தாண்டவம் vs கஜினி

“தெய்வத்திருமகள்” என்ற ஒரு அழகிய எமோஷனல் திரைப்படத்தை தந்த இயக்குனர் விஜய், விக்ரம் மற்றும் அந்த குழுவின் அடுத்த படைப்பு என்பதால் பொதுவாக எதிர்பார்ப்பு சற்று அதிகம் இருந்தது. இயக்குனர் விஜய் மிகச்சிறந்த மனிதர் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். அவருடைய படைப்பிலும் அது தெரிகிறது. அனுஷ்கா, ஏமி ஜாக்சன் மற்றும் லட்சுமி ராய் என்று மூன்று பேரை வைத்துக்கொண்டு படம் முழுக்க அவர்களை ஹோம்லியாக காட்டும் எண்ணம் இவருக்கு மட்டுமே வரும். ஆனால் அதற்காக கண்டிப்பாக ரசிகர்களின் கோபம் அவர் மேல் இல்லாமல் இல்லை.  தியேட்டரில் பல இடங்களில் ரசிகர்களின் கமெண்ட்ஸ் அதை உணரவைத்தது. மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள் என்று விஜய்யின் படைப்பாற்றல் மெருகேறிக்கொண்டு வருவதால் நிச்சயம் இதுவும் ஒரு குவாலிட்டி படம் என்பதில் ஐயமில்லை.

ghajini vs thandavam

இதற்கு மேல் தொடருவதற்கு முன்னர் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்த கட்டுரை நிச்சயம் டிபிகல் சினிமா விமர்சனம் அல்ல. ஏற்கனவே வெற்றிபெற்ற ஒரு படத்தோடு ஒப்பிட்டு தாண்டவம் படத்தை அலசவிருப்பதால் படத்தை பற்றிய நெகடிவ் அபிப்பராயம் வர வாய்ப்புள்ளது. படத்தின் நிறைகளை நான் தொடவே போவதில்லை. ஆக இதை படித்துவிட்டு படம் பார்க்க முடிவு செய்யலாம் என்று நீங்கள் நினைத்தால் நிச்சயம் அதற்கு இந்த கட்டுரை உதவாது. அதே போல் இது கஜினி திரைப்படத்தை தழுவியோ, இன்ஸ்பயர்  செய்து எடுக்கப்பட்டு என்றும் நான் கூற விழையவில்லை. படத்தின் ஒரு காட்சியில் இந்த திரைப்படத்தை கஜினியோடு ஒப்பிட ஏற்பட்ட ஒரு தூண்டுதலே இந்த கட்டுரை. நீங்களும் தாண்டவம் படத்தை பார்த்த பிறகு இதை படித்தால் என்னுடைய எண்ணவோட்டத்தினூடே பயணிக்க ஏதுவாக இருக்கும்.

சரி விஷயத்துக்கு வருவோம். கதைக்களம், காதாபாத்திரம் வெவ்வேறாக இருந்தாலும் இந்த இரண்டு படத்தின் கதையின் நோக்கம் ஒன்று தான். தன்னுடைய காதலியை/மனைவியை கொன்றவர்களை பழிவாங்கத்துடிக்கும் ஒருவனின் கதை.  இது மட்டும் போதுமா இரண்டையும் ஒப்பிட என்று கேட்டால், அதற்கு மேலேயும் இருக்கிறது. இது நிச்சயம் திட்டமிட்டு நிகழ்த்த ஒற்றுமை இல்லையென்றாலும், முடிவில் கஜினியில் ரசிகனுக்கு ஏற்பட்ட அந்த அனுபவம் தாண்டவம் திரைப்படமும் ஏற்படுத்தினால் நிச்சயம் தாண்டவம் ஒரு தமிழ் சினிமாவின் முக்கியமான ஒரு படம். அப்படி ஒரு அனுபவம் கிடைத்ததா? பார்ப்போம். .

1. கஜினியில் கதைக்கு தேவையில்லாத அசினின் “ரஹதுல்லா” இன்ட்ரோ பாடல் போல இதில் ஏமி ஜாக்சனுக்கு ஒரு இன்ட்ரோ பாடல். (ஆனால் அதில் கதை அசினை மையாமாக வைத்து நகருவது போல் உள்ளது என்பதால் அதை ஏற்றுக்கொண்டாலும் இதில் ஏமி ஜாக்சன் கதைக்கு முக்கியம் கிடையாது.)

2. தனியாளாக எதிரியை அழிப்பதற்கு போராடும் இரு படத்தின் நாயகர்களுக்கும் தடையாக  ஒரு பிரச்சனை. கஜினியில் சூர்யாவிற்கு “ஷார்ட் டைம் மெமரி லாஸ்”, இதிலோ விக்ரமுக்கு “கண் பார்வை” கிடையாது.

3. கஜினியில் எதிரியை அழிக்க  அவர்களை அடையாளம் காண்பிக்கும் சப்போர்டிங் கேரக்டரில் நடித்து உண்மையிலேயே நாயகனுக்கு சப்போர்ட் செய்யும் நயன்தாராவை போல் இதில் விக்ரமிற்கு உதவிட லட்சுமி ராய்.

4. கஜினியில் தன்னுடைய “ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ்” குறையை தினசரி வாழ்க்கையில் சமாளித்து எதிரிகளை அழிக்க சில உத்திகளை கையாள்வார் சூர்யா. தான் நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்களை உடம்பில் பச்சை குத்திக்கொண்டும், தன்னுடைய அறை முழுக்க கிறுக்கி வைத்தும், நண்பர்கள், எதிரிகளை தரம் பிரிக்க புகைப்படம் எடுத்து அதில் அவர் பெயர், குறிப்பு எழுதி வைத்துக்கொண்டும் சமாளிப்பார். அவ்வளவு டீடைலிங், சுவாரசியத்தை அதில் ஏற்படுத்தி சாமானியர்களுக்கும் அதை புரியவைத்து ஏற்றுக்கொள்ள வைத்தார் அதன் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்.

ஆனால் இதில் கண்பார்வை தெரியாத விக்ரம் பயன்படுத்தும் யுக்தி “எகோ லொகேஷன்”. கேட்பதற்கு மிகவும் சுவரசியமான் யுக்தி. அதாவது “டொக்.. டொக்” அன்று வாயில் சத்தம் எழுப்பி, அவரை சுற்றி இருக்கும் பொருட்கள், மனிதர்கள் மேல் பட்டு திரும்பும் ஒலி அலைவரிசையை காதில் கேட்டு உணர்தல். இதை வைத்து சும்மா பூந்து விளையாடி இருக்கலாம். ஆனால் அந்த சுவாரசியம், டீடைலிங் இதில் மிஸ்ஸிங்.

5. கஜினியில் தன் காதலன் தான் மிகப்பெரிய பணக்காரரான சஞ்சய் ராமசாமி என்று அசினுக்கு தெரியாமலே அவருடன் பழகுவார். யோசித்து பார்த்தால் அந்த உறவு மிகவும் அழகாக ரசிக்கத்தக்க வகையில் செதுக்கப்பட்டு இருக்கும். கடைசி வரை அந்த உண்மை தெரியாமலே அதன் நாயகி இறந்துவிடுவாள் என்பது ஒரு மெல்லிய வலியை ஏற்படுத்தும். அதே போல் அனுஷ்காவிற்கும் விக்ரம் இந்தியாவின் தலைசிறந்த பதவியில் இருக்கும் “ரா ஆபிசர்” என்று தெரியாது. முதல் முறை அந்த விஷயம் அவருக்கு தெரியாது என்ற போது ஒரு சின்ன நகைச்சுவை இருந்தது. ஆனால் அதை திரும்ப திரும்ப ரிபீட் பண்ணவும் ஒரு வித எரிச்சல்தான் மிஞ்சுகிறது.

6. பழிவாங்க போராடும் நோக்கத்துடன் நகரும் இரண்டு படத்தில் கதையிலும் நடுவில் இரு இடங்களில் பிளாஸ் பாக் ஒப்பன் ஆகிறது. ஒன்று கதாநாயகன், கதாநாயகி சந்தித்துக்கொள்வதும், அவர்கள் இருவருக்குமிடையே நடக்கும் காதல்/கல்யாணம் பற்றியது. இரண்டாம் பிளாஸ் பேக்கில், அவர்களின் எதிர்நோக்கும் பிரச்சனையையும், அதை தொடர்ந்து கதாநாயகி இறப்பதுமாகும். கஜினியில் பிளாஸ் பேக் கதையை விட்டு விலகாமல் கதைக்கு வழு சேர்த்தது. சொல்லப்போனால் படத்தின் வெற்றியே பிளாஸ் பேக்கில் வரும் அந்த காதல் தான்.

தாண்டவம் படத்தில் பிளாஸ் பாக் கதையை விட்டு ரொம்ப தூரம் விலகிபோய் ஒரு தொய்வை ஏற்படுத்திவிட்டது. பிளாஸ்பேக்கின் முடிவில் அனுஷ்காவின்  மேலும், பாதிக்கப்பட்ட விக்ரம் மேலும் ஒரு பரிதாபத்தை ஏற்படுத்தி, எதிரியை பழிவாங்குவதற்கான ஒரு எமோசனை ரசிகர்களின் மேல் சுமத்தாததால் கதையின் நோக்கத்தில் பார்வையாளர்கள் பயணிக்க முடியவில்லை.

7. கஜினியில் அசின் இறக்கும் அந்தக்காட்சி. தரையில் சூர்யாவும் அசினும் ஒருவரை ஒருவர் பார்த்தவாரே விழுந்து கிடக்க. கையறு நிலையில் உள்ள சூர்யாவின் கண் முன்னே அசினின் உயிர் பிரியும். ரசிகர்களை மிகவும் பாதித்த காட்சி அது. அதே போல் இதில் ஒரு காட்சியில் விக்ரமும், அனுஷ்காவும் தரையில் விழுந்து கிடக்க விக்ரமின் கண்முன்னே அனுஷ்காவின் உயிர் பிரியும். இங்கு தான் இரண்டு படத்தின் கதாநாயகர்களும் பாதிப்புகுள்ளாகிறார்கள். அதாவது அந்த இடத்தில் தான் சூர்யாவிற்கு “ஷார்ட் டைம் மெமரி லாஸ்” ஆகிறது. விக்ரமிற்கு “கண் பார்வை” போகிறது.ரோட்டில் ஒருவர் அடிபட்டு கிடக்க, அதை பார்த்துவிட்டு தனக்கென்ன என்று விர்ரென்று வண்டியில் புறப்பட்டு செல்லும்  கனத்த இதயம் கொண்ட மனிதர்களை கூட மனதை பிழியச்செய்து பார்த்துவிடும் வல்லமை படைத்தது இந்த சினிமா. ஆனால் அந்த முக்கிய இடத்தில் திரைக்கதையில் கோட்டை.

படத்தைப் பார்க்கும் ஒவ்வொரு ஆணும் அனுஷ்காவையும், ஒவ்வொரு பெண்ணும் விக்ரமையும் காதலித்து இருக்கவேண்டும் அல்லது ரசித்து இருக்கவேண்டும். குறைந்தபட்சம் அவர்கள் இருவரிடையேயான காதலை உள்வாங்கி கதையில் ஒன்றி இருக்கவேண்டும். அவ்வாறு நிகழாத பட்சத்தில் அனுஷ்காவின் இறப்பு பார்வையாளனை பொறுத்த வரை செய்திதாளில் படிக்கும் நிகழ்வு போன்ற உணர்வையே தந்துவிடுகிறது. இப்போது விக்ரம் யாரை பழி வாங்கினால் எனக்கென்ன என்று தோன்றுவது இயல்பு. ஆனால் அந்த மேஜிக் கஜினியில் நிகழ்த்தது. குறிப்பாக இந்தி கஜினியில் ஒரு எமோஷனல் என்டிங்.

8. எல்லாவற்றிற்கும் மேலாக எதிரிகளை பழிவாங்கியவுடன் தன் காதலியின் நினைவில் கதாநாயகன் அடுத்து தன் வாழ்நாளை செலவிடுவது போல் காட்டப்படுவது தான் (இந்தி கஜினி) இரண்டு படத்தின் முடிவும். கஜினி படம் முடிந்து தியேட்டரை விட்டு வரும்போது இருந்த அந்த வலி தாண்டவம் முடிந்தபோது சுத்தமாய் இல்லை.  தாண்டவம் கொஞ்சம் திரைக்கதையில் மெனக்கெட்டு நேர்ப்பாதையில் தாண்ட முயற்சித்திருந்தால் நிச்சயம் ருத்திரதாண்டவம் ஆடியிருக்கலாம்.

Share

3 Responses to தாண்டவம் vs கஜினி

  1. கஜினி போல் வராது…. இருந்தாலும் நீங்கள் சொன்னது போல் சிலது ஒத்துப் போகின்றன…

  2. Obuli Raj says:

    கஜினி வெற்றிப்படம்… தாண்டவம்????

  3. பகலவன் says:

    நுப்பமான ஒப்பீடு…. வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)