நீங்கள் ஒரு அக்மார்க் தமிழனா? இதோ ஒரு பரிசோதனை!!!

தமிழனுக்குனு ஒரு மகத்துவம் இருக்கு. விவேக் சொல்கிற மாதிரி “என்னதான் இப்போ கம்ப்யூட்டர் முன்னாடி உட்காந்தாலும்… ஒரு காலத்துல தெருவுல வித்தை காட்டுறவன் முன்னாடி உட்காந்து கை தட்டுன கும்பல் தான எல்லாரும்”. அது மாதிரி அக்மார்க் தமிழனுக்குனு பிரத்தியோகமான சில குணாதிசயங்கள் உண்டு.. (நகைச்சுவையாக).

அதுக்கு முன்னாடி ஒரு கேள்வி.. நீங்கள் ஒரு வெறும் தமிழனா? இல்லை அக்மார்க் தமிழனா? இந்த தமிழ் இடுக்கையை படிப்பதினால்  கண்டிப்பாக நீங்கள் ஒரு தமிழன் தான். அதில் சந்தேகமில்லை. ஆனால் நீங்கள் ஒரு அக்மார்க் தமிழனா?பின் வரும் கேள்விகளுக்கு உங்கள் மனதினுள்ளே பதிலளியுங்கள். ஆம் என்று பலமுறை பதிலளிக்க வேண்டிஇருந்தால் கண்டிப்பாக நீங்கள் ஒரு அக்மார்க் முத்திரை பெற்ற தமிழன் தான்.. வாழ்த்துக்கள்.!!!

1. எந்தப்பொருள் வாங்கினாலும், ரொம்ப நாளைக்கு அதைச் சுத்தி இருக்கற ஜவ்வு பேப்பரைக் கிழிக்கவே மாட்டீங்க..!

2.. உங்க சமையலில் உப்பு, புளி, மிளகாய் சேராமல் எந்த உணவும் இருக்காது..!

3. உங்களுக்கு வந்த அன்பளிப்புப் பொருட்களில், பால் குக்கரும், அஜந்தா சுவர்க் கடிகாரமும் நிச்சயம் இடம் பிடிச்சிருக்கும்..! ரொம்பப் பேரு தங்களுக்கு வந்ததை அடுத்தவங்க தலையில் [அன்பளிப்பாதான்] கட்டிவிட திட்டம் போட்டுகிட்டு இருப்பாங்க….!

4. வெளிநாட்டுக்குப் போயிட்டு வந்தீங்கன்னா, ஒரு மெகா சைஸ் சூட்கேஸோடதான் ஊருக்குத் திரும்புவீங்க..!

5. எந்த நிகழ்ச்சிக்குப் போனாலும் 1 மணி நேரம் தாமதமாப் போவீங்க. அதுதான் சரியா இருக்கும்ன்னு மனசார நம்புவீங்க…!

6. மளிகைப் பொருட்களின் பாலிதீன் உறைகளை பத்திரமா எடுத்து வைப்பீங்க.. பின்னாடி உதவும்ங்கற தொலைநோக்குப் பார்வையோடு…..!

7. உங்களுக்கு வரும் கடிதங்களில் எல்லா ஸ்டாம்பிலும் சீல் விழுந்திருக்கான்னு பார்ப்பீங்க. தப்பித்தவறி சீல் விழாம இருந்தா, அந்த ஸ்டாம்பை கவனமா பிரிச்சு எடுத்து எங்கேயாவது வச்சுட்டு, அப்புறம் சுத்தமா மறந்துடுவீங்க.

8. சினிமா தியேட்டரோ, விரைவுப் பேருந்தோ.. இருக்கையின் இருபக்க கை வைக்கும் இடத்துக்கும் சொந்தம் கொண்டாடுவீங்க..!

9… ரெட்டைப் பிள்ளைகள் இருந்தா, ஒரே மாதிரி ட்ரெஸ் தச்சுக் கொடுப்பீங்க. ரைமிங்கா பேர் வைப்பீங்க..[ரமேஷ், மகேஷ். அமிர்தா,சுகிர்தா..]

10. ஏ.சி. திரையரங்குன்னா முட்டை போண்டா எடுத்துட்டுப் போய் நாறடிப்பீங்க.. ஏ.சி. கோச்சுன்னா, கருவாட்டுக் குழம்பை கீழே ஊற்றி கப்படிக்க வைப்பீங்க.!

11. விமானமோ, ரயிலோ, பஸ்ஸோ… ஒரு கும்பல் வந்து ஏத்திவிடணும்ன்னு எதிர்பார்ப்பீங்க..!

12. புதுசா கார் வாங்கினா, அதுக்கு மணப்பெண் அலங்காரம் பண்ணிதான் எடுத்துட்டுவருவீங்க.! கொஞ்ச நாளைக்கு சீட் பேப்பரைக் கிழிக்கவே மாட்டீங்க.. நம்பர் எழுதறீங்களோ இல்லையோ.. கொலைகார
முனி துணைன்னு ஸ்டிக்கர் ஒட்ட மறக்கவே மாட்டீங்க..!

13. செல் போனோ, டி.வி.ரிமோட்டோ… லாமினேஷன் செஞ்சாதான் உங்களுக்கு நிம்மதி…!

14. அடுத்த பிள்ளைகளைப் பாரு.. எவ்வளவு சாமர்த்தியமா இருக்காங்கன்னு.. என்று உங்க பெற்றோர் சொல்லாம இருக்கவே மாட்டாங்க.. அடுத்த பெற்றோரைப் பாருங்க…. எவ்வளவு ஜாலியா செலவழிக்கறாங்கன்னு நீங்க நெனைப்பீங்க.. ஆனா சொல்ல மாட்டீங்க…!

15. உங்க வீட்டு ஃபிரிட்ஜ்ல, சின்னச் சின்னக் கிண்ணங்களில், 3 மாசமா தயாரிச்ச குழம்பு, கறி வகையறா இருக்கும்..!

16. உங்க சமையலறை அலமாரியில் காப்பித்தூளுக்கு இலவசமா வந்த பெட் ஜாடி குறைஞ்சது ரெண்டு மூணு
இருக்கும்…!

17. அதிகமா உபயோகிக்கப்படாத பொருள் உங்ககிட்ட அவசியம் நாலைஞ்சு இருக்கும். [உ-ம்.... பிரஷர் குக்கர், காப்பி மேக்கர், வாக்குவம் கிளீனர், பிரெட் டோஸ்ட்டர், மைக்ரோ வேவ் அவன், கேஸ் அடுப்புல க்ரில் இப்படி..]

18. பொங்கல், தீபாவளின்னா வீட்டுல சந்தோஷமா விழுந்து கெடக்க மாட்டீங்க.. தண்ணியைப் போட்டுட்டு, தகராறுபண்ணி, போலீஸ்-ஸ்டேஷன்ல குத்தவச்சுருப்பீங்க..!

19. கல்யாணத்துக்கு ஊர் பூரா பத்திரிகை வச்சு கலெக்ஷன் பார்ப்பீங்க…

20. இந்த விவரம் உங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கும்.. உடனே உங்க நண்பர்களுக்கு அனுப்பணும்ன்னு கை பரபரக்கும்.. இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்.

அடடா.. இப்போது நீங்களும் ஒரு அக்மார்க் தமிழன் என்று நிருபித்து விட்டீர்கள். மீண்டும் வாழ்த்துக்கள். அது சரி..  மேலே கொடுக்கப்ட்ட குணாதிசயங்களை தவிர வேறு ஏதேனும் விடுபட்டு இருக்கிறதா? கண்டிப்பாக இன்னும் இருக்கிறது என்று நினைக்கிறன். உங்களுக்கு எதாவது தோன்றினால் கீழே கிறுக்கவும். வாழ்க தமிழன்!

  • Share/Bookmark

அராரிராரோ – ராம் திரைப்பட வீடியோ பாடல் என் குரலில்

அராரிராரோ…. நான் இங்கே பாட.. தாயே நீ கண்ணுறங்கு… என்னோட மடி சாய்ந்து….
யுவன் ஷங்கர் ராஜா இசையில், கவிஞர் சிநேகனின் வரிகளில் ஜேசுதாஸ் அவர்கள் ராம் திரைப்படத்திற்காக பாடியது. இந்த பாடலை பிடிக்காதவர்கள் நிச்சயமாக யாரும் இருக்க முடியாது… எனக்கும் தான்.. நான் அடிக்கடி முனுமுனுக்கும் இந்த பாடலை பதிவு செய்தால் என்ன என்று தோன்றியது.

ஜேசுதாஸ் அவர்களின் குரலை நீக்கிவிட்டு என்னுடைய குரலை நுழைத்து பார்க்கலாமா?. இது கண்டிப்பாக விஷப்பரிச்சை என்று தெரியும். ஜேசுதாஸ் அவர்களின் குரலில் அந்த பாட்டை கேட்டுவிட்டு வேறு ஒரு நல்ல பாடகரில் குரலில் கூட அந்த பாட்டை கேட்க நம்மால் முடியாது.. அவர் குரல் தான் அந்த பாட்டின் உயிர். அப்படி இருக்கையில்  நான் பாடினால்? பரவாயில்லை… ஆசைப்பட்டுவிட்டோம்.. பாடி தான் தொலைத்துவிடலாமே…
இதோ..  அந்த வீடியோ பாடல் என் குரலில்..

உங்கள் பொறுமையை பாராட்டும் வகையில் அதன் பாடல் வரிகள் போனசாக…

ஆராரிராரோ….நான் இங்கு பாட….
தாயே நீ கண் உறங்கு.
என்னோட மடி சாய்ந்து.
ஆராரிராரோ… நான் இங்கு பாட….
தாயே நீ கண் உறங்கு.
என்னோட மடி சாய்ந்து.

வாழும் காலம் யாவுமே..
தாயின் பாதம் சொர்க்கமே
வேதம் நான்கும் சொன்னதே.
அதை நான் அறிவேனே!!
அம்மா என்னும் மந்திரமே ..
அகிலம் யாவும் ஆள்கிறதே

ஆராரிராரோ… நான் இங்கு பாட….
தாயே நீ கண் உறங்கு.
என்னோட மடி சாய்ந்து.

வேர் இல்லாத மரம்போல்
என்னை நீ பூமியில் நட்டாயே…
ஊர் கண் என் மேல் பட்டால்
உன் உயிர் நோக துடித்தாயே
உலகத்தின் பந்தங்கள் எல்லாம்..
நீ சொல்லி தந்தாயே…
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில்
வழி நடத்தி சென்றாயே…
உனக்கே ஓர் தொட்டில் கட்டி ..
நானே…. தாயாய் மாறிட வேண்டும்

ஆராரிராரோ நான் இங்கு பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து

தாய் சொல்கின்ற வார்தைகள் எல்லாம்
நோய் தீர்க்கின்ற மருந்தல்லவா.
மண் பொன் மேல் ஆசை துறந்த
கண் தூங்காத உயிர் அல்லவா.
காலத்தின் கணக்குகளில் செலவாகும்
வரவும் நீ……
சுழல்கின்ற பூமியில் மேலே சுழலாத
பூமியும் நீ………
இறைவா நீ ஆணையிடு
தாயே நீ எந்தன் மகளாய் மாற……..

ஆராரிராரோ நான் இங்கு பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து…..

  • Share/Bookmark

காதல் யுத்தம்

  • உன்னை நினைக்கும் போதெல்லாம்
    என் நினைவுகள்
    நினைவிழக்கிறது!
  • உறங்கச்சென்றால்smoking-lover
    கண்கள்
    ஒத்துழையாமை செய்கிறது!
  • உண்ணசென்றால்
    வயிறு
    உண்ணாவிரதம் மேற்கொள்கிறது!
  • மூளை
    மூலைக்கு மூலை இயங்க மறுக்கிறது,
    வேளைக்கு வேளை வேலை நிறுத்தம் செய்கிறது!
  • மொத்தத்தில்,
    உன்னால்
    என் உடலே கலவரமாக காட்சியளிக்கிறது!
  • ஒவ்வொருமுறையும்,
    கண்ணீர் புகையை வீசியே
    இந்த கலவரத்தை அடக்குகிறேன்.
  • ஆம்.
    கண்ணீரோடு
    என் நுரையீரலில் புகையை வீசியே!!!

- பிரவீன் குமார் செ

  • Share/Bookmark

எனக்காக பிராத்தனை செய் சகோதரா

என்னுடைய மாமாவின் கடைசி மூச்சிற்கு சரியாக இன்றோடு ஒரு வருடம் முடிவடைகிறது. புற்றுநோய்க்கு வயது வித்யாசம் தெரியுமா என்ன?  முப்பத்தெட்டு வயதே உடைய மனிதரை அணு அணுவாய் சித்ரவதை செய்து கொலை செய்தது அந்த புற்று நோய். தான் சாகும் நாள் தெரிந்தே வாழ்வது தான் உலகத்தில் மிகபெரிய கொடுமை. அந்த மனவேதனையை சுமந்து கொண்டு இருப்பது சாமன்யமல்ல.

நிறைய உயிரிழப்புகளை  நாம் நம் வாழ்கையில் சந்திக்க நேரிடுகிறது. ஆனால் நமக்கு மிகவும் நெருக்கமானவர்களின், மிகவும் விருப்பமானவர்களின் இழப்பு தான் நம் மனதை புரட்டி போடும். அந்த வகையில்  இது என் வாழ்கையில் எனக்கு மிகவும் மறக்க முடியாத சம்பவம்.

என் வாழ்கையில் நான் நிறைய கற்றுக்கொண்டது அவர் இறப்பிற்கு பின்னரே. முதல் நாள், உயிருடன் இருக்கும் வரை  நம்முடைய பெயர் நமக்கு சொந்தம். இரண்டாம் நாள், நாம் இறந்த பிறகு நம்முடைய பெயர் பிணம். மூன்றாம் நாளோ அதன் பெயர் ஹஸ்தி. இருக்கும் வரை உயர்திணையில் நம்மை அழைக்கும் இவ்வுலகத்திற்கு இறந்த பின் நாம் வெறும் அக்றினையே.

போட்டி, பொறாமை போன்றவைகள் மனிதனின் வெறும் அற்ப ஆட்டங்கள். ஆட்டம் அடங்கினால் அவன் இந்த உலகத்தின் வாழ்ந்ததற்கான சுவடுகள் கூட இருக்காது. காலம் அதை தேடிச்சென்று அழித்துவிடும். இறந்தபின் நமக்காக சிந்தப்படும் கண்ணீர்த்துளிகளும், அவர்களின் மனதில் எழும் நம்முடைய இழப்பும் தான் நாமும் இந்த உலகத்தில் வாழ்ந்ததற்கான அடையாளங்கள். அவர் எங்களுடைய நினைவில் நீடூழி வாழ்வார். அவருடைய ஆன்மா சாந்தி பெறட்டும்.

எனக்காக பிராத்தனை செய் சகோதரா  -  இதோ  நான் பாடிய ஏ.ஆர்.ரஹ்மானின் ஒரு ஆங்கில பாடல் அவர் நினைவாக சமர்ப்பிக்கிறேன். இழப்புகள், அன்பு, கருணை, பரிவு என அனைத்தையும் இந்த பாடலில் உணர முடியும் என நினைக்கிறேன். கீழே அந்த ஆங்கில பாடலின் நான் எழுதிய தமிழாக்கத்தை காணலாம். அனைத்து புற்று நோயாளிகளுக்கும் சுகம் பெறவும், மக்களிடையே அன்பு மலரவும் பிராத்தனை செய்யுமாறு  இந்த இடுக்கையை படிக்கும் அனைவரையும் வேண்டுகிறேன்.

எனக்காக பிராத்தனை செய் சகோதரா.
எனக்காக பிராத்தனை செய் சகோதரா.
எனக்காக பிராத்தனை செய் சகோதரி.
நீ தேடிக்கொண்டு இருக்கிறாயா?
எனக்காக பிராத்தனை செய் சகோதரா.

என்னுடைய வாழ்கையின்
எல்லா கேள்விகளுக்கும்
பதிலை எதிர்நோக்கியிருக்கிறேன்

என்னை தனியாக விட்டுச்செல்வாயா
இல்லையேல்
என்னருகில் துணையாக இருப்பாயா?

இது ஏதேனும் அவனால் சொல்லப்பட்டதா?
இது ஏதேனும் அவனால் செய்யப்பட்டதா?
எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது…

அவன்
விடைகளை தேடிக்கொண்டு இருக்கிறான்
உயிருடன் இருப்பதற்கு.

சரியான நேரத்தில்,
ஒரே ஒரு தருணத்தில்,
ஒரு நிமிடமாவது,
உன் உள்ளம் சொல்லவதை பொருட்படுத்தி கேட்பாயா?

நம்மை சுற்றி சந்தோசம் நிறைந்து இருக்கிறது,
ஆனால் நமக்கு தேவையான அன்பை
அதில் எப்படி பார்ப்பது என்று எனக்கு காண்பி.

நாம் அன்புடன் இருக்கவேண்டியதற்கான
காரணத்தை தேடுகிறாயா?

எனக்காக பிராத்தனை செய் சகோதரா.
எனக்காக பிராத்தனை செய் சகோதரா.
எனக்காக பிராத்தனை செய் சகோதரி.
எனக்காக பிராத்தனை செய் சகோதரா.
என்று அவன் சொன்னான்..

இப்போதே என்ன கூற விரும்புகிறாயோ கூறு
ஆனால் உன் மனதை திறந்து வைத்துக்கொள்.
இப்போதே நீ எப்படி இருக்க விரும்புகிறாயோ அப்படி இருந்துக்கொள்
குழப்பங்களை அனைத்தும் மறைந்து போகட்டும்..
என்னக்காக பிராத்தனை செய் சகோதரா.

நீ கொடுக்க விரும்பாத போது
என்னை எடுக்க விடாதே…
என்னை வாழவிடு
அது போதும்…

நீ கொடுக்க விரும்பாத போது
என்னை எடுக்க விடாதே…
என்னை வாழவிடு
அது போதும்…

எனக்காக பிராத்தனை செய் சகோதரா.
எனக்காக பிராத்தனை செய் சகோதரா.
எனக்காக பிராத்தனை செய் சகோதரி.
எனக்காக பிராத்தனை செய் சகோதரா.

நாம் அன்புடன் இருக்கவேண்டியதற்கான
காரணத்தை தேடுகிறாயா?

  • Share/Bookmark

அன்புள்ள அப்பாவிற்கு.. மகளின் உருக்கமான கடிதம்..

நேரம் இரவு எட்டு மணி. அலுவலகத்தில் இருந்து அப்போது தான் வீட்டிற்குள் நுழைகிறார் மனோகர்.  தன்னுடைய மகளின் படுக்கை அறையை கடக்கும் போது மிகவும் ஆச்சர்யம் உள்வாங்கியது அந்த தந்தைக்கு.. மகள் படுக்கை அறையில்  இல்லை. எப்போதுமில்லாமல் படுக்கை நன்றாக விரிக்கப்பட்டு  இருக்கிறது. அனைத்தும் தூய்மையாகவும், களைக்கபடாமல் இருப்பது தான் அவரின் ஆச்சர்யத்திற்கு காரணம்.

உள்ளே சென்று பார்க்கையில், தலையனை அடியில் ஏதோ காகிதம் போல் தென் பட்டது அவர் பார்வையில். மெல்ல கையில் எடுத்து பார்க்கிறார். கையில் சிறிது நடுக்கம் இருந்தது.. கடிதத்தை விரித்து படிக்க ஆரம்பம் செய்கிறார்.

அன்புள்ள அப்பாவிற்கு,

என்னை மன்னிக்கவும். நான் வீட்டை விட்டு வெளியே செல்கிறேன். எனக்கு உங்கள் அனைவரையும் விட்டு பிரிய சற்று கடினமாக தான் இருக்கிறது. ஆனால் வேறு வழி எனக்கு தெரியவில்லை அப்பா. என்னால் உங்களுக்கும் அம்மாவிற்கும் பிரச்சனை வர வேண்டாம் என்பதால் நான் என் காதலன் சங்கருடன் வீட்டை விட்டு செல்கிறேன்.

நீங்கள் வேண்டுமானால் பாருங்கள், சங்கரை நேரில் சந்தித்தால் உங்களுக்கும் அவனை ரொம்ப பிடிக்கும். அவன் காதில் அணிந்திருக்கும் கடுக்கனும், அழுக்கு சட்டையும் கண்டிப்பாக உங்களுக்கும் பிடிக்கும். நான் சங்கரின் பின்னாடி சென்றதற்கு இது மட்டும் காரணம் இல்லை அப்பா, நான் கர்பமாகவும் இருக்கிறேன். குழந்தை என்றால் சங்கருக்கு மிகவும் பிடிக்குமாம் அப்பா. அதனால் தான் நானும் அதற்கு சம்மதித்தேன்.

சங்கர் என்னை விட வயதில் சற்று அதிகம் ( 42 வயது என்பது இந்த காலத்தில் பெரிய விஷயம் இல்லை என்று நினைக்கிறேன்). அவனுக்கு சொந்தமாக தொழில் இல்லை, வேலை இல்லை, கையில் பணமும் இல்லை, இருந்தாலும் எங்கள் காதல் உண்மையானது என்பதால் நான் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. சரிதானே அப்பா?

உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா? சங்கருக்கு ஏற்கனேவே நிறைய காதலிகள் இருக்கிறார்கள்.  ஆனால் சங்கருக்கு என்னை தான் மிகவும் பிடிக்குமாம். என்னை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று உறுதி அளித்திருக்கிறான். எனக்கு அது மிகவும் சந்தோசமாக இருக்கிறது. நான் அவனுக்கு நிறைய குழந்தை பெற்று தர வேண்டுமாம். என்னுடைய கனவும் அது தான் அப்பா.

சங்கருக்கு போதை பழக்கமும் இருக்கிறது. அது ஒன்றும் கெடுதல் இல்லை என்று அவன் எனக்கு  புரியவைத்ததால் நான் அதை கண்டு கொள்ளவில்லை. அவனுக்கு வாழ்கையில் பெரிய லட்சியம் இருக்கிறது அப்பா. கஞ்சா செடி பயிரிட்டு அதை நண்பர்கள் மூலம் வியாபாரம் செய்ய வேண்டும் என்பதே அது. நான் அவன் லட்சியத்திற்கு துணையாக இருப்பேன் என்று  உறுதி அளித்து இருக்கிறேன். அது ஒரு மனைவியின் கடமை தானே?

அதே நேரத்தில் அறிவியல் வளர்ச்சி காரணமாக மருத்துவ துறையில் சீக்கிரம் ஏய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டு இருக்கிறேன். எனக்கு நம்பிக்கை இருக்கிறது இருந்தாலும் நீங்களும் வேண்டிக்கொள்ளுங்கள். ஏனெனில் சங்கருக்கு ஏய்ட்ஸ் இருக்கிறது. அவன் சீக்கிரம் குணமாக வேண்டும்.

என்னை பற்றி நீங்கள் கவலை படாதீர்கள் அப்பா. எனக்கு 15 வயது ஆகிவிட்டது அல்லவா? அதனால் என்னையும் சங்கரையும் நன்றாக பார்த்துக்கொள்ள எனக்கு தெரியும். நீங்கள் அம்மாவை பத்திரமாக பார்த்துக்கொள்ளவும். ஒரு நாள் கண்டிப்பாக நான்  உங்களையும் அம்மாவையும் பார்க்க உங்கள் பேரகுழந்தையுடன் வருவேன். அம்மாவை கேட்டதாக கூறவும்.

இப்படிக்கு உங்கள் அன்பு மகள்,
மேனகா சங்கர்..

இதை படித்த மனோகருக்கு தலையே சுற்றுவது போல் இருந்தது. என்ன  செய்வது என்று தெரியவில்லை. பதட்டம் மேலும் அதிகரித்தது.  கை மேலும் உதறல் எடுத்தது. கடிதத்தை திருப்பி பார்த்தார். அப்போது தான் அந்த கடிதம் இன்னும் நீள்வதை அவர் பார்க்க நேரிட்டார்.

பின் குறிப்பு:
அய்யோ அப்பா. மேலே நான் எழுதிய அனைத்தும் உண்மை இல்லை. நான் பக்கத்துக்கு வீட்டு பத்மநாபன் மாமா வீட்டில் சீரியல் பார்த்துக்கொண்டு இருக்கிறேன். என்னுடைய மார்க் சீட் ரிப்போர்ட் கார்டை விட மிகவும் மோசமனவைகள் என்னுடைய வாழ்கையில் இருக்கிறது.  அதை உங்களுக்கு உணர்த்த நினைத்தேன் அவ்வளவே.  வேறு ஒன்றும் இல்லை. நீங்கள் பதட்டப்படாமல் மேஜை மேல் இருக்கும் என்னுடைய மார்க் சீட் ரிப்போர்ட் கார்டை எடுத்து கையெழுத்து போடவும். என்மேல் உங்களுக்கு கோபம் குறைந்தவுடன் என்னை பக்கத்துக்கு வீட்டிற்கு வந்து அழைத்து செல்லவும்.

உங்களை மிகவும் நேசிக்கும்,
உங்கள் அன்பு மகள்,
மேனகா மனோகர்.

  • Share/Bookmark

சேலத்தில் மழை நீர் சேகரிப்பு திட்டம்

சமீபத்தில் சேலத்தில் யாரும் இப்படி ஒரு மழையை பார்த்து இருக்க முடியாதென்று நினைக்கிறன். இரண்டு நாட்களாக மாலை வேளைகளில் அனைத்து மக்களையும் அவர்கள் இருக்குமிடத்திலேயே சிறைபிடித்து வைத்துக்கொண்டது. வீட்டில் இருப்பவர்கள் வீட்டுக்குள்ளேயும், கடைக்கு சென்றவர்கள் கடைக்குள்ளேயும் சில மணி நேரம் முடங்கி கிடக்க வேண்டியதாயிற்று.

நேற்று மாலை நான் ஏர்டெல் அங்காடிக்கு சென்று இருந்ததால் அங்கேயே மாட்டிக்கொண்டேன்.. இல்லை… தப்பித்து கொண்டேன் என்றே சொல்லலாம்.   பேய்மழைனு சொல்லுவாங்களே. அது போல இது குட்டி சாத்தான் மழைன்னு நினைக்கிறன். இரண்டு மணி நேரமே பேய்ந்தாலும் ஒரு கலக்கு கலக்கிடுச்சு. மழை நிற்கும் வரை கண்ணாடி சுவர் வழியாக வெளியே பார்த்துக்கொண்டே நேரத்தை கடக்க வேண்டியதாயிற்று.

weather-picture-photo-mist-rain-salemபிறகு  தான் தெரிந்தது மழையின் தாக்கம் ..  தெரிஞ்சவங்க ஒருத்தங்க வீட்டு மாடி அறையில் பதிக்கப்பட்ட  ஆஸ்புஸ்தாஸ் சீட் பக்கத்துக்கு வீட்டுக்கு பறந்து போயிடிச்சாம்… இன்னொருத்தங்க மாடியில காயப்போட்டிருந்த துணி மணி எல்லாம் எங்க போச்சுனே தெரியலயாம். அடுத்தநாள் சிலது மட்டும் பக்கத்துக்கு தெருவில் கிடைத்ததாக தகவல். அப்போ மீதி? ”போலீசுல கம்ப்ளைன்ட் பண்ணுங்கோ மாமி.. கண்டுபிடிச்சு கொடுப்பாங்க..”

இது நடந்தது நேற்று.. . இன்னைக்கும் அதே மாதிரி சாயங்கால நேரம். ஆறு மணி அளவிலேயே இருட்டிடுச்சு..  பயங்கர  காற்று.. சரியாய் சொல்லனும்னா பி.சி.ஸ்ரீராம் படத்துல வர காட்சி மாதிரி இருந்துச்சு..  வெளியே போய் மாட்டிக்க கூடாதுன்னு  உள் மனசு சொல்லுது.. வீட்டில் வேற யாரும் இல்ல. கரண்ட் காட்டானால் மாட்டிக்குவமேனு நினைக்கறதுக்குள்ளே.. டப்… கரண்ட் போயுடுச்சு..

நான்.. என் லேப்டாப்.. இன்னும் சிறிது நொடியில் உயிரிழக்க போகும்  வைபை(Wi-Fi) இணைய தொடர்பு.. பீப்.. பீப்.. பீப்.  ஐந்து நிமிடம் “யுபிஎஸ்” கத்தி ஓய்ந்தது… இணையம் துண்டிக்கப்பட்டது. வீட்டிலேயே  தனிமைசிறை…  யாரும் இல்லையே என்ன செய்ய? வீடு வேறு ஒரே இருட்டாக இருக்கிறது. கதவை திறந்து வெளியே போகலாம் என்றால்,, ம்ம்ம்.. வெளியே கொஞ்ச நஞ்ச காற்றா? மழையை ரசிக்கலாம் என்று நினைத்தால் அதுவும் முடியவில்லையே..

ஆங். ஐடியா..    “ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது…” மெல்லிய சப்தத்தில் என் லாப்டாப்பில் இசைவித்தேன்.. கடந்த இரண்டு நாட்களாக நான் மிகவும் ரசித்து கேட்கும் வாமணன் திரைப்பட பாடல்.. இருள் சூழ்ந்த அறை.. தனிமை.. யுவன் சங்கர் ராஜா இசையமைத்த அந்த பாடல் இப்போது சற்று மேலும் மனதை வருடுகிறது..

நான் புதிதாக வாங்கிய என் கம்பியில்லா பிராட் பான்ட் இணைப்பு கருவியை(EV-DO Broadband Wireless Terminal)  லேப்டாப் பில் சொருகி இணையதொடர்பு  ஏற்படுத்திக்கொள்ள பார்த்தேன்.. கன மழையால் சிக்னல் சரியாக கிடைக்கவில்லை. என்ன செய்ய? இருட்டில் ஒவ்வொரு அறை ஜன்னலிலும் லாப்டாப்பை தூக்கிக்கொண்டு மெல்ல ஊர்ந்து ஊர்ந்து சென்றேன்.. விளக்கு வேறு பற்ற வைக்கவில்லை. ஒரே இருட்டு வேறு.   ஒரு  இடத்தில் மட்டும் கொஞ்சம் சிக்னல் கிடைத்தது.. சிறிய அளவில் ஜன்னலை திறந்து அருகிலேயே அமர்ந்து  இணையத்தொடர்பை ஏற்படுத்திக்கொண்டேன்..

பிறகு என்ன? என்னதான் மழை பெய்தாலும்.. கரண்ட் கட்டானாலும்.. டெக்னாலஜி இருக்கு மாமே.. டெக்னாலஜி..  மனதிற்குள்ளே சொல்லிகொண்டே  நான் என்னுடைய  ப்ரொஜெக்டை தொடர்ந்து செய்துக்கொண்டு இருந்தேன்.. சுமார் அரைமணி நேரம் இருக்கும்.  மழை தண்ணீரில் காலை வைத்தது போல் ஜில்லென்று இருந்தது.. நான் கண்டுகொள்ளவில்லை.. மேலும் சில நிமிடங்கள் சென்று இருந்த வேலையில் என் கால்சட்டையும் நனைந்தது போல் ஒரு உணர்வு.. குனிந்து பார்த்தால் ஒன்றும் தெரியவில்லை. அட என்னப்பா இது.. ஒன்றும் விளங்கவில்லையே.. கரண்ட் வரட்டும் பார்போம் என உள்மனது சொல்லியது…

கரண்ட் வந்தது.. ஆச்சர்யம் குறையாமல் கீழே குனிந்து பார்த்தேன். குட்டை போல் வீட்டின் ஒரு பகுதியே தண்ணீர் சேர்ந்துள்ளது.. ஆ.. ஆ .. எப்படி அது? மேல பார்த்தேன்.. கீழே பார்த்தேன்.. அட… கடவுளே.. இன்டர்நெட் சிக்னலுக்காக ஆர்வத்தில் ஜன்னலை சிறிது திறந்திருக்கிறேன்.. அது மெல்ல மெல்ல சத்தமில்லாமல் வீட்டை குளமாக்கிக்கொண்டு  இருந்திருக்கிறது.. ஹய்யோ பிரவீன்… இப்படி சொதபிட்டயேடா? கம்முனு நல்லபிள்ளையா தூங்கி இருக்கலாமேடா.. இப்போ பீல் பண்ணி என்ன பண்றது.

பின் குறிப்பு : இந்த இடுக்கை தலைப்பின் அர்த்தம் இப்போது புரியுமே… :)

  • Share/Bookmark

நியூ யார்க் நகரம் – ஜில்லுனு ஒரு காதல் திரைப்பட வீடியோ பாடல் என் குரலில்

நியூ யார்க் நகரம் உறங்கும் நேரம்.. 2006 ஆம் வருடம் அணைத்து இளவட்டங்களையும் கட்டிப்போட்ட சில்லுனு ஒரு காதல் திரைப்பட பாடல்.. கவிஞர் வாலியின் உடலிற்கு தான் வயதானதே தவிர அவருடைய சிந்தனையும், மனதும் எப்போதுமே இளமை தான்… அதற்கு உதாரணம் தான் இந்த பாடல்..

இப்பாடலை பாடுவதற்கு பாடகரை தேர்வு செய்வதற்கு முன்னர், டைரக்டரிடம் காண்பிப்பதற்காக தானே டம்மியாக பாடி பதிவு செய்தார்  ஏஆர். ரஹ்மான்.  பிறகு அனைவரும் கேட்டுக்கொண்டதால் அவர் குரலிலேயே பாடல் பதிவு செய்யப்பட்டது.. எந்த பாடகருக்கு அந்த வாய்ப்பு சென்றிகுமோ தெரியாது. ஆனால் ஏ.ஆர். ரஹ்மான் குரலை எடுத்துவிட்டு என்னுடைய குரல் வைத்தால் எப்படி இருக்கும் என்று ஒரு சின்ன ஆசை தோன்றியது… ஹா ஹா ஹா… அதன் முயற்சி தான் இந்த வீடியோ… அவரின்   ஹை பிச் குரல் சில இடங்களில் எனக்கு வரவில்லை. கண்டுபிடித்து சொல்லுபவருக்கு ஏ.ஆர். ரஹ்மான் வாங்கிய ஆஸ்கார் விருது இலவசமாக தரப்படும்.. (புகைப்பட வடிவில்).. ஹி ஹீ ஹீ  :)

இதோ போனஸாக அதன் பாடல் வரிகளும்….

நியூயார்க்  நகரம்  உறங்கும்  நேரம்  தனிமை அடர்ந்தது
பணியும்  படர்ந்தது .. கப்பல்  இறங்கியே  காற்றும்  கரையில்  நடந்தது.

நான்கு  கண்ணாடி  சுவர்களுக்குள்ளே நானும் மெழுகுவர்த்தியும்
தனிமை  தனிமையோ….. கொடுமை  கொடுமையோ….

நியூயார்க்  நகரம்  உறங்கும்  நேரம்  தனிமை அடர்ந்தது
பணியும்  படர்ந்தது.. கப்பல்  இறங்கியே  காற்றும்  கரையில்  நடந்தது.

நான்கு  கண்ணாடி  சுவர்களுக்குள்ளே நானும் மெழுகுவர்த்தியும்
தனிமை  தனிமையோ… கொடுமை  கொடுமையோ….

பேச்செல்லாம்  தாலாட்டு  போல என்னை  உறங்க  வைக்க  நீ  இல்லை
தினமும்  ஒரு  முத்தம்  தந்து  காலை  காபி  கொடுக்க  நீ  இல்லை
விழியில் விழும்  தூசி  தன்னை அதை  எடுக்க  நீ இங்கு இல்லை
மனதில்  எழும்  குழப்பம்  தன்னை  தீர்க்க  நீ இங்கே  இல்லை
நான்  இங்கே  நீயும்  அங்கே இந்த  தனிமையில்  நிமிஷங்கள்  வருஷம்  ஆனது ஏனோ
வான்  இங்கே  நீளம்  அங்கே  இந்த  உவமைக்கு  இருவரும்  விளக்கமானது ஏனோ

நியூயார்க்  நகரம்  உறங்கும்  நேரம்  தனிமை அடர்ந்தது
பணியும்  படர்ந்தது

நாட்குறிப்பில் நூறு தடவை உந்தன் பெயரை எழுதும் என் பேனா
எழுதியதும் எறும்பு மொய்க்க பெயரும் ஆனதென்ன தேனா

ஜில்லென்று பூமி இருந்தும் இந்த தருணத்தில் குளிர்காலம் கொடையனதேனோ

வா அன்பே   நீயும்  வந்தால்  செந்தணல்  கூட  பனிக்கட்டி  போல  மாறுமே

நியூயார்க்  நகரம்  உறங்கும்  நேரம்  தனிமை அடர்ந்தது
பணியும்  படர்ந்தது கப்பல்  இறங்கியே  காற்றும்  கரையில்  நடந்தது

நான்கு  கண்ணாடி  சுவர்களுக்குள்ளே நானும் மெழுகுவர்த்தியும்
தனிமை  தனிமையோ கொடுமை  கொடுமையோ

  • Share/Bookmark

என் பார்வையில் அயன் திரைப்படம்.

நேற்று அயன் திரைப்படம் இரவு  காட்சிக்கு சென்று இருந்தேன் (தோம்). எதிர்பாராவிதமாக நாங்கள் செல்வதற்குள் பத்து  நிமிடம் படம் ஓடி இருந்தது.. இருந்தால் என்ன?  தமிழ் படத்தின் கதை புரியாமலா போய்விடபோகிறது என்று பார்க்க ஆரமித்தேன். வழக்கம் போல் சூர்யா சூப்பர்.. மேலும் மேலும் மெருகேறிக்கொண்டே இருக்கிறது  நடிப்பும், அழகும்..    அட.. தமனாவும் தான்பா நடிக்க ஆரம்பித்துவிட்டது….

“நெஞ்சே… நெஞ்சே…” , ”விழி மூடி யோசித்தால்..” பாடலும் அனைவரும் முனுமுனுக்கும் பாடலாக இருக்கும்.. ஆனால் ”நெஞ்சே… நெஞ்சே…”  பாடல் படமாக்கப்பட்ட அந்த ஆப்ரிக்க பாலைவனம் ஹிந்தி கஜினியில் ஏற்கனவே பார்த்து விட்டதால் புதுமையாக தெரியவில்லை.  ஹிந்தி கஜினியை விட தமிழில் தான் அற்புதமாக ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்கள்.  என்னுடைய மொபைல் ஹலோ டுயுன் இப்போது அந்த பாடல் தான் .. பின்னணி இசையும் அருமை.. ஹாரிஸ் ஜெயராஜை பத்தி சொல்லவா வேண்டும்?

ayan-surya-tamanna

சண்டை காட்சிகள், ஒளிப்பதிவு கண்டிப்பாக அனைவரையும் பிரமிக்கவைக்கும்.. ஆப்ரிக்கா அந்த மலைப்பாதை காட்சிகளும், மலேசியா கார் துரத்தும் காட்சிகளும் கண்டிப்பாக தமிழுக்கு புதுசு.. கதை என்னவென்றால், நம்ம சூர்யா ஒரு ஹைடெக் கடத்தல்காரன்..  பிரபு நம்ம சூர்யாவுக்கு பாஸ். விஜய் தொலைக்காட்சிகளில் வரும் அந்த நபர்(மன்னிக்கவும் பெயர் தெரியவில்லை) சூர்யாவின் நண்பர். தமன்னா அவரின் தங்கை. தொழில் போட்டியில் பிரபு சாகிறார்.. சூர்யா வில்லனை பழி வாங்குகிறார்.. கடத்தலை விட்டு விட்டு திருந்துகிறார். கடைசியில் கஸ்டம்ஸ் ஆபிசர் ஆகிறார்.. மறக்காமல் தமன்னாவை கைபுடிக்கிறார்.

உலகில் இருக்கும் அணைத்து பெரிய கடதல்கார்களும் பிரபுவுக்கு பழக்கம்.. ஆப்ரிக்கா மலைபகுதிகளில் வாழும் ”மம்போ” என்ற யாரும் நெருங்க முடியாத ஒரு அதிபயங்கர  கடத்தல்காரராக காண்பிக்கபடுபவர்கூட நம்ம பிரபுவுக்கு பழக்கமாம். பிரபுவை பார்த்தால்  அப்படி கண்டிப்பாக தெரியாது.. முன்னொரு காலத்தில் பெரிய தாதாவாக இருந்தாரம். படத்தில் பிளாஷ் பாக் காட்சிகள் கூட இல்லாததால் நம்ம  பிரபு ஒரு காமெடி தாதாவாகவே வலம் வருகிறார்.. அவருக்கு கைபுல்லையாக நம்ம சூர்யா தம்பி.. அங்கேயே எனக்கு படத்தின் மேல் இருந்த நம்பிக்கை போய்விட்டது..

ayan

நுனிநாக்கில் ஆங்கிலம் பேசும் சூர்யா, ஆப்பிள் ஐ போன் வைத்து இருக்கிறார், ஆப்பிள் மாக் லேப்டாப் வைத்து இருக்கிறார் , நினைத்தால் வெளிநாடு கிளம்புகிறார், கூகிள் இணையத்தளத்தில் கடத்தல் செய்யும் டெக்னிக்குகளை கண்டுபிடிக்கிறார்.. எல்லாம் பண்றார்..  அப்புறம் எதற்கு பிரபுவுக்கு  கைபுல்லையாக? பெருசா காரணம் இல்லையே?  சூர்யாவின் நண்பராக வரும் அந்த கதாபாத்திரம் எரிச்சலோ எரிச்சல்.. (நல்ல வேலை பாதியிலேயே அவர் இறந்து விடுவதால் பார்வையாளர்கள் தப்பித்து கொண்டார்கள்).. தங்கை தமன்னா சூர்யாவை  காதலிக்க வைக்க அவர் பேசும் வசனங்கள், செயல்கள் அருவருப்பு. கிரி  படத்தில் வடிவேலு சொல்லும் ”பட் அந்த டீலிங் எனக்கு புடிச்சிருந்தது” ரகம்.. அது காமெடி..ஆனா இது அருவருப்பு.. தங்கச்சிய பத்தி எந்த அண்ணன் இப்படி  பேசுவான்? அது மட்டும் இல்லாமல்.. படத்தில் ரசிக்க முடியாத பல இரட்டை அர்த்த வசனங்கள் நம்ம சூர்யா பேசுகிறார். கொடுமை..

அருமையான கதைக்களம், நடிப்பில் மெருகேறிய சூர்யா, அழகிய தமன்னா, பிரமிக்க வைக்கும் சண்டைகாட்சிகள்,  தமிழுக்கு புதிய வெளிநாட்டு படபிடிப்பு இடங்கள்…. இவை அனைத்தும் இருந்தும் திரைக்கதை, காட்சி அமைப்பு, வசனங்கள் இல்லையே  டைரக்டர் ஆனந்த் சார். இப்படி துட்ட விரயம் பண்ணிடீன்களே? பேசாமல் நம்ம எழுத்தாளர் சுபா எழுதிய இந்த கதையை நாவலாக பிரசுரம் செய்து இருந்தால்.. ஏ.வீ .எம்  மின் பணம் மிச்சம். நீங்க என்ன சொல்றீங்க? படம்  நல்ல இருக்கா, நல்லா இல்லையா? உங்களுக்கு பிடித்தது, பிடிக்காதது எதை வேண்டுமானாலும் கீழே பதிவு செய்யவும்.

இதோ மேலும் சில பேர் அயன் படத்தை கிழி கிழின்னு கிழிச்சு இருக்காங்க.

ஆனா அந்த அளவுக்கு படம் மோசமில்லைன்னு நினைக்கிறன்..

  • Share/Bookmark

போகாதே போகாதே – தீபாவளி திரைப்பட வீடியோ பாடல் – என் குரலில்

நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் பதிவு எழுதுகிறேன். தீபாவளி திரைப்படத்தில் வரும் “போகாதே போகாதே” என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடலில் ஒன்று.. நான் அதிகம் கேட்பதும், அதிகம் முனுமுனுப்பதும் இந்த பாடல்தான்.. ஒரு ”ஆர்வத்தில்” நானே பாடி, பதிவு செய்து, கேட்டு பார்த்தேன்.. நான்றாக இருந்தது போல் தோன்றியதால் இதோ  என் வலை பதிவின் மூலம் இணையத்தில் உலா வரச்செய்கிறேன்… ஹீ ஹீ ஹீ

சென்ற  வருடமே என் குரலில் நான் பதிவு செய்த இந்த பாடல், நேற்று தான் வீடியோவில் புகுத்தி யூடுபில் ஏற்றினேன்.. பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும். இந்த பாடலை திரையில் பின்னணியில் பாடிய யுவன் ஷங்கர் ராஜாவை விட சூப்பர் என்று எழுதி காமெடி கீமடி பண்ண கூடாது.. ஆமா..  சொல்லிட்டேன்..  :)

இதோ போனஸ் ஆக அதன் பாடல் வரிகளும்…

போகாதே… போகாதே…. நீ இருந்தால் நான் இருப்பேன்..
போகாதே…. போகாதே….. நீ பிரிந்தால் நான் இறப்பேன்.

உன்னோடு வாழ்ந்த…  காலங்கள் யாவும்…  கனவாய் என்னை மூடுதடி…
யாறென்று நீயும்… என்னை பார்க்கும் போது… உயிரே உயிர் போகுதடி….
கல்லறையில் கூட…  ஜன்னல் ஒன்று வைத்து… உந்தன் முகம் பார்ப்பேனடி…

போகாதே… போகாதே…. நீ இருந்தால் நான் இருப்பேன்..
போகாதே…. போகாதே….. நீ பிரிந்தால் நான் இறப்பேன்.

கலைந்தாலும் மேகம் அது மீண்டும் மிதக்கும்.
அதுபோல தானே உந்தன் காதல் எனக்கும்.
நடைபாதை விளக்கா காதல் விடிந்தவுடன் அணைப்பதற்கு.
நெருப்பாலும் முடியாதம்மா நினைவுகளை அழிப்பதற்கு..
உனக்காக காத்திருபேன்…. உயிரோடு பார்த்திருபேன்….

போகாதே… போகாதே…. நீ இருந்தால் நான் இருப்பேன்..
போகாதே…. போகாதே….. நீ பிரிந்தால் நான் இறப்பேன்.

அழகான நேரம் அதை நீ தான் கொடுத்தாய்.
அழியாத சோகம் அதையும் நீ தான் கொடுத்தாய்.
கண் தூங்கும் நேரம் பார்த்து கடவுள் வந்து போவதுபோல்
என் வாழ்வில் வந்தாய் ஆனால் ஏமாற்றம் தாங்கலையே.
பெண்ணே நீ இல்லாமல்… பூலோகம் இருண்டதடி

போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்

  • Share/Bookmark

ஆஸ்கார் தமிழனின் எல்லா புகழும் இறைவனுக்கே

arrahman-oscar

தமிழா தமிழா நாளை நம் நாளே….
தமிழா தமிழா நாடும் நம் நாடே…..

என்று தன் இசைபயனத்தை ஆரம்பம் செய்த இசைப்புயல் ரஹ்மான் இன்று  அதை நிருபித்துள்ளார். இன்றும் இந்திய சினமாவிற்கு வெறும் கனவாகவே இருந்த ஆஸ்கார் விருதிதினை ஒன்று அல்ல இரண்டை பெற்று தந்த அந்த ஆஸ்கார் தமிழனின் புகழை சொல்ல வார்த்தை இல்லை.. ஆஸ்கார் மேடையில், அதுவும் தமிழில் “எல்லா புகழும் இறைவனுக்கே” என்று தமிழில் கூறிய அந்த மாமனிதனை உளமார வாழ்த்துகிறேன்.

  • Share/Bookmark