காணாமல் போன ஸ்ரீ ரங்கநாதர்

IMG_7178IMG_7120

நீண்ட நாட்களாய் என்னிடம் ஸ்ரீ ரங்கம் போகலாம் என்று கிருபா சொல்லிக்கொண்டு இருந்தான். சுமார் ஏழு வருடங்களுக்கு முன்பு கல்லூரி சுற்றுலாவில் ஊருக்கு திரும்பும்போது ஸ்ரீரங்கம் சென்றிருக்கிறேன். அதன் பிறகு இப்போது தான் செல்கிறேன். காலை பத்து மணிக்கு  நான், கிருபா, அதிராஜ் மற்றும் என் தம்பி நால்வரும் காரில் ஸ்ரீ ரங்கம் போய் சேர்ந்தோம். எக்கச்சக்க கூட்டம். வைகுண்ட ஏகாதசி முடிந்து அதே வாரத்தில் சென்றதால் கூட்டம் கொஞ்சம் அதிகம் தான். இலவச வரிசையிலும், ஐம்பது ரூபாய் தரிசன வரிசையிலும் கூட்டம் அலைமோதியது.

ஒருவழியாக 250 ரூபாய் சிறப்பு தரிசன வரிசையில் போய் நின்றோம்.  அங்கும் கூட்டம். நாங்கள் இதை எதிர்பார்க்கவில்லை.  இரண்டரை மணி நேரம் கழித்து தான் கவுண்டர் திறந்தார்கள். ஸ்ரீ ரங்கநாதருக்கு அபிஷேகம் நடந்துக்கொண்டு இருந்தது என்பதால் யாருக்கும் அனுமதி இல்லையாம். அதுவரை ஸ்ரீ ரங்கத்து வரலாற்றுக்கதைகளை சொல்லிக்கொண்டு இருந்தான் கிருபா.  ஸ்ரீ ரங்கம் என்ற பெயரை கேட்டாலே பையன் உருகிவிடுவான். ஸ்ரீ ரங்கம் மேல் அந்த அளவிற்கு பித்து பிடித்து இருக்கும் நபரை இதுவரை நான் கேள்விப்பட்டது கூட இல்லை.  அங்கே இருக்கும் அர்ச்சகருக்கு கூட ஸ்ரீ ரங்கம் பத்தி இவ்வளவு விஷயம் தெரியுமா என்று தெரியவில்லை.

IMG_7144

வெயிலிலும், மழையிலும் மாத்தி மாத்தி சமாளித்து உள்ளே போனால் வரிசை நகரவில்லை. ஆனால் அந்த சூழ்நிலையிலும் சொர்க்க வாசல் திறந்ததை பார்த்தோம்.  250 ரூபாய் கொடுத்தும் வரிசையில் நீண்ட நேரம் காத்து இருந்தோம். திடிரென குறுக்கு வழியே கோவில் பணியாளர் சிலரை அழைத்துகொண்டு அத்தனை வரிசைகளையும் கடந்து தரிசனத்திற்கு அழைத்து சென்றார். யாரோ ஒரு வி.ஐ.பியின் சிபாரிசு கடிதம்  அவர்களது தரிசனத்தை சுலபமாகியது. அப்போது கூட்டத்தில் இருந்த சிலர் கூச்சல் எழுப்பினர். ஆனால் அதை அவர்கள் பொருட்படுத்தவில்லை

பல மணி நேரம் ஆகியும் வரிசை சொல்லும்படி நகர்ந்த பாடில்லை. அனைவரும் பொறுமையிழந்து இருந்தனர். சிறிது நேரத்தில்  அதே போல் இன்னொரு வி.ஐ.பி சிபாரிசுக்கூட்டம்  உள்ளே நுழைந்தனர்.  மீண்டும் கூச்சல் எழ, அருகில் இருந்த பெண்மணி எங்களை பார்த்து யூத் லாம் இதை தட்டி கேட்க்க வேண்டாமா என கேட்க, எங்களுடன் வந்ததிலேயே மிகவும் யூத்தான கிருபா பொங்கி எழுந்துவிட்டான்.  “வி.ஐ.பிகள் சிபாரிசு வாங்கி அனைவரும் ஓசியில் நோகாமல்  செல்கின்றனர். இங்கே காசு கொடுத்து நீண்ட நேரமாய் நிக்கிறோம். இதை தட்டி கேட்க்க யாருமே இல்லையா” என்பதை அய்யர் பாஷையும் சென்னை பாஷையும் கலந்து ஒருவர் சத்தம் போட்டார். பல நிமிடங்கள் அவர் அதையே உரக்க கத்த, கூடவே பலரும் சேர்த்து கத்த, கோவில் நிர்வாகிகளும், அங்கே இருந்த போலிசும் கூடிவிட்டனர். அனைவரும் அவர்களை  வசைபாடினார்.

ஒருவர் ஒரு படி மேலே போய் ஆயிரம் ரூபாய் தரேன் என்னையும் சீக்கிரம் உள்ளே உடுங்கோ என்றார். வி.ஐ.பி தரிசனம் தடைபட்டது. அதன் பிறகு கடித்தை வைத்துக்கொண்டு குறுக்கே நுழைய முயன்ற பெண்களையும், ஆண்களையும் பாரபட்சம் இல்லாமல் வெளியே தள்ளினர். கோவில் முக்கிய நிர்வாகப்பெண் ஒருவர் அங்கேயே வந்து நின்றுக்கொண்டார். போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் ஒருவர் அந்த பெண்மணியிடம் வந்து மெதுவாய் டி.எஸ்.பி குடும்பத்தில் இருந்து சிலர் வந்து இருக்கிறார்கள் அவர்களை மட்டும் என்று ஆரம்பிக்க நன்றாக வாங்கிக்கட்டிக்கொண்டார்.

IMG_7156

இவ்வளவு போராட்டங்களையும் தாண்டி, கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் கால்கள் கடுக்க வரிசையில் நின்று,  சோர்வாகி சன்னதியில் நுழைத்தேன். கருவறை ஒரே இருட்டாக இருந்தது. விளக்கு வெளிச்சத்தில் உள்ளே இருக்கும் சிலை சரியாக தெரியவில்லை. சன்னதியில் மட்டும் வரிசை மிக வேகமாக நகர்ந்துக்கொண்டு இருந்தது. கருவறை வாயிலில் நிறைய கோவில் பணியார்கள் நின்று அனைவரையும் தள்ளிவிட்டுக்கொண்டு இருந்தனர். மெல்ல மெல்ல கருவறை அருகில் சென்றதும் சிலையின் உடல் பாகம் மட்டும் எனக்கு தெரிந்தது. ரங்கநாதர் படுத்து இருந்தார். ஆனால் முகம் மறைந்து இருந்தது, சரியாக தெரியவில்லை.

அருகில் சென்றதும் பார்த்துவிடலாம் என்றிருந்தேன்.  எனக்கு முன்னர் இருந்தவர்கள் நகர்ந்துவிட்டனர். இப்போது என்னுடைய வாய்ப்பு.  கருவறை வாயிலை நெருங்கி இருந்தேன். சட்டென ஒரு கை என்னை இழுத்து முன்னே தள்ளி விட்டது. சற்று தடுமாறி நானாகவே சுதாரித்து சிலையை பார்க்க தலை நிமிர்கிறேன். சிலையின் உருவத்தை இருட்டில் அடையாளம் கண்டு அதன் முகத்தை பார்க்கும் அந்த நொடியில் இன்னொரு கை அப்படியே இழுத்து பின்னால் தள்ளியது. அப்படியே வரிசையாக ஒவ்வொரு பணியாளர்களும் என்னை வெளியே இழுத்து விட்டனர்.  அனைத்தும் ஓரிரு நொடிகளில் முடிந்து விட்டது. அவ்வளவு தான் தரிசனம். 250 ரூபாய் பணம். பல மணி நேரம் கால் கடுக்க நின்றிருக்கிறேன். இவ்வளவு கஷ்டப்பட்டு கடைசி வரை சிலையை முழுதாய் கூட காண அவர்கள் விடவில்லையே என்று எனக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. நான் வெளிய தள்ளப்பட்ட மறு நிமிடமே ஆதிராஜ்ஜும் என் பின்னால் வந்து சேர்ந்தார்.

“ஜி.. ஒரு சந்தேகம்.”  என ஆரமித்தார். அவர் முகத்தில் ஒரு கலவரம் தெரிந்தது.

“என்ன அதி?”

“ஒரே குழப்பமா இருக்கு ஜி. நானும் எவ்வளவோ கஷ்டபட்டு பார்த்தேன். ஆனால் உள்ள சாமி சிலையவே காணோமே. உங்களுக்கு ஏதாவது தெரிஞ்சிதா?”

என்னுடைய கோபம் இப்போது தணிந்திருந்தது. “எனக்காவது சாமி தலையை தான் காணோம், அவருக்கு சாமி சிலையையே காணோம்.”

Comments (10)

VivekanandanJanuary 3rd, 2013 at 7:02 am

ஹலோ ஜி

Last week I went to Srirangam @ 26 Dec 2012. Same thing happened for me also. We all are gone the 250 rupees ticket, even though it tooks 4 hours to complete the darshan and finaly i saw the dark room.

Why Blood Same Blood !!!!!!!!!!!

கடைசி இரண்டு வரி சிரிப்பை அடக்க முடியல :)))

தலைப்பை மறந்துவிட்டுத்தான் படித்தேன். சுவாரசியமான அனுபவம். ஆனால் கண்முன்னே விரியும் வண்ணம் விவரங்கள்..

வாழ்த்துகள்

appajiJanuary 4th, 2013 at 7:09 am

இதை படிக்கும் பொது மிக கஷ்டமாய் உள்ளது…வாஸ்தவமாய்..சிலர் சிபார்சின் பேரில் முதலில் செல்கின்றனர்…தவிர்கமுடியாத விஷயம் …விட்டு தள்ளுங்கள்….ஆனால்…ரங்கநாதரை காண வில்லை..என கூறாதீர்கள்…ரங்கநாதர் ஆசீர்வாதம் இருந்ததால் மட்டுமே தாங்கள் மூலஸ்தானம் வரை சென்று வந்து இருக்கிறீர்கள்

(தங்களுக்கு கோபம் அதிகமாகி பொறுமை இல்லாமல் இருந்து இருந்தால் இன்னொருநாள் பார்த்து கொள்ளலாம் என வந்து இருக்கலாம்…ஆனால் ரங்கநாதர் விடவில்லை பாருங்கள்…)

அந்த கிடைத்த நேரத்தில்..இணையத்தில் புதிதாக என்ன செய்யலாம் என மூளையை கசக்கலாமே …பிரவீன்.

எனவே ரங்கநாதரின் ஆசீர்வாதம் தங்களுக்கு இருக்கிறது …..இன்னும் டாலர் கொட்டும்…..காணமல் போன ரங்கநாதரை தங்கள் மனதில் தேடுங்கள்…வெற்றி நிச்சயம் பிரவீன்..!!! புது வருட பொங்கல் நல் வாழ்த்துக்கள்..தங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும்..!

திருப்திக்கு சென்றால் எத்தனை மணி நேரம் காத்து இருக்கிறோம் ?
இணைய தொடர்பு ஒரு நாள் இல்லாமல் போனால் என்ன செய்ய முடியும் நம்மால்? மின்சாரம் இல்லை என்ன செய்ய முடியும் நம்மால்?
டாக்டரிடம் செல்கிறோம்….எத்தனை மணி நேரம் காத்து இருக்கிறோம் ? வக்கிலிடம் செல்கிறோம்….எத்தனை மணி நேரம் காத்து இருக்கிறோம்?
புது சினிமாவிற்கு ? இதே போல் நிறைய …சொல்லலாம் …..யோசித்து பாருங்கள்…..பிரவீன்

என்றும் தங்கள்
– அப்பாஜி, கடலூர்

RaghavanJanuary 4th, 2013 at 8:33 am

Welcome to Srirangam _/\_ 😉

பிரவீன்January 4th, 2013 at 9:19 am

நன்றி அப்பாஜி. நீங்கள் சொல்வது சரிதான். எனக்கும் அது புரிந்திருந்தது. தலைப்பை வைத்து தவறான கோணத்தில் அதை எடுத்துக்கொள்ள வேண்டாம். அங்கிருக்கும் அதிகாரிகளின் தவறான போக்கை பதிவு செய்யவே இதை எழுதினேன். தள்ளிவிடுவதும், இழுத்து வெளியே தள்ளுவதும் எந்த விதத்தில் நியாயம்?. அதனால் கூட வந்தவருக்கு கடைசிவரை ரங்கநாதர் தரிசனம் கிடைக்கவில்லை. என்னை விடுங்கள். கிடைத்த இரண்டு நொடிகளில் அந்த இருட்டிய அறையில் அவரால் எதையும் காணமுடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளார்.

appajiJanuary 4th, 2013 at 1:46 pm

நன்றி பிரவீன் ….அடுத்தமுறை ஸ்ரீரங்கம் செல்லும்முன் என்னை தொடர்பு கொள்ளவும்….(சிபாரிசு கடிதத்திற்கு வழி சொல்ல மாட்டேன்) …நல்ல சில விஷயங்களை பகிர்ந்து கொள்வேன்..

vairamaniJanuary 8th, 2013 at 10:49 pm

நீங்களாவது பரவாயில்லை. நான்கு ஐந்து முறை சீரங்கம் சென்றும் உற்சவரையே மூலவர் என நினைத்தேன் . ஒரு நண்பர் விரிவாக கூறிய பின்னரே கூர்ந்து பார்த்தேன். நான் கூறுவது 1968 இல். பட்டாசாரியார் காட்டும் விளக்குஒளியில் நம் கண்களில் உற்சவர் தான் பதிவார் மூலவர் பதியும் முன் விரட்டப்படுவோம்

hari ramJanuary 23rd, 2013 at 2:25 am

உளன் எனில் உளன், இலன் எனில் ………………..

rathnavel natarajanJanuary 29th, 2013 at 4:51 pm

அனைத்தும் ஓரிரு நொடிகளில் முடிந்து விட்டது. அவ்வளவு தான் தரிசனம். 250 ரூபாய் பணம். பல மணி நேரம் கால் கடுக்க நின்றிருக்கிறேன். இவ்வளவு கஷ்டப்பட்டு கடைசி வரை சிலையை முழுதாய் கூட காண அவர்கள் விடவில்லையே என்று எனக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது

நிஜம் தான். கோவில்களை வியாபார ஸ்தலங்களாகவும், சர்க்கஸ் மாதிரியும் மாற்றி விட்டார்கள்.
மனக்குமுறல்களை வெளியிட்ட அருமையான பதிவு. வாழ்த்துகள் திரு ப்ரவீண்.

wajiraFebruary 18th, 2014 at 10:06 am

அய்யா ! கடவுளைக்காந கடும் கஷ்ட்டம் வேண்டாம் , மனுஷனப்பருங்க !

Leave a comment

Your comment