Posts Tagged சிறு கவிதைகள்

    சிறு கவிதைகள் – தொகுப்பு நான்கு

    உயிரெழுத்து நீயானாய்.
    மெய்யெழுத்து நானானேன்.
    இருவரும் சேர்ந்தோம்,
    உயிர்மெய் எழுத்தானது நம் காதல்!
    அதனால் தானோ,
    ஆய்(யு)த எழுத்தாய்
    உன் அப்பா!

    ——————————————————————————————-

    வாழ்வு முழுவதும் சுகம் தர,
    தாசி வாங்கும் பணம் போலே,
    வரதட்சணை.

    ——————————————————————————————-

    இடியை பார்த்து
    நடுங்காத இந்த நெஞ்சம்
    உன் இடையை பார்த்ததும்…..

    ——————————————————————————————-

    மனம் ஒரு குரங்குதான்.
    உன்னை மறக்க நினைக்கும் என் மனம்
    உன் நினைவுகளையும் நினைக்க
    மறப்பதில்லையே.

    ——————————————————————————————-

    என்னுயிர்
    உன்னுயிரோடு
    உறவாடி
    உயிர்தருகிறது
    ஓர் உயிர்க்கு.

    ——————————————————————————————-

    நீ என்னிடம்
    கனவிலாவது பேசுவாய் என்றுறங்கினால்
    கனவு கூட கனவாகியே போனது

    ——————————————————————————————-

    நான் தினமும்
    ரத்ததானம் செய்கிறேன்
    கொசுக்கடி .

    ——————————————————————————————-

    சிதைந்த சூரியன்
    உடைந்த வெண்ணிலா
    உதிர்ந்த விண்மீன்
    நனைந்த மேகம்
    இவை அனைத்தும்
    வானில் சாத்தியமென்றால்
    என் வாழ்வில்
    அவளும் சாத்தியம்

    ——————————————————————————————-

    ஆசிரியப்பா தெரியாது
    வெண்பா தெரியாது
    எதுகை மோனை தெரியாது
    மொத்தத்தில் இலக்கணமே தெரியாது
    இருந்தும் காதலித்துப்பார்
    உனக்கும் கவிதை எழுதத்தெரியும்.

    ——————————————————————————————-

    உன் கூந்தலில் குடியேற
    வாய்ப்பிழந்த பூக்கள் யாவும்
    தற்கொலை செய்தன
    தரையில் குதித்து

    ——————————————————————————————-

    உடலை
    உயிர் பிரிந்ததும்
    எரிப்பது வழக்கம்

    நீ
    என்னை பிரிந்தும்
    நான் இன்னும் பிணமாய்,,,,

    ——————————————————————————————-

    உள்ளத்திற்கும்
    உணர்வுகளுக்கும்
    ஏற்பட்ட உறவினால்
    கற்பமில்லாமல் பிரசவிக்கிறது
    என் கவிதை

    ——————————————————————————————-

    சிறு (சினிமாக்) கவிதைகள் – தொகுப்பு மூன்று

    நானெழுதிய மற்ற சிறுகவிதைகளை போலில்லாமல் இதில் தமிழ் சினிமா பெயர்கள் முடிவடையுமாறு ஒரு சிறு முயற்சி.  படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

    எரிமலையை கூட
    பனிமலையாக மாற்றும்
    உன் பார்வையை தரிசிக்க
    பாதையில் காத்திருக்கிறேன்
    நீ வருவாயென.

    ——————————————————————————————-

    அந்திசாயும் ஒரு மாலையிலே,
    நாம் காதல் புரிந்த வேளையிலே,
    முத்தத்தால் எனை மூழ்கடிப்பாயென
    நினைத்துக்கூட பார்த்ததில்லை,
    உன்னை முதலாய்
    சந்தித்த வேளையிலே.

    ——————————————————————————————-
    ஆக்ராவில் இல்லையென்றாலும்,
    என் இதயத்தில் கட்டியிருப்பதால்,
    நானும்
    ஷாஜஹான்.

    ——————————————————————————————-

    காதல் கொண்டேன்.
    கவிஞனானேன்.

    ——————————————————————————————-

    காதல் கொண்டேன்
    கண்ணீர கொண்டேன்.

    ——————————————————————————————-

    பார்வைகளில் நீயெனை உரசிட
    பற்றியெரியும் காதல் தீ
    அனையும் முன்,
    உன்னைக்கொடு என்னை தருவேன்.

    ——————————————————————————————-

    நந்தவனத்தில் தொலைந்த
    பூக்களெல்லாம் புடைசூழ
    நடக்கிறதோர்
    பூமகள் ஊர்வலம்.

    ——————————————————————————————-

    மழைக்கு ஒதுங்கிய மரத்தடியில்,
    தனிமை என்னை பாடாய் படுத்த,
    உன் ஈரச்சேலை என்னுள் தீயை மூட்ட,
    முத்தமிட்டு அதை நீ அனைத்ததை
    மறக்கமாட்டேனென்
    நினைவிருக்கும் வரை.

    ——————————————————————————————-

    புகைப்பதை நிறுத்தச்சொல்லி
    நீ என்னுடன் பகை கொண்டபோது
    உடனே நானதை நிறுத்தினேனே,
    அது உனக்கு உணர்த்தியிருக்கும்
    நான் செய்தது
    காதலுக்கு மரியாதை.

    ——————————————————————————————-

    நான் மறக்கச்சொல்லியும்
    மறுக்கிறதென் இதயம்
    துடிப்பதற்கு,
    பூவே உனக்காக.

    ——————————————————————————————-

    வழக்கமான இரவென்றாலும்,
    வழக்கமான ஆசைகளோடு,
    இன்றும் போர்வைக்குள் பதுங்கினேன்.
    என்னை நனவில் காதலிக்காத நீ,
    கனவிலாவது காதலிக்க வருவாய்
    என்ற ஆசையுடன் கண்களை மூடி
    நினைத்தேன் வந்தாய்.

    ——————————————————————————————-

    ஆதரவாய் உன் தோள்சாயும் போது,
    ஆறுதலாய் உதிரும் உன் வார்த்தைகளுக்காக,
    என்றும் இருப்பேன்
    ப்ரியமுடன்.

    ——————————————————————————————-

    கஷ்டமான காலங்களில்
    மனம் சிக்கித்தவிக்கும் வேளைகளில்
    நான் கண்ணீர சிந்தும் நேரங்களில்
    உன் புன்னகையை
    பார்த்தாலே பரவசம்.

    ——————————————————————————————-

    பிடியின்றி விழுந்த குழி
    புதைக்குழி என்றறிந்தும்
    உன் இதயக்குழி என்பதால்
    எழுந்துவர மனமில்லையென்
    ப்ரியமானவளே.

    ——————————————————————————————-

    என் உயிரைக் கொல்லாமல்
    உடலில் மின்சாரம் பாய்கிறது நீயென்
    கன்னத்தில் முத்தமிட்டால்.

    ——————————————————————————————-

    கெஞ்சிக்கேட்டும் கிடைக்காத,
    காலில் விழுந்தும் கிடைக்காத,
    காதலியின் முத்தம்
    எதிர்பாராமல் கிடைத்தால்
    துள்ளாத மனமும் துள்ளும்.

    ——————————————————————————————-

    ஆண்களின் இதயங்கள் எரிக்கப்பட
    பெட்ரோல் தேவையில்லை.
    தீ கூட தேவையில்லை.
    பெண்களின்
    பார்வை ஒன்றே போதுமே.

    ——————————————————————————————-

    தோற்றம்: http://www.cpraveen.com/suvadugal/tamil-short-poems-part-three

    பெண் சிசுக்கொலை

    பசித்தழுகிறது பச்சிளங்குழந்தை.
    அறுந்து விழாத தொப்புள் கொடியை
    பார்க்கும் கண்கள் சொல்லிவிடும்
    புதியதாய் பிறந்த குழந்தையென்று.

    அழுகுரல் கேட்டுணர்ந்து வந்த தாய்
    குழந்தையை மடியினில் வைத்து
    ஊட்டினாள் புட்டிப்பாலை.

    பசியடங்கி படுத்துறங்கிய குழந்தையைக்கண்டு
    கண்ணீரோடு கீழே ஊற்றினாள்
    மீதமிருந்த கள்ளிப்பாலை.

    உடையில்லா உடலைக்கண்டு
    உடைந்த நெஞ்சம் சொல்லிவிடும்
    கொல்லப்பட்டது பெண்பாலை!

    சிறு கவிதைகள் – தொகுப்பு இரண்டு

    பெண்கள் பூவென்றிருந்தேன்
    என் இதயம் குத்தப்படும் வரை.

    ரோஜாவை அழகாக படைத்தவன்
    முள்ளையும் மறக்கவில்லை!

    ——————————————————————————————-

    காதலன்களை ஒன்று கூட்டுங்கள்.
    காவிரியில் தண்ணீர் இல்லையாம்
    கண்ணீராவது ஓடட்டும்!

    ——————————————————————————————-

    தமிழ்நாட்டிற்கு
    புதிய மின்சார விநியோகம்
    உன் விழிகளிலிருந்து!

    ——————————————————————————————-

    நான் தவமிருந்தது உண்மைதான்
    உன் வரம் கிடைக்குமென!

    சாபம் கொடுத்துவிட்டாயே
    கடைசிவரை கண்ணீரென!

    ——————————————————————————————-

    உனக்கும்
    நல்ல மனதுதான்
    உன் நினைவுகளையாவது
    காதலிக்க விட்டாயே…

    ——————————————————————————————-

    தடுக்கித்தான் விழுந்தேன்.
    அவள் நெஞ்சம்,
    புதைக்குழி என்றறியாமல்….

    ——————————————————————————————-
    தாடி கூட,
    சரியாக முளைக்கவில்லை,
    தேவதாஸ் ஆகிட!

    ——————————————————————————————-

    தமிழ்நாட்டில்,
    மின்சார தட்டுப்பாடு
    அவள் கண் சிமிட்டும்போது.

    ——————————————————————————————-

    விடியும் என்றுதான்
    தினமும் உறங்குகிறேன்!

    ——————————————————————————————-

    மின்னி மின்னி
    மறையும் மின்மினிப்பூச்சி
    உன் விழி!

    ——————————————————————————————-
    நீ தீண்டினாலும்
    சுகம்தான்!
    திட்டினாலும்
    சுகம்தான்!

    ——————————————————————————————-

    காதல் வலையே
    பிடியில்லாமல் விழுந்துவிட்டேன்
    என்று பீற்றிக்கொள்ளாதே
    அவளை
    பிடித்துத்தான் விழுந்தேன்

    ——————————————————————————————-

    என் இதயமாளிகையில்
    இருக்கும் என்னவளுக்கு
    மூச்சு திணறுகிறதாம்
    புகைப்பதை நிறுத்திவிடுகிறேன்!

    – பிரவீன் குமார் செ

    http://www.cpraveen.com/suvadugal/tamil-short-poems-part-two

    சிறு கவிதைகள் – தொகுப்பு ஒன்று

    காதல் காவியம்

    காதல் வானிலே,
    வாழும் காவியம் நாம்.
    நிலவாய் நீ,
    ஒளியாய் நான்.

    ——————————————————————————————-

    தனிமை

    காதல் தீவிலே,
    நிலமாய் நான்….
    தனியாய் என்று வருந்தினேன்!
    கடலாய் நீ…
    அலையாய் வந்து மோதினாய்..

    ——————————————————————————————-

    காதல் மொழி.

    ஊமைகள் கூட
    பேசும் மொழி,
    காதல் மொழி!

    ——————————————————————————————-

    தேடல்

    மலரை தேடி வண்டு வந்தது,
    மகிழ்கிறாய்!
    இரவை தேடி நிலவு வந்தது,
    ரசிக்கிறாய்!
    உன்னை தேடி நான் வந்தால் மட்டும்
    ஏனடி வெறுக்கிறாய்?

    ——————————————————————————————-

    அவளின் பிறந்த நாள்

    பூவுக்கு பிறந்த நாளாம்!
    புத்தாடை போர்த்திக்கொண்டது…
    பூவிலும் அவள்
    மல்லிகையோ ரோஜாவோ அல்ல..
    அது வாடி விடும்.
    அவளோ வாடா மல்லி
    என்றென்றும் “வாடா மல்லி “!

    ——————————————————————————————-

    சிக்கல்

    காதல் புயல் என்றறிந்தும்
    ஆண் மனம் மாட்டிக்கொள்கிறது!
    காதல் தீ என்றறிந்தும்,
    ஆண் குணம் சுட்டுக்கொள்கிறது!
    காதல் சுழல் என்றறிந்தும்
    ஆண் இனம் சிக்கிக்கொள்கிறது!

    ——————————————————————————————-
    உனக்காக,
    நான் புதிதாய் கற்றுக்கொண்ட மொழி,
    மௌன மொழி!

    ——————————————————————————————-

    கொலை

    புயலில் பிழைத்து,
    இடியில் தப்பித்து,
    தீயில் நடந்து,
    நீரில் தவழ்ந்து
    உன்னை காண வந்தேன்
    ஒரே புன்னகையில் என்னை கொன்றுவிட்டாயடி!

    ——————————————————————————————-

    கனவு

    நீ என்னிடம்
    கனவிலாவது காதலிப்பாய் என்றுறங்கினால்
    கனவு கூட,
    கனவாகி போனது!

    ——————————————————————————————-

    நேரம்

    நீ இருக்கும் போது,
    நேரம் போதவில்லை.
    நீ இல்லாத போது,
    நேரம் போகவில்லை!

    ——————————————————————————————-

    காதல் என்ன  கெட்ட வார்த்தையா?
    பரவாயில்லை,
    பேசித்தான் பார்ப்போமே!

    ——————————————————————————————-

    என் டைரி

    உன்னை பார்த்த நாள் முதல்,
    என்னிடம்,
    என் டைரி கோபித்துக்கொண்டது.
    எழுத்துச்சுமை அதிகமாகிறதாம்.
    என் மனச்சுமை குறைவது தெரியாமல்……

    ——————————————————————————————-

    விண்மீன்களை கண்களாக்கினான்,
    சந்தனத்தை தோலாக்கினான்,
    பளிங்கை உடலாக்கினான்
    ஆனால்,
    இதயம் மட்டும் கல்லாக்கிவிட்டானே!

    ——————————————————————————————-
    பூக்கடையில்,
    ஒவ்வொரு பூக்களும் அழகழகாய் இருந்தன,
    நீ வரும் வரையில்!

    புத்தகக்கடையில்,
    ஒவ்வொரு புத்தகமும் அரிதாய் இருந்தன
    நீ தொடும் வரையில்!

    ——————————————————————————————-