தான் என்ன சொல்றதுன்னு தெரியல.. ஒரு சீன்ல நல்லா இருக்கு.. இன்னொரு சீன்ல நல்லாவே இருக்க மாட்டேங்குது.. ஒரு சீன்ல நல்லா நடிக்கிது. ஆனா இன்னொரு சீன்ல ஓவரா நடிக்குது.. இத நான் சொன்னா யாரும் நம்ப மாட்டேன்கிறாங்க. ஒரே வார்த்தைல த்ரிஷா இந்த படத்துல சூப்பர்ங்கறாங்க!!! கடவுளே….
படத்தோட கதை என்னனு கேட்டீங்கனா.. கார்த்திக்.. அதாவது சிலம்பரசன், மெகானிகல் இன்ஜினியரிங் முடிச்சிட்டு உதவி சினிமா இயக்குனராக வேலை செய்ய முயற்சித்து கொண்டு இருக்கும் வேளையில், ஜெஸ்ஸி.. அதாவது த்ரிஷாவை பார்கிறார். பார்த்தவுடன்.. லவ்.. டூயட்…. “உலகத்துல எவ்ளோ பொண்ணுங்க இருக்கும் போது நான் ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்ணினேன்?.” படம் முழுக்க இதே வசனம் தான். த்ரிஷா படத்துல ஒரு சராசரி லூசு பொண்ணு. கொஞ்சம் நேரம் சிம்புவ லவ் பண்றாங்க.. கொஞ்ச நேரம் கழிச்சு இது ஒத்து வராது.. நீ கெளம்பு காத்து வரட்டும்னு மாத்தி மாதி பேசும் ரகம். சிம்புவே ஒரு கட்டத்துல “நீ கடைசில என்ன தான் சொல்லவர? லவ் பண்றியா இல்லையான்னு” கோவப்படுவாப்ள. கடைசில மேடம் சிம்புவ விட்டுட்டு வேற யாரையோ கல்யாணம் பண்ணிட்டு போய்டுவாங்க. சிம்பு அந்த பொண்ண நெனச்சி அவர் காதலை திரைக்கதை வசனம் எழுதி ஒரு படத்த எடுப்பாரு.. படம் சூப்பர் டூபர் ஹிட். படத்தோட பேரு “ஜெஸ்ஸி”.. படத்தோட கதைக்கரு “உலகத்துல எவ்ளோ பொண்ணுங்க இருக்கும் போது நான் ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்ணினேன்?”…
தியேட்டர் கமெண்ட்ஸ்:
(பொறுமை இழந்த) பக்கத்து இருக்கை அன்பர்: “சேலத்துல எவ்ளோ படம் ஓடும் போது நான் ஏன் இந்த படத்துக்கு வந்தேன்??!!!”
என்னுடைய மாமாவின் கடைசி மூச்சிற்கு சரியாக இன்றோடு ஒரு வருடம் முடிவடைகிறது. புற்றுநோய்க்கு வயது வித்யாசம் தெரியுமா என்ன? முப்பத்தெட்டு வயதே உடைய மனிதரை அணு அணுவாய் சித்ரவதை செய்து கொலை செய்தது அந்த புற்று நோய். தான் சாகும் நாள் தெரிந்தே வாழ்வது தான் உலகத்தில் மிகபெரிய கொடுமை. அந்த மனவேதனையை சுமந்து கொண்டு இருப்பது சாமன்யமல்ல.
நிறைய உயிரிழப்புகளை நாம் நம் வாழ்கையில் சந்திக்க நேரிடுகிறது. ஆனால் நமக்கு மிகவும் நெருக்கமானவர்களின், மிகவும் விருப்பமானவர்களின் இழப்பு தான் நம் மனதை புரட்டி போடும். அந்த வகையில் இது என் வாழ்கையில் எனக்கு மிகவும் மறக்க முடியாத சம்பவம்.
என் வாழ்கையில் நான் நிறைய கற்றுக்கொண்டது அவர் இறப்பிற்கு பின்னரே. முதல் நாள், உயிருடன் இருக்கும் வரை நம்முடைய பெயர் நமக்கு சொந்தம். இரண்டாம் நாள், நாம் இறந்த பிறகு நம்முடைய பெயர் பிணம். மூன்றாம் நாளோ அதன் பெயர் ஹஸ்தி. இருக்கும் வரை உயர்திணையில் நம்மை அழைக்கும் இவ்வுலகத்திற்கு இறந்த பின் நாம் வெறும் அக்றினையே.
போட்டி, பொறாமை போன்றவைகள் மனிதனின் வெறும் அற்ப ஆட்டங்கள். ஆட்டம் அடங்கினால் அவன் இந்த உலகத்தின் வாழ்ந்ததற்கான சுவடுகள் கூட இருக்காது. காலம் அதை தேடிச்சென்று அழித்துவிடும். இறந்தபின் நமக்காக சிந்தப்படும் கண்ணீர்த்துளிகளும், அவர்களின் மனதில் எழும் நம்முடைய இழப்பும் தான் நாமும் இந்த உலகத்தில் வாழ்ந்ததற்கான அடையாளங்கள். அவர் எங்களுடைய நினைவில் நீடூழி வாழ்வார். அவருடைய ஆன்மா சாந்தி பெறட்டும்.
எனக்காக பிராத்தனை செய் சகோதரா - இதோ நான் பாடிய ஏ.ஆர்.ரஹ்மானின் ஒரு ஆங்கில பாடல் அவர் நினைவாக சமர்ப்பிக்கிறேன். இழப்புகள், அன்பு, கருணை, பரிவு என அனைத்தையும் இந்த பாடலில் உணர முடியும் என நினைக்கிறேன். கீழே அந்த ஆங்கில பாடலின் நான் எழுதிய தமிழாக்கத்தை காணலாம். அனைத்து புற்று நோயாளிகளுக்கும் சுகம் பெறவும், மக்களிடையே அன்பு மலரவும் பிராத்தனை செய்யுமாறு இந்த இடுக்கையை படிக்கும் அனைவரையும் வேண்டுகிறேன்.
என்னுடைய வாழ்கையின்
எல்லா கேள்விகளுக்கும்
பதிலை எதிர்நோக்கியிருக்கிறேன்
என்னை தனியாக விட்டுச்செல்வாயா
இல்லையேல்
என்னருகில் துணையாக இருப்பாயா?
இது ஏதேனும் அவனால் சொல்லப்பட்டதா?
இது ஏதேனும் அவனால் செய்யப்பட்டதா?
எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது…
அவன்
விடைகளை தேடிக்கொண்டு இருக்கிறான்
உயிருடன் இருப்பதற்கு.
சரியான நேரத்தில்,
ஒரே ஒரு தருணத்தில்,
ஒரு நிமிடமாவது,
உன் உள்ளம் சொல்லவதை பொருட்படுத்தி கேட்பாயா?
நம்மை சுற்றி சந்தோசம் நிறைந்து இருக்கிறது,
ஆனால் நமக்கு தேவையான அன்பை
அதில் எப்படி பார்ப்பது என்று எனக்கு காண்பி.
நாம் அன்புடன் இருக்கவேண்டியதற்கான
காரணத்தை தேடுகிறாயா?
எனக்காக பிராத்தனை செய் சகோதரா.
எனக்காக பிராத்தனை செய் சகோதரா.
எனக்காக பிராத்தனை செய் சகோதரி.
எனக்காக பிராத்தனை செய் சகோதரா.
என்று அவன் சொன்னான்..
இப்போதே என்ன கூற விரும்புகிறாயோ கூறு
ஆனால் உன் மனதை திறந்து வைத்துக்கொள்.
இப்போதே நீ எப்படி இருக்க விரும்புகிறாயோ அப்படி இருந்துக்கொள்
குழப்பங்களை அனைத்தும் மறைந்து போகட்டும்..
என்னக்காக பிராத்தனை செய் சகோதரா.
நீ கொடுக்க விரும்பாத போது
என்னை எடுக்க விடாதே…
என்னை வாழவிடு
அது போதும்…
நீ கொடுக்க விரும்பாத போது
என்னை எடுக்க விடாதே…
என்னை வாழவிடு
அது போதும்…
நியூ யார்க் நகரம் உறங்கும் நேரம்.. 2006 ஆம் வருடம் அணைத்து இளவட்டங்களையும் கட்டிப்போட்ட சில்லுனு ஒரு காதல் திரைப்பட பாடல்.. கவிஞர் வாலியின் உடலிற்கு தான் வயதானதே தவிர அவருடைய சிந்தனையும், மனதும் எப்போதுமே இளமை தான்… அதற்கு உதாரணம் தான் இந்த பாடல்..
இப்பாடலை பாடுவதற்கு பாடகரை தேர்வு செய்வதற்கு முன்னர், டைரக்டரிடம் காண்பிப்பதற்காக தானே டம்மியாக பாடி பதிவு செய்தார் ஏஆர். ரஹ்மான். பிறகு அனைவரும் கேட்டுக்கொண்டதால் அவர் குரலிலேயே பாடல் பதிவு செய்யப்பட்டது.. எந்த பாடகருக்கு அந்த வாய்ப்பு சென்றிகுமோ தெரியாது. ஆனால் ஏ.ஆர். ரஹ்மான் குரலை எடுத்துவிட்டு என்னுடைய குரல் வைத்தால் எப்படி இருக்கும் என்று ஒரு சின்ன ஆசை தோன்றியது… ஹா ஹா ஹா… அதன் முயற்சி தான் இந்த வீடியோ… அவரின் ஹை பிச் குரல் சில இடங்களில் எனக்கு வரவில்லை. கண்டுபிடித்து சொல்லுபவருக்கு ஏ.ஆர். ரஹ்மான் வாங்கிய ஆஸ்கார் விருது இலவசமாக தரப்படும்.. (புகைப்பட வடிவில்).. ஹி ஹீ ஹீ
இதோ போனஸாக அதன் பாடல் வரிகளும்….
நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் தனிமை அடர்ந்தது
பணியும் படர்ந்தது .. கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது.
நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும் மெழுகுவர்த்தியும்
தனிமை தனிமையோ….. கொடுமை கொடுமையோ….
நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் தனிமை அடர்ந்தது
பணியும் படர்ந்தது.. கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது.
நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும் மெழுகுவர்த்தியும்
தனிமை தனிமையோ… கொடுமை கொடுமையோ….
பேச்செல்லாம் தாலாட்டு போல என்னை உறங்க வைக்க நீ இல்லை
தினமும் ஒரு முத்தம் தந்து காலை காபி கொடுக்க நீ இல்லை
விழியில் விழும் தூசி தன்னை அதை எடுக்க நீ இங்கு இல்லை
மனதில் எழும் குழப்பம் தன்னை தீர்க்க நீ இங்கே இல்லை
நான் இங்கே நீயும் அங்கே இந்த தனிமையில் நிமிஷங்கள் வருஷம் ஆனது ஏனோ
வான் இங்கே நீளம் அங்கே இந்த உவமைக்கு இருவரும் விளக்கமானது ஏனோ
நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் தனிமை அடர்ந்தது
பணியும் படர்ந்தது
நாட்குறிப்பில் நூறு தடவை உந்தன் பெயரை எழுதும் என் பேனா
எழுதியதும் எறும்பு மொய்க்க பெயரும் ஆனதென்ன தேனா
ஜில்லென்று பூமி இருந்தும் இந்த தருணத்தில் குளிர்காலம் கொடையனதேனோ
வா அன்பே நீயும் வந்தால் செந்தணல் கூட பனிக்கட்டி போல மாறுமே
நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் தனிமை அடர்ந்தது
பணியும் படர்ந்தது கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது
நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும் மெழுகுவர்த்தியும்
தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ
தமிழா தமிழா நாளை நம் நாளே….
தமிழா தமிழா நாடும் நம் நாடே…..
என்று தன் இசைபயனத்தை ஆரம்பம் செய்த இசைப்புயல் ரஹ்மான் இன்று அதை நிருபித்துள்ளார். இன்றும் இந்திய சினமாவிற்கு வெறும் கனவாகவே இருந்த ஆஸ்கார் விருதிதினை ஒன்று அல்ல இரண்டை பெற்று தந்த அந்த ஆஸ்கார் தமிழனின் புகழை சொல்ல வார்த்தை இல்லை.. ஆஸ்கார் மேடையில், அதுவும் தமிழில் “எல்லா புகழும் இறைவனுக்கே” என்று தமிழில் கூறிய அந்த மாமனிதனை உளமார வாழ்த்துகிறேன்.
ஒரு வாரத்திற்கு பிறகு நேற்று தான் கஜினி ஹிந்தி படத்திற்கு செல்ல வாய்ப்பு கிடைத்தது… ஏற்கனவே தமிழில் பலமுறை நான் பார்த்து ரசித்து பிரமித்த ஒரு திரைப்படம். அதே தான் ஹிந்தியிலும் என்று தெரிந்தும் நான் இப்போது கஜினி ஹிந்தியில் பார்க்க சென்றதற்கு மூன்று காரணங்கள் உண்டு.
ஒன்று ரஹ்மான், இரண்டு ஆமிர் கான், மற்றொன்று முருகதாசின் திரைக்கதை… கஜினி தமிழில் பின்னணி இசை முதல் பாடல்கள் வரை அனைத்தும் இன்னமும் நான் தினமும் கேட்டுக்கொண்டு இருக்கிறேன்… அதே காட்சிகளுக்கும், பாடல் situationனுக்கும் ரஹ்மானின் ரசனை என்ன? அவர் அமைக்கும் பின்னணி இசை என்ன? ரஹ்மானும், தமிழில் இசை அமைத்த ஹாரிஸ் ஜெயராஜும் எப்படி மாறுபடுகிறார்கள் என்று உணரும் சந்தர்ப்பமாக இந்த ஹிந்தி படத்தை கருதினேன்.
ஹிந்தி பின்னணி இசையில் என்னை பொறுத்த வரையில் துரத்தும் காட்சிகள், சண்டை காட்சிகள் போன்ற விறுவிறுப்பான காட்சிகளில் ரஹ்மானின் இசை மிரட்டுகிறது. ஆனால் ரொமான்ஸ், உணர்வுகளை (Emotions) வெளிப்படுத்தும் காட்சிகளில் ஹாரிஸ் ஜெயராஜின் இசையே மெய்சிலிர்க்க வைக்கிறது. சூர்யா முதன் முதலாக அசினை காணும் போதும், புத்தாண்டின் பொது காதலை வெளிப்படுத்தும் போதும் இருந்த ஹாரிஸ் ஜெயராஜின் இசையின் உயிர் ஹிந்தியில் இல்லை.
மேற்கொண்ட வகையான காட்சிகளில் பாடல்களில் இசை வைத்தே ஒப்பேற்றி இருக்கிறார் ரஹ்மான் என்றே எனக்கு தோன்றுகிறது… தமிழ் கஜினியின் பின்னணி இசை இன்னமும் என்னுடைய HTC TOUCH WINDOWS செல்போனில் ரிங்டோனாக உள்ளது. ஹாரிஸின் பின்னணி மெனக்கெடல் தமிழில் கஜினி மிகவும் ரசித்த அனைவருக்கும் நன்றாக தெரியும்.
பாடல்களை பொறுத்தவரை குறைசொல்ல ஏதும் இல்லை. ஏற்கனவே ஹிந்தியில் சக்கை போடு போட்டுக்கொண்டு இருக்கிறது.. ஹிந்திக்கு ஏற்றவாறு “ஒரு மாலை” (பெக்கா), “ரஹாதுல” (அயே பச்சு), சுட்டும் விழி சுடரே (குஜாரிஷ்), எக்ஸ் மச்சி (லடூ) போன்ற பாடல்கள் இருக்கிறது… மூன்று பாடல்கள் மிகவும் ரசிக்க வைக்கிறது… ஆனால் “கைசே முஜே” என்ற பாடல் வேறு ஒரு காட்சிக்கு இடையில் மனதை உருக்கும் ஒரு பாடலாக இருக்கிறது… தமிழில் இது இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது..
ஆமிர் கான்… கண்களிலேயே பேசும் ஒரு நடிகன். முதல் பாதியின் போது தமிழ் கஜினியில் இருந்து மீள முடியாததால், சூர்யாவின் நடிப்பும், ஹாரிஸின் பின்னணி இசையும் வந்து போனது. ஆனால் பிற்பாதியில் ஏற்பட்ட திரைக்தை மாற்றத்தாலும், காட்சி அமைப்புகளாலும் படத்தோடு ஒன்றி போக செய்தது. புதிய அனுபவம். படத்தின் முடிவில் அவ்வளவு அழுத்தம் மிக்க உணர்வுகளை வெளிப்படுத்தும் காட்சி அமைப்பு. திரைக்கதையை பொறுத்தவரை ஹிந்தி கஜினி செதுக்கப்பட்டுள்ளது.. சூர்யா… you really missed it. At least tamil audience missed it. The most emotional moments… mind blowing scenes.
மொத்தத்தில் , ஹிந்தி கஜினியின் திரைக்கதையில், தமிழ் கஜினியின் பின்னணி இசையில் சூர்யா நடித்திருந்தால்… தமிழ் ரசிகர்ளின் மனதை விட்டு அது சுலபத்தில் அகலாது.. நீங்கள் என்ன நினைகிறீர்கள்? உங்களுக்கு பிடித்ததும் பிடிக்காததும் என்ன? உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்..