27 பிப்ரவரி, ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் ஐந்து மணியளவில் கொழும்பு கடற்கரையில் நண்பர்களுடன் நடந்து சென்றுக்கொண்டிருக்கையில் ஒரு இடத்தில் திடீர் கூட்டம் இருப்பதை கண்டோம். அருகில் சென்று பார்த்தால், ஆஸ்திரேலிய கிரிகெட் வீரர் ப்ரெட் லீயை சுற்றி ஒரு கூட்டம் மொய்த்துகொண்டு ஆட்டோக்ராப் வாங்கிக்கொண்டு இருந்தது. நான் பெரிதாக கிரிக்கெட் ரசிகனில்லை. கிரிக்கெட் மேல் பித்து பிடித்த கல்லூரி வாழ்விலிருந்து காரணமில்லாமல் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து விலகி வந்துவிட்டேன். அதில் நாட்டமில்லாததால் என்னவோ பிரெட் லீயை பார்த்தும் பெரிதான ஒரு துள்ளல் என்னுள் எழவில்லை. நாங்கள் கூட்டத்தருகே செல்லவும் ப்ரெட் லீ கூட்டத்தை விட்டு விலகி எதிர் பக்கம் செல்லவும் சரியாக இருந்தது.
நண்பர் ஒருவர், ப்ரெட் லீயுடன் நாம் அருகில் நின்று புகைப்படம் எடுத்து இருந்தால் நன்றாக இருந்துக்குமே என்றார். இன்னொருவரோ, சிறிது நேரத்திற்கு முன்னால் வந்து இருந்தால் முயற்சித்திருக்கலாம் இப்போது அவர் ரசிகர்களிடம் இருந்து விடை பெற்று சென்றுக்கொண்டு இருப்பதால் அது சாத்தியமில்லை என கூறினார். சில வினாடிகளில் நடந்தது தான் மேலுள்ள அனைத்தும்.
சரி முயற்சித்துதான் பார்ப்போமே என்று நான் விரைவாக அவரை நெருங்கிச்சென்று சென்று அவசர அறிமுகத்தோடு இந்தியாவிலிருந்து வருவதாக கூறினேன். அவரோ நினைத்ததற்கு எதிர்மாறாக, சட்டென்று என்னிடத்தில் திரும்பி கை குளிக்கியவாறு இந்தியில் ஏதோ கூறினார். (“தாங்கள் எப்படி இருக்கிறீர்கள்” என்று இந்தியில் அவர் கேட்டதாக பிறகு நண்பர் கூறினார்). எனக்கோ ஒன்றும் புரியாமல் எனக்கு இந்தி தெரியாது என்றேன். இந்தியாவில் இருந்துக்கொண்டு இந்தி தெரியாதா என அவர் ஆச்சர்யபட்டார். நான் தமிழ் நாடு என்றும் நாங்கள் தமிழ் பேசுவோம் என்றும் கூறியதும் வியப்பில் புன்னகைத்தார். அதுமட்டுமில்லாமல் கேட்டவுடன் புகைப்படத்திற்கு மறுப்பில்லாமல் சம்மதித்தார். அப்போது என் நண்பர் க்ளிக்கிய புகைப்படங்கள் தான் கீழே உங்கள் பார்வைக்கு.
2006ஆம் வருடம் நான் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருந்த ஆரம்ப காலம். எப்படியும் அப்போது வாரம் ஒருமுறை ஏதேனும் புதிதாய் வெளிவந்த படத்திற்கு உடன் பணிபுரிந்த நண்பர்களுடன் சென்று விடுவோம். வெள்ளிக்கிழமை ஆகிவிட்டால் போதும், பர்ஸ்ட் ஷிப்ட் மதியம் இரண்டு முப்பது மணிக்கு முடியும் என்றால் எப்படியும் இரண்டே காலுக்கே தியேட்டரில் ஆஜராகிவிடுவோம். அவ்வளவு கடமை தவறாத ஈடுபாடு.
அதே போன்ற ஒரு வெள்ளிகிழமை நாளென்று நினைக்கிறேன். நண்பர்கள் சிலபேர் அலுவலகத்தில் தேனிர் இடைவேளையின் போது ஒன்று கூடிய நேரம். போன வாரம் “சித்திரம் பேசுதடி”னு ஒரு படம் வந்து இருக்கு, அதற்கு இன்றைக்கு போலாமா என்று நான் கேட்டேன். ஆனா அது பெரிய மொக்கை படம்னு சொல்லி யாருக்கும் வர விருப்பம் இல்லை என்று நழுவிவிட்டனர். நானோ அந்த படத்திற்கு போயே ஆக வேண்டும் என்று ஒற்றை காலில் நின்றேன். அதற்கு காரணம் “பாவனா”…… வெறும் புகைப்படம், மற்றும் ட்ரைலர் மட்டுமே அப்போது பார்த்ததாய் ஞாபகம். பாவனாவிற்காக அந்த படத்திற்கு கண்டிப்பாக ஒருமுறையேனும் சென்று விட வேண்டும் என் முடிவெடுத்து இருந்தேன். ஆனால் யாரும் அந்த படத்திற்கு என்னுடன் வருவாதாய் தெரியவில்லை.
தியேட்டர் காத்து வாங்குது என்று ஒருவர் சொல்ல . வாள மீனுக்கு பாட்டு மட்டும் தான் படத்துல நல்லா இருக்கு அதை தொலைகாட்சியிலேயே பார்த்துவிடலாம் என்று இன்னொருவர் சொல்ல. அனைவருக்கும் அந்த படத்தை ஒதுக்க கண்டிப்பாக ஒரு காரணம் கிடைத்து இருந்தது ஆனால் நண்பர் ஒரே ஒருவர் மட்டுமே அப்போது என்னுடன் வர ரெடியாக இருந்தார். அதுவும் நான் பாவனாவின் அருமை பெருமைகளை மீண்டும் மீண்டும் அவரிடம் சொல்லி இருந்ததால் அவரும் பாவனாவை பார்த்தே தீர வேண்டும் என்ற முடிவோடு இருந்தார். இப்படி முழுக்க முழுக்க பாவனாவிற்காக மட்டுமே அந்த படத்திற்கு நானும் அந்த நண்பரும் அன்று மதிய காட்சிக்கு சென்றோம்.
படம் முடிந்து வரும்போது தான் உணர்ந்தோம் கண்டிப்பாக இந்த வருடத்தின் மிகச்சிறந்த படம் அதுவாகத்தான் இருக்கும். இப்படி ஒரு அருமையான திரைப்படத்தை மிஸ் பண்ணி இருப்போமே என்று இரண்டு பெரும் கூறிக்கொண்டோம். நீண்ட நேரம் இருவரும் விடை பெறும்வரை அந்த திரைப்படத்தை மட்டுமே பேசியிருப்போம் என நினைக்கிறன். பாவனாவிற்காக மட்டுமே அந்த படத்திற்கு சென்ற போதும் அவரை தவிர இரண்டு விஷயம் அந்த படத்தில் என்னை கவர்ந்து இருந்தது. ஒன்று அந்த படத்தின் இசை மற்றொன்று அதில் தாமஸ் என்று வரும் ஒரு கதாபாத்திரம். மிக இயல்பான நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருந்தார் அவர். எப்போதும் பேன்ட் பாக்கட்டில் சோம பானம் வைத்துக்கொண்டு படம் முழுதும் ஸ்ருதியோடுதான் வலம் வருவார். ஏனோ தெரியவில்லை திரையில் பாவனா தோன்றாத நேரத்தில் நான் அவரை தான் கவனித்துக்கொண்டு இருந்தேன். முக்கியமாக மூன்று காட்சிகள் இருக்கிறது. அதில் ஒன்று கீழே.
அவ்வளவு தான் அதன் பிறகு பல படங்கள் பார்த்தாயிற்று. வாழ்க்கையில் பல்வேறு நிகழ்வுகளும் நடந்தாயிற்று. சித்திரம் பேசுதடி வழக்கமான படங்களில் ஒன்றாக மறந்தே போயிற்று…
சரியாக நான்கு வருடம் கழிந்தது. 2010 ஆரம்ப மாதங்களில் சேலத்தில் சொற்கப்பல் என்றொரு கருத்தரங்கம் நடைபெற்றது. நான் இயக்கி வரும் சேலம்ஜில்லா இணையத்தளத்தில் மூலம் செய்தி சேகரிக்க விளைந்த போது தான் முகப்புத்தகத்தில் “அஜயன் பாலா” அவர்களின் அறிமுகம் கிட்டியது. கருத்தரங்கில் அவரை நேரில் சந்தித்த சிலநாட்கள் முன்புதான் சற்றும் எதிர் பாராவண்ணம் சித்திரம் பேசுதடி படத்தில் நான் ரசித்த அந்த தாமஸ் கதாபாத்திரத்தில் நடித்தது இவர் என தெரியவந்தது. மிகபெரிய ஆச்சர்யம் அது. இதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
அப்படி எனக்கு அறிமுகமான அவர் பின்பு என் வலைப்பூவை வாசித்து கருத்து கூறும் அளவிற்கு நண்பரானார். அதுவரை போனிலும், சாட்டிலும், இமெயில் மூலம் மட்டுமே தொடர்பில் இருந்த அவர், நேற்று வெள்ளிக்கிழமை என் வீட்டிற்கு வந்து என்னுடன் எங்கள் குடும்பத்தாருடன் நேரம் செலவிட்டு மீண்டும் ஒரு ஆச்சர்யத்தையும், அளவில்லா மகிழ்ச்சியையும் ஏற்படுத்திவிட்டு சென்றார். பழக மிக மிக எளிமையான மனிதர் என்று அப்போது தான் தெரிந்தது. சித்திரம் பேசுதடி உருவானதை பற்றியும், எழுத்துலகை பற்றியும், வலைப்பூ, டெக்னாலஜி என்று என்று பல விஷயங்கள் பேசி இரவு உணவு வரை கிட்டதட்ட ஐந்து மணிநேரம் ஒன்றாக ஒன்றாக செலவிட்டது அனைத்தும் இனிமையான தருனங்களே.
நாங்கள் இருவருமே அக்டோபர் 19ஐ பிறந்த நாளாக கொண்டாடுவது இதில் இன்னொரு ஆச்சர்யம். அவரை ஒரு எழுத்தாளராக, இயக்குனராக, பேச்சாளராக, பண்முக பண்பாளராக அறிவதற்கு முன்னர் தாமஸ் அண்ணனாக அவரை தெரியுமென்பதால் இன்னமும் தாமஸ் அண்ணே என்று தான் கூப்பிடுகிறேன். அவர் தற்போது நடித்து வரும் இரண்டு திரைப்படங்களுக்கும் எதிர்வரும் திரைப்பணிகளுக்கும், எழுத்துப்பணிகளுக்கும் அவரை வாழ்த்துவோமாக!
இதயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் மக்களின் இதயத்தில் நீங்காத இடம் பிடித்த நடிகர் முரளியின் இதயம் இன்று துடிப்பதை நிறுத்திக்கொண்டது. இந்த செய்தியை இன்று கேள்விப்பட்ட உடனேயே சில நிமிடங்கள் உறைந்து போனேன். அது என்னை துயரத்தில் ஆழ்த்தியது. ஏனென்று யோசித்து பார்க்கிறேன். முரளியை தீவிர ரசிகனாக இதுவரை நான் இருந்திருக்கவில்லை. அவரது காலங்களின் நான் சினிமாக்களை பார்த்து வளர்ந்திருக்கவில்லை. ஆனாலும் அவரை நான் ரசித்திருக்கிறேன்.
புது வசந்தம், இதயம் போன்ற படங்களின் பாடல்கள் மூலமே அவரை சிறு வயதில் எனக்கு பரிட்சயம் ஆனதாக ஒரு ஞாபகம். சினிமா, டிவி என்பதை அறிந்துக்கொண்டு இருந்த மிகச்சிறிய வயதாக இருந்திருக்கும் என நினைக்கிறேன். சரியாக நியாபகம் இல்லை. ஆனால் படங்களை பார்க்க ஆரம்பம் செய்த என்னுடைய பள்ளி பருவத்திலே “காலமெல்லாம் காதல் வாழ்க” என்ற திரைப்படத்தை நான் மிகவும் ரசித்திருக்கிறேன். அதுவே எனக்கு தெரிந்து நான் விரும்பிப்பார்த்த முரளியின் முதல் திரைப்படம். அத்திரைப்படத்தின் பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்தவை. ஆறாம் வகுப்பு நான் பயின்று கொண்டிருந்திருக்கலாம். அப்போதே அதை மனப்பாடமாக பாடிக்கொண்டு இருந்திருக்கிறேன். இப்போது கூட அந்த பாடல்களை கேட்க்கும்போது அந்த காலகட்டங்கள் ஞாபகத்திற்கு வந்து செல்கின்றன.
அதே நேரத்தில் அவர் சூர்யாவிடம் சேர்ந்து ஒரு படம் நடித்தார். சில வருடங்களில் வெற்றிக்கொடி கட்டு போன்ற வெற்றி படங்களின் படங்களில் நடித்தார். கடல் பூக்கள் படத்திற்கு தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதும் வாங்கினார். பிறகு நான் தீவிரமாக சினிமா பார்க்க ஆரம்பம் செய்த வயதில் அவரது படங்கள் காணமல் போயின. வெளிவந்த சில படங்களும் சரியாக போகவில்லை. சுந்தரா ட்ராவல்ஸ் படம் வந்த போது அந்த படத்தில் நடித்த பஸ்ஸையும், எலியையும் அருகில் இருந்த தியேட்டருக்கு கொண்டு வந்திருந்தார்கள். அதுவே நான் முரளி நடித்து பார்த்த கடைசி படம். முரளி அமைதியான, சாந்தமான, இளமையான தோற்றமுடையவர் என்பதால் கண்டிப்பாக யாருக்கும் அவரை பிடிக்காமல் இருக்காது. நன்றாக கவனித்து பாருங்கள் அவரது குரல் கூட மிகவும் மென்மையானது. அது மட்டும் இல்லாமல் மற்ற நடிகர்களை போலில்லாமல் எந்த ஒரு கிசி கிசுவிலும் வராத நடிகராகவே கடைசி வரை இருந்தார்.
இக்கால சினிமா ரசிகர்கள் அவரை ரசித்திருக்க வாய்ப்பு குறைவு தான். ஏன் என் வயதையொத்தவர்கள் கூட சேர்த்துதான். அவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் வரிசையில் வர நேரம் சரியாக அமையா விடிலும் எண்பதுகளிலும், தொண்ணூறுகளிலும் இருந்த கல்லூரி மாணவர்கள் அவரை மறந்திருக்க வாய்ப்பு இல்லை. நடிகர் மோகன் எப்படி எல்லா திரைப்படங்களிலும் மைக்கோடு வந்து மைக் மோகன் ஆனாரோ. அது போல் எல்லா திரைப்படங்களிலும் புத்தகத்தை எடுத்துக்கொண்டு கல்லூரி மாணவனாக வருவார் முரளி. மோகன் மைக் எடுத்து மேடை ஏறினால் படம் ஹிட் என்ற செண்டிமென்ட் அப்போது இருந்தது. அது போல் முரளி புத்தகம் எடுத்துக்கொண்டு கல்லூரி சென்றால் படம் கண்டிப்பாக ஹிட்.
நான் இப்போதும் உறுதியாக கூறுவேன், முரளி காலத்து நடிகர்கள் யாரேனும் இப்போது கல்லூரி மாணவனாக நடிக்க முடியுமா? கற்பனை செய்து பாருங்கள். பார்த்திபன்? பிரபு? பாண்டியராஜன்? சுரேஷ்?. ஏன் அதற்கடுத்த கட்ட நடிகர்களான விஜய், அஜித், விக்ரம் கூட மீண்டும் கல்லூரி மாணவர்களாக நடித்தால் நம்மில் பலர் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் இன்றும் முரளியின் தோற்றமும் குரலும்அதற்கு பொருந்துவதாகவும் ரசிக்கும் படியாகவும் இருக்கும்.
நான் இப்போது கூறப்போவது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. காதல் கொண்டேன் திரைப்படம் வந்த தருணத்தில் டைரக்டர் செல்வராகவனின் பேட்டி ஒன்றை படித்தேன். அந்த திரைப்படத்தில் தனுஷிற்கு பதிலாக ஏற்கனவே இரண்டு நடிகர்கள் நடிப்பதாக இருந்து கைவிடப்பட்டது என்று கூறி இருந்தார். மாஸ்டர் டிகிரி படிக்க அதன் நாயகன் சென்னை வருவதாக அமைத்து இருந்த அந்த கதை பிறகு தனுஷிற்காக சிறிது கதை மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. அந்த இரண்டு நடிகர்களில் செல்வராகவன் தேர்வு செய்து இருந்த ஒரு நடிகர் தான் முரளி. அது மட்டும் உண்மையாக இருந்து படம் வெளிவந்து இருந்திருந்தால்? முரளி கண்டிப்பாக தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட்டு இருப்பார்.
முரளியின் இழப்பு கண்டிப்பாக சோகத்தின் உச்சம் தான். எங்கள் குடும்பத்தாருக்கும் தான் அதன் பாதிப்பு இருக்கிறது.. முரளியை நாங்கள் நேரில் கண்டிராவிட்டாலும், பழக வாய்ப்பு இல்லாவிட்டாலும் அவருடையமறைவு எங்களை உறையவைத்ததற்க்கு காரணம் இருக்கிறது. சுமார் தொன்னூறுகளில் இருந்த அவருடைய தோற்றம் அப்படியே அச்சு அசலாக என்னுடைய தாய் மாமாவை போலிருந்தது. முளியின் முகம் எனக்கு அப்போதுதான் பரிட்சயமான சமயம் என்பதால் முரளியை பார்த்தால் என்னுடைய மாமாவை பார்ப்பது போலவே இருக்கும். எதிர்பாராவிதாமாக அவர் இரண்டு வருடங்களுக்கு முன்னர் புற்று நோயால் அவதிப்பட்டு இறந்து போனார். இருவருக்கும் தோற்றத்தை தவிர மேலும் சிறு ஒற்றுமைகள் இருப்பதை இப்போது உணர்கிறேன்.
இருவரும் இளம் வயதிலேயே இறந்தனர். என் மாமா இறக்கும் போது அவருடைய வயது முப்பத்தி ஆறு, முரளிக்கோ நாற்பத்தி ஆறு. இருவருக்கும் மகனும் மகளும் உள்ளனர். தன்னுடைய மகனின் வளர்ச்சியையும், பெண்ணின் திருமணத்தை காணக்கிடைக்காமலும் மரணம் எய்திவிட்டார்கள் இருவரும். அவர்களுடைய இறப்புசெய்தியை அறிவித்தது சென்னையில் ஒரு மருத்துவமனையில் தான். முரளிக்கு திரையுலகமே திரண்டு வந்து இருந்தது, இவருக்கோ ஒட்டு மொத்த நெய்வேலி லிக்னயிட் கார்பரேசன் ஊழியர்களும், முக்கிய அதிகாரிகளும், தொழிற்சங்க பிரதிநிதிகளும் திரண்டு வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.
என் மாமா இறந்த இந்த இடைப்பட்ட இரண்டு வருடத்தில் முரளியை காணும் போது எங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் மாமாவை நேரில் காண்பது போன்ற உணர்வு. அவர் இறந்த பிறகும் உயிருடன் இருப்பதை போன்ற ஒரு தற்காலிக தோற்றத்தை அது உருவாக்கியது. தான் மிகவும் நேசித்தவரும், ரத்த சம்பந்தமானவரும் இறந்து பிறகு அவர் உருவத்தை உடையவர்களை நேரில் பார்க்க வாய்ப்புக்கிட்டியவர்களை கேட்டுப்பாருங்கள் அது எவ்வளவு பெரிய விஷயமென்று.
ஓரிரு வாரங்களுக்கு முன்னர் கூட விஜய் டீவியில் வரும் காபி வித் அனு நிகழ்ச்சியில் தன் மகன் ஆதர்வாவுடன் வந்திருந்தார் முரளி. எங்கள் குடும்பத்தினர்கள் அனைவருக்கும் தொலைப்பேசியின் மூலம் தகவல் பரிமாறப்பட்டு அனைவரின் இல்லத்தின் வரவேற்பறையிலும் அந்த நிகழ்ச்சியே ஓடியது. அனைவருக்கும் எங்கள் மாமாவை நீண்ட நாட்கள் கழித்து நேரில் கண்டதாக ஒரு உணர்வு அப்போது. இனிமேல் இவர்களுக்கு அதுவும் கிடைக்க வாய்ப்பில்லை. முரளியின் இதயம் இன்னும் சிறிது காலம் கழித்து நின்றிருக்கலாம்.