அரைக்கால் ட்ரவுசர் வயதில், பிறந்த நாள் என்றால் புத்தாடை கிடைக்கும் ஒரு மகத்தான நாளாகவே கருதினேன். என்றுமே இல்லாமல் அன்று மட்டும் பள்ளி கூடம் செல்லுவதற்கு மனம் மிகவும் சுறு சுறுப்பாகிவிடும். அரை கிலோ, ஒரு கிலோ சாக்லேட் பாக்கெட்டுகளை வாங்கி, புத்தகப்பைகளுக்குள் துருத்தி, புது கலர் சட்டை அணிந்து, பள்ளிக்கூடம் சென்று உள்ளே நுழையும்போது, அடேங்கப்பா என்ன ஒரு மிடுக்கு வந்துவிடுகிறது! எல்லோரும் சீருடையில் வரும் போது நான் மட்டும் தனித்து கலர் சட்டை அணிந்து நடந்து செல்வது அப்போது ஒரு இனம் புரியா மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பள்ளிக்கூட மைதானத்தில், கடவுள் வாழ்த்திற்காக அனைவரும் கூடி இருக்கும் அந்த காலை நேரத்தில், நான் மட்டும் அனைவரின் முன்னால் நிறுத்தப்படுவேன். அன்று பிறந்த நாள் கொண்டாடுபவர்கள் அனைவரும் அப்படி தான் நிற்க வைப்பார்கள். என் பேரை ஒலி பெருக்கியில் சொல்லுவார்கள். குட்டி தம்பிகள் முதல், பெரிய அண்ணன்கள் வரை எல்லோரும் என்னை பார்பதற்காக வரிசையை நிற்பது போல் இருக்கும். அனைவரும் எனக்காக “ஹாப்பி பார்த் டே டூ யூ” என பாடும் போது பார்பதற்க்கே ஒரு கர்வம் வரும்.
பிறந்த நாள் அன்று யாரும் திட்ட மாட்டார்கள். டடீச்சர் நம்மை அடிக்க மாட்டார்கள். என்னை சுற்றி தான் அன்று முழுவதும் நண்பர்கள் கூட்டம் இருக்கும். போதா குறைக்கு அன்று ஒரு நாள் முழுதும் நான் தான் என் பள்ளியில் ஹீரோ என்ற நினைப்பு வேறு தொற்றிக்கொள்ளும். தினமும் அப்படியே இருந்தால் நான்றாக இருக்குமே என்று கூட நினைத்ததுண்டு. எல்லாம் என்னிடம் இருந்து சாக்லேட் காலியாகும் வரைதான் என்று அந்த பிஞ்சு மனதிற்கு தெரியாது. அடுத்த நாள் நிலைமை தலை கீழாக மாறி, கலர் சட்டை அணிந்து வரும் இன்னொருவன் பின்னால் நானும் அலையை வேண்டி வரும் என்பதும் அப்போது புரியாது.
அரைக்கால் ட்ரவுசர் நீண்டு முழுக்கால் ட்ரவுசராய் மாறிய ஆரம்ப காலங்களிலும் அந்த பிறந்த நாள் ஹீரோயிசம் முழுதாக மறைந்ததாக நினைவில்லை. தட்டு நிறைய சாக்லேட் வைத்துக்கொண்டு.. இல்லை இல்லை.. இப்போது சாக்லேட்டுகள் அனைத்தும் கேக்காய் மாறி இருந்தது. தட்டு நிறைய கேக்கை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள தெரிந்தவர்கள், உறவினர்கள் வீட்டுக்கு எங்க ஏரியா நண்பர்கள் பட்டாளத்துடன் சென்று கொடுப்பேன். அவர்களும் வெறும் கையுடன் என்னை அனுப்ப மாட்டார்கள். நான் விடா பிடியாய் வாங்க மறுத்தும், ஒவ்வொரு வீட்டிலும் பத்து ரூபாய் முதல் நூறு ருபாய் தாள்கள் வரை என் பாக்கட்டில் திணித்து அனுப்புவார்கள். அப்போது பணத்தின் அருமை எனக்கு தெரியாததாலும், வீட்டிற்கு வந்தால் அதற்காக அம்மா திட்டுவார்கள் என்று எண்ணியதாலும் தான் பணம் வாங்க மறுத்தேன் என்று நினைக்கிறேன்.
லிட்டில் சூப்பர் ஸ்டார் (உண்மையாலுமே அப்போ அவர் லிட்டில் தான்) சிலம்பரசன் ஒரு குட்டி பைக்கை ஏதோ ஒரு படத்தில் ஓட்டுவதை அப்போது பார்த்ததாய் ஞாபகம். பார்க்க குட்டி சைக்கிள் அளவிற்கு அச்சு அசலாக பைக்கை போல தான் இருந்தது அது. அதை நானும் வாங்கியே தீர வேண்டும் என்று முடிவெடுத்தேன். சரி அதற்க்கு காசு? அதான் ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் வருமானம் வருதுல்ல!
அதிலிருந்து எல்லா பிறந்த நாளின் போதும் கலெக்சன் ஆகும் பணத்தை அப்படியே பைக் வாங்கும் ஆசையில் அம்மாவிடம் சேமிப்பதற்கு கொடுத்து வைத்தேன். அப்போது அந்த பைக் எவ்வளவு விலை இருக்கும் என்று எனக்கு தெரியாது. என்றாவது ஒரு நாள் வாங்கி விடுவேன் என்ற நம்பிக்கையில் பல வருடங்கள் அந்த பணத்தை அப்பாவியாய் அவர்கள் கை செலவிற்கு கொடுத்துக் இருந்திருக்கிறேன் என்று வளர்ந்த பிறகு தான் விளங்கியது. இப்போது பெரிய பைக்கும் வாங்கியாச்சு, காரும் வாங்கோயாச்சு. இருந்தும் பத்து, பன்னிரண்டு வயதில் அந்த குட்டி பைக் கிடைத்து இருந்தால் நான் அடைந்திருக்கக் கூடிய அந்த சந்தோசத்தை எதுவும் இன்று வரை கொடுக்கவில்லை!
சரி மீண்டும் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு வருவோம். ஜீன்ஸ் பான்ட், டி ஷர்ட் என்று மாறிய டீனேஜ், காலேஜ் பருவங்களில் அதுவும் சுத்தமாக மாறி இருந்தது. பிறந்த நாள் என்றாலே “மச்சான் ட்ரீட் எப்போ? “ என்று தான் அன்று சந்திக்க நேரிடும் அனைவரின் வாயிலும் வந்து விழும். இப்போது வளர்ந்து தொலைத்த காரணத்தினால் முதல் மாதிரி பிறந்த நாள் கலெக்சன் இப்போ வாய்ப்பே இல்லை. அப்படியே இருந்தாலும் ஐம்பது நூறு எல்லாம் இப்போது பத்தாது. அப்பாவிடம் கையேந்த வேண்டியது தான் ஒரே வழி. இவ்வளவு பணம் எதுக்குடா? என்று அவர் கம்மியாக கொடுத்தாலும் ஐஸ் வைத்து அம்மாவிடம் இருந்து இன்னும் கொஞ்சம் தேத்தி விடலாம். என்ன செய்வது! அந்த வயதில் நண்பர்களுக்கு ட்ரீட் கொடுக்கவில்லை என்றால் அய்யோ அது தெய்வ குத்தம் ஆகி விடுமே! பாக்கட்டில் காசு கூட இல்லை என்றால் அவ்வளவு தான் அது கொலை குத்தம் ஆகி விடும்! பிறந்தாளன்று பள்ளிக்கு விரும்பி சென்ற கால்கள் இப்போது கல்லுரி வாசலை மிதிக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறது. அதுவரை பிறந்த நாளின் போது பெற்றோர், உறவினர்கள் என்பது இருந்து நண்பர்கள் தான் உலகம் என்று மாறி போகும் காலம் அது!
வருடத்தின் அந்த ஒரு நாளை நாம் அணுகும் விதமே ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறுபடுகிறது. அனைத்தையும் கடந்து சென்று நமது கடைசி பிறந்த நாளையும் ஏதோ ஒரு வகையில் கொண்டாடியே தீருவோம் நாம். அது சரி கடைசி பிறந்த நாள் என்று ஒன்று உண்டா என்ன?
சில வருடங்களுக்கு முன்பு என்னுடைய நெருங்கிய உறவினர் ஒருவருக்கு பிறந்த நாள். இன்னும் சொல்ல வேண்டுமானால் என்னுடைய தாய் மாமன் அவர். அன்று வழக்கம் போல் அவர்கள் வீட்டில் குதூகலம் இல்லை. அவருடைய குழந்தைகள் அவரை வெளிய அழைத்துச்செல்ல வற்புறுத்தவில்லை. கோவிலுக்கு செல்ல அவருடைய மனைவியும் அவரை அழைக்கவில்லை. தினமும் வீட்டிற்கு வரும் நண்பர்கள் கூட அன்று மட்டும் யாரும் வரவில்லை. உறவினர்கள் யாரும் பிறந்நாள் வாழ்த்து சொல்ல அவரை தொலைபேசியில் அழைக்கவில்லை.
இத்தனைக்கும் பிறந்த நாளை பெரிதாய் பொருட்படுத்தாமல் ஒதுக்கும் அளவிற்கு அவருக்கு பெரியாதாய் வயது ஒன்றும் ஆகி விடவில்லை. சொல்லப்போனால் அன்று அவருக்கு 37வது பிறந்த நாள். கோவில், குழந்தைகள் , நண்பர்கள் என்று பிறந்தநாளை நம்மை போல் கொண்டாடும் சாராரி மனிதர் தான் அவரும். ஆனால் முடிந்த வரை தனிமையிலே அந்த நாள் முழுவதும் அவர் செலவிட்டார். காரணம்…..?
அது அவருடைய கடைசி பிறந்த நாள் என்று அவருக்கு தெரிந்து இருந்தது. புற்றுநோயால் தன் நாட்களை எண்ணிக்கொண்டு இருந்த அவருக்கு அது தெரியாத என்ன. அன்று முழுவதும் அவருடைய மனநிலை எப்படி இருந்து இருக்கும் என்று நம்மால் யூகிக்க முடியாது . ஆனால் அதை விட கொடுமை உலகில் இல்லை என்று புரிந்து கொள்ள முடியும்.
ஒவ்வொரு வருடமும் வாழ்கையை பற்றிய ஒரு புரிதலை மேலும் மேலும் நமக்கு கற்றுக்கொடுக்கிறது. அது நமக்கு மிகப்பெரிய பெரிய பாடத்தை கற்றுக்ககிறது . இப்பொழுதெல்லாம் ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் இதுவரை என்ன சாதித்து விட்டாய் என்று உள்ளே மிஸ்டர் மனசாட்சி கேள்விகளால் துளைத்தெடுக்கிறார்! நேற்றைய எனது பிறந்த நாளும் எனக்கு ஒரு வித பயம் கலந்த வேகத்தை ஏற்படுத்தியது. பயம் என்பது இன்னும் எத்தனை பிறந்த நாள் இருக்கிறது என்பதல்ல. கடைசி பிறந்தாளிற்கு முன் பிறந்த பயனை அடையும் நிம்மதி கிடைக்க வேண்டும் என்பதே அது! அந்த ஒரு நிம்மதி தான் சிறு வயதில் கலர் சட்டை அணிந்து சாக்லேட் பாக்கட் வாங்கி பள்ளிக்கு சென்ற அந்த ஹீரோவை நமக்குள் மீண்டும் அழைத்து வரும்!
சென்ற பிறந்த நாளின் போது கண்களை தானமாக பதிவு செய்தேன். இம்முறை உடல் தானம் செய்ய பதிவு செய்துஇருக்கிறேன். இறந்த பின்னும் உயிர்வாழ, பிறருக்கு பயனுற இதை விட வேறு ஏதேனும் வழி உன்டா என்ன? நீங்களும் உங்கள் அடுத்த பிறந்த நாளன்று இதை செய்திட எண்ணி பாருங்களேன்! பிரபலங்களை போல் பிறந்த நாளன்று இதை செய்வது நிச்சயம் மற்றவர்களுக்கு உறுத்தலை வர வைக்க வாய்பிருக்கிறது. ஆனால் சரா சரி மனிதர்களாகிய நாம் நம் அன்றாட வாழ்க்கையில் இதற்காக நேரம் ஒதுக்குவது நிச்சயம் சற்று கடினம் தான். பிறந்த நாளன்று இதை செய்தே தீர வேண்டும் என்று எண்ணுவது நமக்குள் உந்துதலை ஏற்படுத்தும். அதை செய்து முடித்த அந்த பிறந்தநாள் மிகவும் திருப்திகரமாக இருக்கும். கண் தானம் பதிவு செய்வது போல் உடல் தானம் செய்வது அவ்வளவு சுலபமான வழி முறை கொண்டிருக்கவில்லை. அதை பற்றி விரிவாக விரைவில் ஒரு பதிவிடுவதாக உள்ளேன்.
இந்த பிறந்த நாளின் போது முகப்புத்தகத்தில், குறுஞ்செய்திகளில், சாட்டிங்கில், அலைபேசியில், மின்னஞ்சலில் என்று வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். எனக்கே தெரியாமால் கேக் வாங்கி வைத்து மாலை அதை வெட்டி கொண்டாட வைத்த என் தம்பி. அதற்கும் மேலாக காலையில் நான் கண் விழிக்கும் நேரம் உணர்ந்து, அதற்கு முன்னமே என் அருகே வந்து அமர்ந்து, நான் கண் திறக்கும் வரை காத்திருந்து, கண் திறந்ததும் முகம் மலர்ந்து கைபிடித்து வாழ்த்திய என் தாயின் அன்பிற்கு எதுவும் நிகரில்லை இவ்வுலகில்.
என்னென்ன செய்தோம் இங்கு இதுவரை வாழ்விலே…
எங்கெங்கு போனோம் வந்தோம் விதி என்னும் பேரிலே….
நான் அடிக்கடி கேட்கும் மயக்கமென்ன திரைப்படத்தின் பாடல் நேற்று முழுவதும் காதில் ஓயாமல் ஒலித்துக்கொண்டே இருந்தது!
“நேற்று பார்த்த நிலவா என்று நெஞ்சம் என்னை கேட்கிறதே.. பூட்டி வைத்த உணர்வுகள் மேலே புதிய சிறகு முளைக்கிறதே.” போன்ற வரிகளால் என் மனம் பித்துப்பிடித்துக்கொண்டு இருந்த சமயம் அது. சரியாக சொல்லவேண்டுமானால் காதல் கொண்டேன் திரைப்படத்தை பார்த்து தொலைத்ததில் இருந்து பல மாதங்களாக அந்த பாடல்கள் உள்ளே ஏப்.எம் போல் இருபத்திநாலு மணி நேரமும் ஒலித்துக்கொண்டே இருந்தது. உறங்கும் போது கூட என் உதடுகள் மறக்காமல் உளறிக்கொண்டிருந்த அந்த பாடல் வரிகளை எழுதியது நா.முத்துக்குமார் அவர்கள் என்று அப்போது தான் எனக்கு அவர் பெயர் பரிட்சயம் ஆனது. என் வாழ்நாளில் நான் அதிகமாக கேட்ட பாடல்களும் அதுவாகத்தான் இருக்கும்.
பிறகு வந்த ரெயின்போ காலனி திரைப்படத்தின் பாடல்களை கேட்டதில் இருந்து என் வாழ்க்கையில் நான் கண்டிப்பாக சந்தித்தே தீர வேண்டிய நபரில் ஒருவராகவே அவரை கருதினேன். அதற்க்கு காரணமும் இருந்தது. வெறும் பாடல்களை கேட்டுக்கொண்டும், கவிதைகளை படித்துக்கொண்டு மட்டுமில்லாமல் அதன் மேல் எனக்கு தாகம் ஊற்றெடுத்துக்கொண்டிருந்த நேரம் அது. கவிதை எழுத முயற்சிப்பதற்க்காக நூலகத்தில் அவருடைய கவிதைகளை தேடி தேடி படித்துக்கொண்டிருந்தேன். அவருடைய கவிதை தொகுப்பான “பட்டாம்பூச்சி விற்பவன்” என்னை கவிதை எழுத மிகவும் தூண்டியவை. நான் இப்போது என் வலைப்பதிவில் பதிவித்துக்கொண்டிருக்கும் கவிதைகள் யாவும் அச்சமயத்தில் கிறுக்கியவைகளே. வெறும் காகிதத்தில் மக்கிப்போகும்படி விட்டுவிடாமல் இருக்க இப்போது அதை ஒவ்வொன்றாக என் வலைப்பதிவில் பதிவேற்றம் செய்துக்கொண்டு இருக்கிறேன்.
இவை அனைத்தும் நடந்தது 2005 வரை. கல்லூரி பருவம் முடிந்து வாழ்கையின் பின்னால் ஓடத்துவங்கி இத்தோடு ஐந்து வருடமாகிவிட்டது. கவிதை, எழுத்து இவற்றில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி என்னுடைய கவிதைகளே எனக்கு சரளமாக நினைவில் வாராத அளவிற்கு வாழ்க்கை பாதை மாறியது. இத்தருணத்தில் கடந்த குடியரசுதினத்தன்று சென்னை ஜெயா டீவி அலுவலகத்திற்கு ஒரு நேர்காணலுக்காக சென்றேன். மீண்டும் சேலம் திரும்ப இருந்த என்னை அஜயன் பாலா அவர்கள் தன் வீட்டுற்கு அழைத்துச்சென்றார். விரைவில் திரைக்கு வரவிருக்கும் ஒரு திரைப்படத்தின் திரைக்கதை விவாதம் அப்போது அவர் வீட்டில் நடந்துக்கொண்டிருந்தது. இது எனக்கு மிகப்புதிய அனுபவம்.
நடிகர் சுஜாதா ஒரு புத்தகத்தில் குறிப்பிட்டது போல் வெறும் நான்கு சுவற்றில் சில பேர்களால் விவாதிக்கப்பட்டு உருவாகிற கதை, பல கோடி செலவில் பிரம்மாண்டமாய் திரையில் வருவதும், மக்கள் அதை கூடி ரசிப்பது ஆச்சர்யாமான ஒன்று தான். எல்லாம் முடிந்து நள்ளிரவு உறங்கும் நேரம் இருக்கும் என் நினைக்கிறேன். நா.முத்துக்குமாரை அவர்களை பற்றிய எதேச்சையாக பேச்சு வந்தது. சில நிமிட உரையாடலிலேயே நான் நா.முத்துக்குமாரின் தீவிர ரசிகன் என உணர்ந்தாரோ என்னவோ தெரியவில்லை அவரை நீங்க சந்திக்கனுமா என்றார். ஆச்சர்யம் என்னால் நம்ப முடியவில்லை. சந்திக்க முடிந்தால் என் வாழ்நாளில் மறக்க முடியாத நாளாக இருக்கும் ஆனால் முடியுமா என்றேன். நாளை சந்திக்கலாம் என்று உறங்கிவிட்டார். எனக்கு உறக்கம் வரவில்லை.
மறுநாள் காலை, அஜயன் அண்ணா அவர்கள் தனது செல்ப்போனில்” ஹலோ முத்துக்குமார், பிசியா…” என்று ஆரமித்தார்.. அதுவரை எனக்கு தெரியாது இருவரும் பலவருட நண்பர்கள் என்று. அடுத்த சில நிமிடங்களில் நானும் அஜயன் அண்ணாவும் சாலிகிராமத்தில் ஒரு அப்பார்ட்மெண்டில் இரு சக்கரவாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தோம். நான் அவருடைய அலுவலகத்தின் காலிங்பெல்லை அடித்தேன். எழுநூறு பாடல்களுக்கு மேல் எழுதி தமிழ் சினிமாவில் மிகவும் பிசியான நபர் எனக்கூறப்படும் அவர் கதவை திறந்து எங்களை வரவேற்று உள்ளே அழைத்து சென்றார். புகைப்படத்திலும், தொலைக்காட்சிகளிலும் வழக்கமாக தோன்றும் அதே கட்டம் போட்ட சட்டை. வேட்டை என்ற லிங்குசாமி அவர்களின் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் அடுத்த படத்திற்கு பாடல் எழுதிக்கொண்டு இருந்தார் அப்போது.
அமைதியான அந்த அலுவலகம் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. தமிழர்கள் அனைவரின் மனதை வருடி கொள்ளையடிக்கும் பாடல்களும், இளைஞர்களை உதடுகளை முனுமுனுக்கச் செய்யும் பாடல்களும் இங்கே இருந்துதான் பிறந்துக்கொண்டு இருக்கிறது என்பது தான் அதற்க்கு காரணம். சில நிமிட உரையாடலுக்கு பின்னர் அவரை பேஸ்புக்கில் அழைத்துவர முயற்சித்துப்பார்தேன். ஆனால் நேரமின்மையால் அவரால் வர இயலவில்லை என்றார். நானும் அவரை சட்டென விட்ட பாடில்லை. ரசிகர்களை சந்திக்கவும், உரையாடவும் ஒரு தளமாக அது இருக்குமே என்றேன். சமூக வலைதளங்களில் நேரம் செலவிடுதல் வேலையை பாதிக்கும் என்பது அவர் காரணம். அதுவும் சரிதான் பேஸ்புக்கில் அவர் ஸ்டேடஸ் போடும் நேரத்தில், மற்றவர் ஸ்டேடஸ் அப்டேட் செய்யும் சில பாடல் வரிகளை அவர் எழுதிவிடலாம்.
திடீரென அஜயன் அண்ணா என் மொபைலில் நான் பாடிய பாடல்களில் ஒன்றை போடச்சொன்னார். இதை நான் யோசிக்கவே இல்லை. எனக்கு பிடித்த சில பாடல்களை பாடகர்களின் குரலை நீக்கிவிட்டு என் குரலில் இசையுடன் (கரோகே) பதிவு செய்து வைத்து இருந்தேன். அது அவருக்கும் பிடித்து இருந்தது. அதை தான் இப்போது போட சொன்னார். எனக்கு நான் பாடியதில் யுவனின் இசையில், நா.முத்துக்குமார் அவர்கள் எழுதிய “போகாதே பாடல்” பாடல் மிகவும் பிடிக்கும். அவர் எழுதிய பாடலை நான் என் குரலில் பாடி அவரிடமே காண்பிப்பேன் என்று அந்த நிமிடம் வரை நான் நினைக்கவில்லை.
அதற்கு முன்னர் ஒரு சின்ன சந்தேகம். அவரிடமே கேட்டுவிட்டேன் “போகாதே பாடல் எழுதியது நீங்கள் தானே?” என்றேன். “ஆம்” என்றார். உடனே பாடலை ப்ளே செய்தேன்.. மெல்லிய சப்தத்தில் ஆரம்பமானது இசை. என் மொபைலையே கூர்ந்து கவனித்துக்கொண்டு இருந்தார். நான் அவரையே பார்த்துக்கொண்டு இருந்தேன். சில நொடிகளில் “போகாதே. போகாதே…” என்று ஆரம்பமானதும்.. “ஹேய்,,, இது யுவன் குரல் மாதிரியே இருக்கு…, யுவன் கேட்டார்னா ஆச்சர்ய படுவார்” என்றார். இதை கேட்டவுடன் நான் ரெக்கை கட்டி வானத்தில் பறக்காத குறை… “நீங்கள் ப்ரோபசனல் சிங்கரா?” என்றார்… “இல்லை, ஜஸ்ட் பாத்ரூம் சிங்கர்,,, இது வெறும் ஆர்வத்தில் பாடியது” என்றேன்
.
நான் இப்போது வெறும் ரசிகனாக, முதிர்ச்சி அடைந்த ரசிகனாகவே அவரை சந்தித்தேன்.. பல வருடங்களுக்கு முன்னால் அவரால் தீவிரமாக ஈர்க்கப்பட்டு, அவர் பாடல்களினாலும், கவிதையினாலும் பித்து பிடித்து திரிந்த போது சந்தித்திருந்தால் பல கேள்விகளால் அவரை துளைத்தெடுத்திருப்பேன் என நினைக்கிறேன். இதை அவரிடமே கூறினேன். என்னுடைய கவிதை தொகுப்பில் உங்களுக்கு பிடித்தது என்ன என்றார். சட்டென ஞாபகம் வரவில்லை. தர்மசங்கடமான சூழ்நிலை. அவருக்கும் தான் என நினைக்கிறன். கவிதைகள், எழுத்துக்களை விட்டு விலகி பல வருடங்கள் ஆயிற்று அதனால் ஞாபகம் இல்லை என்றேன். இருந்தாலும் உள்ளுக்குள்ளே அந்த சூழ்நிலை வருத்தம் அளித்தது.
முன்பொருமுறை ஒரு இதழில் தன்னை தன் தந்தை சைக்கிளில் உட்காரவைத்து மகாபலிபுரம் ரோட்டில் இருட்டில் ஒட்டிசென்றதை நினைவு கூர்ந்து இப்போது அதே மகாபலிபுரம் ரோட்டில் தான் காரில் செல்வதாகவும் ஆனால் தன் தந்தை தான் இல்லை என வருத்தப்பட்டு இருந்தார். அவரை பற்றி நான் படித்ததில் என்னை மிகவும் பாதித்த ஒன்று அது. அதை பற்றி அவரிடம் பகிர்ந்து விட்டு. இன்னும் பல நல்ல பாடல்களை எழுதுமாறு என் வாழ்த்துக்களை கூறிவிட்டு அவரிடம் இருந்து வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டும் விடை பெற்றேன். உள்ளுக்குள் ஒரு உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது. வெளியே வந்து பைக்கில் அமர்த்தும் அந்த கவிதை தொகுப்பு நினைவில் வராமல் போனது சங்கடம் அளிக்கிறது என்று அஜயன் பாலா அவர்களிடம் கூறினேன். சிறிது தூரம் தான் சென்றிருப்போம் “பட்டாம் பூச்சி விற்பவன்” என சட்டென ஞாபகம் வந்தது.
பின் குறிப்பு:
நான் பாடிய அந்த “போகாதே போகாதே” பாடலை கேட்க இங்கே கிளிக் செய்யவும்
இந்த மறக்கா முடியா சந்திப்பினை ஏற்படுத்திய தாமஸ் அண்ணாவிற்கு என் நன்றிகள். அது யார் தாமஸ் அண்ணா என்று கேட்பவர் இங்கே கிளிக் செய்யவும்.
27 பிப்ரவரி, ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் ஐந்து மணியளவில் கொழும்பு கடற்கரையில் நண்பர்களுடன் நடந்து சென்றுக்கொண்டிருக்கையில் ஒரு இடத்தில் திடீர் கூட்டம் இருப்பதை கண்டோம். அருகில் சென்று பார்த்தால், ஆஸ்திரேலிய கிரிகெட் வீரர் ப்ரெட் லீயை சுற்றி ஒரு கூட்டம் மொய்த்துகொண்டு ஆட்டோக்ராப் வாங்கிக்கொண்டு இருந்தது. நான் பெரிதாக கிரிக்கெட் ரசிகனில்லை. கிரிக்கெட் மேல் பித்து பிடித்த கல்லூரி வாழ்விலிருந்து காரணமில்லாமல் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து விலகி வந்துவிட்டேன். அதில் நாட்டமில்லாததால் என்னவோ பிரெட் லீயை பார்த்தும் பெரிதான ஒரு துள்ளல் என்னுள் எழவில்லை. நாங்கள் கூட்டத்தருகே செல்லவும் ப்ரெட் லீ கூட்டத்தை விட்டு விலகி எதிர் பக்கம் செல்லவும் சரியாக இருந்தது.
நண்பர் ஒருவர், ப்ரெட் லீயுடன் நாம் அருகில் நின்று புகைப்படம் எடுத்து இருந்தால் நன்றாக இருந்துக்குமே என்றார். இன்னொருவரோ, சிறிது நேரத்திற்கு முன்னால் வந்து இருந்தால் முயற்சித்திருக்கலாம் இப்போது அவர் ரசிகர்களிடம் இருந்து விடை பெற்று சென்றுக்கொண்டு இருப்பதால் அது சாத்தியமில்லை என கூறினார். சில வினாடிகளில் நடந்தது தான் மேலுள்ள அனைத்தும்.
சரி முயற்சித்துதான் பார்ப்போமே என்று நான் விரைவாக அவரை நெருங்கிச்சென்று சென்று அவசர அறிமுகத்தோடு இந்தியாவிலிருந்து வருவதாக கூறினேன். அவரோ நினைத்ததற்கு எதிர்மாறாக, சட்டென்று என்னிடத்தில் திரும்பி கை குளிக்கியவாறு இந்தியில் ஏதோ கூறினார். (“தாங்கள் எப்படி இருக்கிறீர்கள்” என்று இந்தியில் அவர் கேட்டதாக பிறகு நண்பர் கூறினார்). எனக்கோ ஒன்றும் புரியாமல் எனக்கு இந்தி தெரியாது என்றேன். இந்தியாவில் இருந்துக்கொண்டு இந்தி தெரியாதா என அவர் ஆச்சர்யபட்டார். நான் தமிழ் நாடு என்றும் நாங்கள் தமிழ் பேசுவோம் என்றும் கூறியதும் வியப்பில் புன்னகைத்தார். அதுமட்டுமில்லாமல் கேட்டவுடன் புகைப்படத்திற்கு மறுப்பில்லாமல் சம்மதித்தார். அப்போது என் நண்பர் க்ளிக்கிய புகைப்படங்கள் தான் கீழே உங்கள் பார்வைக்கு.
2006ஆம் வருடம் நான் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருந்த ஆரம்ப காலம். எப்படியும் அப்போது வாரம் ஒருமுறை ஏதேனும் புதிதாய் வெளிவந்த படத்திற்கு உடன் பணிபுரிந்த நண்பர்களுடன் சென்று விடுவோம். வெள்ளிக்கிழமை ஆகிவிட்டால் போதும், பர்ஸ்ட் ஷிப்ட் மதியம் இரண்டு முப்பது மணிக்கு முடியும் என்றால் எப்படியும் இரண்டே காலுக்கே தியேட்டரில் ஆஜராகிவிடுவோம். அவ்வளவு கடமை தவறாத ஈடுபாடு.
அதே போன்ற ஒரு வெள்ளிகிழமை நாளென்று நினைக்கிறேன். நண்பர்கள் சிலபேர் அலுவலகத்தில் தேனிர் இடைவேளையின் போது ஒன்று கூடிய நேரம். போன வாரம் “சித்திரம் பேசுதடி”னு ஒரு படம் வந்து இருக்கு, அதற்கு இன்றைக்கு போலாமா என்று நான் கேட்டேன். ஆனா அது பெரிய மொக்கை படம்னு சொல்லி யாருக்கும் வர விருப்பம் இல்லை என்று நழுவிவிட்டனர். நானோ அந்த படத்திற்கு போயே ஆக வேண்டும் என்று ஒற்றை காலில் நின்றேன். அதற்கு காரணம் “பாவனா”…… வெறும் புகைப்படம், மற்றும் ட்ரைலர் மட்டுமே அப்போது பார்த்ததாய் ஞாபகம். பாவனாவிற்காக அந்த படத்திற்கு கண்டிப்பாக ஒருமுறையேனும் சென்று விட வேண்டும் என் முடிவெடுத்து இருந்தேன். ஆனால் யாரும் அந்த படத்திற்கு என்னுடன் வருவாதாய் தெரியவில்லை.
தியேட்டர் காத்து வாங்குது என்று ஒருவர் சொல்ல . வாள மீனுக்கு பாட்டு மட்டும் தான் படத்துல நல்லா இருக்கு அதை தொலைகாட்சியிலேயே பார்த்துவிடலாம் என்று இன்னொருவர் சொல்ல. அனைவருக்கும் அந்த படத்தை ஒதுக்க கண்டிப்பாக ஒரு காரணம் கிடைத்து இருந்தது ஆனால் நண்பர் ஒரே ஒருவர் மட்டுமே அப்போது என்னுடன் வர ரெடியாக இருந்தார். அதுவும் நான் பாவனாவின் அருமை பெருமைகளை மீண்டும் மீண்டும் அவரிடம் சொல்லி இருந்ததால் அவரும் பாவனாவை பார்த்தே தீர வேண்டும் என்ற முடிவோடு இருந்தார். இப்படி முழுக்க முழுக்க பாவனாவிற்காக மட்டுமே அந்த படத்திற்கு நானும் அந்த நண்பரும் அன்று மதிய காட்சிக்கு சென்றோம்.
படம் முடிந்து வரும்போது தான் உணர்ந்தோம் கண்டிப்பாக இந்த வருடத்தின் மிகச்சிறந்த படம் அதுவாகத்தான் இருக்கும். இப்படி ஒரு அருமையான திரைப்படத்தை மிஸ் பண்ணி இருப்போமே என்று இரண்டு பெரும் கூறிக்கொண்டோம். நீண்ட நேரம் இருவரும் விடை பெறும்வரை அந்த திரைப்படத்தை மட்டுமே பேசியிருப்போம் என நினைக்கிறன். பாவனாவிற்காக மட்டுமே அந்த படத்திற்கு சென்ற போதும் அவரை தவிர இரண்டு விஷயம் அந்த படத்தில் என்னை கவர்ந்து இருந்தது. ஒன்று அந்த படத்தின் இசை மற்றொன்று அதில் தாமஸ் என்று வரும் ஒரு கதாபாத்திரம். மிக இயல்பான நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருந்தார் அவர். எப்போதும் பேன்ட் பாக்கட்டில் சோம பானம் வைத்துக்கொண்டு படம் முழுதும் ஸ்ருதியோடுதான் வலம் வருவார். ஏனோ தெரியவில்லை திரையில் பாவனா தோன்றாத நேரத்தில் நான் அவரை தான் கவனித்துக்கொண்டு இருந்தேன். முக்கியமாக மூன்று காட்சிகள் இருக்கிறது. அதில் ஒன்று கீழே.
அவ்வளவு தான் அதன் பிறகு பல படங்கள் பார்த்தாயிற்று. வாழ்க்கையில் பல்வேறு நிகழ்வுகளும் நடந்தாயிற்று. சித்திரம் பேசுதடி வழக்கமான படங்களில் ஒன்றாக மறந்தே போயிற்று…
சரியாக நான்கு வருடம் கழிந்தது. 2010 ஆரம்ப மாதங்களில் சேலத்தில் சொற்கப்பல் என்றொரு கருத்தரங்கம் நடைபெற்றது. நான் இயக்கி வரும் சேலம்ஜில்லா இணையத்தளத்தில் மூலம் செய்தி சேகரிக்க விளைந்த போது தான் முகப்புத்தகத்தில் “அஜயன் பாலா” அவர்களின் அறிமுகம் கிட்டியது. கருத்தரங்கில் அவரை நேரில் சந்தித்த சிலநாட்கள் முன்புதான் சற்றும் எதிர் பாராவண்ணம் சித்திரம் பேசுதடி படத்தில் நான் ரசித்த அந்த தாமஸ் கதாபாத்திரத்தில் நடித்தது இவர் என தெரியவந்தது. மிகபெரிய ஆச்சர்யம் அது. இதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
அப்படி எனக்கு அறிமுகமான அவர் பின்பு என் வலைப்பூவை வாசித்து கருத்து கூறும் அளவிற்கு நண்பரானார். அதுவரை போனிலும், சாட்டிலும், இமெயில் மூலம் மட்டுமே தொடர்பில் இருந்த அவர், நேற்று வெள்ளிக்கிழமை என் வீட்டிற்கு வந்து என்னுடன் எங்கள் குடும்பத்தாருடன் நேரம் செலவிட்டு மீண்டும் ஒரு ஆச்சர்யத்தையும், அளவில்லா மகிழ்ச்சியையும் ஏற்படுத்திவிட்டு சென்றார். பழக மிக மிக எளிமையான மனிதர் என்று அப்போது தான் தெரிந்தது. சித்திரம் பேசுதடி உருவானதை பற்றியும், எழுத்துலகை பற்றியும், வலைப்பூ, டெக்னாலஜி என்று என்று பல விஷயங்கள் பேசி இரவு உணவு வரை கிட்டதட்ட ஐந்து மணிநேரம் ஒன்றாக ஒன்றாக செலவிட்டது அனைத்தும் இனிமையான தருனங்களே.
நாங்கள் இருவருமே அக்டோபர் 19ஐ பிறந்த நாளாக கொண்டாடுவது இதில் இன்னொரு ஆச்சர்யம். அவரை ஒரு எழுத்தாளராக, இயக்குனராக, பேச்சாளராக, பண்முக பண்பாளராக அறிவதற்கு முன்னர் தாமஸ் அண்ணனாக அவரை தெரியுமென்பதால் இன்னமும் தாமஸ் அண்ணே என்று தான் கூப்பிடுகிறேன். அவர் தற்போது நடித்து வரும் இரண்டு திரைப்படங்களுக்கும் எதிர்வரும் திரைப்பணிகளுக்கும், எழுத்துப்பணிகளுக்கும் அவரை வாழ்த்துவோமாக!
இதயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் மக்களின் இதயத்தில் நீங்காத இடம் பிடித்த நடிகர் முரளியின் இதயம் இன்று துடிப்பதை நிறுத்திக்கொண்டது. இந்த செய்தியை இன்று கேள்விப்பட்ட உடனேயே சில நிமிடங்கள் உறைந்து போனேன். அது என்னை துயரத்தில் ஆழ்த்தியது. ஏனென்று யோசித்து பார்க்கிறேன். முரளியை தீவிர ரசிகனாக இதுவரை நான் இருந்திருக்கவில்லை. அவரது காலங்களின் நான் சினிமாக்களை பார்த்து வளர்ந்திருக்கவில்லை. ஆனாலும் அவரை நான் ரசித்திருக்கிறேன்.
புது வசந்தம், இதயம் போன்ற படங்களின் பாடல்கள் மூலமே அவரை சிறு வயதில் எனக்கு பரிட்சயம் ஆனதாக ஒரு ஞாபகம். சினிமா, டிவி என்பதை அறிந்துக்கொண்டு இருந்த மிகச்சிறிய வயதாக இருந்திருக்கும் என நினைக்கிறேன். சரியாக நியாபகம் இல்லை. ஆனால் படங்களை பார்க்க ஆரம்பம் செய்த என்னுடைய பள்ளி பருவத்திலே “காலமெல்லாம் காதல் வாழ்க” என்ற திரைப்படத்தை நான் மிகவும் ரசித்திருக்கிறேன். அதுவே எனக்கு தெரிந்து நான் விரும்பிப்பார்த்த முரளியின் முதல் திரைப்படம். அத்திரைப்படத்தின் பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்தவை. ஆறாம் வகுப்பு நான் பயின்று கொண்டிருந்திருக்கலாம். அப்போதே அதை மனப்பாடமாக பாடிக்கொண்டு இருந்திருக்கிறேன். இப்போது கூட அந்த பாடல்களை கேட்க்கும்போது அந்த காலகட்டங்கள் ஞாபகத்திற்கு வந்து செல்கின்றன.
அதே நேரத்தில் அவர் சூர்யாவிடம் சேர்ந்து ஒரு படம் நடித்தார். சில வருடங்களில் வெற்றிக்கொடி கட்டு போன்ற வெற்றி படங்களின் படங்களில் நடித்தார். கடல் பூக்கள் படத்திற்கு தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதும் வாங்கினார். பிறகு நான் தீவிரமாக சினிமா பார்க்க ஆரம்பம் செய்த வயதில் அவரது படங்கள் காணமல் போயின. வெளிவந்த சில படங்களும் சரியாக போகவில்லை. சுந்தரா ட்ராவல்ஸ் படம் வந்த போது அந்த படத்தில் நடித்த பஸ்ஸையும், எலியையும் அருகில் இருந்த தியேட்டருக்கு கொண்டு வந்திருந்தார்கள். அதுவே நான் முரளி நடித்து பார்த்த கடைசி படம். முரளி அமைதியான, சாந்தமான, இளமையான தோற்றமுடையவர் என்பதால் கண்டிப்பாக யாருக்கும் அவரை பிடிக்காமல் இருக்காது. நன்றாக கவனித்து பாருங்கள் அவரது குரல் கூட மிகவும் மென்மையானது. அது மட்டும் இல்லாமல் மற்ற நடிகர்களை போலில்லாமல் எந்த ஒரு கிசி கிசுவிலும் வராத நடிகராகவே கடைசி வரை இருந்தார்.
இக்கால சினிமா ரசிகர்கள் அவரை ரசித்திருக்க வாய்ப்பு குறைவு தான். ஏன் என் வயதையொத்தவர்கள் கூட சேர்த்துதான். அவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் வரிசையில் வர நேரம் சரியாக அமையா விடிலும் எண்பதுகளிலும், தொண்ணூறுகளிலும் இருந்த கல்லூரி மாணவர்கள் அவரை மறந்திருக்க வாய்ப்பு இல்லை. நடிகர் மோகன் எப்படி எல்லா திரைப்படங்களிலும் மைக்கோடு வந்து மைக் மோகன் ஆனாரோ. அது போல் எல்லா திரைப்படங்களிலும் புத்தகத்தை எடுத்துக்கொண்டு கல்லூரி மாணவனாக வருவார் முரளி. மோகன் மைக் எடுத்து மேடை ஏறினால் படம் ஹிட் என்ற செண்டிமென்ட் அப்போது இருந்தது. அது போல் முரளி புத்தகம் எடுத்துக்கொண்டு கல்லூரி சென்றால் படம் கண்டிப்பாக ஹிட்.
நான் இப்போதும் உறுதியாக கூறுவேன், முரளி காலத்து நடிகர்கள் யாரேனும் இப்போது கல்லூரி மாணவனாக நடிக்க முடியுமா? கற்பனை செய்து பாருங்கள். பார்த்திபன்? பிரபு? பாண்டியராஜன்? சுரேஷ்?. ஏன் அதற்கடுத்த கட்ட நடிகர்களான விஜய், அஜித், விக்ரம் கூட மீண்டும் கல்லூரி மாணவர்களாக நடித்தால் நம்மில் பலர் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் இன்றும் முரளியின் தோற்றமும் குரலும்அதற்கு பொருந்துவதாகவும் ரசிக்கும் படியாகவும் இருக்கும்.
நான் இப்போது கூறப்போவது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. காதல் கொண்டேன் திரைப்படம் வந்த தருணத்தில் டைரக்டர் செல்வராகவனின் பேட்டி ஒன்றை படித்தேன். அந்த திரைப்படத்தில் தனுஷிற்கு பதிலாக ஏற்கனவே இரண்டு நடிகர்கள் நடிப்பதாக இருந்து கைவிடப்பட்டது என்று கூறி இருந்தார். மாஸ்டர் டிகிரி படிக்க அதன் நாயகன் சென்னை வருவதாக அமைத்து இருந்த அந்த கதை பிறகு தனுஷிற்காக சிறிது கதை மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. அந்த இரண்டு நடிகர்களில் செல்வராகவன் தேர்வு செய்து இருந்த ஒரு நடிகர் தான் முரளி. அது மட்டும் உண்மையாக இருந்து படம் வெளிவந்து இருந்திருந்தால்? முரளி கண்டிப்பாக தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட்டு இருப்பார்.
முரளியின் இழப்பு கண்டிப்பாக சோகத்தின் உச்சம் தான். எங்கள் குடும்பத்தாருக்கும் தான் அதன் பாதிப்பு இருக்கிறது.. முரளியை நாங்கள் நேரில் கண்டிராவிட்டாலும், பழக வாய்ப்பு இல்லாவிட்டாலும் அவருடையமறைவு எங்களை உறையவைத்ததற்க்கு காரணம் இருக்கிறது. சுமார் தொன்னூறுகளில் இருந்த அவருடைய தோற்றம் அப்படியே அச்சு அசலாக என்னுடைய தாய் மாமாவை போலிருந்தது. முளியின் முகம் எனக்கு அப்போதுதான் பரிட்சயமான சமயம் என்பதால் முரளியை பார்த்தால் என்னுடைய மாமாவை பார்ப்பது போலவே இருக்கும். எதிர்பாராவிதாமாக அவர் இரண்டு வருடங்களுக்கு முன்னர் புற்று நோயால் அவதிப்பட்டு இறந்து போனார். இருவருக்கும் தோற்றத்தை தவிர மேலும் சிறு ஒற்றுமைகள் இருப்பதை இப்போது உணர்கிறேன்.
இருவரும் இளம் வயதிலேயே இறந்தனர். என் மாமா இறக்கும் போது அவருடைய வயது முப்பத்தி ஆறு, முரளிக்கோ நாற்பத்தி ஆறு. இருவருக்கும் மகனும் மகளும் உள்ளனர். தன்னுடைய மகனின் வளர்ச்சியையும், பெண்ணின் திருமணத்தை காணக்கிடைக்காமலும் மரணம் எய்திவிட்டார்கள் இருவரும். அவர்களுடைய இறப்புசெய்தியை அறிவித்தது சென்னையில் ஒரு மருத்துவமனையில் தான். முரளிக்கு திரையுலகமே திரண்டு வந்து இருந்தது, இவருக்கோ ஒட்டு மொத்த நெய்வேலி லிக்னயிட் கார்பரேசன் ஊழியர்களும், முக்கிய அதிகாரிகளும், தொழிற்சங்க பிரதிநிதிகளும் திரண்டு வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.
என் மாமா இறந்த இந்த இடைப்பட்ட இரண்டு வருடத்தில் முரளியை காணும் போது எங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் மாமாவை நேரில் காண்பது போன்ற உணர்வு. அவர் இறந்த பிறகும் உயிருடன் இருப்பதை போன்ற ஒரு தற்காலிக தோற்றத்தை அது உருவாக்கியது. தான் மிகவும் நேசித்தவரும், ரத்த சம்பந்தமானவரும் இறந்து பிறகு அவர் உருவத்தை உடையவர்களை நேரில் பார்க்க வாய்ப்புக்கிட்டியவர்களை கேட்டுப்பாருங்கள் அது எவ்வளவு பெரிய விஷயமென்று.
ஓரிரு வாரங்களுக்கு முன்னர் கூட விஜய் டீவியில் வரும் காபி வித் அனு நிகழ்ச்சியில் தன் மகன் ஆதர்வாவுடன் வந்திருந்தார் முரளி. எங்கள் குடும்பத்தினர்கள் அனைவருக்கும் தொலைப்பேசியின் மூலம் தகவல் பரிமாறப்பட்டு அனைவரின் இல்லத்தின் வரவேற்பறையிலும் அந்த நிகழ்ச்சியே ஓடியது. அனைவருக்கும் எங்கள் மாமாவை நீண்ட நாட்கள் கழித்து நேரில் கண்டதாக ஒரு உணர்வு அப்போது. இனிமேல் இவர்களுக்கு அதுவும் கிடைக்க வாய்ப்பில்லை. முரளியின் இதயம் இன்னும் சிறிது காலம் கழித்து நின்றிருக்கலாம்.