Posts Tagged இழப்பு

    எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது அம்மா

    2004ஆம் ஆண்டு இருக்கும் என நினைக்கிறேன். கல்லூரியில் பயின்று கொண்டு இருக்கும்  தருணம். ஒரு நாள் வகுப்பறையில் இருக்கும்போது அந்த தகவல் வருகிறது. நோய்வாய்ப்பட்டு இருந்த ஒரு வகுப்பறை நண்பனின் தாயார் இறந்துவிட்டார் என்று. அனைவரும் அவன் வீட்டிற்கு துக்கம் அனுஷ்டிக்க சென்றோம். ஆனால் அதுவரை எனக்கு அந்த இழப்பின் ஆழம் முழுதாக புரிந்திருக்கவில்லை. ஒரு வேலை மிக நெருக்கமானவர்கள் யாரையும் நான் அந்த தருணத்தில் இழந்திருக்கவில்லை என்பதால் என கருதுகிறேன்.

    இத்தனையும் அங்கு சென்றடையும் வரை மட்டுமே. அவன் வீட்டின் அருகே சென்ற போது… என் நண்பனின்  ஓலம்… அதை கேட்டுக்கொண்டே அவன் வீட்டிற்குள் நாங்கள் நுழையும்போது என் உடல் சிலிர்த்து போனது. உள்ளே சென்ற உடன் அவன் என்னை கட்டித்தழுவி கதறி புலம்பியபோது ஒரு நிமிடம் என்னை ஏதோ செய்துவிட்டது. அம்மாவென்றால் யாருக்குத்தான் பிடிக்காது? பத்து மாதம் சுமந்து பெற்று தன் குழந்தைகாகவே  வாழ்ந்து மடியும் ஒரே உறவு அம்மா தான். அதன் இழப்பு நிச்சயம் ஈடு செய்ய முடியாத ஒன்று.

    இரவு பதினோரு மணிவரை இடுகாட்டில் அவனுடன் இருந்து உடல் தகனம் செய்துவிட்டு வந்தோம். வீட்டிற்கும் வந்தும் கூட அந்த பாதிப்பு என்னை விட்டு அகலவில்லை. அவன் கல்லூரி படிப்பை முடித்த பிறகு, நல்ல வேலை கிடைத்து சந்தோசமாக இருந்தால் கூட அவன் அம்மாவிற்கு கடைசி வரை தெரியாதே? இப்படி பல கேள்விகள் என்னுள் எழுந்து கொண்டு இருந்தது. அவன் மனநிலையை நானும் உணர்த்து கொண்டிருத்த அந்த நடுநிசியில் அவனுக்காக  வெளிப்பட்ட பாதிப்பே இந்த கவிதை.

    அம்மா!
    எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது..
    குழந்தையாய் நான்
    சாப்பிட அடம்பிடித்த போது,
    நீ பாசத்துடன் ஊட்டிய
    அந்த நிலாச்சோறு.

    முழுக்கால் சட்டை வயதில்
    பள்ளிக்கு செல்லும் முன்
    அப்பாவுக்கு தெரியாமல் நீ கொடுக்கும்
    அந்த பத்து ரூபாய் நோட்டு.

    எனக்கு காய்ச்சல் வரும்போதெல்லாம்
    உன் கண்களில் வரும்
    அந்த கண்ணீர் துளி.

    சரியாக படிப்பதில்லையென
    அப்பா என்னை அடிக்கும் போது
    நீ மட்டுமே என் மேல் வைத்த
    அந்த நம்பிக்கை.

    அனைத்தையும்
    அவ்வளவு சுலபத்தில் மறக்க முடியுமா?
    எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது..

    நீ உடல் நிலை பாதிக்கப்பட்டு
    உன் கடைசி தருணத்தில்
    எல்லோரும் உனக்காக வேண்டிக்கொண்டு இருக்க,
    நீயோ
    என்னை பற்றியும்
    என் எதிர்காலம் பற்றியும் பேசியவாறு
    என் மடியில் உயிர் பிரிந்த
    அந்த தருணம்.

    இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கிறது.
    அனைத்தையும்
    அவ்வளவு சுலபத்தில் மறக்க முடியுமா?

    அம்மா!
    இப்போது
    நீ எதிர்பார்த்த நிலையில்
    நானிருக்கிறேன்.என்றாலும்
    என்னுடன்
    எனக்கு துணையாய் இருப்பதோ
    உன் குரலும்
    உன் உருவமும் தான்.

    நினைத்து நினைத்து பார்த்தேன்

    7ஜி ரெயின்போ காலனி என்ற தமிழ் திரைப்படத்தின் நினைத்து நினைத்து பார்த்தேன்  பாடலை பிடிக்காதவர்கள் யாரேனும் இருப்பார்களா என்ன? சில வருடங்களுக்கு முன்னால் எல்லோர் மனதையும் கட்டி வைத்த பாடல் அது.  அதை முனுமுனுக்காதவர்களும் யாரும் கண்டிப்பாக இருக்க முடியாது. எனக்கும் அது மிகவும் பிடித்த  பாடல்.  கல்லூரி வாழ்கையின் போது அவ்வளவு கிரேஸ் அதன் மேல். அடிக்கடி நான் தனிமையில் பாடும் பாடலில் இதுவும் ஒன்று. நீண்ட மாதங்களாக கிடப்பில் இருந்த இதோ அதன் வீடியோ பாடல் என் குரலில் இப்போது என் வலைப்பூவில்.. ஓரளவிற்கு பீ….ல் பண்ணி பாடி இருக்கேன்.. அதனால அவ்வளவு மோசமா இருக்காதுன்னு நினைக்கிறன்…. ஹி.. ஹீ.. ஹீ.. கேட்டுவிட்டு உங்கள் கருத்துக்களை பதிக்கவும்.. உங்கள் பொறுமைக்கு நன்றி..

    இதோ வழக்கம் போல் அதன் பாடல் வரிகளும் போனஸாக…

    நினைத்து நினைத்து பார்த்தேன்
    நெருங்கி விலகி நடந்தேன்
    உன்னால்தானே நானே வாழ்கிறேன் ஓ….
    உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்
    எடுத்து படித்து முடிக்கும் முன்னே
    எரியும் கடிதம் எதற்கு பெண்ணே
    உன்னால்தானே நானே வாழ்கிறேன் ஓ….
    உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்

    அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்
    உன்னைக் கேட்கும் எப்படி சொல்வேன்
    உதிர்ந்து போன மலரின் மெளனமா…
    தூது பேசும் கொலுசின் ஒலியை
    அறைகள் கேட்கும் எப்படி சொல்வேன்
    உடைந்து போன வளையல் பேசுமா…
    உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்
    விரல்கள் இன்று எங்கே?
    தோளில் சாய்ந்து கதைகள் பேச
    முகமும் இல்லை இங்கே!
    முதல் கனவு முடிந்திடும் முன்னமே
    தூக்கம் கலைந்ததே!

    நினைத்து நினைத்து பார்த்தேன்
    நெருங்கி விலகி நடந்தேன்.
    உன்னால்தானே நானே வாழ்கிறேன் ஓ….
    உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்

    பேசிப் போன வார்த்தைகள் எல்லாம்
    காலம் தோறும் காதினில் கேட்கும்
    சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா?…
    பார்த்து போன பார்வைகள் எல்லாம்
    பகலும் இரவும் கேள்விகள் கேட்கும்
    உயிரும் போகும் உருவம் போகுமா?…
    தொடர்ந்து வந்த நிழலும் இங்கே
    தீயில் சேர்ந்து போகும்
    திருட்டு போன தடயம் பார்த்தும்
    நம்பவில்லை நானும்
    ஒரு தருணம் எதிரினில் தோன்றுவாய்
    என்றே வாழ்கிறேன்….

    எனக்காக பிராத்தனை செய் சகோதரா

    என்னுடைய மாமாவின் கடைசி மூச்சிற்கு சரியாக இன்றோடு ஒரு வருடம் முடிவடைகிறது. புற்றுநோய்க்கு வயது வித்யாசம் தெரியுமா என்ன?  முப்பத்தெட்டு வயதே உடைய மனிதரை அணு அணுவாய் சித்ரவதை செய்து கொலை செய்தது அந்த புற்று நோய். தான் சாகும் நாள் தெரிந்தே வாழ்வது தான் உலகத்தில் மிகபெரிய கொடுமை. அந்த மனவேதனையை சுமந்து கொண்டு இருப்பது சாமன்யமல்ல.

    நிறைய உயிரிழப்புகளை  நாம் நம் வாழ்கையில் சந்திக்க நேரிடுகிறது. ஆனால் நமக்கு மிகவும் நெருக்கமானவர்களின், மிகவும் விருப்பமானவர்களின் இழப்பு தான் நம் மனதை புரட்டி போடும். அந்த வகையில்  இது என் வாழ்கையில் எனக்கு மிகவும் மறக்க முடியாத சம்பவம்.

    என் வாழ்கையில் நான் நிறைய கற்றுக்கொண்டது அவர் இறப்பிற்கு பின்னரே. முதல் நாள், உயிருடன் இருக்கும் வரை  நம்முடைய பெயர் நமக்கு சொந்தம். இரண்டாம் நாள், நாம் இறந்த பிறகு நம்முடைய பெயர் பிணம். மூன்றாம் நாளோ அதன் பெயர் ஹஸ்தி. இருக்கும் வரை உயர்திணையில் நம்மை அழைக்கும் இவ்வுலகத்திற்கு இறந்த பின் நாம் வெறும் அக்றினையே.

    போட்டி, பொறாமை போன்றவைகள் மனிதனின் வெறும் அற்ப ஆட்டங்கள். ஆட்டம் அடங்கினால் அவன் இந்த உலகத்தின் வாழ்ந்ததற்கான சுவடுகள் கூட இருக்காது. காலம் அதை தேடிச்சென்று அழித்துவிடும். இறந்தபின் நமக்காக சிந்தப்படும் கண்ணீர்த்துளிகளும், அவர்களின் மனதில் எழும் நம்முடைய இழப்பும் தான் நாமும் இந்த உலகத்தில் வாழ்ந்ததற்கான அடையாளங்கள். அவர் எங்களுடைய நினைவில் நீடூழி வாழ்வார். அவருடைய ஆன்மா சாந்தி பெறட்டும்.

    எனக்காக பிராத்தனை செய் சகோதரா  -  இதோ  நான் பாடிய ஏ.ஆர்.ரஹ்மானின் ஒரு ஆங்கில பாடல் அவர் நினைவாக சமர்ப்பிக்கிறேன். இழப்புகள், அன்பு, கருணை, பரிவு என அனைத்தையும் இந்த பாடலில் உணர முடியும் என நினைக்கிறேன். கீழே அந்த ஆங்கில பாடலின் நான் எழுதிய தமிழாக்கத்தை காணலாம். அனைத்து புற்று நோயாளிகளுக்கும் சுகம் பெறவும், மக்களிடையே அன்பு மலரவும் பிராத்தனை செய்யுமாறு  இந்த இடுக்கையை படிக்கும் அனைவரையும் வேண்டுகிறேன்.

    எனக்காக பிராத்தனை செய் சகோதரா.
    எனக்காக பிராத்தனை செய் சகோதரா.
    எனக்காக பிராத்தனை செய் சகோதரி.
    நீ தேடிக்கொண்டு இருக்கிறாயா?
    எனக்காக பிராத்தனை செய் சகோதரா.

    என்னுடைய வாழ்கையின்
    எல்லா கேள்விகளுக்கும்
    பதிலை எதிர்நோக்கியிருக்கிறேன்

    என்னை தனியாக விட்டுச்செல்வாயா
    இல்லையேல்
    என்னருகில் துணையாக இருப்பாயா?

    இது ஏதேனும் அவனால் சொல்லப்பட்டதா?
    இது ஏதேனும் அவனால் செய்யப்பட்டதா?
    எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது…

    அவன்
    விடைகளை தேடிக்கொண்டு இருக்கிறான்
    உயிருடன் இருப்பதற்கு.

    சரியான நேரத்தில்,
    ஒரே ஒரு தருணத்தில்,
    ஒரு நிமிடமாவது,
    உன் உள்ளம் சொல்லவதை பொருட்படுத்தி கேட்பாயா?

    நம்மை சுற்றி சந்தோசம் நிறைந்து இருக்கிறது,
    ஆனால் நமக்கு தேவையான அன்பை
    அதில் எப்படி பார்ப்பது என்று எனக்கு காண்பி.

    நாம் அன்புடன் இருக்கவேண்டியதற்கான
    காரணத்தை தேடுகிறாயா?

    எனக்காக பிராத்தனை செய் சகோதரா.
    எனக்காக பிராத்தனை செய் சகோதரா.
    எனக்காக பிராத்தனை செய் சகோதரி.
    எனக்காக பிராத்தனை செய் சகோதரா.
    என்று அவன் சொன்னான்..

    இப்போதே என்ன கூற விரும்புகிறாயோ கூறு
    ஆனால் உன் மனதை திறந்து வைத்துக்கொள்.
    இப்போதே நீ எப்படி இருக்க விரும்புகிறாயோ அப்படி இருந்துக்கொள்
    குழப்பங்களை அனைத்தும் மறைந்து போகட்டும்..
    என்னக்காக பிராத்தனை செய் சகோதரா.

    நீ கொடுக்க விரும்பாத போது
    என்னை எடுக்க விடாதே…
    என்னை வாழவிடு
    அது போதும்…

    நீ கொடுக்க விரும்பாத போது
    என்னை எடுக்க விடாதே…
    என்னை வாழவிடு
    அது போதும்…

    எனக்காக பிராத்தனை செய் சகோதரா.
    எனக்காக பிராத்தனை செய் சகோதரா.
    எனக்காக பிராத்தனை செய் சகோதரி.
    எனக்காக பிராத்தனை செய் சகோதரா.

    நாம் அன்புடன் இருக்கவேண்டியதற்கான
    காரணத்தை தேடுகிறாயா?