செல்வராகவனுடன் சில நிமிடங்கள், பல நினைவுகள்…

sevaraghavan

“மயக்கம் என்ன” திரைப்படம் வெளியான மறுநாள் நாள் அதன் ப்ரீமியர் ஷோவிற்கு சென்னை போர் பிரேம்ஸ் திரையரங்கம் சென்றிருந்தேன். வெளியான அன்றே சேலத்தில் அந்த திரைப்படத்தை பார்த்திருந்தாலும் இப்போது நான் செல்வதற்கான ஒரே காரணம் அதன் இயக்குனர் செல்வராகவன். என் வாழ்வில் நான் மிகவும் பிரம்மித்து ரசித்த நபர் அவர். ஒரு காலத்தில் இவரை சந்திப்பதற்கு தவம் இருந்திருக்கிறேன்.

திரைப்படத்தின் முடிவில் பார்வையாளர்கள் அனைவரும் அவரவர் இடத்தில் அமர்ந்தவாறு அந்த திரைப்பட குழுவினருடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. இயக்குனர் செல்வராகவன், அவரது மனைவி கீதாஞ்சலி செல்வராகவன், தனுஷ், ரிச்சா, மற்றும் ஒளிப்பதிவாளர் ராம்ஜி அனைவரும் பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துக்கொண்டு இருந்தனர். எனக்கு செல்வராகவனிடம் கேட்பதற்கு  பல கேள்விகள் இருந்தது. ஆனால் மைக்கை வாங்கி அவரிடம் ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்டேன். பொறுமையாக, தெளிவாக பதில் அளித்தார்.

அதன் பிறகு அடுத்த கேள்விக்காக மறு திசையில் திரும்பிய செல்வராகவன், திடீரென என்ன நினைத்தாரோ மீண்டும் என்னிடம் திரும்பி  “உங்க பேர் பிரவீனா? சேலத்தில் இருந்து வரீங்களா?” என்றார். எனக்கு பெரிய ஆச்சரியமாக இருந்தது.  சில நுண்ணிய நொடிகளில் சுதாரித்துக்கொண்டு “ஆம்” என்றேன்.. “சரி, இந்த கலந்துரையாடல் முடிந்த பிறகு வெளிய வாருங்கள் நாம் பேசலாம்” என்றார்.

நினைவுகள் பின்னோக்கி செல்ல ஆரம்பித்தது. 2002ஆம் வருடம் மே மாதம். பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து அதன் தேர்வு முடிவுகளுக்கு வீட்டில் காத்திருந்த நேரம். இலவச கோட்டாவில் சீட் வாங்கும் அளவுக்கு அப்போது மார்க் வந்து கிழிக்கப்போவதில்லை என்று எனக்கு தெரியும். நண்பர்கள் அனைவரும் இஞ்சினியரிங் சீட்டுக்களை விலை பேசிக்கொண்டு இருந்தனர். குடும்ப பொருளாதார சூழ்நிலை காரணமாக எனக்கு அப்போது அதுவும் சாத்தியப்படவில்லை. ஆனால் இருந்தும் வீட்டில் என்னை பெரிதும் நம்பிக்கொண்டு இருந்தனர். ஒரு பக்கம் பள்ளி வாழ்க்கை முடிவுற்று தனிமைபடுத்தபட்ட ஒரு உணர்வு. இன்னொரு பக்கம் அடுத்து என்ன என்ற ஒரு கேள்வி, பதட்டம், பயம். வீட்டிலே தனியாக முடங்கிப்போயிருந்தேன்.

இந்த நேரத்தில் தான் துள்ளுவதோ இளமை திரைப்படம் வெளியானது.  பல மாதங்களுக்கு முன்பே, பள்ளி நாட்களிலேயே அதன் பாடல்களை கேட்டு ரசித்து இருக்கிறேன். அந்த திரைப்படத்தின் ட்ரைலர் வேறு பன்னிரெண்டாம் வகுப்பு பள்ளி மாணவர்களுடைய வாழ்க்கையை சித்தரிப்பது போலிருந்ததால் எனக்குள் கூடுதல் எதிர்பார்ப்பு வேறு. நான் மட்டும் தனியாக அந்த படத்திற்கு சென்றேன்.படம் முடிந்து வீட்டிற்கு வந்த பிறகும் ஏதோ புதிதாய் ஒரு உணர்வு எனக்குள்.

ஒரு வித உளவியல் ரீதியான ஒரு தாக்கத்தை அந்த திரைப்படம் எனக்குள் ஏற்படுத்தி இருந்ததை இன்னும் என்னால் உணர முடிகிறது.  ஒரு வேகம்? ஆறுதல்? தன்நம்பிக்கை? சுய பிரதிபலிப்பு?  பள்ளிபருவ நினைவுகள்? மகிழ்ச்சி? தவிப்பு? என்னவென்று சரியாக சொல்லத்தெரியவில்லை. ஆனால் முதன் முதலாய் ஒரு திரைப்படம் என்னை ஏதோ செய்து தொலைத்தது. அது மட்டும் எனக்கு நன்றாக புரிந்தது. இருந்தும் செல்வராகவனை அப்போது நான் அறிந்திருக்கவில்லை.

ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் வந்தது. இந்த உலகம் ஒரு இன்ஜினியரை இழப்பது அன்று உறுதியானது. நெய்வேலி ஜவஹர் அறிவியல் கல்லூரியில் என் தாய் மாமாவின் வீட்டில் இருந்தபடி சேர்ந்தேன். “இன்றிலிருந்து தினமும் நன்றாக படிக்க வேண்டும்” என்று நினைத்து நினைத்தே முதல் வருடம் முடிந்து போனது.   கல்லூரி இரண்டாம் வருடம், 2003 ஜூன் மாதம் என்று நினைக்கிறன். ஒரு நாள் டிவியில் “காதல் கொண்டேன்” திரைப்படத்தின் ட்ரைலர் பார்த்தேன். “From the makers for Thulluvatho Ilamai” என்று அது ஆரம்பித்தது. அதே தனுஷ். ஆனால் இப்போது என்னை போல் தனுசும் அதில் பள்ளி முடித்து கல்லூரி செல்கிறார்!

படம் வெளியான முதல்நாள், முதல் காட்சி. முதன்  முதலாய் கல்லூரி கட் அடித்துவிட்டு நண்பர்களுடன் படத்திற்கு சென்றேன். அனைவரும் “துள்ளுவதோ இளமை”யால் வந்த கூட்டம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எதிர்பார்ப்பு. படம் ஆரம்பம் ஆகி சில நோடிகளிலேயே தெரிந்து விட்டது இது வேறு ஒரு மாதிரியான ஒரு படம் என்று. இடைவேளையின் போது அனைவரும் முற்றிலும் அதை உணர்ந்து இருந்தோம். கிளைமாக்ஸில் தனுஷ் நடனமாடிக்கொண்டே சண்டை போடும்போது எழுந்து நின்று ஆர்ப்பரித்த கூட்டம், தனுஷ் மலையிலிருந்து கீழே விழுந்து, “A Film By Selvaraghavan” என்று முடியும் போது அப்படியே அமைதியாக உறைந்து போனது..

வீட்டிக்கு வந்தும் கூட எனக்குள் மிகபெரிய தாக்கத்தை அந்த திரைப்படம் ஏற்படுத்தி இருந்தது. என் சிந்தனை முழவதும் ஒவ்வொரு காட்சியும், வசனமும், பின்னணி இசையும், பாடல் வரிகளும் ஆக்ரமித்து இருந்தது.  பின்னர் பல நாட்கள், வாரங்கள், மாதங்கள்  ஆகியும் அதிலிருந்து வெளிவர முடியவில்லை. படத்தின் முதல் காட்சியில் ஆரம்பித்து கடைசி காட்சி வரை பின்னணி இசையுடன் என்னால் என் மனதில் ஓட்டிபார்க்க முடிந்தது என்றால் உங்களால் நம்ப முடியுமா? ஆனால் அது உண்மை. படம் பார்த்துவிட்டு தியேட்டரை விட்டு வெளிய வந்ததும் எனக்குள் எழுந்த கேள்வி இது தான். எப்படி இது போல் ஒரு கதையை, கதாபாத்திரத்தை ஒருவரால் கற்பனை பண்ண முடிந்தது? எப்படி இது போல் உணர்வுகளை ஒருவர் திரைப்படமாக பதிவு செய்ய முடிந்தது? அதற்கான பதிலும் ஒரு கேள்விதான்.  யார் இந்த செல்வராகவன்?

தேடித் தேடி அலைந்தேன். முதன் முதலாய் ஒரு நபரின் உருவம் தேடி அலைகிறேன். என்னை பிரமிக்க வைத்த அந்த மனிதர் எப்படி இருப்பார் என ஆர்வம். இப்பொழுது இருப்பது போல், ஒரு படம் வெளிவந்தவுடனேயே அதன் இயக்குனரை ஏதேனும் ஒரு டிவி நிகழ்ச்சியில் பார்த்துவிடும் வாய்ப்பு அப்போது இல்லை. நூலகம் செல்லும் பழக்கம் இருந்ததால் தினமும் அனைத்து பத்திரிக்கைகளையும் புரட்டிப்பார்தேன். சில நாட்களின், ஒரு பத்திரிக்கையில், கருப்புக்கண்ணாடி அணிந்த ஒரு நபரின் புகைப்படம் வெளியானது. அவர்தான் செல்வராகவன். அதன் பிறகு நான் பார்த்த புகைப்படங்கள், தொலைக்காட்சி பேட்டி என அனைத்திலும் சன் கிளாஸ் அணித்து அவர் காணப்பட்டது எனக்கு வியப்பளித்தது. அது ஏனென்ற கேள்விக்கு பின்னர் விடை கிடைத்த போது மனம் கனத்தது. அவர் மேல் மேலும் மரியாதை கூடியது.

இந்த நேரத்தில் தான் எனக்கு என்னை அறியாமல் எழுதும் பழக்கமும் அதிகமானது. அப்போது எனக்கு இருந்த நல்ல பழக்கம் எழுதுவது மட்டும்தான். அதற்கு ஒரே காரணம் கவிஞர் நா.முத்துக்குமார்.  அந்த சமயத்தில் தான் நிறைய கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். இல்லை கிறுக்க ஆரம்பித்தேன் என்று சொல்லலாம். அதில் பலது குப்பைகள். சிலது நானே படித்து வியந்திருக்கிறேன். உனக்கும் எழுத வருகிறது என்று எனக்கு அவை உணர்த்தியது. எழுத விளையும் ஒவ்வொருவருக்கும் ஆரம்பத்தில் அது மிகவும் அவசியம். மேலும் நான் எழுதியதில் ஒன்று அப்போது ஒரு கவிதை தொகுப்பில் புத்தகமாக வெளியாகியது. அது எனக்கே என்மேல் முதன் முறை நம்பிக்கையை ஏற்படுத்திய தருணம்.

கல்லூரி மூன்றாம் வருடம். அதுதான் கடைசி வருடம். நண்பர் அனைவரின் கவனமும் படிப்பில் அதிகமானது. எனக்கோ கவனம்  கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து விலகிக்கொண்டு இருந்தது. அது எதை நோக்கி என்று அப்போது எனக்கு புரியவில்லை.  2004 அக்டோபர் மாதம் ஒரு நாள் செய்தித்தாள் பார்த்துக்கொண்டு இருந்தேன். 7ஜி ரெயின்போ காலனி திரைப்படம் அந்த வார வெள்ளிக்கிழமை வெளிவருவதாக விளம்பரம் வந்தது. அதன் வெளியீட்டிற்கு நாங்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த நேரம் அது. செல்வராகவனின் மேல் இப்போது இருந்த ஈர்ப்பு தான் அதற்கு காரணம். ரிலீஸ்ஆகும் முதல் நாள், முதல் காட்சி கல்லூரி கட் அடித்துவிட்டு நண்பர்களுடன் சென்று விடுவதாக முடிவு செய்தாயிற்று. ஆனால் அந்த முடிவு என்னை பின்னர் பாடாய் படுத்தப்போகிறது என்று நான் அப்போது சுத்தமாய் உணரவில்லை.

முதல் நாள் வரை நெய்வேலியில் எந்த தியேட்டரில் படம் ரிலீஸ் என்று தெரியவில்லை. செய்தித்தாளில் வந்த விளம்பரங்களிலும்  வெளியாகும் தியேட்டர் பெயரில்லை. பொறுக்க முடியாமல் படம் வெளியாகும் முதல் நாள் மாலை அருகிலிருக்கும் நிதி ரத்னா தியேட்டரில் கூட சென்று விசாரித்து விட்டேன். அவர்களுக்கும் அங்கு வெளியாகுமா என்று அதுவரை உறுதியாக தெரியவில்லை! அனைவருக்கும் ஒரே குழப்பம்.

எப்படியும் முதல் காட்சி பார்த்து விட வேண்டும். இரவு தூக்கம் வரவில்லை. ரிலீஸ் நாளன்று காலை வழக்கம் போல் வீட்டிலிருந்து சைக்கிளில் கல்லூரி புறப்பட்டேன். அப்போது சைக்கிள் தான் என் வாகனம். எப்போதாவது என் மாமாவின் யமாஹா 135 சிசி. கல்லூரி போகும் வழியில் தான் நெய்வேலி நிதி ரத்னா தியேட்டர் இருந்தது. அங்கு எப்படியும் படம் ரிலீஸ் ஆகும் என்ற நம்பிக்கையுடன் மீண்டும் போனேன். ஆனால் பழைய படமே அன்று தொடர்ந்து ஓடிக்கொண்டு இருந்தது. மிகவும் எதிர்பார்த்த ஒரு படத்தை முதல் காட்சி பார்க்க முடியவில்லை என்றால் அதை விட அந்த வயதில் வேறு என்ன கொடுமை இருக்க முடியும்?

சோகத்தில் உச்சத்தில் சைக்கிளை கல்லூரி நோக்கி மிதித்தேன். கல்லூரி வாசலில் நண்பர்கள் இருவர் பைக்கில் எனக்காக காத்திருந்தனர்.

“மச்சி, ரெயின்போ காலனி போகலையா? இன்னிக்கி ரிலீஸ் போல? உன் பேவரைட் டைரக்டர் செல்வராகவன் படம்!” என்றான் ஒருவன்.

“ஓடி போயிடு. நானே கடுப்புல இருக்கறேன். கிளாசுக்கு வேற டைம் ஆயிடிடுச்சு” என்று கூறிவிட்டு கல்லூரிக்குள் நுழைய முயன்றேன்.

“பண்ருட்டி தியேட்டரில் படம் ரிலீஸ் ஆகுதாம். நம்ம தினகரன் காலைல போன் பண்ணி சொன்னான். எப்புடியும் இந்த பைக்கில் போனால் முக்கால் மணி நேரத்தில் போயிடலாம். இப்போ போனால் படம் ஆரம்பம் ஆவதற்கும் சரியாக இருக்கும். நாங்க ரெண்டு பேரும் போறோம்”

காதில் தேன் பாய்ந்தது போல் இருந்தது அதைக்கேட்டதும்.  என்ன ஒரு நம்பிக்கையான வார்த்தைகள் அவை.. திரும்பி பார்த்தால் இருவரும் கடவுள் போல் காட்சி அளித்தனர். “அட பாவிகளா… முன்னாடியே சொல்ல வேண்டியது தானே? ஒரு அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணு சைக்கிளை உள்ளே ஸ்டாண்டில் போட்டுட்டு, நோட்டு புத்தகத்தை வகுப்பில் வைத்து விட்டு வறேன்”

“இல்ல மச்சி… நேரம் பத்தாது. அது மட்டும் இல்லாமல் ஒரு பைக் தான் இருக்கு. அப்பா ட்ரிப்பில்ஸ் போகக்கூடாதுன்னு கண்டிப்பா சொல்லி இருக்காரு.  அதனால நீ….”

“ர்.ர்.ர்…. அடீங்க……………”

பைக் இப்போது மூன்று பேரையும் ஏற்றிக்கொண்டு பண்ருட்டியை நோக்கி வேகமெடுத்தது. சரியாக காலை பத்துமணி இருக்கும் அந்த தியேட்டரை நாங்கள் அடைந்தபோது. ரெயின்போ காலனி போஸ்டர் தியேட்டர் முகப்பில் ஒட்டி இருப்பதை பார்த்ததும் தான் நிம்மதி வந்தது. ஆனால் பெயரளவிற்கு கூட கூட்டம் எங்கும் தென்படவில்லை என்பது சற்று உறுத்தல்.

“மச்சி, கூட்டமே இல்ல படம் போட்டுட்டான் போல…” என அவசரம் அவசரமாக டிக்கட் கவுண்டரை நோக்கி பைக்கில் இருந்து இறங்கி ஓடினான் நண்பன். ஆனால் சில நொடிகளில் சுவரில் வீசிய பந்து போல போன வேகத்தில் திரும்ப வந்தான்.

“படப்பெட்டி வரலையாம்! ஏற்கனவே ஓடிட்டு இருக்கும் “கிரி” படம் தான் இப்ப போடுவாங்கலாம்”.

“அடக்கடவுளே! இப்ப என்னாடா பண்றது? மதியமாவது வருமா?” என்று கேட்ட என் குரலில் ஸ்ருதி சுத்தமாய் இல்லை.

“இங்க பொட்டி வரலைன்னா என்னா? கவலைப்படாத மச்சி. இங்க இருந்து ஒன்னரை மணி நேரம் தான் கடலூர். அங்க கிருஷ்ணா தியேட்டர்ல போய் எப்படியும் மதிய ஷோ பாத்துடலாம். இங்க மத்தியானம் பொட்டி வந்தால் என்ன? வரலைனா என்ன?” என்று யோசிக்காமல் ஐடியா சொன்னான் இன்னொரு நண்பன்.  பட் அந்த நம்பிக்கை எங்களுக்கு புடிச்சு இருந்திச்சு.

எப்படியும் மேட்னி ஷோ என்பதால் கொஞ்சம் மெதுவாகவே பைக் கடலூரை நோக்கி சென்றது. டிக்கெட் எடுக்கும் போது மதியம் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் இப்பவே நாம சாப்பிட்டுட்டு போனால் தெம்பாக அடிச்சு புடுச்சி டிக்கெட் வாங்கலாம் என்ற கூறிய நண்பனின் யோசனை போகும் வழியில் நிறைவேறியது.

ஒருவழியாக கடலூர் கிருஷ்ணா தியேட்டர் போய் சேர்ந்தோம். மதிய காட்சிக்கு நேரம் அதிகம் இருந்தது. ஆனால் கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா அங்கு ரெண்டு கொடுமை ஆடிட்டு இருந்துச்சுனு சொல்லுவாங்களே, அது போல பண்ருட்டியில் படப்போட்டி வரலன்னு கடலூர் போனால் அங்கேயும் அதே கதை தான். பெட்டி வரலை என்பதால் அங்கே காலை காட்சியில் ஏற்கனவே வேறு படம் ஓடிக்கொண்டு இருந்தது. மதியம் தான் பெட்டி வரும் என்று டிக்கெட் கவுண்டரில் கூறினார்கள். “அப்போ இங்கயும் இன்னும் வரலையா?” திருவிழாவில் காணமல் போன கோழி போல் திருத்திருவென மூவரும் செய்வதறியாது விழித்தோம்.

அப்படியே அங்கு மதியம் படப்பெட்டி வந்தாலும் அதை பார்த்துவிட்டு கடலூரில் இருந்து மீண்டும் பண்ருட்டி வழியாக நெய்வேலி செல்வதற்கு எப்படியும் ரெண்டரை மணி நேரம் ஆகும். மதியம் இரண்டு மணிக்கு முடியும் கல்லூரியில் இருந்து இரவு ஒன்பது மணிக்கு வீட்டிற்கு சென்றால்? உண்மை மெல்ல மெல்ல உரைக்க, மூவருக்கும் வேர்த்துக் கொட்டியது. மூன்று பேர் கொண்ட அந்த குழுவில் சுமார் பத்து நிமிடம் யோசித்து எடுத்த முடிவு இது தான். மதியக்காட்சி முடிந்து மாலை வீட்டிற்கு செல்ல பண்ருட்டி தான் பக்கம் என்பதால், மீண்டும் பண்ருட்டி செல்ல தயாரானோம். பட் மறுபடியும் அந்த நம்பிக்கை எங்களுக்கு பிடித்து இருந்தது.

நேரம் வேறு இப்போது மிகக்குறைவு. திரும்பி போகிற வழியில் கடலூரில் ஒரு ட்ராபிக் போலீசிடம் மாட்டி, மூன்று பேர் சென்றதற்காக  தண்டம் அழுது விட்டு, சரியாக மதிய ஷோவிற்கு அந்த பண்ருட்டி தியேட்டருக்கு சென்றடைந்தோம். ஆனால் எங்களை விதி துரத்தி துரத்தி அடித்தது அங்கு போன போது தான் தெரிந்தது. மதியம் கூட அங்கு படப்பெட்டி வரவில்லை.

செல்வராகவன் மேல் இப்போது கோபம் கோபமாய் வந்தது. “இங்க மூணு பேரும் படம் பார்ப்பதற்கு ஊரு ஊராய் அலைந்துக்கொண்டு இருக்கிறோம் இப்படி பொட்டிய குடுக்காம இருக்காரே. இந்த ஏரியாவுக்கு ஒரே ஒரு பெட்டிய கொடுத்து இருந்தால் என்ன?” என எங்களுக்குள்ளே திட்டிக் கொண்டோம். “இல்ல டா,  இது ப்ரோடியூசர் பண்ற வேலையாய் இருக்கும். தேவையான அளவு கடைசி நாள் வரை பிரிண்ட் போடலாயோ என்னவோ” என்று எங்களுக்குள் யாரோ சொல்ல கோபம் இப்போது தயாரிப்பாளர் மேல் போனது.

“அண்ணே, நெய்வேலியில் இருந்து காலேஜ் கட் அடிச்சிட்டு வந்து இருக்கோம்னே. கடலூர் கூட போய் பார்த்துட்டோம். பொட்டி வரலை. எப்போ தான் வரும்னு சொல்லுங்கண்ணே” டிக்கெட் கவுண்டரில் மூன்று பெரும் அப்பாவியாய் கேட்கிறோம்.

“முதலாளி மெட்ராஸ்ல தான் தம்பி இருக்கார். பொட்டிக்கு தான் வெயிட்டிங். இப்போ தான் பேசினோம். இன்னம் கொஞ்ச நேரத்துல கிடைச்சிடுமாம். எப்படியும் ஈவ்னிங் ஷோக்கு வந்துடும்.”

“காலைல இருந்து சுத்தியாச்சு. எப்படியும் வீட்டுக்கு போனால் கண்டிப்பாக திட்டு உண்டு. அதை ஏன் ஈவ்னிங் ஷோ படம் பார்த்து விட்டு நைட்டு போய் மொத்தமாக திட்டு வாங்கிக்க கூடாது?” என்றேன் நான்.

ஆனால் இப்போது அந்த நம்பிக்கை கொஞ்சம் கம்மியாகத்தான் எல்லாருக்கும் பிடித்திருந்தது. இருந்தும் மாலை வரை என்ன செய்ய? அப்படியே கவுண்டரில் டிக்கெட் எடுத்து விட்டு மதிய காட்சி “கிரி” படத்திற்கு உட்கார்ந்தோம். படம் ஆரம்பம் ஆனது.

“இன்னக்கி ரெயின்போ காலனி பார்க்காமல் வீட்டுக்கு போகக்கூடாது மாப்ள”

“ஆமாம் மச்சி. கரெக்ட்”

எங்களுக்குள்ளே பேசிக்கொண்டோம். அதான் நம்பிக்கை. படத்தின் க்ளைமாக்ஸ் ஓடிய நேரம். எப்படியும் பெட்டி இந்நேரம் வந்து இருக்கும். விஷயம் அதுக்குள்ள தெரிஞ்சி வெளியே கூட்டம் கூடி போச்சுனா அப்பறம் டிக்கெட் கிடைக்காது என்று மிகச்சிறந்த வகையில் புத்தி அப்போது வேலை செய்தது. க்ளைமாக்ஸ் முடியும் முன்னர் அவசர அவசரமாக வெளிய வந்தோம். வெளியே கூட்டம் இல்லை. நல்லவேளை அட் தீ எண்ட் ஆப் த டே வீ ஆர் லக்கி பெல்லோஸ் என்று ஆனந்தமாகி கவுண்டரில் போய் டிக்கெட் கேட்டோம்.

“தம்பி… அது…”

“என்னாணே இழுக்கறீங்க”

“பெட்டி லேட்டா தான் கிடைச்சுது. முதலாளி இப்போ தான் கார்ல எடுத்துட்டு மெட்ராஸ்ல இருந்து வந்துட்டி இருக்காரு. இன்னும் ஒரு மணி நேரத்துல வந்துடுவாரு. நைட் ஷோ தான் படம் ஓடும். இப்போ மறுபடியும் ஈவ்னிங் ஷோ “கிரி” தான் போட சொல்லி போனின் பேசினாரு.”

எங்களுக்கு தூக்கி வாரி போட்டது. கோபம் கோபமாய் வந்தது. இருந்தும் உடனே வீட்டிற்கு திரும்ப மனசு வரவில்லை. ஒரு வேலை நாம போன கொஞ்ச நேரத்துல பெட்டி வந்துடுச்சினா?  ஈவ்னிங் ஷோ ஆரம்பிக்கும் வரை வெளியே காத்திருந்தோம். அவர்கள் சொன்னது போல் கிரி தான் மறுபடியும் ஓடியது. நண்பன் விரக்தியில் பைக்கை எடுத்து வந்து ஸ்டார்ட் செய்து எங்களை ஏறச்சொன்னான்.

நான் இத்தனை நடந்தும் கொஞ்சமும் அசரவில்லை. “டேய் உனக்கு தான் ரீமா சென் ரொம்ப பிடிக்குமே. அது மட்டும் இல்லாமல் வடிவேலு காமெடி வேற சூப்பரா இருக்குடா.” என்றேன்.

“அதுக்கு!!!!????” இருவரும் கோரசாய்.

“இன்னொரு வாட்டி ஈவினிங் ஷோ கிரி போலாம். எப்படியும் நைட் ஷோவிற்கு பெட்டி வந்துடும்னு சொல்றாங்களே. அதனால….”

பட் இந்த முறை அந்த நம்பிக்கை யாருக்கும் சுத்தமாய் பிடிக்கவில்லை. இருவருமே என்னை முறைத்தனர்.

தெரு முனையில் நான் இறங்கி மெல்ல வீட்டிற்குள் நுழைந்தேன். ஏற்கனவே வானம் இருட்டி வெகு நேரம் ஆகி இருந்தது. அனைவரும் வீட்டில் அப்போது இரவு உணவு சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர்.

“காலேஜ் முடிஞ்சி மதியம் சாப்பாட்டுக்கு கூட வரலை. சார் எங்க போனீங்க?” என்று ஆரம்பத்தில் பொறுமையுடன் கேட்டார் மாமா.

“ம்ம்… அது வந்து… அது.. ஸ்பெஷல் கிளாஸ் இருந்துச்சு…”

“சரி, நோட்டு புத்தகம் எங்க?. ஜாலியா வெறும் கையை வீசிட்டு வந்து இருக்க?”

“….!”

“அது இருக்கட்டும்……. காலைல காலேஜுக்கு எடுத்துட்டு போன சைக்கிள் எங்கடா?”

“….!!!!!”

கோபத்தில் வீடு பிரளயம் ஆனது. இரண்டு நாட்கள் சாப்பிடவில்லை. வீட்டிலே சனி, ஞாயிறு இரு நாளும் யாரிடமும் பேசாமல் முடங்கிக்கிடந்தேன். அப்போது கூட எனக்கு தோன்றியது ஒன்றே ஒன்று தான். இத்தனை நடந்ததுக்கு காரணம் ரெயின்போ காலணி. அட்லீஸ்ட் இரவு காட்சி பார்த்துட்டு வந்து இதெல்லாம் அனுபவிச்சி இருக்கலாம்.

ஞாயிறு மாலை வீட்டின் அமைதியை குலைத்து லாண்ட் லைன் போன் கத்தியது.

“உனக்கு தான் போன்” என்று உள்ளிருந்து குரல்.

போனை எடுத்தேன்

“என்னா மச்சி ரெண்டு நாளா ஆளை காணோம்? வீட்டில் அன்னைக்கு லேட்டா போனதால் பிரச்சனையா?” என்றான் நண்பன்.

“சொல்லு”

“இன்னைக்கு இவனிங் ஷோவிற்கு பைக்கில் பண்ருட்டி போறேன் மச்சி. 7ஜி ரெயின்போ காலனி சூப்பரா இருக்காம். வரியா”

“…… சொல்லு”

“சரி புரியுது. நான் சொல்லுறதை மட்டும் கவனி.. சரியாய் அஞ்சு மணிக்கு தெரு முனையில் போன் பூத் அருகே நிற்பேன். உன் லேன்ட் லைனிற்கு இரண்டு ரிங் வரும். பத்து நிமிஷம் வரைக்கும் வெயிட் பண்றேன். முடிஞ்சா வா.

“…..”

“மச்சி மறுபடியும் சொல்றேன்.. உன் பேவரைட் செல்வராகவன் படம்.. அதனால”

“டேய்…”.

போன் கட் ஆனது.

சரியாக ஐந்து மணி. சொன்ன மாதிரி  லேன்ட் லைன் போனிற்கு இரண்டு ரிங் வந்து கட் ஆனது. அதுவரை சமத்தாக வீட்டில் உட்கார்ந்து இருந்தேன். ஆனால் இப்போது முடியவில்லை. அவசரம் அவசரமாக கிளம்பி வீட்டை விட்டு வெளியே செல்ல ஆயத்தம் ஆனேன்.

“எங்கடா போற?” என்றார் மாமா

“வெளியே போறேன்”

அதற்க்கு அவரிடம் பதில் வருவதற்குள் விருட்டென்று அந்த இடத்தை காலி செய்தேன். தெரு முனையில் வந்து பார்த்தால் என் நண்பனையும் காணோம் அவன் பைக்கையும் காணோம். நான் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. உண்மையிலேயே வந்தானா? இல்லை வெயிட் பண்ணி பார்த்துட்டு போய்ட்டானா? இப்போ திரும்ப வீட்டுக்கு போனால் என்ன நடக்கும்? என்று அனைத்தையும் யோசித்தவாறு சுற்றும் முற்றும் பார்த்தேன்.

சிறிது தூரத்தில் ஒரு பைக் சென்றுக்கொண்டு இருந்தது. அவன் தான் ஒட்டிசென்றான். கடவுள் இருக்கான் குமாரு. சந்தோசத்தில் சத்தமாய் அவன் பெயர் சொல்லி கத்தினேன். திரும்ப வந்து என்னை ஏற்றிக்கொண்டான். நான் 7ஜி ரெயின்போ காலனி படம் பார்த்த கதை இது தான். இதை போல் யாருக்கும் படம் பார்த்த அனுபவம் நிச்சயம் இருக்காது. அதற்கு ஒரே காரணம் செல்வராகவன்.

அதன் பிறகு எட்டு முறை தியேட்டரிலேயே அந்த படத்தை பார்த்து இருப்பேன். என்ன ஒரு கவித்துவமான முடிவு. காதல் கொண்டேன் படத்தை போல் இந்த படமும் முதல் காட்சி ஆரம்பித்து கடைசி காட்சி வரை மனதில் பதிந்து இருந்தது.  துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன் மற்றும் ரெயின்போ காலனி. என் வாழ்நாளில் மறக்க முடியா படங்கள் அவை. என் சினிமா ரசனையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்று இருந்தது.

இப்போது கல்லூரி முடிய இன்னும் நான்கு, ஐந்து மாதங்களே இருந்தது.  படிப்பில் ஆர்வம் சுத்தமாய் குறைந்து விட்டது. எப்படியும் அரியரோடு தான் கல்லூரி படிப்பு முடியும் என்று தெரியும். மேற்படிப்பு என்பதை அப்போதைக்கு நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. நண்பர்கள் அனைவரும் அடுத்து என்ன என்று யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள். உடன் சுத்திக்கொண்டு இருந்த பல பேர் திடீர் ஞானோதயம் வந்து விடிய விடிய குரூப் செய்துக்கொண்டு இருந்தனர். அது தானே நியாயம்!

தீடீரென தனிமை படுத்தப்பட்ட உணர்வு. கல்லூரி முடிந்ததும் சேலத்தில் உள்ள என் வீட்டிற்கு சென்று விடுவேன். அதன் பிறகு? எனக்கும் கொஞ்சம் கொஞ்சமாய் ஒரு பயம் தொற்ற ஆரம்பித்தது. படித்து விட்டு ஏதாவது வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றுவேன் என்று அம்மா நம்பிக்கொண்டு இருக்கிறார். ஆனால் எனக்கு வேலைக்கு செல்லும் எந்த தகுதியும் இல்லை. எனக்கு யார் வேலை கொடுப்பார்கள். அடுத்து என்ன செய்வது? இனிமேலும் வீட்டுக்கு பாரமாய் இருப்பது அபத்தம்.

அது எப்படி ஆரம்பம் ஆனது என்று தெரியவில்லை. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக என்னை அறியாமலேயே முடிவெடுத்து விட்டேன். என்னுடைய இலக்கு திரைப்பட இயக்குனர் ஆவது என்பது தான். எனக்கும் எழுத வரும் என்று நம்பினேன். அதை தவிர எனக்கென்று வேறு எதுவும் அப்போது தெரியாது. ஒரு நாள் முதன் முறையாக நண்பன் ஒருவனிடம் இதை சொன்னேன். கேட்டவுடன் விழுந்து விழுந்து சிரித்தான்.  எனக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்றான். எனக்கு கோபமாய் வந்தது.

ஆனால் நான் அடுத்து சினிமா தான் என் உலகம் என்று முழுதாய் நம்பினேன். என்னை அதற்கு தயார் படுத்தித்கொள்வதை தவிர வேறு வழி இல்லை. ஒரு கட்டத்தில் இவன் சொன்னால் திருந்த மாட்டன் என்று நிறைய பேர் ஒதுங்கிக்கொண்டு படிப்பில் கவனம் செலுத்தினர். அவர்களை சொல்லி தப்பு இல்லை.  பிரச்சனை என்னவென்றால்.அவர்களுக்கு படிக்க வரும் என்று நம்பினார்கள், அதை செய்தார்கள்.  ஆனால் எனக்கு எழுத மட்டுமே வரும் என நம்பினேன்.

என்னை போல் சினிமா ஆசையுடன் இரண்டு நண்பர்கள் அப்போது இருந்தனர். ஒருவனுக்கு நடிகராக வேண்டும் ஆசை. இன்னொருவனுக்கு கிராபிக்ஸ் வேலை சேர. அவர்களுக்கும் கல்லூரி முடிந்ததும் சென்னை செல்வது தான் திட்டம். பார்ட்னர்ஸ் ஆப் கிரைம் என்பது போல் நாங்கள் மூவரும் ஒன்று சேரவேண்டி இருந்தது.  பகலில் கல்லூரி. மாலை முதல் இரவு வரை ஒரு மைதானத்தில் அமர்த்து அவரவர் கனவை விவாதிப்போம். என்னுடைய கனவுகளும் அங்கு தான் பிறக்க ஆரம்பித்தது. சினிமா பற்றி நிறைய பேசுவோம். கதை விவாதம் செய்வோம்.

அந்த சூழ்நிலையில் நிறைய இயக்குனர்களின் நம்பர்களை பிடித்து போனில் பேச முயற்சி செய்தேன். உதவி இயக்குனர் வாய்ப்பு தேடும் படலம் தொடங்கியது. அநேகம் பேர் வாய்ப்பு கேட்டால் உடனே போனை வைத்து விடுவார்கள். கொஞ்சம் பேர் இப்போது வாய்ப்பு இல்லை பின்னர் தொடர்பு கொள் என்பார்கள். சிலரோ இந்த நம்பர் உனக்கு எப்படி கிடைத்தது என்று திட்ட ஆரம்பித்து விடுவார்கள். எங்கேயும் எனக்கு கதவு திறக்கப்படவில்லை. போனில் வாய்ப்பு தேடுவதை போல் முட்டாள் தணம் வேறு இல்லை என்று அப்போது அந்த வயதில் எனக்கு புரியவில்லை.

ஆனால் ஒரு விசயத்தில் தெளிவாக இருந்தேன். பைத்தியக்காரத்தனமான யோசனை அது. கல்லூரி முடிந்த பிறகு சென்னை சென்ற பிறகு யாரிடமாவது அசிஸ்டன்ட் டைரக்டராக வேலை தேடி அலைவதில் எனக்கு உடன்பாடு இல்லை. கல்லூரி முடிய இரண்டு மூன்று மாதங்கள் இருந்த நிலையில் இப்போதே யாரிடமாவது அசிஸ்டன்ட் டைரக்டர் சான்ஸ் பெற்று விட வேண்டும். கல்லூரி முடிந்தவுடனேயே பாதுகாப்பாக அவரிடம் சேர்ந்து விட வேண்டும். அதற்க்கு காரணமும் இருந்தது. வீட்டிற்கு சென்றவுடம் சினிமா செல்கிறேன் என்றால் நிச்சயம் அனுமதி கிடைக்காது. இந்த டைரக்டரிடம் உதவியாளராக சேருகிறேன் என்று கூறினால் அவர்களுக்கு ஒரு நம்பிக்கை வரும் என்று நினைத்தேன். அப்போதைக்கு அந்த நம்பிக்கையை ஏற்படுத்துவது எனக்கு மிகவும் அவசியமாக பட்டது.

அப்போது செல்வராகவன் ஆனந்த விகடனில் எழுதிய “கனா காணும் காலங்கள்” தொடர் எனக்கு மிகப்பெரிய எனர்ஜி டானிக். என்னுடய அப்போதைய கனவிற்கு அது தான் உயிர் பாய்ச்சியது. அதை படித்த பின்னர் அவர் மேல் அளப்பரியா மரியாதை கூடியது. எப்படியும் செல்வராகவனிடம் அசிஸ்டன்ட் டைரக்டராக சேர்ந்து விட வேண்டும் என துடித்தேன். செல்வராகவனின் நெம்பரை தேடி அலைந்தேன். தேடினால் கிடைக்காதது என்ன இருக்கிறது. பல நாட்களில் தேடல் களுக்கு பிறகு, பல சிரமங்களுக்கு பிறகு, இணையத்தில் போன் நம்பரும், விலாசமும் கிடைத்து. ஆனால் அது டிநகரில் உள்ள அவரது அலுவலகத்தினுடயது.

பரவாயில்லை என்று அந்த எண்ணிற்கு  முயற்சி செய்தேன். பல முறை முயற்சி செய்தும் செல்வராகவனிடம் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு முறையும் அவரது அலுவலக ஊழியரே போனை எடுப்பார். உதவி இயக்குனாரக வாய்ப்பு தேடுகிறேன் என்றதும் சரியான பதில் இருக்காது. உடைந்து போனேன். இருந்தும் முயற்சியை கை விடவில்லை.  பல முறை போன் செய்துக்கொண்டு இருந்ததால் என் பெயர் அவரது அலுவலக ஊழியருக்கு தெரிந்திருந்தது. கடைசி முயற்சியாய் ஒரு சின்ன வேண்டுகோள் அவரிடம் வைத்தேன். ஒரு லட்டர் ஒன்னு அனுப்புகிறேன் அதை எப்படியாவது செல்வராகவனிடம் டேபிளில் வைக்க முடியுமா வேண்டுமா என்றேன். அவரும் சரி என்றார். புதிதாய் ஒரு நம்பிக்கை முளைத்தது.

அன்று இரவு உட்கார்ந்து விடிய விடிய கடிதம் எழுதினேன். என் உணர்வுகள், கனவுகள் அனைத்தையும் எழுத்துக்களாக்கினேன். விடிந்த பிறகு பார்த்தால் சுமார் முப்பத்தைந்து பக்கங்கள் எழுதி முடித்து இருந்தேன். இதை செல்வராகவன் முழுதாய் படித்து பார்த்தார் என்றால் நிச்சயம் என்னை உதவி இயக்குனராக சேர்த்துக்கொள்வார் என நம்பினேன்.  கொரியர் அனுப்பி விட்டு அடுத்த நாள் மீண்டும் கால் செய்து கேட்டேன்.

“தம்பி லட்டர் வந்துச்சு” என்றார் ஆபிஸ் ஊழியர்.

மிகவும் சந்தோசமானேன் “செல்வராகவன் படித்தாரா?”

என் கடிதத்தை அந்த ஊழியர் பிரித்து படித்து இருப்பார் என நினைக்கிறேன். அவர் குரலில் என் மேல் பரிதாபம் தெரிந்தது.

“தம்பி, எதுக்கு இவ்வளவு பெரிய கடிதம் எழுதி அனுப்புன. அவர் ரொம்ப பிசி. அவர் படிப்பாரா என்று தெரியவில்லை  இப்படி போன் செய்து, லட்டர் எழுதி உன் நேரத்தை வீணாக்காதே” என அட்வைஸ் செய்தார்.

எனக்கு தூக்கி வாரி போட்டது. எனக்கு இப்போது இருந்த ஒரே நம்பிக்கை அந்த கடிதம் தான். பெரிதாய் நம்பிக்கொண்டு இருந்தேன்.

“அண்ணே எப்படியாவது அவரை படிக்க வச்சிடுங்க அண்ணே” என கெஞ்சினேன். போனை உடனே வைத்து விட்டார்.

வாழ்க்கையே இருண்டது போல் ஆனது. எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. மிகவும் மனம் உடைத்து போனேன். எனக்கு சினிமாவில் வேறு யாரையும் தெரியாது. யாரிடம் போய் இனிமேல் வாய்ப்பு கேட்பது. இருந்த ஒரு கதவும் இப்போது மூடிவிட்டது. இனி செல்வராகவனிடம் பேச முடியும் என்ற நம்பிக்கை கூட சுத்தமாய் போய் விட்டது.

கடைசி வருட தேர்வு ஆரம்பம் ஆனது. இயக்குனர் கனவால் இப்போது படிப்பில் சுத்தமாய் நாட்டம் இல்லை. படிப்பு முடிந்து சேலத்திலுள்ள வீட்டிற்கு சென்றதும் எப்படி என் கனவை வீட்டில் புரிய வைப்பது என தவித்தேன். வேறு வழியில்லை எனக்கு அப்போது தெரிந்ததெல்லாம் செல்வராகவன் ஆபிஸ் நம்பர் மட்டுமே.

மீண்டும் ஒரு நாள் கால் செய்தேன். இந்த முறை வேறொருவர் போன் எடுத்தார். என்னுடைய கனவையும், நடந்தவைகளையும் சொன்னேன்.

“சரி என் மொபைல் நம்பரை குறித்துக்கொண்டு பிறகு கால் செய்” என்றார். அவர் குரலில் அவசரம் தெரிந்தது.

“ நீங்கள் யார் என்றேன்.”

அவர் பெயரை கூறிவிட்டு “நான் செல்வராகவனின் அசோசியேட். இப்போது “புதுபேட்டை” டிஸ்கசன் நடந்துட்டு இருக்கு. அப்புறம் கால் செய்” என்றார்.

என்னுடைய மகிழ்ச்சியை எழுத்துகளால் விவரிக்க முடியாது. என் முயற்சியின் முதல் கட்ட வெற்றி அது.  நான் இதை சுத்தமாக எதிர்பார்க்கவில்லை. இப்போது மீண்டும் என் நம்பிக்கை மெல்ல உயிர் பெற்றது.

ஒரு வாரம் கழித்து அவர் மொபைல் எண்ணிற்கு கால் செய்தேன். இன்னும் ஒரு மாதத்தில் கல்லூரி முடிந்து விடும், அதன் பிறகு தான் சென்னை வர முடியும், எனக்கு யாரையும் தெரியாது என கூறினேன். அவரும் எனக்கு உதவுவதாக வாக்களித்தார். சென்னை வருவதற்கு முன்னர் நான் கற்றுக்கொள்ள வேண்டிய சிலவற்றை அறிவுறித்தினார். நீண்ட முயற்சிக்கு பின் ஒரு நல்வழி கிடைத்தது.

கல்லூரி முடிந்து நெய்வேலியில் இருந்து காலி செய்துவிட்டு சேலத்தில் என் வீட்டிற்கு வந்தேன். ஒரு நல்ல நாளில், சிறிது தயக்கத்துடன் என் கனவை பெற்றோரிடம் சொன்னேன். சினிமா என்றதும் அப்பாவுக்கும் கோபம். அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.  பெரிய சண்டை. கண்ணீர் பொத்துக்கொண்டு வந்தது. கோபத்தில் நான் எழுதிக்கொண்டு இருந்த என்னுடைய, கதை, திரைக்கதை டைரியை கிழித்து எறிந்தேன்.

ஓரிரு நாட்கள் ஆகியும் என்னால் சமாதானம் சொல்லிக்கொள்ள முடியவில்லை. ஒரு நாள் வீட்டை விட்டு யாருக்கும் தெரியாமல் சென்னைக்கு சென்று விடுவதாக திட்டம். விஷயம் தெரிந்து அம்மா கதறி அழுதார். எந்த வேலையும் இல்லாமல், சம்பாத்தியத்திற்கு உறுதி இல்லாமல் சென்னைக்கு சென்றால் அதை விட பெரிய நரகம் வேறெதும் இல்லை என்றார் என் கையை பிடித்துகொண்டு. எனக்கு பண உதவி செய்திடும் சூழ்நிலையிலும் குடும்பம் அப்போது இல்லை.

இருந்தும் நான் அதை கேட்பதாய் இல்லை. “எனக்கு வயது இருக்கிறது. இப்போது எனக்கு  இருபது தான் ஆகிறது. நான் ரிஸ்க் எடுக்கிறேன். சினிமா தான் என் கனவு” என்றேன்.

எனக்கு சினிமாவில் யாரையும் தெரியாது என்று பயந்தார். இந்த கேள்வி வரும் என்று நான் கல்லூரி படிக்கும்போதே எதிர்பார்தேனே. செல்வராகவனின் அசோசியேட் பற்றி சொல்லி இவர் மூலமாக தான் நான் செல்வராகவனிடம் சேர போகிறேன் என்றேன்.

அம்மாவிற்கு இன்னமும் கவலை இருந்தது. அவரிடம் பேச வேண்டும் என்றார். அவருக்கு போன் செய்தேன். ஓரிரு நாளில் சென்னை வந்து விடுவேன், வந்ததும் உங்களை சந்திக்கிறேன் என்று சிறிது நேரம் பேசிவிட்டு பிறகு அம்மா உங்களிடம் பேச வேண்டும் என்கிறார்கள் என்றேன். இங்கு தான் என் வாழ்க்கையில் பெரிய திருப்பு முனை ஏற்பட்டது.

நான் சினிமா மீது பிடிவாதாமாய் இருக்கிற விஷயத்தையும், எங்கள் சூழ்நிலையை முழுவதுமாய் அவரிடம் சொன்னார். அப்போது அம்மாவின் குரல் உடைந்து இருண்டது. என் அம்மாவிடம் சிறிது நேரம் பேசிவிட்டு மீண்டும் என்னிடம் அவர் பேசினார். அவர் கூறிய ஒவ்வொரு வார்த்தைகளும் என்னால் இன்னும் மறக்க முடியவில்லை.

“நான் இஞ்சினியரிங் படித்துவிட்டு சினிமா ஆசையில் சென்னை வந்தேன். வரும் போது அம்மா என்னை அடித்தார்கள், திட்டினார்கள், எவ்வளவோ எடுத்து சொன்னார்கள்.  நான் கேட்கவில்லை.உன் அம்மாவிடம் பேசும் போது என் அம்மா ஞாபகம் வந்து விட்டது.   நானும் உன்னை போல் அப்போது சினிமா தான் என்று உறுதியாய் இருந்தேன். ஆனால் வந்தவுடன் தான் தெரிந்தது சினிமா நாம் எதிர்பார்ப்பது போலில்லை.

கஸ்தூரி ராஜாவிடம் ஆரம்பத்தில் வேலை செய்து விட்டு பிறகு செல்வராகவனிடம் துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், ரெயின்போ காலனி முடித்து இப்போது புதுபேட்டை படம் வேலை செய்துக்கொண்டு இருக்கிறேன். இந்த வருஷம் சொந்த படம் பண்ணிடலாம் என்ற நம்பிக்கையுடன் இதோட பத்து வருஷம் முடிஞ்சிடுச்சு. வீட்டிற்கு போக முடியல, முதல் சினிமாவும் இன்னும் பண்ண முடியவில்லை.

சினிமா பேக் கிரௌண்ட் இல்லாமல்இங்கு பிழைப்பது கஷ்டம். தினமும் ஆயிரக்கணக்கான பேர் சினிமா வாய்ப்பு தேடி சென்னை வராங்க. எவ்ளோ பெரிய டைரக்டர் ஆனாலும் ஒரு படம், ரெண்டு படம் ஓடலைனா காணாமல் போயிடுவாங்க. ஒன்னு உங்களுக்கு பினான்சியல் பேக் கிரௌண்ட் இருக்கணும், இல்லை சினிமா பேக் கிரௌண்ட் இருக்கணும். இது ரெண்டும் இல்லாமல் இங்க வந்தால் ரொம்ப கஷ்டம்.

நீ இங்கே வந்தால் உன் அம்மாவை அவர்களால் பார்த்துக்கொள்ள முடியும் என்று நினைத்தால் நீ வா. இல்லையென்றால் உன் சொந்தக்காலில் நிற்கும் தகுதியை வளர்த்துக்கொண்டு, சினிமா இல்லையென்றாலும் பிழைக்க முடியும் என்ற நம்பிக்கையையுடன் வா.  யோசிச்சு எப்போது வேண்டுமானாலும் கால் பண்ணு. செல்வராகவனிடம் சேர நான் உதவி பண்றேன். இன்னும் கொஞ்ச நாளில் நான் தனியா படம் பண்ணுவேன் அப்போ உன்னை சேர்த்துக்கொள்கிறேன். இல்லையென்றால் யாரிடமாவது சேர்த்து விடுகிறேன். ஆனால் அம்மாவை கஷ்டப்டுத்திவிட்டு சினிமாவிற்கு வராதே.” என்றார்

உண்மை நெஞ்சை கிழித்தது. யார் கூறியும் கேட்க்காத என் மனம் முதன் முறை அந்த வார்த்தைகள் கொஞ்சம் யோசித்தது. என் வாழ்க்கையில் மறக்க முடியாத நபரானார் அவர். இப்படி ஒரு அறிவுரை யார் சொல்லுவார்கள்.

முதலில் ஒரு வேலையை கற்றுக்கொள்ளலாம் பிறகு சினிமா பற்றி யோசிக்கலாம் என்ற அம்மாவின் அறிவுரையை இப்போது ஏற்றுக்கொண்டேன். ஆனால் எனக்கு யாரு வேலை தருவா? நான் ஒன்றும் இன்ஜினியர் இல்லை.  இன்னும் ரிசல்ட் கூட வரவில்லை. எனக்குத்தான் ஒண்ணுமே தெரியாதே!

ஆனால் அம்மாவிற்கு என மேல் நம்பிக்கை இருந்தது. தெரிந்தவர் ஒருவர் மூலமாக ஒரு வேலைக்கு ஆள் எடுப்பதாக சொன்னார். அது என்ன வேலை என்று கூட தெரியவில்லை. சேலத்தில் ஒரு பெரிய ஐ.டி கம்பனி. அடுத்த நாள் இன்டர்வியு. எனக்கு சுத்தமாய் நம்பிக்கை இல்லை. அம்மாவிற்காக போனேன். அதுவும் இந்த வேலை கிடைக்கவில்லையென்றால் நிச்சயம் சினிமா வாய்ப்பு தேடி சென்னை சென்றுவிடுவேன் என்ற நிபந்தனையுடன் சென்றேன். ஆச்சர்யம். இண்டர்வியூவில் அனைத்து கேள்விகளும் இன்டர்நெட் பற்றி இருந்தது.

நான் அப்போது தான் உணர்தேன், எழுதுவதை தவிர, இன்டர்நெட்டை சரியா பயன்படுத்தும் திறனும் எனக்கு பள்ளி பருவத்தின் முதலே இருந்தது. அம்மாவின் வேண்டுதலோ என்னவோ மூன்று கட்ட இன்டர்வியு முடிந்து அந்த வேலைக்கு நான் தேர்வு செய்யப்பட்டேன்.

ஒரு சில மாதங்கள் கழித்து  ஒரு வீக் என்ட் சென்னை சென்றேன். நடிகராகும் கனவில் கல்லூரி முடிந்ததும் என்னுடன் சென்னை செல்வதாய் இருந்த நண்பன் இப்போது சென்னையில் தான் இருந்தான். இன்னும் அவனுக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் இப்போது வந்த “எங்கேயும் எப்போதும்” படம் வரை சில படங்களில் தலை காட்டி விட்டான். அவன் சொன்னது மாதிரியே கல்லூரி முடிந்ததும் வாய்ப்பு தேடி சென்னை வந்துவிட்டான். என்னையும் சென்னைக்கு வந்து விடு என்று அப்போது கூப்பிட்டுக்கொண்டு இருந்தான்.

அன்று அவன் தங்கி இருந்த அறைக்கு சென்றேன். அவனிடம் பணம் இல்லை. நான் தான் உணவு வாங்கி கொடுத்தேன். அவனுடைய சின்ன ரூமில் பல பேர் தங்கி இருந்தனர். அங்கு அப்போது அழுக்கு லுங்கியுடன் சவரம் செய்யாத முகத்துடன் ஒருவன் அமர்ந்து இருந்தார். அவரை காட்டி இவர் அந்த படத்தில் உதவி இயக்குனராக இருந்தவர் என்று அறிமுகம் செய்து வைத்தான். உதவி இயக்குனர் என்றதும் எனக்கு அவர் மேல் கொஞ்சம் மரியாதை வந்தது. நடிக்க வாய்ப்பு தேடும் நபர்களில் போட்டோ ஆல்பம் சிலது அவன் ரூமில் இருந்தது. நீண்ட நாட்கள் ஆனது என்பதால்  நானும் அவனும் நிறைய பேசிக்கொண்டு இருந்தோம்.

சிறிது நேரத்தில் அந்த உதவி இயக்குனர் அறையை விட்டு வெளியே சென்று என் நண்பனை கூப்பிட்டு அவனிடம் மெதுவாய் ஏதோ சொன்னார். அது என் காதிலும் விழுந்தது. “ஒரு கட்டு பீடி வாங்கணும். அப்படியே  உன் ப்ரண்டிடம் காசு ஏற்பாடு பண்ணு ப்ளீஸ்” என்பது தான் அது. எனக்கு தூக்கி வாரி போட்டது.

நல்ல குடும்ப பின்னணி இல்லாமல் சென்னையில் சினிமா தாகம் கொண்டு அலையும்  பலரது நிலைமை இன்றும் இதுதான். ஜெயித்தவர்களை மட்டுமே பார்த்து ஆசைப்பட்டு குடும்பத்தைவிட்டு சென்னை நோக்கி இன்னும் பலர் பயனித்துக்கொண்டு தான் இருக்கின்றனர். செல்வராகவன் அசோசியேட் எனக்கு அன்று கூறிய அறிவுரை எந்த அளவிற்கு உண்மை என அன்று உணர்ந்தேன். கனவுதான் நமக்கு உணவென்றால் நாம் மட்டும் பட்டினி கிடக்கலாம். ஆனால் அதற்க்கு நம் குடும்பத்தையும் சேர்த்து பட்டினி போடுவது பெரிய முட்டாள் தனம். அதை எனக்கு தக்க சமயத்தில் புரிய வைத்த அந்த முகம் தெரியாத மனிதரை நன்றி உணர்வோடு சந்திக்க துடித்தேன். அவர் மொபைல் என் இப்போது சேவையில் இல்லை. பலமுறை முயற்சித்தும் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை.

“காற்றில் ஒரு நூல் கிடைத்தாலும் வாய்ப்பாக கருதி அதை பிடித்து முன்னேற வேண்டும்” என்று கனா காணும் காலங்கள் தொடரில் செல்வராகவன் குறிப்பிட்டது எனக்கு ஏற்கனவே மனதில் ஆழமாய் பதிந்து இருந்தது. சினிமா வெகு தூரம் இல்லை ஆனால் இப்போது கிடைத்த அந்த சின்ன வேலை எனக்கு ஒரு வாய்ப்பு. அதை காற்றில் பறந்து வந்த ஒரு நூல் என நம்பினேன். இப்போது அதை கெட்டியாக பிடித்துக்கொண்டேன்.  கனவுகளை என் இதயத்தில் ஒரு ஓரத்தில் பூட்டி வைத்தேன். பல நாட்கள் ரனமான வலி. தேம்பித்தேம்பி இரவுகளில் யாருக்கும் தெரியாமல் அழுதேன்.

ஒரு கட்டத்தில் அதை மறப்பதற்கு இரவு பகலாய் இணையத்தில் நானாக புதிதாய் நிறைய கற்றேன். புதிய லட்சியங்கள், புதிய இலக்குகள்.  இருபத்து இரண்டு வயதில் கூகிள் சர்டிபிகேசன் வாங்கினேன். எனக்கு தெரிந்து இந்தியாவில் அப்போது அது மிகக்குறைவு. அதுவும் அந்த வயதில் யாரும் இல்லை. ஒரு கட்டத்தில் எனக்கு கூட வேலை கிடைக்குமா என்று நினைத்த அந்த முதல் வேலையை உதறினேன். என்னை பற்றி தெரிந்தவர்களுக்கு இது தெரியும்.

தனியாக சேலத்தில் தொழில் தொடங்கினேன். கையில் ஒரு ரூபாய் பணமில்லை. இரவு பகலாய் உழைத்தேன். டாலரில் வருமானம் வந்தது. முதல் லாப்டாப், முதல் பைக், முதல் கார், முதல் விமான பயணம், முதல் தொலைக்காட்சி இண்டர்வியு, முதல் பத்திரிக்கை பேட்டி, முதல் ஏப்.எம் இன்டர்வியு, முதல் வெளிநாட்டு பயணம்,  என்று இன்னும் பல முதல் அனுபவங்கள். என் கனவினை அடமானம் வைத்ததற்கு கடவுள் கொடுத்த கூலி அவை.

முழுதாய் ஏழு வருடம் உருண்டோடிவிட்டது. உலகம் ரொம்ப சிறியது என்று யாரும் சும்மா சொல்லவில்லை.  போர் பிரேம் திரையரங்கில் இப்போது நான் செல்வராகவனுடன் இருக்கிறேன். கலந்துரையாடல் முடிந்து  கூட்டத்தின் நடுவே அரங்கை விட்டுவேகமாய் வெளியேறிக்கொண்டு இருந்தார். அவரது அருகில் போய் என்னை மீண்டும் அறிமுகப்படுத்திக்கொண்டு “ஒரு ஐந்து நிமிடம் பேசலாமா” என்றேன். “ஓ. நிச்சயமா பிரவின். வாங்க அங்க போகலாம்” என்றார். காமிரா,  கூட்டம் இல்லாத அருகில் ஒரு இடம் சென்றோம்.

என்னை பற்றி கேட்டார். மயக்கம் என்ன படத்தை பற்றி கொஞ்சம் பேசினோம்.  சற்று நேரத்தில் ரசிகர்கள் கூட்டம் அதிகமானது. ஆட்டோகிராப் வாங்க முண்டியடித்தார்கள். என்னிடம் பேசிக்கொண்டே அனைத்தையும் சமாளித்தார்.  அவரிடம் பேசுவதற்கு எனக்கு நிறைய இருந்தது. ஆனால் அதற்கான சூழ்நிலை தான் இல்லை. ஒரு பத்து நிமிடம் இருக்கும். சிறிது தூரத்தில் அவருக்காக காத்திருந்த அவரது மனைவி கீதாஞ்சலி நேரம் ஆகிறது என்று அவரை அழைத்தார். “ஒரு நிமிஷம் ஒரு போட்டோ மட்டும் எடுத்துட்டு வந்துறேன்” என்று சொல்லி விட்டு என் மொபைல் காமிராவை பார்த்து புன்னகைத்து விட்டு கை குலுக்கி விடைபெற்றார்.

ஒரு காலத்தில் தவமாய் நினைத்த இந்த தருணம் மிக எளிதில் இப்போது நடந்து முடிந்துவிட்டது. ஆனால்  கடைசி வரை இந்த சந்திப்பிற்கு பின்னால் இருந்த கதை அவருக்கு தெரிய வாய்ப்பில்லை..

selvaraghavan praveen

பின்குறிப்பு: (07/08 2012 அன்று அப்டேட் செய்யப்பட்டது)

இந்த பதிவை படித்துவிட்டு செல்வராகவனிடம் இருந்து 20 ஜூலை அன்று ஒரு நெகிழ்ச்சியான மின்னஞ்சல் எனக்கு வந்தது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

Comments (27)

ஹிஷாலீJuly 10th, 2012 at 9:55 am

உங்கள் அனுபவம் ஒவ்வொரு இளைங்கனுக்கும் ஊண்டுகோள் என்று நினைக்கிறேன் இன்னும் வளர வாழ்த்துக்கள் நண்பரே.

SakthisivavelanJuly 10th, 2012 at 12:01 pm

உன்னை பற்றி தெரிந்தவர்களில் நானும் ஒருவன் பிரவீன், நான் உன்னுடைய நண்பன் என்று சொல்லிக்கொள்ள எனக்கு பெருமையாக உள்ளது. நீ மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் !

யூர்கன்July 10th, 2012 at 9:13 pm

கூகிள் ரீடரில் மேலோட்டமா ஸ்க்ரோல் பண்ணிட்டு போயிட்டே இருப்பேன்.. ஆனா இன்று படிக்க படிக்க பிடிச்சிருந்தது…. வேலைக்கு போனது நல்ல முடிவு …. இந்த பதிவின் முடிவை போல !!

leninJuly 11th, 2012 at 2:02 am

நல்ல அனுபவம். இதுதான் நான் முதல் முதலாக உங்கள் எழுத்தை படிக்கிறேன். இரண்டு தடவை படித்தேன். உங்கள் எழுத்தை அனுபவித்தேன்.அடுத்த கட்டுரைக்காக காத்திருப்பேன். நன்றி.

சுரேகாJuly 11th, 2012 at 7:35 am

அற்புதம்… ஒவ்வொரு உதவி இயக்குநர் கனவாளனும் படிக்கவேண்டிய அனுபவம்.!!

இதில் மிகப்பெரிய ஒற்றுமை…நான் இப்போது உங்களுக்கு அடுத்த கட்டத்தில் இருக்கிறேன்.

பொருளாதார ரீதியாக என்னை வலுப்படுத்திக்கொண்டுவிட்டு, இப்போது திரைப்படத்துறையில் வேலை பார்ப்பது மிகவும் சுலபமாக இருக்கிறது.

மீண்டும் கதவு திறக்கும்..! கனவு பலிக்கும்.. ! வாழ்த்துக்கள் ப்ரவீண்

kavithaJuly 11th, 2012 at 10:49 am

வாழ்த்துக்கள் . ஆல் தி பெஸ்ட் . .அழகான முடிவு . kavitha

ராஜசுந்தரராஜன்July 11th, 2012 at 3:09 pm

நூற்றுக்கு நூறு உண்மையான எழுத்து. ஒரு திறமையான எழுத்தாளர்தான் நீங்கள். வாழ்க!

ranjithmohanJuly 11th, 2012 at 5:36 pm

பிரவீன் அற்புதமான திரைக்கதை. கதையாக எழுத பாருங்கள்.வாழ்த்துக்களுடன் – ரஞ்சித் மோகன்

SK ShanmuganathanJuly 12th, 2012 at 12:20 pm

பிரவீன் மிக மிக அருமையாக எழுத்தை செதுக்கி இருக்கிறீர்கள். சொல்ல வேண்டிய எண்ணத்தை சிறப்பாக வெளிபடுத்தி இருக்கிறீர்கள். மேலும் மேலும் வளர என் உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள்.

jackiesekarJuly 12th, 2012 at 1:15 pm

அருமை

ArunefxJuly 18th, 2012 at 9:48 am

உங்கள் கனவு நிறைவேற என்னுடைய வாழ்த்துக்கள்.

SENTHIL KUMARJuly 18th, 2012 at 5:44 pm

மனதை விட்டு நீங்கா நினைவுகள்.. உங்களை போன்றே நானும் “மயக்கம் என்ன” படத்தின் சிறப்பு காட்சிக்காக கோயம்புத்தூர்-இல் அழைக்கப்பட்டேன். திரைப்படம் குறித்த பல எதிர்மறை விமர்சனங்கள் இருந்தாலும் என்னை சென்னை வர வைத்தவர் கனவு இயக்குனர் செல்வராகவன். உங்கள் பதிவை படிக்கும் போதே உங்களை போன்றே அதே கல்லூரி நாட்கள் என் மனதில் மீண்டும் நிழலாடியது. மேலும் வளர என் உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள்.

பிரவீன்July 25th, 2012 at 2:53 pm

அனைவருக்கும் என் நன்றி!!!

Selvakumar MAugust 2nd, 2012 at 5:50 pm

அம்மா சரியான நேரத்தில் உங்கள் வாழ்கையை மாற்றிவிட்டார், நன்றி. சற்று யோசித்து பாருங்கள், இப்பொழுது உங்கள் நண்பன் படும் கஷ்டம் எவ்வளவு வேதனைக்குரியது.

நல்ல சாப்பாட்டுக்கும், நல்ல துணிக்கும், ஒரு கட்டு பீடிக்கும் மற்றவர் கையை எதிர் பார்க்கும் நிலை மிகவும் வேதனைக்குரியது.

கடவுள் உங்கள் அம்மா வழியாக உங்களை பெரிய ஆபத்தில் இருந்து மீட்டுள்ளார்!!!! அம்மாவுக்கு எனது அன்பு வணக்கங்கள்!!!

கேபிள் சங்கர்August 3rd, 2012 at 8:33 am

நிதர்சனம் பிரவீண்.

Bala ganesanDecember 31st, 2012 at 4:10 am

நல்ல பதிவு, நண்பரே!

ravi mantraMarch 8th, 2013 at 7:17 am

உங்கள் கதையை படித்து நெகிழ்ண்டுபோனேன் .. வருங்கள இளைங்கர்களுக்கு இது ஒரு பாடம் நானுன் உங்களைபோல் தான் பயணிக்கிறேன் … பார்போம் என்ன நடக்கிறது என்று …

pravinanandarajApril 1st, 2013 at 8:05 pm

nice

arjithOctober 10th, 2013 at 1:53 pm

அட நண்பா நான் இப்பொழுது இதே போல என் அனுபவத்தை பதிவிட்டு இருந்தேன் நீங்கள் கூட பார்த்தீர்கள் என்று நினைக்கின்றேன். நெகிழ்ச்சியாக இருக்கின்றது 😉 🙂

Naresh kumarNovember 30th, 2013 at 11:03 pm

nice ,, thanks praveen,,, i have been really appreciated your sharing,,,

ashokrajDecember 19th, 2013 at 1:21 pm

really really nice brother.am one of the biggest mad of selvaragavan.ungalukku nadanthathu than enakkum nadanthuchu.director aaganumnu vela senjitte cheenai la chance thedunappo ungalukku vantha adhe advice than enakkum.p.vasu siroda asst sonnaru.en kanavu,latchiyatha vida en appa amma mukkiyamnu cinema aasaya vittuten.but ippo oru nalla job la irukken.adutha jenmathula kandippa naan director ayiduven brother.

[…] /// என்னை போல் சினிமா ஆசையுடன் இரண்டு நண்பர்கள் அப்போது இருந்தனர். ஒருவனுக்கு நடிகராக வேண்டும் ஆசை. இன்னொருவனுக்கு கிராபிக்ஸ் வேலை சேர. அவர்களுக்கும் கல்லூரி முடிந்ததும் சென்னை செல்வது தான் திட்டம். பார்ட்னர்ஸ் ஆப் கிரைம் என்பது போல் நாங்கள் மூவரும் ஒன்று சேரவேண்டி இருந்தது. பகலில் கல்லூரி. மாலை முதல் இரவு வரை ஒரு மைதானத்தில் அமர்த்து அவரவர் கனவை விவாதிப்போம். என்னுடைய கனவுகளும் அங்கு தான் பிறக்க ஆரம்பித்தது. சினிமா பற்றி நிறைய பேசுவோம். கதை விவாதம் செய்வோம். ———- ——— ——— ஒரு சில மாதங்கள் கழித்து ஒரு வீக் என்ட் சென்னை சென்றேன். நடிகராகும் கனவில் கல்லூரி முடிந்ததும் என்னுடன் சென்னை செல்வதாய் இருந்த நண்பன் இப்போது சென்னையில் தான் இருந்தான். இன்னும் அவனுக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் இப்போது வந்த “எங்கேயும் எப்போதும்” படம் வரை சில படங்களில் தலை காட்டி விட்டான். அவன் சொன்னது மாதிரியே கல்லூரி முடிந்ததும் வாய்ப்பு தேடி சென்னை வந்துவிட்டான். என்னையும் சென்னைக்கு வந்து விடு என்று அப்போது கூப்பிட்டுக்கொண்டு இருந்தான். அன்று அவன் தங்கி இருந்த அறைக்கு சென்றேன். அவனிடம் பணம் இல்லை. நான் தான் உணவு வாங்கி கொடுத்தேன். அவனுடைய சின்ன ரூமில் பல பேர் தங்கி இருந்தனர். அங்கு அப்போது அழுக்கு லுங்கியுடன் சவரம் செய்யாத முகத்துடன் ஒருவன் அமர்ந்து இருந்தார். அவரை காட்டி இவர் அந்த படத்தில் உதவி இயக்குனராக இருந்தவர் என்று அறிமுகம் செய்து வைத்தான். உதவி இயக்குனர் என்றதும் எனக்கு அவர் மேல் கொஞ்சம் மரியாதை வந்தது. நடிக்க வாய்ப்பு தேடும் நபர்களில் போட்டோ ஆல்பம் சிலது அவன் ரூமில் இருந்தது. நீண்ட நாட்கள் ஆனது என்பதால் நானும் அவனும் நிறைய பேசிக்கொண்டு இருந்தோம். சிறிது நேரத்தில் அந்த உதவி இயக்குனர் அறையை விட்டு வெளியே சென்று என் நண்பனை கூப்பிட்டு அவனிடம் மெதுவாய் ஏதோ சொன்னார். அது என் காதிலும் விழுந்தது. அதை கேட்டது எனக்கு தூக்கி வாரி போட்டது. /// மேலும் வாசிக்க – http://www.cpraveen.com/suvadugal/meeting-with-selvaraghavan/ […]

[…] தடம் புரண்ட என்னை போன்றவர்கள் கூட ஏதேனும் கிடைத்த வாய்ப்பை கெட்டியாய் …. மீதம் இருப்பவர்கள் நிலை தான் பாவம். […]

RamyaDecember 30th, 2014 at 8:53 pm

Valthukal uingal payanum vegu thurum thodaratum

pushparajJuly 18th, 2015 at 1:01 pm

வாழ்த்துக்கள் ப்ரவீண்

selvamOctober 11th, 2016 at 5:16 pm

மிகவும் அருமையான பதிவு

Leave a comment

Your comment