Archive for the கவிதைகள் Category

    சிறு கவிதைகள் – தொகுப்பு ஒன்று

    காதல் காவியம்

    காதல் வானிலே,
    வாழும் காவியம் நாம்.
    நிலவாய் நீ,
    ஒளியாய் நான்.

    ——————————————————————————————-

    தனிமை

    காதல் தீவிலே,
    நிலமாய் நான்….
    தனியாய் என்று வருந்தினேன்!
    கடலாய் நீ…
    அலையாய் வந்து மோதினாய்..

    ——————————————————————————————-

    காதல் மொழி.

    ஊமைகள் கூட
    பேசும் மொழி,
    காதல் மொழி!

    ——————————————————————————————-

    தேடல்

    மலரை தேடி வண்டு வந்தது,
    மகிழ்கிறாய்!
    இரவை தேடி நிலவு வந்தது,
    ரசிக்கிறாய்!
    உன்னை தேடி நான் வந்தால் மட்டும்
    ஏனடி வெறுக்கிறாய்?

    ——————————————————————————————-

    அவளின் பிறந்த நாள்

    பூவுக்கு பிறந்த நாளாம்!
    புத்தாடை போர்த்திக்கொண்டது…
    பூவிலும் அவள்
    மல்லிகையோ ரோஜாவோ அல்ல..
    அது வாடி விடும்.
    அவளோ வாடா மல்லி
    என்றென்றும் “வாடா மல்லி “!

    ——————————————————————————————-

    சிக்கல்

    காதல் புயல் என்றறிந்தும்
    ஆண் மனம் மாட்டிக்கொள்கிறது!
    காதல் தீ என்றறிந்தும்,
    ஆண் குணம் சுட்டுக்கொள்கிறது!
    காதல் சுழல் என்றறிந்தும்
    ஆண் இனம் சிக்கிக்கொள்கிறது!

    ——————————————————————————————-
    உனக்காக,
    நான் புதிதாய் கற்றுக்கொண்ட மொழி,
    மௌன மொழி!

    ——————————————————————————————-

    கொலை

    புயலில் பிழைத்து,
    இடியில் தப்பித்து,
    தீயில் நடந்து,
    நீரில் தவழ்ந்து
    உன்னை காண வந்தேன்
    ஒரே புன்னகையில் என்னை கொன்றுவிட்டாயடி!

    ——————————————————————————————-

    கனவு

    நீ என்னிடம்
    கனவிலாவது காதலிப்பாய் என்றுறங்கினால்
    கனவு கூட,
    கனவாகி போனது!

    ——————————————————————————————-

    நேரம்

    நீ இருக்கும் போது,
    நேரம் போதவில்லை.
    நீ இல்லாத போது,
    நேரம் போகவில்லை!

    ——————————————————————————————-

    காதல் என்ன  கெட்ட வார்த்தையா?
    பரவாயில்லை,
    பேசித்தான் பார்ப்போமே!

    ——————————————————————————————-

    என் டைரி

    உன்னை பார்த்த நாள் முதல்,
    என்னிடம்,
    என் டைரி கோபித்துக்கொண்டது.
    எழுத்துச்சுமை அதிகமாகிறதாம்.
    என் மனச்சுமை குறைவது தெரியாமல்……

    ——————————————————————————————-

    விண்மீன்களை கண்களாக்கினான்,
    சந்தனத்தை தோலாக்கினான்,
    பளிங்கை உடலாக்கினான்
    ஆனால்,
    இதயம் மட்டும் கல்லாக்கிவிட்டானே!

    ——————————————————————————————-
    பூக்கடையில்,
    ஒவ்வொரு பூக்களும் அழகழகாய் இருந்தன,
    நீ வரும் வரையில்!

    புத்தகக்கடையில்,
    ஒவ்வொரு புத்தகமும் அரிதாய் இருந்தன
    நீ தொடும் வரையில்!

    ——————————————————————————————-

    உன்னை பார்த்த நாள் முதல்

    • உன்னை பார்த்த நாள் முதல்,
      தப்பிப் பிழைக்கும் தமிழ் கொண்டு
      கவிதை எழுதுகிறேன்!
    • உன்னை ரசித்த நாள் முதல்,
      உன் உருவம் மனங்கண்டு
      தனியே பேசுகிறேன்!
    • உன்னில் மயங்கிய நாள் முதல்,
      விளங்காத ஓர் உணர்வுக்கு
      விளக்கம் தேடுகிறேன்!
    • உன்னை காதலித்த நாள் முதல்,
      ஏதோ ஒரு சுமையையும் சுமக்கிறேன்
      சுமை தெரியாமல்!

    – பிரவீன் குமார் செ

    பெண்ணும் ஐம்பூதமும்

    fire-girl

    • நிலமும்
      நீயும்
      ஒன்றேயடி.
      என் ஜீவனை சுமப்பதால்!
    • நீரும்
      நீயும்
      ஒன்றேயடி.
      ஆழம் தெரியவில்லை!
    • காற்றும்
      நீயும்
      ஒன்றேயடி.
      உரசும் போது சிலிர்த்து விடுகிறேன்!
    • வானும்
      நீயும்
      ஒன்றேயடி.
      முதலும் முடிவும் தெரிவதில்லை !
    • நெருப்பும்
      நீயும்
      ஒன்றேயடி.
      கண்களால் தொடமுடிந்தும் …..
      கைகளால் முடியவில்லை!!!

    – பிரவீன் குமார் செ

    காதல் யுத்தம்

    • உன்னை நினைக்கும் போதெல்லாம்
      என் நினைவுகள்
      நினைவிழக்கிறது!
    • உறங்கச்சென்றால்smoking-lover
      கண்கள்
      ஒத்துழையாமை செய்கிறது!
    • உண்ணசென்றால்
      வயிறு
      உண்ணாவிரதம் மேற்கொள்கிறது!
    • மூளை
      மூலைக்கு மூலை இயங்க மறுக்கிறது,
      வேளைக்கு வேளை வேலை நிறுத்தம் செய்கிறது!
    • மொத்தத்தில்,
      உன்னால்
      என் உடலே கலவரமாக காட்சியளிக்கிறது!
    • ஒவ்வொருமுறையும்,
      கண்ணீர் புகையை வீசியே
      இந்த கலவரத்தை அடக்குகிறேன்.
    • ஆம்.
      கண்ணீரோடு
      என் நுரையீரலில் புகையை வீசியே!!!

    – பிரவீன் குமார் செ

    கண்ணீர் இருப்பில்லை – சுனாமி கவிதை

    சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களை கண்டு என் மனம் பாதிக்கப்பட்டபோது எழுதிய வரிகள்…

    tsunami-pain-peom

    கண்ணீர் இருப்பில்லை

    அலைகடலே
    உன் கரையில் விளையாடியது குற்றமென
    பிஞ்சுகளின்
    உயிரோடு விளையாடிவிட்டாய்.

    உன் மடியில்
    வலை வீசியது குற்றமென
    மீனவர்களின்
    உயிரை விலை பேசிவிட்டாய் .

    குழந்தைகளை பிரித்து
    பெற்றோர்களை அனாதயாக்கினாய்
    பெற்றோரை பிரித்து
    குழந்தைகளை அனாதயாக்கினாய்.

    இன்னும்
    யாரை பிரிக்க
    அலை அலையாய்
    அலைந்துகொண்டு இருக்கிறாய்?

    இங்கு இறப்பதற்கு
    இன்னும் தான் மிச்சம்மிருக்கிறோம்
    இறந்த பின் சிந்துவதற்கு
    கண்ணீர் தான் இருப்பில்லை…

    – பிரவீன் குமார் செ