Posts Tagged சங்ககிரி மலைக்கோட்டை

    பிரமிக்கவைக்கும் சங்ககிரி மலைக்கோட்டை – பாகம் 3

    சங்ககிரி மலை பயணத்தின் கட்டுரையை தொடர்ந்து அதன் புகைப்படங்களும், காணொளியின் தொகுப்பும் இந்த இடுக்கையில்.

    ஒருவேளை நீங்கள் அந்த இரண்டு பாகங்களையும் பார்க்காமல் விட்டு இருந்தால்.

    பிரமிக்கவைக்கும் சங்ககிரி மலைக்கோட்டை – பாகம் 1
    பிரமிக்கவைக்கும் சங்ககிரி மலைக்கோட்டை – பாகம் 2

    பிரமிக்கவைக்கும் சங்ககிரி மலைக்கோட்டை – பாகம் 2

    ஒரு வாட்டி மலை மேலே ஏறுனதுக்கே இப்படி கஷ்டப்படுறீங்களே, இந்த ரெண்டு நாளில் இதுவரை 32வாட்டி நாங்க ஏறி எறங்கி இருக்கோம்பா” என்று பீடி புகையை ஊதியவாறு பீடிகை போட்டார் அவர்.

    “அடேங்கப்பா, எதுக்குங்க 32 வாட்டி மேலே ஏறுனீங்க” அனைவரும் ஆச்சர்யத்தில் கோரசாய் கேட்டோம்.  ( முதல் பாகத்தின் தொடர்ச்சி )

    “இன்னைக்கு காலைல இருந்து மலை மேலேயே அன்னதானம் கொடுத்துட்டு இருக்காங்க. வருஷத்துல ஒரு நாள் இந்த கோவில் விசேஷம். காலையில் சாப்பிட உப்புமா சட்னி. இப்போ போனா கூட சூடா டீ கிடைக்கும்.  மதியத்துக்கு சாப்பாடு, சாம்பார், ரசம், தயிர், பொறியல் பாயாசம் எல்லாம் ரெடி ஆயிட்டு இருக்கு. அதுக்கு அடுப்பு, காய்கறி. அரிசி எல்லாம் ரெண்டு நாளாக எடுத்துட்டு வந்து கொடுத்து இருக்கோம். அதுதான் எங்க வேலை. இதோட முப்பத்தி ரெண்டு நடை வந்தாச்சு. இதுக்கு ஏழாயிரத்து ஐநூறு ரூபாய் கூலி” என்று கூறும்போது பீடி அவர் உதட்டை சுடும் அளவுக்கு குறைந்து இருந்தது.

    அதை தூக்கிப்போட்டு விட்டு மீண்டும் தொடர்ந்தார், “சிலிண்டர், அரிசி மூட்டை எல்லாம் ஐம்பது கிலோங்க… அதை தூக்கிட்டு மேலே வரதுக்கு தான் கொஞ்சம் கஷ்டமாயிடுச்சு. அதுக்கூட பரவாயில்லைங்க. நேத்து ராத்திரி எல்லாம் எடுத்துட்டு மேல வந்த பிறகு டீ தூள் மறந்துட்டோம். பால் சக்கரை கூட இருந்துச்சு..  நிறைய பேரு ராத்திரி மலை மேலயே தங்குனதால டீ தூளுக்காக மட்டும் மறுபடியும் கீழே போயிட்டு வந்தேன்”

    இதை அவர் சொல்லும்போது  நாங்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களை முகத்தை பார்த்துக்கொண்டோம். வெறும் காமிரா, பாட்டரி, வாட்டர் பாட்டில், இத்தியாதி கொண்ட ஒரு பையை முதுகில் மாட்டி மேலே தூக்கிகொண்டு வருவதற்கே எங்களுக்குள் நடந்த போட்டி எங்களுக்கு தான் தெரியும். ஒரு வாட்டி மேலே ஏறுவதற்கே எவ்வளவு சிரமம். இதுல இவுங்க முப்பத்தி ரெண்டு வாட்டி ஏறி இறங்கி இருக்காங்க.

    “சரிங்க.. இன்னும் எவ்வளவு தூரம் மேல போகணும்” என்று கேட்டேன்

    “இப்போ மேல தாங்க இருக்கீங்க.. அவ்வளோ தான் வந்தாச்சு. அதோ அது தான் கோவில்.. அதை தாண்டி போனீங்கனா சமையல் மண்டபம். எல்லாரும் நல்லா கலைச்சு போயிருப்பீங்க. சீக்கிரம் போய் சூடா டீ சாப்பிடுங்க” என்று கூறிவிட்டு அந்த நிழல் மண்டபத்திலேயே  சாய்ந்து படுத்தார். ஒரு வழியா வந்தாச்சு. இப்போ தான் ஒரு பெரிய நிம்மதி கிடைத்தது போல் இருந்தது.  அங்கிருந்து நகர தயாராக இருந்தபோது அவர் அருகில் ஒரு அனுமார் சிற்பம் இருப்பதை பார்த்தேன். மிகவும் வித்தியாசமாக இதுவரை பார்த்திராத வகையில் நான்கு உருவம் கொண்ட சிற்பம் அது. உடனே ஒரு கிளிக்.

    Sankagiri Hill Fort

    இரண்டரை மணி நேர மலை ஏற்றத்தில் இப்போது மலைக்கோட்டையின் உச்சியில் இருக்கிறோம்.  சங்ககிரி கோட்டை பதினைந்தாம் நூற்றாண்டில் விஜயநகர சாம்ராஜ்ஜியத்தால் கட்டப்பட்டு பின்னர் ராணுவ துருப்பாக திப்பு சூல்தானுக்கும், அதன் பிறகு ஆங்கில அரசுக்கும் பயன்படுத்தப்பட்டது. கடைசியில் கொங்கு நாடு என்று அழைக்கப்பட்ட பகுதிகளுக்கு இது வரி வசூல் மையம் ஆங்கிலேயர்கள் ஆட்சியில் ஆனது. ஜூலை 31, 1805 அன்று மாவீரன் தீரன் சின்னமலை இங்குதான் தூக்கிலிடப்பட்டார். அதைத்தவிர அந்த கோட்டையின் முக்கிய வரலாறு, அதன் பின்னால் இருக்கும் பல சுவாரசியாமான தகவல்கள் சரிவர தெரியவில்லை.

    மலை உச்சியில் பாதி இடம் வெறும் பாறை தான். மொத்தம் தோராயமாக ஒரு ஐந்து ஏக்கர் பரப்பளவு மேலே இருக்கும். அந்த கடைசி நிழல் மண்டபத்தை விட்டு வெளியே வந்தவுடன் முதலில் ஒரு பெரிய பாறையும் அதன் மேல் ஒரு சிறிய அனுமார் கோவிலும் இருக்கிறது. இதை தாண்டிதான் அடுத்து செல்ல முடியும். இந்த பாறையை ஒட்டி கீழே ஒரு தண்ணீர் பாலி இருக்கிறது. அதாவது அந்த பாறையின் சரிவில், கீழே ஒரு சுவர் எழுப்பி, அங்கு தேங்கும் மலை நீரை அப்போது சேகரித்து வைத்து வந்துள்ளனர். அதாவது அந்த காலத்து மலை நீர் சேகரிப்பு திட்டம்.  இது குடிப்பதற்கும், புலங்குவதற்க்கும் அப்போது பயன்படுத்தப்பட்டு வந்திருக்கலாம். இதை விட்டால் அப்போது அந்த மலை உச்சியில் தண்ணீர் கிடைக்க வேறு வழி இல்லை. ஏன் இப்போதும் கூட அங்கு வாழ்ந்துக்கொண்டு இருக்கும் குரங்குகளுக்கு அது பயன்பட்டு கொண்டு இருக்கிறது.

    Sankagiri Hill Fort

    அடுத்து அதன் அருகிலேயே இருக்கிறது வரதராஜ பெருமாள் கோவில். மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவிலில் தான் இன்று சிறப்பு பூஜை. அதாவது புரட்டாசி மாதங்களில் வரும் சனிக்கிழமைகளில் மட்டும் பூஜை செய்யப்படும். அன்று தான் முதல் சனிக்கிழமை.  வருடத்தின் மற்ற நாட்களில் இந்த கோவில் பூட்டியே தான் இருக்கும். யாரேனும் பூஜைக்கு கொடுத்தால் மட்டுமே மற்ற நாட்களில் மேலே வந்து திறப்பார்கள் என்று கேள்விப்பட்டேன்.

    அது ஒரு சிறிய கோவில் தான். ஒரு பெரிய பாறை மேல் சற்று உயரத்தில் கட்டப்பட்டு இருக்கிறது. கோவிலின் சில பேருக்கு மேல் நிற்க முடியாது. முகப்பின் கீழே பள்ளம் தான். ஆக அந்த பாறை மேல் ஏறுவதற்கு கற்களால் அடுக்கப்பட்ட படி தான்.  நாங்கள் சென்ற போது கோவிலின் உள்ளே நுழைய முடியவில்லை. பூஜைக்கு நிறைய பேர் ஏற்கனவே வரிசையில் காத்திருந்தனர். கோவிலின் கீழே ஒரு லிங்கம் போன்ற ஒரு உருவம் பாறையில் செதுக்கப்பட்டு அதன் அருகில் உருது மொழில் ஏதோ எழுதி இருந்தது.

    அடுத்து இன்னொரு பாலி என்று சொல்லப்படக்கூடிய நீர்தேக்கமும் இருந்தது. கொஞ்சம் தூரம் அந்த நீண்ட வழுக்கு பாறையில் நடந்தால் ஒரு பழமையான சிறிய தர்கா. அதுவும் அந்த மலை உச்சியில், செங்குத்தான பகுதியில் மிகவும் ஓரத்தில் அமைந்து இருக்கிறது. அதன் வாசலே பல நூறு அடி பள்ளம் தான். மலையின் கீழிருந்து பார்த்தாலே இந்த தர்கா தெளிவாக தெரிகிறது. இப்போது இந்த இடத்தில் இருந்து சங்ககிரி ஊர் முழுவதும் அருமையாக தெரிந்தது. அனைத்தும் வெறும் புள்ளியாய். அங்கே இருந்து கீழே அடிவாரத்தை படம் பிடித்தேன். இன்னும் ஜூம் பண்ணி என்னுடைய காரை கூட அங்கிருது தெளிவாக படம் பிடிக்க முடிந்தது.

    மேலே மலையின் அடுத்த பகுதிக்கு அங்கிருந்து செல்லும்போது ஒரு சிறிய மண்டபம் அங்கு தான் அனைவருக்கும் மதிய சாப்பாடு தயார் ஆகிக்கொண்டு இருந்தது. மேலே மின்சாரம் கிடையாது. இரவு அந்த மண்டபத்தில் தான் பல பேர் தங்கி இருந்தனர் என்று கேள்விப்பட்டேன். அந்த மண்டபம் இருந்த பாறை அருகே இன்னொரு பாலி இருந்தது. அங்கே இருந்து தான் சமைக்கவும், குடிக்கவும் குடத்தில் எடுத்து வருகின்றனர். பின்னர் அதை துணியில் வடிகட்டிஒரு பாத்திரத்தில் வைத்துக்கொண்டனர்.  நாங்கள் எடுத்து சென்ற தண்ணீர் கூட இப்போது தீர்ந்து விட்டது. அதை தான் நாங்கள் எடுத்து சென்ற பாட்டிலில் நிரப்பி குடித்தோம். எனக்கு வெளியில் தண்ணீர் குடித்தாலே நிறைய முறை அடுத்த நாள் உடல் நிலை சரியில்லாமல்போய்விடும். எங்கு சென்றாலும் சுத்திகரிப்பட்ட தண்ணீர் அல்லது மினரல் வாட்டர் பாட்டில் தான் குடிப்பேன். இங்கே சற்று பயத்துடன் தான் அதை குடித்தேன் ஆனால் அடுத்த நாட்களில் அது ஒன்றும் செய்யவில்லை.

    பூஜை முடிந்த பின்பு தான் உணவு என்பதால் மேலிருக்கும் அடுத்து அடுத்த பகுதிக்கு செல்லலாம் என்று நடந்தோம். ஆள் ஆரவாரமற்ற தனிமைபடுத்தப்பட்ட பகுதி போல் இருந்தது அடுத்த பகுதி கல்லூரி மாணவர்கள் போல் தோற்றமளிக்கும் ஒரு ஐந்து பேர் ஒரு மரத்தடியில் அமர்ந்து இருந்தனர். பார்சல் வாங்கி வந்த உணவு பொட்டலம் அவர்கள் மத்தில் பிரித்து வைக்கப்பட்டு இருந்தது. அதில் மூவர் தங்கள் வாழ்க்கையில் முதன் முறை உண்பது போல் அசைவ வஸ்துக்களை விரலில் பிடித்து எலும்பை கடித்து மென்று துப்பி ஏதேதோ செய்துக்கொண்டு இருந்தனர். அருகில் கசங்கிய நிலையில் பிளாஸ்டிக் டம்ளர்கள் காற்றில் உருண்டு போய்க்கொண்டு இருந்ததை பார்க்க முடிந்தது.

    மலை உச்சியின் அடுத்த பக்கத்தின் விளிம்பிற்கு சென்றால், தூரத்தில் ஒரு பெரிய பாறையில் வீற்றிருக்கிறது வரலாற்று சிறப்புமிக்க அந்த இடம். ஆம். மாவீரன் தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்ட அந்த மேடை. பாதி சிதைந்த நிலையில். அருகில் இரண்டு கண்காணிப்பு கோபுரம். ஏற்கனவே சொன்னது போல் செங்குத்தான மலை உச்சி என்பதால் வேறு எந்த திசையில் இருந்தும் யாரும் மேலே வரமுடியாது. அடுத்து சில பாழடைந்த மண்டபங்கள் இருந்தது. அந்த மண்டபங்களை சுற்றி புதர் மண்டிக்கிடந்தது. உள்ளே சென்றோம். ஒரு வித்யாசமான உணர்வு.

    சுவற்றில் ஒரு இடத்தில் மீன் சின்னம் பதித்து இருந்தது. பாண்டியர்களின் சின்னம் அது.  அதன் மேற்கூரையை கல்தூண்கள் தாங்கி இருத்தது. அவற்றை பார்க்கும் போது அக்காலத்தில் யாரும் இங்கே வாழவில்லை ஆனால் தங்குவதற்காக மட்டும் இது பயன்பட்டது என்று புரிந்தது. ஆயிரத்தில் ஒருவன் படத்தில் வருவது போல் அப்போது அங்கு வாழ்ந்தவர்கள் பேசிக்கொள்வது போல் ஒரு அசரீரி காதில் கேட்டுக்கொண்டே இருந்தது.

    அருகில் இன்னொரு செங்கல்லால் கட்டப்பட்ட மண்டபம் ஒன்று பார்த்தோம். உள்ளே செல்ல வழியே இல்லை. சுற்றிலும் சுவர் தான். ஒரே இடத்தில் மட்டும் சற்று உயரத்தில் ஜன்னல் மாதிரி சந்து இருந்தது அவ்வளவுதான். அது எதற்கு பயன்பட்டது என்று விளங்கவில்லை. இதை தவிர ஒரு தேவாலயமும், சாவுக்கிணறும் இருப்பதாய் சொன்னார்கள். அதாவது உயிருடன் ஒருவரை ஒரு குழியில் போட்டு மூடி அவரை கொல்லும் இடமாக அந்த சாவுக்கிணறு அக்காலத்தில் வழக்கத்தில் இருந்திருக்கிறது.  ஆனால் நாங்கள் அதை கவனிக்க தவறிவிட்டோம்.

    Sankagiri Hill Fort

    இந்த பயணத்திற்கு புறப்படும் முன்னர் மிகவும் வயதான என் உறவினர் பாட்டி ஒருவர் ஒரு தகவல் சொல்லி அனுப்பி இருந்தார். அவர் சிறுவயதில் சென்ற போது  கோவிலின் பின்புறத்தில் “பொழுது தெரியாத பாலி” என்று ஒன்று இருந்தது என்றும்.  அது காலையும் மாலையும் எப்போதும் சூரிய வெளிச்சம் படாத வகையில் அமைத்திருக்கும் என்றும். அதன் தண்ணீர் மிகவும் சுத்தமாகவும், ருசியாக இருக்கும் என்றும் சொல்லி அனுப்பினார். நாங்களும் அந்த தண்ணீரை சுவைத்து பார்த்துவிடலாம் என்று அங்கே சென்றோம்.

    ஆனால் புதர் மண்டிக்கிடந்த அந்த இடத்தின் அருகே செல்லச்செல்ல நாற்றம் குடைலைப் புடுங்கியது. அந்த இடத்தில் இருந்து ஒரு மூன்று பேர் வெளியே வந்தனர்.

    “சார்.. இப்போ தான் சுத்தம் பண்ணி இருக்கோம், அதனால் அங்க போகாதீங்க”

    “ஏன்.. எதுக்கு சுத்தம் செஞ்சீங்க”

    “சார்.. வாரவாரம் வெள்ளிகிழமை முஸ்லிம்கள் இங்க இருக்கிற தர்காவுக்கு தொழுகை பண்ண வருவாங்க. கல்யாணம் ஆகாதவங்க, குழந்தை பிறக்காதவங்க பூஜை பண்ணிட்டு அந்த பூஜை சாமானை இந்த பாலியில் போட்டுவிட்டு வேண்டிக்கொண்டு செல்வது வழக்கம். நாங்கள் வாரம் ஒருமுறை வந்து சுத்தம் செய்துவிட்டு போய்விடுவோம். வெள்ளிக்கிழமை அந்த பாய் அடிவாரத்துல அதுக்கு காசு கொடுத்துடுவாறு. ஒருத்தருக்கு இருநூறு ரூபாய்” என்று கூறிவிட்டு சென்று விட்டார்கள். நாங்கள் மூக்கை பிடித்தக்கொண்டு அந்த பாலியை ஒரு நோட்டமிட்டு விட்டு வந்தோம்.

    அடுத்து பூஜை முடிந்ததும் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. சுமார் ஐநூறில் இருந்து எழுநூறு பேர் மொத்தம் இருந்திருப்பர். ஆச்சரியத்தக்க வகையில் அனைவரும் வரிசையில் நின்று எந்த இடைஞ்சலும் இன்றி உணவு வாங்கி உண்டனர். சாதம், சாம்பார், ரசம், தயிர், பொறியல், பாயசம் என்று சுடச்சுட அறுசுவை உணவு வழங்கப்பட்டது. அடுத்து மலை உச்சியில் இருந்து கீழிறங்கும் போதுதான் தெரிந்தது ஏறுவதை விட இறங்குவது மிகவும் சிரமம் என்று. இதை அப்போது அனைவரும் உணர்ந்தனர்.  மிகவும் செங்குத்தான, பிடிப்பில்லாத  பாதை. கால்கள் கடுக்க ஆரம்பித்து.  வேகமாய் இறங்கிக்கொண்டே இருக்கையில் கால்கள் மருத்து போவது போலானது.  நிற்காமல் இறங்கிக்கொண்டு இருக்கும் போது கூட ஒன்றும் தெரியவில்லை. முன்னே செல்பவர் தாமதிக்கும்போது, நாமும் அதற்காக நிற்கும்போது  கால்கள் நடுங்க ஆரம்பித்தது. சிலர் கால்கள் உணர்விழந்த நிலையில் கீழே விழுந்த சம்பவும் நடந்தது. என் பின்னால் வந்து கொண்டு இருந்த அந்த சிறுமி தன் அப்பாவின் கையை பிடித்துக்கொண்டு அனைவரின் வேகத்துக்கு ஈடாக கீழிறங்கினாள்.

    “அப்பா. சீக்கிரம் வாங்கப்பா.. பழைய வேண்டி மாதிரி மெதுவாவே வரீங்க..”

    “நீ.. உன் அப்பா துணைக்கு இருக்கும் தைரியத்தில் பயப்படாமல் வேகமாக இறங்குகிறாய். ஆனால் உன் அப்பாவுக்கு துணைக்கு யாருமில்லை.. அதனால் நிதானமாகத்தான் வருவார்.” என்று நான் சொன்னவுடன் தான் அவள் பொறுமையானாள்.

    ஒரு வழியாக ஒரு மணி நேரத்தில் அடி வாரம் வந்து சேர்ந்தோம். கீழிறங்கி அந்த மலையை திரும்பிப்பார்த்தவுடன் இப்போது தான் அந்த மலையின் உண்மையான பிரமாண்டம் புரிந்தது. அதன் வரலாற்று சிறப்புக்கள் முழுதாய் உரைத்தது. அந்த நிலையில் எங்களுக்கு தோன்றியது இதுதான்.

    சங்ககிரி மலைக்கோட்டை ஒரு சுற்றுலா தளமாக்கப்பட வேண்டும்.  கேட்பாரற்று கிடக்கும் தீரன் சின்ன மலை தூக்கிலிடப்பட்ட அந்த இடத்தை நினைவிடம் ஆக்க வேண்டும்.  இந்த மலைக்கோட்டையின் வரலாற்றை பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும். காரில் வந்து இறங்கியவுடன் எந்த இடத்தையும் பார்த்துடவிடவேண்டும் என்ற மனநிலைக்கு வந்து விட்ட மக்களை சுலபமாக மலை உச்சி செல்ல “விஞ்ச்” சேவை கொண்டு கவர வேண்டும். குறைந்த பட்சம் இந்த இடம் மேலும் சிதைவதிலிருந்தாவது பாதுகாக்கப்பட வேண்டும்.

    இவை அனைத்தையும் சாத்தியப்படுத்த இந்த மலைகோட்டையை தற்போது கையகப்படுத்தி வைத்திருக்கும் தொல்பொருள்துறையால் மட்டுமே முடியும். ஆனால் இந்த மலையின் அடிவாரத்தில் தொல்பொருள் துறையால் வைக்கப்பட்டு இருக்கும் ஒரு எச்சரிக்கை போர்டின் நிலையை பார்த்தாலே அந்த கோட்டையும், அங்குள்ள புராதான இடங்களையும் எந்த லட்சணத்தில் அவர்களால் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்று புரியும்.

    Sankagiri Hill Fort

    பின்குறிப்பு:

    சங்ககிரி மலைப் பயனத்தில் நான் எடுத்த அனைத்து புகைப்படம் மற்றும் வீடியோவின் தொகுப்பு விளக்கத்துடன் அடுத்த இடுக்கையில் தொடரும்.

    கடைசி மண்டபத்தை கடந்தவுடன் தெரியும் ஆஞ்சநேயர் கோவிலும். அதன் பிறகு தூரத்தில் தெரியும் வரதராஜ பெருமாள் கோவில்.

    Sankagiri Hill Fort

    Sankagiri Hill Fort

    Sankagiri Hill Fort

    சங்ககிரி ஊரும்…புள்ளியாய் எங்களது கார் நிறுத்திய இடம்.

    Sankagiri Hill Fort

    அப்படியே கொஞ்சம் ஜூம் பண்ணினால்.

    Sankagiri Hill Fort

    தர்கா

    Sankagiri Hill Fort

    Sankagiri Hill Fort

    குடிக்க தண்ணீர்

    Sankagiri Hill Fort

    மதிய உணவு தயாராகிறது.

    Sankagiri Hill Fort

    நீர் சுத்திகரிப்பு

    Sankagiri Hill Fort

    வரதராஜ பெருமாள் கோவில்.

    Sankagiri Hill Fort

    Sankagiri Hill Fort

    Sankagiri Hill Fort

    தீரன் சின்ன மலை தூக்கிலிடப்பட்ட இடம்.

    Sankagiri Hill Fort

    தூக்கு மேடை.

    Sankagiri Hill Fort

     

    நாங்கள் ஆட்சிக்கு வந்தால் Smile

    Sankagiri Hill Fort

    “பொழுது தெரியாத பாலி” – இப்போது நாற்றத்துடன்

    Sankagiri Hill Fort

    மதிய உணவருந்த வரிசை

    Sankagiri Hill Fort

    Sankagiri Hill Fort

    வரதராஜ பெருமாள். அரிய புகைப்படம்.

    Sankagiri Hill Fort

    Mission Accomplished

    Sankagiri Hill Fort

    பிரமிக்கவைக்கும் சங்ககிரி மலைக்கோட்டை – பாகம் 1

    சங்ககிரி மலை உச்சியில் அந்த காலத்து கோட்டையும், அதில் ஒரு சுரங்கப்பாதை இருப்பதாகவும் சிறுவயதில் பலர் சொல்லக் கேள்விப்பட்டு இருக்கிறேன். அந்த சுரங்கப்பாதை திப்பு சூல்த்தானின் மைசூர் அரண்மனை வரை செல்லும் என்றும் சொல்லி இருக்கிறார்கள். அப்போதே எப்படியாவது அந்த மலை சென்று அந்த கோட்டையையும், சுரங்கப்பாதையையும் பார்த்துவிட வேண்டும் என்று ஆசை. ஆனால் அது ஒரு போதும் நடக்கவில்லை. அதன் பிறகு ஒவ்வொருமுறை சங்ககிரி செல்லும்போதும், அந்த மலையை பார்க்கும்போது அதன் மேல் இருந்த அந்த ஆச்சர்யம் சற்றும் குறையவில்லை.

    இப்போது வளர்ந்தபின்னும், அந்த ஆசையை நிறைவேற்றுவதற்கு கடந்த ஓரிரு வருடங்களில் எடுத்த எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. அதற்கு காரணம், சுமார் 1500 அடி உயரமுள்ள அந்த செங்குத்தான மலை உச்சியை அடைய, கற்களால் அமைக்கப்பட்ட வழித்தடங்களில் கால் நடை முலம் மட்டுமே சென்றடைய முடியும். மிகவும் தனிமைப்படுத்தப்பட்டு, ஆள் நடமாட்டம் அதிகமில்லாமல் இருக்கும் அந்த மலையை தனியாகவோ, சிலருடனோ சென்று பார்ப்பது உகந்ததல்ல என்று கூறப்பட்டது.  அது மட்டுமில்லாமல் மிகவும் சிரமான வழித்தடங்களை கொண்டுள்ளதால் சென்றுவிட்டு திரும்பிய மறுநாள் கால் வலிக்காக ஒய்வு தேவைப்பட வாய்ப்பிருக்கிறது. ஆக அந்த அனைத்துக்கும் தோதாய் இதுவரை வாய்ப்பு சரிவர அமையாமலே இருந்தது.

    sankari fort hill

    சென்ற வாரம் ஒரு நாள், சங்ககிரியில் உள்ள  என் உறவுக்கார மாமாவிடம் அலைபேசியில் பேசிக்கொண்டு இருந்தேன்.  வருடமொருமுறை சங்ககிரி மலையில் உள்ள ஒரு புராதான பெருமாள் கோவிலில் பூஜை நடக்கும் என்றும், வரும் சனிக்கிழமை ஊர் மக்கள் நிறைய பேர் மலை ஏறுவர் என்றும் எதேச்சையாக கூறினார். எனக்கு ஆர்வம் அதிகமானது. “நீங்க போறீங்களா” என கேட்டேன். “ஆமா. பின்ன… கடந்த சில வருடங்களாக தொடர்ந்து போறோம், இந்த வருஷமும் போவோம். இந்த முறை நீங்களும் வரீங்களா?” என்றார்.  “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் ராஜகுமாரா!”. சந்தோஷத்தில் அந்த தேதியை காலண்டரில் பதிவு செய்து வைத்துக்கொண்டேன்.

    செப்டம்பர் 15, அமாவாசை சனிக்கிழமை. சேலத்தில் இருந்து நான், என் தம்பி மற்றும் உறவினர்கள் இருவருடன் காலை எட்டு மணி அளவில் காரில் சங்ககிரி போய் சேர்ந்தோம். சங்ககிரி பஸ்நிலையம் அருகில் ஒரு உணவு விடுதியில் காலை உணவு சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்போது என்னை அழைத்துபோவதாய் சொன்ன என் மாமா அங்கு வந்து சேர்ந்தார். அருகில் அவரது பத்து வயது மகள். “நீயுமா வர? உன்னால மலையேற முடியுமா? மூச்சு வாங்கும். கால்வலிக்கும்” என்று ஆச்சர்யத்துடன் அவளிடம் கேட்டேன். “அதெல்லாம் உங்களுக்கு தான். நான்லாம் ஏறிடுவேன்” என்று புன்னகைத்தாள். “அடேங்கப்பா. உன் கால் வலித்ததால் உன் அப்பாவை நீ தூக்க சொல்லிடுவ” என்றேன். “இல்ல… மாட்டேன். நானே நடப்பேன். பாக்கறீங்களா.. சேலஞ்?” என்றால். “ஓ.. அவ்வளவு பெரியா ஆளா நீ. சரி சேலஞ்” என்றேன்  நானும். இது எவ்வளவு பெரிய தவறு என்ற அப்போது நான் உணரவில்லை.

    எங்கள் காரை,மலை அடிவாரத்தில் உள்ள சங்ககிரி மேல் நிலைப்பள்ளி உள்ள சாலை ஓரத்தில்  நிறுத்தினோம். இறங்கி பார்த்ததுமே முகப்பில் கற்களால் எழுப்பப்பட்ட நுழைவாயில் அதன் பிரம்மாண்டத்தை பறைசாற்றியது. சற்று உள்ளே அந்த முகப்பில் நுழைந்ததும், பண்டைய கால வாழ்க்கைக்குள் நாமும் நுழைந்ததாய் ஒரு உணர்வு எழாமல் இல்லை. முகப்பு மண்டபத்தின் மேற்கூரையை தாங்கிப்பிடிக்கும் கல் தூனும், அதில் நேர்த்தியாக பொறிக்கப்பட்ட சிலை வடிவமும் ஆச்சர்யம் அளித்தது. அதை தாண்டியதும் ஒரு பெரிய குளம் இருக்கிறது.  அக்காலத்தில் அது பெரிதும் அவர்களால் பயன்படுத்தப்பட்டு இருந்திருக்கிறது என்று அதை பார்த்தவுடனேயே புரிந்தது. அதன் அருகிலேயே ஒரு பயன்பாடற்று கிடக்கும் ஒரு சிறிய வீரபத்திரன் கோவில். அதன் வாசலில் ஒரு சிதிலமடைந்த ஒரு நந்தி சிலை. கிளிக். கிளிக். கிளிக்.

    sankari fort

    ஆரம்பத்தில் இருந்து இவை அனைத்தையும் நான் ஒவ்வொன்றாக புகைப்படம் எடுத்துக்கொண்டு இருக்க, தூரத்தில் இருந்து என் மாமாவின் குரல் ““மாப்ள, இப்படியே போட்டோ எடுத்துட்டு இருந்தீங்கன்னா நாளைக்கு தான் நீங்க மலை உச்சிக்கு வருவீங்க”. நிமிர்த்து பார்த்தால் இப்போது அனைவரும் என்னை விட்டு தூரத்தில் சென்றுக்கொண்டுக் கொண்டு இருந்தனர். அடடா… போகிற போக்கில் போட்டோ எடுத்துக்கொள்ளலாம் என்று நானும் விறுவிறுவென்று நடக்க ஆரம்பித்தேன்.

    சிறிது தூரத்தில் இருந்தது இன்னொரு பிரமாண்டமான வரதராஜா பெருமாள் கோவில். அந்த கோவில் மேற்கூரை முற்றிலும் மூடப்பட்டு யாரும் மேலிருந்து கோவிலுக்குள் நுழையா வண்ணம் கட்டப்பட்டு இருக்கிறது. அந்த கோவிலை பார்த்துகொள்ளும் குடும்பமும் உள்ளே வாழ்வதாய் கேள்விப்பட்டேன். இந்த கோவில் வாசல் வரை நாம் சென்ற பாதை சமதளம் தான். ஏனென்றால் இதுவரை எல்லாமே மலையின் கீழேதான் இருக்கிறது.  சரி இந்த கோவிலை சிரமமின்றி எப்போது வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளாலாம் என்று மேலே ஏற ஆரம்பித்தோம்.

    பாறைகளை படிக்கட்டுகளாக செதுக்கியும், கற்களைக்கொண்டும் உருவாக்கப்பட்ட அந்த மலைப்பாதை ஆரம்பமானது. எங்களை போல் பல பேர் அப்போது மேல ஏறிக்கொண்டு இருந்தனர்.  மலையின் கீழிருந்து உச்சி வரை, இருபது அடி உயரத்திற்கு பாதுகாப்பு அரண் போல் கற்களால் மதில் சுவர்  எழும்பி இருக்கிறார்கள். அக்காலத்தில் அந்நியர்கள் யாரும் உள்ளே நுழையாமல் இருக்க இந்த ஏற்பாடு. அடிவாரத்தில் உள்ள நுழைவாயிலை தவிர அந்த மலை உச்சியில் உள்ள கோட்டைக்கு செல்ல வேறு பாதையே இல்லை. அதுமட்டுமில்லாமல் அந்த மதில் சுவரில் ஆங்காங்கே சிறிய அளவில் சந்து இருந்தது. அது என்ன என்று கேட்டபோது தான் என் உறவினர் சொன்னார். அந்த ஓட்டைகள் அனைத்தும் சரியாக மலை அடிவாரம் நோக்கி இருக்கும். மலை மேல் ஏற முயலும் எதிரிகளை இந்த சுவற்றிக்கு பின்னால் இருந்து துப்பாக்கியில் சுட ஏதுவாக ஓட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது. கேட்பதற்கே ஆச்சர்யமாக இருந்தது.

    மேலே ஏற ஆரம்பித்து ஒரு பத்து நிமிடத்திலேயே தெரிந்துவிட்டது இன்னைக்கு நமக்கு நாக்கு தள்ளப்போகிறது என்று. நல்லவேளை அடுத்த சில நிமிடங்களில் ஒரு நிழல்மண்டபம் தென்பட்டது. மலை ஏறும்போது இளைப்பாறவும், மழைக்கு ஒதுங்கவும் அப்போது அந்த மலை பாதையில் ஆங்கங்கே இதுபோன்று கட்டப்பட்டு இருக்கிறது. அங்கே ஒரு சில நிமிடங்கள் ஓய்வெடுத்து, தண்ணீர் குடித்து மீண்டும் நடக்க ஆரம்பித்தோம். சிறிது தூரத்தில் இன்னொரு நிழல் மண்டபம். அங்கிருந்து இரண்டு வழி பிரிந்தது. ஒரு வழி மேல மலை உச்சியை நோக்கி. இன்னொன்று நான் சிறுவயதில் கேள்விப்பட்ட அந்த சுரங்கப்பாதை இருக்கும் இடத்தை நோக்கி.

    சுரங்கப்பாதை இருக்கும் வழியில் சென்றோம். சீனப்பெருஞ்சுவர் போல் நீண்டு சென்ற அந்த மதில் சுவர் அருகில் ஒட்டி சென்ற சிறியபாதையில் ஏறினோம். மேலே தூரத்தில் வெள்ளை சுண்ணாம்பு அடிக்கப்பட்ட ஒரு மண்டபம் தென்பட்டது. சுரங்கபாதைக்கு எதுக்கு மண்டபம் போல் கட்டி வெள்ளை அடித்து வைத்திருக்கிறார்கள் என்ற கேள்வியுடன் அருகில் சென்றோம். அப்போது தான் தெரிந்தது அந்த சுரங்கத்தில் வெளியே முஸ்லிம்கள் தொழுகை செய்யும் ஒரு சின்ன இடம் இருந்தது. அது வெள்ளையடிக்கபட்டு சுத்தமாக இருந்தது. அந்த சுரங்கத்தில் நுழைவாயிலில் ஒரு லாந்தர் எரித்துக்கொண்டு இருந்தது. இன்னமும் முஸ்லிம்கள் வந்து அங்கே தொழுகை செய்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

    சுரங்கத்தில் உள்ளே கும்மிருட்டு.  எல்லாவற்றிற்கும் மேல், உள்ளே நிறைய வௌவ்வால்கள் இருப்பதால் அதன் எச்சத்தின் நாற்றம் குடலைப்புடுங்கியது. அதனால் நாங்கள் கொஞ்சதூரம் கூட உள்ளே செல்லவில்லை. இதன் வழியே எப்படியாவது மைசூர் சென்று விடவேண்டும் என்று சிறுவனாக இருக்கும்போது ஆசைப்பட்டதை நினைக்கும்போது இப்போது சிப்பு சிப்பாக வந்தது. சிலர் அந்த சுரங்கப்பாதை மைசூர் செல்கிறது என்கின்றனர். சிலர் பனைமரத்துப்பட்டியில் உள்ள ஒரு கரட்டிற்கு செல்கிறது என்று சொல்ல கேட்டு இருக்கிறேன். இன்னும் சிலரோ சேலம் குகை பகுதி வரை செல்கிறது, அதனால் தான் அந்த பகுதிக்கு குகை என்று பெயர் வந்தது என்று  சைக்கிள் கேப்பில் குண்டை தூக்கி போட்டதும் ஞாபகம் வந்தது. எது எப்படியோ அந்த ரகசியம் திப்பு சூல்த்தானிற்க்கும், உள்ளே இருக்கும் வௌவ்வாலிற்குமே வெளிச்சம் என்று அந்த இடத்தை விட்டு நடையை கட்டினோம்.

    சங்ககிரி சுரங்கப்பாதை

    மீண்டும் வந்த வழியே செல்லாமல், அங்கு இருந்து ஒரு காட்டு வழியாக சென்று மேலே செல்லும் அந்த மலைப்பாதையை பிடித்தோம். மாமாவும் அந்த சிறுமியும் கட கடவென மேலே அந்த செங்குத்தான பாதையில் ஏறிக்கொண்டு இருந்தனர். எனக்கு மூச்சி முட்டியது. “மாமா கொஞ்சம் நேரம் ஒட்கார்ந்துட்டு போலாமா” எனக்கேட்டேன். என்னுடன் வந்தவர்களும் அதை ஆமோதிப்பது போல் வேகமாய் தலை ஆட்டினார்கள். அப்போது மேலே இருந்து நிறைய பேர் கீழே இறங்கிக்கொண்டு இருந்தனர்.

    அதில் ஒருவர் “என்ன தம்பி, மாமாவே தெம்பா மேல ஏறிட்டு இருக்கார், நீங்க இப்படி கேட்டீங்கன்னா மாப்பிள்ளைய பத்தி என்ன நினைப்பார்? அந்த கெத்தை மெயின்டேன் பண்ண வேண்டாமா..” என்று சிரித்துக்கொண்டே சொன்னார். “ஆஹா.. நீங்க சொல்றது சரிதாங்க… ஆனா நானும் எவ்வளவு நேரம் தான் கெத்தாவே நடிக்கறது. முடியலைங்க” என்றேன்.. அனைவரும் சிரித்து விட்டனர். அதற்கு அவரோ “அதனால என்ன தம்பி. மாமா ரொம்ப நேரமா நடக்கறீங்க. கொஞ்சம் பொறுமையா அஞ்சு நிமிஷம் ஓட்காந்துட்டு போங்க இல்லைனா அப்பறம் கால் வலிக்கும் ஆப்படீன்னு சொல்லணும்பா. நமக்கு ஓய்வு கெடச்ச மாதிரியும் ஆச்சு. மாமாவை அக்கறையா பார்த்துகிட்டே கெத்தை மெயின்டின் பண்ண மாதிரியும் ஆச்சு” என்றதும் அந்த இடமே கலகலப்பானது..

    கொஞ்ச தூரம் ஏறியதும் ஒரு வெடிமருந்து கிடங்கு இருத்தது. அந்த காலத்தில் இங்கு தான் வெடிமருந்து சேமித்து வைத்து இருந்தனர். இன்னமும் அந்த கிடங்கு கட்டுமானத்தில் உறுதியாக இருந்தது.  இப்போது உள்ளே சென்றால் வெற்றிடம் தான். ஒரே ஒரு ஜன்னல். ஆனால் அந்த காலத்து மக்களின் யோசனையை பார்த்தால் இப்போது வியப்பாக இருக்கிறது. அதை நினைத்து வியந்துக்கொண்டு இருக்கையில் “இப்போதான் பாதி தூரம் வந்து இருக்கோம்.. இன்னும் ரொம்ப தூரம் போகணும்”  என்று யாரோ சொல்ல உடனே லேசாக கண்ணைக்கட்டியது. மீதமிருந்த தண்ணீரில் குளுகோசை கலக்கி அனைவரும் குடித்து விட்டு மேலும் ஏற ஆரம்பித்தோம்.

    சிறிது மலையேற்றத்திற்கு பிறகு அடுத்து வந்தது கோட்டையின் முக்கிய நுழைவாயில். அந்த காலத்தில், இவ்வளவு தூரம் பாதுகாப்பை கடந்து எதிரிகள் வந்த பிறகும், கோட்டையின் நுழைவு வாயில் வழியே தான் மீண்டும் மேலே தொடர்ந்து செல்ல முடியும் என்ற அடுத்தக்கட்ட பாதுகாப்பு அரண் இது. சுற்றிலும் இருபது அடிக்கு மேல் உயரமுள்ள கற்களால் கட்டப்பட்ட மதில் சுவர். இந்த கோட்டை நுழைவாயில் கதவை இடிப்பதற்கும் அப்போது சாத்தியமில்லை. கதவை இடிக்க நீண்ட இரும்புத்தூண் போன்ற ஒன்றை பிடித்து தூரத்தில் இருந்து பல பேர் ஓடி வந்து கதவை இடிக்க வேண்டும். ஆனால் நுழைவாயிலின் முன் குறிப்பிட்ட பேர் நிற்கும் அளவிற்கு தான் இடம். அதை அடுத்து பள்ளம் தான். மலையை சுற்றி வேறு எந்த பகுதியில் இருந்தும் அதற்கு மேல் செல்வதற்கு வாய்ப்பில்லை. காரணம், அனைத்து பக்கமும் செங்குத்தான உயரமான பாறையில் தான் மலைகோட்டை இருக்கிறது. இந்த ஒரு நுழைவாயில் வழியே தான் இதற்கு மேல் செல்லவே முடியும். என்ன ஒரு யோசனை?

    அதைத்தாண்டி சில தூரம் நடந்தபிறகு ஒரு பெரிய வழுக்குப்பாறை. அதை படிகள் போல் செதுக்கி இருக்கிறார்கள். ஆனால் அது மட்டமாக ஏறுவதற்கு தோதாக இல்லாமல் சற்று சாய்வாக செதுக்கப்பட்டு உள்ளதால் கொஞ்சம் சிரமப்பட்டே ஏறினோம். ஏறியவுடன் ஒரு நிழல் மண்டபம். அப்போது கால்கள் அயர்ந்து போய் இருந்தது. வேர்த்துக்கொட்டி மூச்சிவாங்கியது. அந்த நிழல் மண்டபத்தில் அமர்ந்தோம். ஒரு நடுத்தரவயது பெண்மணியும் ஒரு ஆணும் அங்கே ஏற்கனவே அமர்த்து இருந்தனர்.

    “தம்பி எந்த ஊரில் இருந்து வரீங்க?” என்று அந்த நபர் என்னிடம் கேட்டார்.

    “சேலம்” என்றேன்.

    ஒரு வாட்டி மேல ஏறுனதுக்கே இப்படி கஷ்டப்படுறீங்களே, இந்த ரெண்டு நாளில் இதுவரை 32வாட்டி நாங்க ஏறி எறங்கி இருக்கோம்பா” என்று பீடி புகையை ஊதியவாறு பீடிகை போட்டார் அவர்.

    “அடேங்கப்பா, எதுக்குங்க 32 வாட்டி மேலே ஏறுனீங்க” அனைவரும் ஆச்சர்யத்தில் கோரசாய் கேட்டோம்.

    —> அடுத்த இடுக்கையில் மேலும் மலை ஏறலாம். தொடரும்.

     

    sankari hill

    சங்ககிரி மலை - குளம்

    sankari hill temple

    sankari hill temple

    sankari hill fort

    sankari hill temple

     

    sankari hill

    sankari hill

     

    sankari hill fort

    sankari hill temple

    sankari hill fort

    sankari hill fort

    sankari hill fort

     

    sankari hill fort

     

    sankari hill fort

     

    sankari hill fort

     

    sankari hill fort

    sankari hill fort

    sankari hill fort