கோபிச்செட்டிப்பாளையம் மக்களின் மனதும் அழகுதான்

Gobichettipalayam

சென்ற வாரம் கோபிச்செட்டிப்பாளையம் சென்றிருந்தேன். இயற்கை எழில் கொஞ்சும் ரம்யமான இது போன்ற இடத்தை இது வரை என் வாழ்நாளில் பார்த்ததில்லை. தூரத்தில் ஒரு மலைத்தொடர். அந்த மலை அடிவாரம் வரைக்கும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நெற்பயிரிடப்பட்ட வயல்வெளி. ஆங்காங்கே நீண்ட நீரோடை. இடப்பக்கம், வலப்பக்கம், முன்னே பின்னே என எப்படி திரும்பி பார்த்தாலும் பச்சை பசேலென காட்சி மட்டும்தான்.  இதன் நடுவே செல்லும் சாலையில் காரை ஒட்டிக்கொண்டு சென்ற அனுபவமே தனி.

சிலமணி நேரம் தான் அன்று அங்கே செலவிட முடிந்தது. கிளம்புவதற்கு முன் கொஞ்சம் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம் என்று காரை சாலை ஓரத்தில் நிறுத்தினோம். அந்த சாலையில் பெரிதாய் போக்குவரத்து இல்லை. சாலையின் ஒரு பக்கம் நின்று கொண்டு, மறு பக்கத்தில் இருந்து நாங்கள் மாறி மாறி புகைப்படம் எடுத்துக்கொண்டு இருந்தோம். அந்த பத்து, பதினைந்து நிமிடங்களில் நடந்த ஆச்சர்யமான சம்பவம் தான் இது.

தூரத்தில் இருந்து வேகமாய் ஒருவர் ஸ்கூட்டரில் வந்துகொண்டு இருந்தார்.  சாலையின் மறுபுறம் இருந்த நண்பரை நான் புகைப்படம் எடுத்துக்கொண்டு இருந்தேன். எங்களின் அருகே வர வர அவர் வண்டியின் வேகம் குறைந்தது போல் எனக்கு தோன்றியது. கேமராவில் இருந்து என்னுடையை பார்வையை விலக்கி அவர் பக்கம் திரும்பிப் பார்த்தேன். எங்களுக்கு மிக அருகில் அந்த வண்டி நெருங்கி வந்து இருந்தது. ஆனால் அந்த வண்டியின் வேகம் இப்போது முற்றிலும் குறைந்து காணப்பட்டது. நான் அவரை பார்த்த மாத்திரத்தில் என்னை பார்த்து அவர் புன்னகைத்தார். நாங்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டு இருப்பதால் எங்களுக்கு குறுக்கே செல்ல அவருக்கு விருப்பமில்லை என்பதை என்னால் உடனே உணர முடிந்தது.

சட்டென காமிராவின் உயரத்தை என் பார்வையின் நேர்கோட்டில் இருந்து தாழ்த்தி, “நீங்கள் செல்லலாம்” என்று நானும் புன்னகையோடு விடை கொடுத்தேன். சர்ரென வேகமெடுத்து பறந்தது அந்த ஸ்கூட்டர். மீண்டும் புகைப்படம் எடுக்க ஆரம்பித்தேன். அடுத்த சில நிமிடங்களில், இன்னொரு டீ.வி.எஸ் எக்சல் ஒட்டிக்கொண்டு வந்தவர் எங்களை கடக்காமல் வண்டியை அப்படியே நிப்பாட்டி விட்டார். இதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. தூரத்தில் அவர் வந்ததை பார்த்தேன். ஆனால் கடந்து போய் விடுவார் என்று தான் நினைத்தேன். சொல்லப்போனால் அவர் கடந்து போய்விடுவாரா, இல்லை நின்று விடுவாரா என்று கூட நான் யோசிக்கவில்லை. நான் நம் வேலையை பார்க்கிறோம், அவர்கள் வேலையை பார்க்கிறார்கள் என்று சற்று மெத்தனமாக இருந்துவிட்டேன் என நினைக்கிறேன். உடனே பதறி நீங்கள் செல்லலாம் என்று கூறியதும் அவரும் புன்னகையோடு வண்டியை கிளப்பி புறப்பட்டார்.

அதன் பிறகு ஒரு ஐந்து நிமிடம் கடந்து இருக்கும்.  சற்று அருகினில், கணவன் மனைவியை போல் தோற்றமுள்ள ஒரு இளம் தம்பதியினர் ஒரு பைக்கில் வந்து கொண்டு இருந்ததை பார்த்தேன். முன்னாடி வந்தவர்களை போல் இவர்களை நாம் தொந்தரவு செய்து விடக்கூடாது என்று போட்டோ எடுப்பதை நானாக நிப்பாட்டினேன். ஆனால் அந்த நபரோ, நாங்கள் செல்லலாமா என்பது போல் அங்கள் அருகின் வருகையில் செய்கையில் கேட்டார். போலாம் என்றதும் அதே வேகத்தில் எங்களை கடந்து சென்றார்.ஆனால் இந்த முறை எங்களுக்கு சற்று உறுத்தல் அதிகமானது.

முதலில் வந்தவரும் எங்களின் குறுக்கே செல்ல விருப்பமில்லாமல் வண்டியை நிறுத்த முயன்றார். இரண்டாவதாக வந்தவரோ வண்டியை நிப்பாட்டியே விட்டார். மூன்றவாதாய் வந்தவர் வண்டியை நிறுத்துவதற்குள் நாங்கள் சுதாரித்து அவரை போகச்சொல்லி விட்டோம்.  இத்தனைக்கும் நாங்கள் சாலையின் இருபுறமும், சாலையை விட்டு சற்று தள்ளி கீழே தான் நின்று கொண்டு இருந்தோம்.  ஆக அவர்கள் செல்வதற்கு நாங்கள் இடைஞ்சலாகவே இல்லை. ஆனால் நாங்கள் புகைப்படம் எடுக்கும் போது குறுக்கே சென்று எங்களுக்கு இடைஞ்சலாக இருக்க கூடாது என்று அவர்கள் நினைத்துள்ளனர். யாருக்கு வரும் இப்பேர்பட்ட நல்லெண்ணம்.

ஒருவர், இருவர் அல்ல.. எங்களை அதுவரை எங்களை கடக்க முயன்ற மூன்று நபர்களும் எங்களுக்கு இடைஞ்சல் விளைவிக்க கூடாது என்று நினைத்தனர்.  இது வரை நான் இப்படி பட்ட மக்களை பார்த்ததில்லை. ஒவ்வொருவரும் ஏதோ ஒரு நோக்கத்திற்காக சாலையில் சென்று கொண்டு இருக்கிறார்கள்.  எங்களுக்காக அவர்கள் நிற்க வேண்டிய அவசியமில்லை. இத்தனைக்கும் நாங்கள் வெளியூர் ஆட்கள் என்று அவர்களுக்கு தெரியும். நாங்கள் ஒன்றும் உண்மையிலேயே இடைஞ்சல் ஆகிவிடும் அளவிற்கு ஷூட்டிங் ஏதும் எடுக்கவில்லை. இருந்தும் சொல்லி வைத்தார் போல அவர்கள் அனைவரும் நடந்து கொண்ட விதம் ஆச்சர்யம் அளித்தது. கோபிசெட்டிப்பாளையம் போல் அவர்களின் மனதும், எண்ணமும் அழகுதான் என்று அது பறைசாற்றியது.

“இப்போது அனைவரும் நமக்காக வண்டியை நிறுத்துவது சற்று உறுத்தலாக இருக்கிறது. நமக்கு இடையூறு செய்யக்கூடாது என்ற அவர்களின் உணர்வுகளுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும். இனிமேலும் நாம் யாருக்கும் தொந்தரவு கொடுக்க வேண்டாம். இதுவே கடைசி புகைப்படமாக இருக்கட்டும். இதை எடுத்து விட்டு உடனே கிளம்பி விடலாம்” என்று முடிவு செய்தோம். நண்பர் ஒருவர் என்னை புகைப்படம் எடுக்க ஆயத்தமானார். “கொஞ்சம் வலது பக்கம் வாங்க”… “கொஞ்சம் முன்னாடி”… “அருமை.. அப்படியே இருங்க… இதோ ஒரு நிமிஷம்..”

கிளிக்..

கிளிக்..

கிளிக்.

புகைப்படம் எடுத்து முடித்தாயிற்று. இனிமேலும் இங்கு இருப்பது சரியல்ல, இப்போதே புறப்படலாம் என்று என் காரை நிறுத்தி இருந்த திசையை நோக்கி திரும்பினேன்… எங்களிடம் இருந்து ஒரு இருபது அடி தள்ளி ஒரு குவாலிஸ் கார் நின்று கொண்டு இருந்தனர். உள்ளே ஒரு குடும்பமே இருந்தது. அந்த காரை ஓடிக்கொண்டு வந்த அந்த நபர் எங்களை நோக்கி புன்னகைத்தவாரே கேட்கிறார்… “நாங்க போலாமா சார்?”..

 

Comments (3)

மதுரகவிSeptember 13th, 2012 at 8:53 am

கிராமங்களில் மனிதர்களாக வாழ்கிறோம்..?

rathnavel natarajanSeptember 13th, 2012 at 9:43 pm

நண்பர் ப்ரவீண் அவர்களின் கோபிச்செட்டிப்பாளையம் இயற்கை எழில் பற்றி, மக்களின் அருமையான மனோபாவம் பற்றிய பதிவு. நன்றி. வாழ்த்துகள்.

Bala ganesanJanuary 3rd, 2013 at 8:24 am

I am proud to say that I did my B.Sc. there. We still have extended family in Gobi.
Thanks for the nice post.

Leave a comment

Your comment