ரயில் பயணங்களில் – சென்னை பயணம் பாகம் ஒன்று

சரியாக ஒரு வருடத்திற்கு பிறகு மீண்டும் கடந்த வெள்ளிக்கிழமை இரவு சிங்கார சென்னைக்கு செல்ல நேரிட்டது. ஆனால் இம்முறை அது பணி நிமித்தமான பயணம். இரவு எட்டு முப்பது மணிக்கு சேலம் ஜங்சனை நோக்கி என் வாகனம் சீறிக்கொண்டு செல்லும்போது திடீரென என் மொபைல் அலறியது.. ட்ரிங்.. ட்ரிங்.. இல்லை இல்லை.. (அது பழைய டெலிபோன் அழைப்பை குறிக்க பயன்படுத்தும் வார்த்தை.) இப்போது “கண்ணோரம் காதல் வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும் வேறொன்றும் தேவை இல்லை நீ மட்டும் போதும் போதும்” என்ற ரிங் டோனுடன்.

இன்னும் அரைமணி நேரம் தான் ரயில் புறப்பட நேரம் இருக்கிறது. அவசரம்…  அதனால் அழைப்பை எடுக்க வில்லை.. ஓரிரு நிமிடங்களில் மீண்டும் ரிங் டோன் ஒலித்தது.  அட யாராக இருப்பார்கள். தொடர்ந்து அழைத்துக்கொண்டு இருக்கிறார்களே. ஏதேனும் மறந்து விட்டோமென்று வீட்டிலிருந்து அழைக்கிறார்களோ? ரயில் டிக்கெட்டை வைத்து விட்டு வந்து விட்டோமோ? இப்படி பல கேள்விகள் எழுந்ததால் பாக்கெட்டில் இருந்த மொபைலை எடுத்து பார்த்தேன். ஒரு புதிய நம்பரிலிருந்து வந்து கொண்டிருந்தது அந்த அழைப்பு. யாராக இருந்தாலும் பிறகு பேசிக்கொள்ளலாம் என்று நான் அந்த அழைப்பை ஏற்கவில்லை. மொபைல் மீண்டும் பாக்கட்டிற்கு சென்றது. வாகனம் சேலம் ஜங்சனை நோக்கி மீண்டும் சீறிப்பறந்தது.

இப்போது நேரம் சரியாக ஒன்பது மணி. இடம் சேலம் ஜங்சன் – சேலம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு கம்பார்ட்மெண்டில் நான் அமர்ந்திருக்கிறேன். பிளாட்பார கடைகள் மெல்ல மெல்ல ஜன்னலோரத்தில் பின்னோக்கி நகர்கிறது. ரயில் பெட்டியின் வாயிலின் அருகிலேயே என்னுடைய பர்த் இருந்ததால் ஒருவர் என்னுடைய கம்பார்ட்மெண்டை நோக்கி ஓடி வருவது தெரிந்தது.  ஆனால் ரயில் இப்போது இன்னும்சிறிது வேகமெடுத்துக்கொண்டு இருந்தது. அவர் கையில் ஒரு பெரிய லக்கேஜ் வைத்துக்கொண்டு ரயில் போகும் திசையிலிருந்து அவர் எதிர் திசையில் இருந்து வந்துகொண்டிருப்பதை பார்த்ததும் என் உள்ளுணர்வு ஆலாரம் அடித்து.

அவர் அந்த லக்கேஜை தன் இரு கைகளால் தன் நெஞ்சிற்கு நேரே தூக்கியவாறு உள்ளே தாவமுயல்கையில் அவர் கணிப்பு தவறுகிறது. டாமார் என்ற சப்தம். நிலை தடுமாறி கீழே விழுகிறார். இத்தனையும் என் கண் முன்னே நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. நான் அவருக்கு உதவ என் இருப்பிடம் இருந்து கதவை நோக்கி உடனே நகர்கிறேன். அவர் உடல் முன்பகுதி அந்த நுழைவாயிலின் தரையில் சரிந்து விழுந்த போதும் அவர் கைகள் அவர் கொண்டு வந்திருந்த அந்த லக்கஜையே இறுக்கமாக பற்றி இருந்தது. அவரின் கால்கள் வெளியே தொங்கியவாறு பிளாட்பாரத்தில் உரசிக்கொண்டு இருந்தது. என்னை நோக்கிய அவர் கண்கள் என்னை உதவிக்கு அழைப்பது போலிருந்தது.

நான் அவர் அருகே செல்லும் அந்த சில வினாடிக்குள்ளே பிளாட்பாரத்தில் சென்று கொண்டிருந்தவர்கள்  அவரை வெளியே இழுத்துப்போட்டு விட்டனர். நான் இப்போது நுழைவாயிலின் கைப்பிடியை பிடித்துக்கொண்டு வெளியே தலையை நீட்டி அவரைப்பார்க்கிறேன்.  என்ன நினைத்தாரோ தெரியவில்லை என் பார்வையில் இருந்து அவர் முழுதாக மறையும் வரை இன்னும் என்னை நோக்கியே பார்த்துக்கொண்டு இருந்தார்.  அவர் உடலில் நடுக்கமும் , முகத்தில் இயலாமையும், கண்களிலே பயமும் தெரிந்தது. இத்தனையும் சில நொடிப்போழுதுகளில் நடந்து முடிந்துவிட்டது.

உள்ளே திரும்பி பார்த்தால் அனைவரின் கவனமும் என் மீதே இருந்தது. நான் ஒருவரை வெளியே தள்ளி விட்டது போல் இருந்தது இவர்களின் பார்வை. அடுத்து பத்து பதினைந்து நிமிடத்திற்கு அந்த ரயிலை தவறவிட்டவரை விமர்சனம் செய்தே சோர்ந்து போனது அக்கூட்டம். பாவம் மனிதர். அவர் சென்னை செல்ல விழைந்த நோக்கம் எதுவாக வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். அடுத்த நாள் அவருக்கு ஒரு பெரிய கம்பனியில்(கெக்ரான் மெக்ரான் கம்பெனியாக கூட இருக்கலாம்) இன்டர்வியூவாக இருக்க கூடும். அல்லது சென்னையில் ஆஸ்பிட்டலில் சேர்க்கப்பட்ட அவருடைய உறவினரை காண அவசரமாக செல்ல வேண்டியிருக்கலாம்.

இப்படி ஏதேனும் ஒரு அவசர பயணமாக இருந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. அப்படி இருக்கையில் அவருடைய சிறு தவறு, இந்த பயணத்தை முழுதாக ரத்து செய்ய நேரிட்டிருக்கலாம், ஏன்  அவருடைய வாழ்கையையே இது புரட்டிப்போட்டு இருக்கக்கூடும். சரி அவர் செய்த தவறு தான் என்ன?

1, சரியான நேரத்தில் அவர் போர்டிங் செய்து இருக்க வேண்டும். கடைசி நிமிட செயல்கள் எல்லோருக்கும் ஒரு வித படபடப்பையே  ஏற்படுத்தும். அதுவே அவர் கணிப்பை பொய்கச்செய்ததில் சிறு பங்கு இருந்திருக்கும்

2, இரண்டாவது….. அவர் ரயில் சென்ற திசையின் எதிர் திசையில் இருந்து ஓடி வந்து ஏற முயற்சித்தார். அவர் செய்த பெரும் தவறு இதுவே. அவர் கணிப்பின் படி நுழைவாயில் அவர் நுழைவதற்குள்ளாகவே அது முன்னே நகர்ந்து இவர் ரயில் பெட்டியில் மோதுவதற்கே வாய்ப்பு அதிகம்.  ரயில் பயணித்த திசையில் அவரும் சிறிது தூரம் ஓடிவந்து தாவி இருந்தால் அவருக்கு இந்த பிரச்சனை நேர்ந்து இருக்காமல் இருந்திருக்கலாம்.

3, அவருடைய லக்கேஜை முதலில் உள்ளே போட்டுவிட்டு பிறகு அவர் ஏற முயற்சித்து இருந்தால் இன்னும் அவருக்கு சுலபமாக இருந்து இருக்கும். கடைசி வரை அதை பற்றிக்கொண்டே தன் பயணவாய்ப்பை இழந்து விட்டார்.

4, இத்தனைக்கும் மேலாக அவர் செய்த முக்கிய தவறு. அவர் இதுநாள் வரை தமிழ் சினிமாக்களை சரிவர பார்க்காமல் இருந்திருக்கிறார். ஒவ்வொரு தமிழ் சினிமாக்களிலும் ஓடும் பஸ்சில் ஏறுவதும், ஓடும் ரயிலில் ஏறுவதும் எப்படி என்ற காட்சி கண்டிப்பாக இருக்கும். அவர் சமிபத்தில் வந்த “கண்டேன் காதலை” திரைப்படத்தின் டிரைலரை பார்த்து இருந்திருந்தால் கூட அதில் ஓடும் ரயிலில் தமன்னா எப்படி ஏறுகிறார் என கண்டு தப்பித்து இருக்கலாம்.

ஆனால் ஒன்று. இச்சம்பவம் அவருக்கு ஒரு மிகப்பெரிய பாடத்தை கற்றுக்கொடுத்து இருக்கும். அதெல்லாம் சரி, நான் வரும் போது யாரோ எனக்கு தொடர்ந்து மொபைலில் அழைத்துக்கொண்டு இருந்தார்களே யார் அவர்? ஏதேனும் முக்கியமான விசயத்திற்கு அவர் மீண்டும் மீண்டும் அழைத்திருந்தால்!!! நான் அவரை திரும்ப அழைக்கவில்லையே என்ற ஞாபகம் வந்தது.  அவசரமாக நான் என் மொபைலை எடுத்து பார்க்கிறேன். அதே நம்பரில் இருந்து எனக்கு ஒரு குறுந்தகவல் வந்து இருக்கிறது.

பிரித்து பார்த்தால் “ஹாய் பிரவீன். இது என்னுடைய மாற்று மொபைல் நம்பர். ஏதேனும் பேசவேண்டுமென்றால் இதற்கு கூப்பிடவும்” என்று மட்டும் மொட்டையாக முடிந்திருந்தது. மேலும் கீழே மேலே அந்த குறுஞ்செய்தியை நகர்திப்பார்கிறேன் அனுப்பியவர் பெயரே இல்லை. குழப்பம்…. நூற்றுக்கணக்கான காண்டக்ட்ஸ் என் மொபைலில் இருப்பதால் அதில் யாரென நான் இவரை நினைப்பது. என் மொபைலில் இருந்து அந்த நம்பருக்கு இப்போது நான் அழைக்கிறேன்.

எதிர் முனையில் அவர்: “ஹலோ பிரவீன், நான் உங்களுக்கு இரண்டு முறை கூப்பிட்டேன் நீங்கள் போனையே எடுக்கவில்லை”.

நான்: “ஆம், நான் அப்போது அவசரமாக வாகனத்தில் வந்து கொண்டு இருந்தேன்…. சரி நீங்கள்..”

எதிர்முனையில்: “நான் உங்களுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பி இருந்தேனே. பார்க்கவில்லையா? என்னோட மொபைல் பாட்டரி இல்லாமல் ஸ்விட்ச் ஆப் ஆகி விட்டது. இது தான் என்னுடைய   மற்றொரு நம்பர். நீங்கள் இதை பதிவு செய்து வைத்துக்கொள்ளுங்கள்.  இப்போது நீங்கள்  எங்கு இருக்கிறீர்கள்?”

நான்: “இப்போது ரயிலில் பயணம் செய்துகொண்டு இருக்கிறேன்.”

எதிர் முனையில்: “சரி. நான் இன்னும் சிறிது நிமிடத்தில் பஸ் ஏற போகிறேன். ஏறிய பிறகு மீண்டும் கூப்பிடுகிறேன்.” என்று அழைப்பை துண்டித்தார்.

எல்லாவற்றையும் சரியாக சொல்லிவிட்டு கடைசி வரை பேரை சொல்லாமல் அவர் வைத்துவிட்டார். அந்த சிறு உரையாடலிலேயே அவரை நான் கண்டுவிட்டதால்  போனை பாக்கெட்டில் வைத்து என்னுடைய மிடில் பர்த்தில் படுக்க ஆயத்தமானேன். பயணம் தொடரும்…

Comments (5)

LogeshSeptember 4th, 2010 at 1:13 pm

ஆஹா பயங்கர சஸ்பென்ஸ்.. அந்த நபரை இந்த இடுகையை படிக்க சொல்லுங்கள்.. ஹா ஹா ..

பிரவீன்September 4th, 2010 at 1:28 pm

நன்றி லோகேஷ்… அவருக்கு அனுப்பி இருக்கிறேன்.. பார்ப்போம்… ஹி ஹீ…

JageeSeptember 6th, 2010 at 12:58 pm

There are 2 comedians in this scene. One is ‘The last minute Passenger’ the other one is????

பிரவீன்September 6th, 2010 at 1:02 pm

ஹ ஹா.. கண்டிப்பா நான் பேரை சொல்ல மாட்டேன் ஜகீ,,,,

Selvakumar MSeptember 26th, 2010 at 6:19 pm

I hate such ppl who does not share their name on the first instant. It is very difficult to remember/recall their names in the short messages.

Please advice to share his/her name when send messages from new number.

Leave a comment

Your comment