மடிகணினி வாங்கும் முன்னர் முக்கியமாய் யோசிக்க வேண்டியது

things before buying laptop

“லாப்டாப் வாங்கலாம்னு முடிவு பண்ணி இருக்கேன் ஆனா எந்த கம்பனி லாப்டாப் வாங்கறதுன்னு தெரியல”. “வாங்கும்போது நிறைய இலவசம் கொடுத்தானுங்கப்பா பின்னால பிரச்சனைன்னு போனா கண்டுக்கவே மாட்டேங்கறாங்க”. இது எப்போதும் லாப்டாப் எனும் மடிகணினி வாங்குபவர்களும், வாங்கியவர்களும் அடிக்கடி புலம்பும் வார்த்தைதான்.  அவர்களுக்கு உதவும் வண்ணம் என் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளவே இந்த இடுக்கை.

எல்லா கம்பனியிலும் நாம் தேவைப்படும் கான்பிகுரேசனில் மடிகணினி வாங்கிவிடலாம் தானே. காசு இருந்தால் சந்தைக்கு வந்தவுடனே அந்த மாடலை வீட்டிற்கு வரவைத்து விடலாம் தானே என நாம் எண்ணலாம்.. அது சரி. ஆனால் மடிகணினி வாங்குவதில் நாம் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விதி ஒன்று இருக்கிறது. அது தான் “ஆப்டர் சேல்ஸ் சர்விஸ்” – After Sales Service.

எவ்வளவு விலைகொடுத்து மடிகணினி வாங்குகிறோம் என்பது முக்கியமல்ல யாரிடம் வாங்குகிறோம் என்பது தான் முக்கியம். இல்லையேல் பின்னால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நாம் கொடுக்கும் விலை கொஞ்சம் கொஞ்சமாக அந்த மடிக்கணினியின் உண்மையான விலையை விட பல மடங்கு அதிகமாக இருக்கும். தெரியாமல் மாட்டிக்கொண்டால், தேவையற்ற பண விரயமும், நேர விரயமும், மன உளைச்சலும் தான் மிஞ்சும்.

சாதாரண கணிப்பொறி என்றவுடன் நாம் கண்களை மூடிக்கொண்டு அசம்பெல் பண்ணி வாங்கி விடுகிறோம். குறைந்த பட்ஜெட் வைத்திருப்போருக்கு அதுவே சாலச் சிறந்த வழி. ஏதேனும் பாகம் பழுதடைந்தால் கூட விற்பன்னரே கியாரன்டியில் அந்த பாகத்தை மட்டும் மாற்றி வாங்கி தருவார். இல்லையேல் குறைந்த விலைக்கு அதனை தனியே வாங்கி, அதுவும் உடனே வாங்கி பொருத்திவிடலாம்.

ஆனால் மடிகனினியில் இந்த எளிமை இல்லை. பிராண்டட் மடிகனினி தான் வாங்க முடியும். சாதாரண கணிப்பொறி போலில்லாமல் இது பழுதடைவதற்கான சாத்திய கூறுகள் மிக  அதிகமாக  இருக்கிறது. வெப்பம், தூசி, கீழே விழுதல்  இதுவே மூல காரணம். அப்படி ஏதேனும் பழுது ஏற்படின் அந்த பாகத்தை மட்டும் தனியே வெளியே வாங்கி நாம் மாற்ற முடியாது. ஒரிஜினல் பாகம் தேவை. இதற்கு அந்த கம்பனியின் உதவி வேண்டும். இங்கே தான் நாம் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

சேலத்தின் என் நண்பர் ஒருவர். இவர் ஆப்பில் பிரியர் (இது திங்கற ஆப்பிள் இல்லைங்னா). இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆப்பில் மாக் மடி கணினிதான் வேண்டுமென ஒற்றை காலில் நின்று பெங்களூர் சென்று வாங்கி வந்தார். ஆப்பில்’னு பேரு வச்சா ஒரு நாள் அழுகி தானே தீர வேண்டும். அந்த ஒரு நாள் வந்தது. முக்கியமாக ஒரு வேலைக்காக அதை ஆன் செய்தார். ஆன் ஆக வில்லை. பல முறை முயற்சித்தும் பலனில்லை. என்ன செய்ய?

தான் வாங்கிய அந்த ஆப்பிள் ஸ்டோருக்கு அலைபேசியில் அழைத்தார். அவர்கள் போனில் சொன்ன சில முறைகளை கையாண்டு பார்த்தார். பலனில்லை. சேலத்திலும் ஆப்பிள் சர்விஸ் சென்டர் இல்லை. உடனே எடுத்துக்கொண்டு ஓடினார் பெங்களூருக்கு.. ஒரு சின்ன பழுதிற்கு. இன்னொரு நண்பர் ஒருவருக்கு தன்னுடைய காம்பாக் லாப்டாப் பழுதடைந்து இருந்தது. அதை சரி செய்வதற்கு அலையோ அலை என்று பல நாட்கள் அலையவைத்ததை நான் பார்த்து இருக்கிறேன்.

இப்படி நிலைமை இருக்கும் இருக்கும் பட்சத்தில், மடிகணினியையே தினமும் சார்ந்து தொழில்/வேலை  என்னை போன்றோர்களுக்கு அது பெரிய பிரச்னையாகவே இருந்தது. ஏதேனும் பழுது ஏற்படின் எங்கேனும் எடுத்துக்கொண்டு ஒடுவதில் எனக்கு இஷ்டமில்லை. அதே சமயம் பழுதடைந்த பாகத்தை மாற்ற ஓரிரு நாளுக்கு மேல் ஆகக்கூடாது.  இரு வருடங்களுக்கு முன்னர் நான் என் முதல் மடிக்கணினியை வாங்கும்போது எனக்குள் உள்ளுக்குளே ஓடிக்கொண்டு இருந்த கேள்வி அது தான். ஆப்பில் மாக் புக், ஹெச்.பீ, டெல், விப்ரோ, சோனி, லெனோவா, காம்பாக், ஆசுஸ் போன்ற கம்பனிகளில் யார் சிறந்த சேவை வழங்குபவர்கள்?

பல கட்ட இணைய தேடலிற்கு பிறகு அன்று நான் எடுத்த அந்த முடிவு மிகச்சிறந்த முடிவாகவே நான் இப்போது கருதுகிறேன். இந்த மூன்று வருடங்களில் மட்டும் பல முறை எனக்கு தொலைபேசியில் அந்த மடிகணினி கம்பனியின் உதவி தேவைப்பட்டு இருக்கிறது, பல முறை  அது பழுது பார்க்கப்பட்டு உள்ளது. பல முறை பாகம் மாற்றப்பட்டும் உள்ளது.

ஐம்பத்தி ஐயாயிரம் விலை போட்டு வாங்கிய என் மடி கணினியிற்கு இது வரை லச்சரூபாய்க்கு மேலே மதிப்புள்ள அளவிற்கு பாகங்கள் மாற்றப்பட்டு உள்ளது. எல்லாம் என் இருப்பிடத்தில் இருந்தே..  அதுவும் இலவசமாக. என்ன நம்ப முடியவில்லையா? ஏன், எதற்கு, எப்படி? அடுத்த பதிவில்…

Comments (7)

DevarajanJuly 1st, 2011 at 9:15 pm

நல்லாத்தானே போய்ட்டு இருந்துச்சி…அடுத்த பாகத்துக்கு காத்திருக்க வச்சிட்டிங்களே..சட்டுபுட்டுன்னு போடுங்க பாஸ். 🙂

ராஜ நடராஜன்July 2nd, 2011 at 12:15 am

விற்பனைக்கு பின் உதவி தொஷிபா மடிக்கணினி நிறுவனம் தருகிறது.ஆனால் ஏனைய மடிக்கணினிகளை விட விலை கொஞ்சம் அதிகமாக இருக்கலாம்.ஆனால் உலக சந்தையில் முன்ணணியில் இருப்பதோடு சென்னையில் உற்பத்தி நிறுவனம் உருவாகிக்கொண்டிருக்கிறதென நினைக்கிறேன்.எனது மடிக்கணினி டெக்ரா மாடல்.ஒரு வருடத்தில் பழுதானால் மாற்று கணினியும்,பணம் திருப்பி தரப்படுமென்று விளம்பரம் செய்யப்பட்ட மாடல்.80 GB ஹர்ட் டிஸ்க் 500 ஆக மாற்றியதோடு சரி.இன்னும் நன்றாகவே இயங்குகிறது.

சோனி PS 3 க்கும் இதே மாதிரி செய்தேன்.அதுவும் தன் கடமையைச் செய்கிறது:)

ராஜ நடராஜன்July 2nd, 2011 at 12:28 am

முக்கியமான ஒன்றை சொல்ல மறந்துவிட்டேன்.தரவிறக்கம்,சேமிப்பு போன்றவைகள் External HDD 500GB யில் செய்து விடுவதால் தேவையில்லாமல் கணினியை நோண்டும் வேலைகள் தவிர்க்கப்படுகின்றது.

அக்பர்July 2nd, 2011 at 12:52 pm

பயனுள்ள பகிர்வு.

//முக்கியமான ஒன்றை சொல்ல மறந்துவிட்டேன்.தரவிறக்கம்,சேமிப்பு போன்றவைகள் External HDD 500GB யில் செய்து விடுவதால் தேவையில்லாமல் கணினியை நோண்டும் வேலைகள் தவிர்க்கப்படுகின்றது.//

சரியா சொன்னீங்க ராஜ நடராஜன், பெரும்பாலானவர்கள். கணினி உள்ளேயே சேமித்து வைப்பதால். ரிப்பேர் ஆகும் போது தகவல்களை இழக்க நேரிடுகிறது.

ஷாஜஹான்July 2nd, 2011 at 7:06 pm

ராஜ நடராஜன் அவர்கள் கருத்தை நான் வழிமொழிகிறேன். நானும் TOHIBA மடிக்கணிணி பயன்படுத்தி வருகிறேன்.ஒரு ஜிபி ரேமை நான்கு ஜிபி ஆக்கியதொடு ஹார்ட் டிஸ்க்கையும் மாற்றவா அல்லது external Hard Disk பயன்படுத்தவா என்றே யோசித்து வருகிறேன். இதுவரை எந்த ஒரு பிரச்சனையும் வந்ததில்லை.

Selvakumar MJuly 4th, 2011 at 5:30 pm

ஆப்பில்’னு பேரு வச்சா ஒரு நாள் அழுகி தானே தீர வேண்டும், சூப்பர் ….. அடுத்த பாகம் எப்போ வெளிவரும் …..

ManiJuly 22nd, 2011 at 12:42 am

பொறுக்க முடியல. பதிவு லேட்டானாலும் பரவாயில்லை. என்ன லாப்டாப் ப்ரான்ட்ன்னு மட்டும் இப்பவே சொல்லிடுங்க.

Leave a comment

Your comment