ஒவ்வொருவருக்கும் கல்லூரி வாழ்கையின் கடைசி நாள் என்பது மறக்க முடியாதது. எங்கள் வகுப்பில் மொத்தம் முப்பது மாணவர்களும், இருபத்தியிரண்டு மாணவிகளும் இருந்தோம். 2005ஆம் வருடம் ஏப்ரல் மாதம் அனைவரும் பிரியத்தயார் ஆனோம். மாணவிகளில் அநேகம் பேருக்கு அடுத்து திருமணம் தான் என்பது உறுதியாக தெரிந்தது. பிரச்சனை எங்களை போன்ற மாணவர்களுக்கு தான். அது அடுத்து என்ன என்ற கேள்வி?
அதுவும் குறிப்பாக எனக்கோ எதிர்காலம் பற்றிய பயம் வாட்டி வதைத்தது. அப்போது ஆட்டோக்ராப் என்று ஒவ்வொருவரும் தங்கள் டைரியை மற்றவரிடம் கொடுத்து, கல்லூரி வாழ்க்கையின் போது தங்களுக்குள் நடந்த மறக்க முடியாத நிகழ்வுகளை பதிவு செய்துக்கொண்டோம். எனக்கு கொடுக்கப்பட்ட அனைத்து ஆட்டோக்ராப் டைரியிலும் கடைசியில் ஒரு கவிதையையும் சேர்த்தே எழுதிக்கொடுத்தேன். இப்போது இந்த கவிதையை மீண்டும் படிக்கும் போது கூட எதோ ஒரு இனம்புரியாத வலி மனதில் மின்னி மறைகிறது.
இதோ!
எதிர்காலம் எனும் வானத்தில்
முப்பது நிலவுகளும்,
இருபத்தியிரண்டு நட்சத்திரங்களும்,
தற்காலிகமாய் பதிக்கப்படுகிறது
சென்ற வாரம் கோபிச்செட்டிப்பாளையம் சென்றிருந்தேன். இயற்கை எழில் கொஞ்சும் ரம்யமான இது போன்ற இடத்தை இது வரை என் வாழ்நாளில் பார்த்ததில்லை. தூரத்தில் ஒரு மலைத்தொடர். அந்த மலை அடிவாரம் வரைக்கும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நெற்பயிரிடப்பட்ட வயல்வெளி. ஆங்காங்கே நீண்ட நீரோடை. இடப்பக்கம், வலப்பக்கம், முன்னே பின்னே என எப்படி திரும்பி பார்த்தாலும் பச்சை பசேலென காட்சி மட்டும்தான். இதன் நடுவே செல்லும் சாலையில் காரை ஒட்டிக்கொண்டு சென்ற அனுபவமே தனி.
சிலமணி நேரம் தான் அன்று அங்கே செலவிட முடிந்தது. கிளம்புவதற்கு முன் கொஞ்சம் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம் என்று காரை சாலை ஓரத்தில் நிறுத்தினோம். அந்த சாலையில் பெரிதாய் போக்குவரத்து இல்லை. சாலையின் ஒரு பக்கம் நின்று கொண்டு, மறு பக்கத்தில் இருந்து நாங்கள் மாறி மாறி புகைப்படம் எடுத்துக்கொண்டு இருந்தோம். அந்த பத்து, பதினைந்து நிமிடங்களில் நடந்த ஆச்சர்யமான சம்பவம் தான் இது.
தூரத்தில் இருந்து வேகமாய் ஒருவர் ஸ்கூட்டரில் வந்துகொண்டு இருந்தார். சாலையின் மறுபுறம் இருந்த நண்பரை நான் புகைப்படம் எடுத்துக்கொண்டு இருந்தேன். எங்களின் அருகே வர வர அவர் வண்டியின் வேகம் குறைந்தது போல் எனக்கு தோன்றியது. கேமராவில் இருந்து என்னுடையை பார்வையை விலக்கி அவர் பக்கம் திரும்பிப் பார்த்தேன். எங்களுக்கு மிக அருகில் அந்த வண்டி நெருங்கி வந்து இருந்தது. ஆனால் அந்த வண்டியின் வேகம் இப்போது முற்றிலும் குறைந்து காணப்பட்டது. நான் அவரை பார்த்த மாத்திரத்தில் என்னை பார்த்து அவர் புன்னகைத்தார். நாங்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டு இருப்பதால் எங்களுக்கு குறுக்கே செல்ல அவருக்கு விருப்பமில்லை என்பதை என்னால் உடனே உணர முடிந்தது.
சட்டென காமிராவின் உயரத்தை என் பார்வையின் நேர்கோட்டில் இருந்து தாழ்த்தி, “நீங்கள் செல்லலாம்” என்று நானும் புன்னகையோடு விடை கொடுத்தேன். சர்ரென வேகமெடுத்து பறந்தது அந்த ஸ்கூட்டர். மீண்டும் புகைப்படம் எடுக்க ஆரம்பித்தேன். அடுத்த சில நிமிடங்களில், இன்னொரு டீ.வி.எஸ் எக்சல் ஒட்டிக்கொண்டு வந்தவர் எங்களை கடக்காமல் வண்டியை அப்படியே நிப்பாட்டி விட்டார். இதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. தூரத்தில் அவர் வந்ததை பார்த்தேன். ஆனால் கடந்து போய் விடுவார் என்று தான் நினைத்தேன். சொல்லப்போனால் அவர் கடந்து போய்விடுவாரா, இல்லை நின்று விடுவாரா என்று கூட நான் யோசிக்கவில்லை. நான் நம் வேலையை பார்க்கிறோம், அவர்கள் வேலையை பார்க்கிறார்கள் என்று சற்று மெத்தனமாக இருந்துவிட்டேன் என நினைக்கிறேன். உடனே பதறி நீங்கள் செல்லலாம் என்று கூறியதும் அவரும் புன்னகையோடு வண்டியை கிளப்பி புறப்பட்டார்.
அதன் பிறகு ஒரு ஐந்து நிமிடம் கடந்து இருக்கும். சற்று அருகினில், கணவன் மனைவியை போல் தோற்றமுள்ள ஒரு இளம் தம்பதியினர் ஒரு பைக்கில் வந்து கொண்டு இருந்ததை பார்த்தேன். முன்னாடி வந்தவர்களை போல் இவர்களை நாம் தொந்தரவு செய்து விடக்கூடாது என்று போட்டோ எடுப்பதை நானாக நிப்பாட்டினேன். ஆனால் அந்த நபரோ, நாங்கள் செல்லலாமா என்பது போல் அங்கள் அருகின் வருகையில் செய்கையில் கேட்டார். போலாம் என்றதும் அதே வேகத்தில் எங்களை கடந்து சென்றார்.ஆனால் இந்த முறை எங்களுக்கு சற்று உறுத்தல் அதிகமானது.
முதலில் வந்தவரும் எங்களின் குறுக்கே செல்ல விருப்பமில்லாமல் வண்டியை நிறுத்த முயன்றார். இரண்டாவதாக வந்தவரோ வண்டியை நிப்பாட்டியே விட்டார். மூன்றவாதாய் வந்தவர் வண்டியை நிறுத்துவதற்குள் நாங்கள் சுதாரித்து அவரை போகச்சொல்லி விட்டோம். இத்தனைக்கும் நாங்கள் சாலையின் இருபுறமும், சாலையை விட்டு சற்று தள்ளி கீழே தான் நின்று கொண்டு இருந்தோம். ஆக அவர்கள் செல்வதற்கு நாங்கள் இடைஞ்சலாகவே இல்லை. ஆனால் நாங்கள் புகைப்படம் எடுக்கும் போது குறுக்கே சென்று எங்களுக்கு இடைஞ்சலாக இருக்க கூடாது என்று அவர்கள் நினைத்துள்ளனர். யாருக்கு வரும் இப்பேர்பட்ட நல்லெண்ணம்.
ஒருவர், இருவர் அல்ல.. எங்களை அதுவரை எங்களை கடக்க முயன்ற மூன்று நபர்களும் எங்களுக்கு இடைஞ்சல் விளைவிக்க கூடாது என்று நினைத்தனர். இது வரை நான் இப்படி பட்ட மக்களை பார்த்ததில்லை. ஒவ்வொருவரும் ஏதோ ஒரு நோக்கத்திற்காக சாலையில் சென்று கொண்டு இருக்கிறார்கள். எங்களுக்காக அவர்கள் நிற்க வேண்டிய அவசியமில்லை. இத்தனைக்கும் நாங்கள் வெளியூர் ஆட்கள் என்று அவர்களுக்கு தெரியும். நாங்கள் ஒன்றும் உண்மையிலேயே இடைஞ்சல் ஆகிவிடும் அளவிற்கு ஷூட்டிங் ஏதும் எடுக்கவில்லை. இருந்தும் சொல்லி வைத்தார் போல அவர்கள் அனைவரும் நடந்து கொண்ட விதம் ஆச்சர்யம் அளித்தது. கோபிசெட்டிப்பாளையம் போல் அவர்களின் மனதும், எண்ணமும் அழகுதான் என்று அது பறைசாற்றியது.
“இப்போது அனைவரும் நமக்காக வண்டியை நிறுத்துவது சற்று உறுத்தலாக இருக்கிறது. நமக்கு இடையூறு செய்யக்கூடாது என்ற அவர்களின் உணர்வுகளுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும். இனிமேலும் நாம் யாருக்கும் தொந்தரவு கொடுக்க வேண்டாம். இதுவே கடைசி புகைப்படமாக இருக்கட்டும். இதை எடுத்து விட்டு உடனே கிளம்பி விடலாம்” என்று முடிவு செய்தோம். நண்பர் ஒருவர் என்னை புகைப்படம் எடுக்க ஆயத்தமானார். “கொஞ்சம் வலது பக்கம் வாங்க”… “கொஞ்சம் முன்னாடி”… “அருமை.. அப்படியே இருங்க… இதோ ஒரு நிமிஷம்..”
கிளிக்..
கிளிக்..
கிளிக்.
புகைப்படம் எடுத்து முடித்தாயிற்று. இனிமேலும் இங்கு இருப்பது சரியல்ல, இப்போதே புறப்படலாம் என்று என் காரை நிறுத்தி இருந்த திசையை நோக்கி திரும்பினேன்… எங்களிடம் இருந்து ஒரு இருபது அடி தள்ளி ஒரு குவாலிஸ் கார் நின்று கொண்டு இருந்தனர். உள்ளே ஒரு குடும்பமே இருந்தது. அந்த காரை ஓடிக்கொண்டு வந்த அந்த நபர் எங்களை நோக்கி புன்னகைத்தவாரே கேட்கிறார்… “நாங்க போலாமா சார்?”..
இளையராஜா இசையில் “நீ தானே என் பொன் வசந்தம்” படத்தில் இருந்து யுவன் ஷங்கர் ராஜா பாடிய “சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது” பாடல்.. இதோ என் குரலில் ஒரு முயற்சி…
இன்னும் பாடல் வெளியீடு நிகழாத சூழலில், இணையத்தில் ஒரு நிமிட டீசராக வெளியாகி உள்ள இந்த பாடல் ஏனோ கடந்த இரண்டு நாட்களாக என் நினைவுகளை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்ரமித்துக்கொண்டு கொண்டு இருக்கிறது. என் குரலில் முடிந்தவரை அதை ஜஸ்டிபை செய்து பாடி இருக்கிறேன் என எண்ணுகிறேன். கேட்டுவிட்டு உங்கள் கருத்துக்களை பகிரவும்.
சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது….
சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது அடடா ஹே…
சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது அடடா ஹே…
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும் போது அடடா ஹே…
விழியோடு விழி பேச…
விரலோடு விரல் பேச…
அடடா வேறு என்ன பேச….
சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது அடடா ஹே…
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும் போது அடடா ஹே…
“பேசிய பணம் வரலையே”
மிடுக்குடன் மாப்பிள்ளையின் அப்பா.
வார்த்தை இல்லை பெண் வீட்டாரிடம்.
அவர்களின் கண்களே பேசியது
கண்ணீரோடு.
ஏழ்மையின் அர்த்தம்
அது சொல்லியது.
திருமணம் நிற்பது உறுதியானது.
“பாவப்பட்ட ஜென்மம் தானே நாம்”
புலம்பினாள் தாய்.
உயிருள்ள பிணமாய்
விரக்தியோடு அப்பா.
ஆனால் இன்னும்
சிந்தனையோடு மணமகள்.
“மானம் போன குடும்பத்திற்கு
தற்கொலை தான் தக்க முடிவு”
தீர்ப்பு கூறி கலைந்தது
திருமணக்கூட்டம்.
மறுநாள் காலை நாளிதழில்.
மாற்றி வந்ததோர் தீர்ப்போன்று.
“வரதட்சணை கேட்ட மாப்பிள்ளையை
போலீசில் பிடித்துத் தந்தாள்
புதுமணப்பெண்ணென்று.”
பெண்கள் நாளை…
“ஹலோ,
நான் பீட்டர் பேசறேன் திவ்யா”
என தொடங்கியது
தொலைபேசி உரையாடல்.
நிலவு பார்த்த குழந்தை போல
மலர்ந்த முகமானாள் அவள்.
“பீட்டர்
நான் உன்னையே கல்யாணம் செஞ்சிக்க
முடிவு பண்ணிட்டேன்.
1,00,000 ரூபாய் பணம்.
100 பவுன் நகை.
ஒரு வீடு, அவ்வளவுதான்.
ஓகே வா?”
என்றாள் அவள்.
“ஓகே. திவ்யா”
அவன் உள்ளம் துள்ளியது
சந்தோசத்தில்.
மறுநாள் காலை
மணக்கோலத்தில்
திருமணபதிவு மையத்தில்
நண்பர்களோடு நுழைந்தனர்.
பதிவு செய்யும் அதிகாரி
அவளின் அப்பா என்பதால்
உரிமையுடன் கேட்டார்.
“யாரம்மா இது?
எங்கே உன் புருஷன்?”
“அவன் கொடுத்த வரதட்சனைக்கு
இரண்டு வருடம் போதுமென்று
விவாகரத்து செய்துவிட்டேன்.
இவன் கொடுக்கும் பணத்திற்கு
நான்கு வருட ஒப்பந்தத்தோடு
நடக்கிறது எங்கள் புதிய திருமணம்”
என்று கூலாக சொன்னாள்
கலியுகக்கண்ணகி.