Tag Archives: கவிதைகள்

பல “வரி” கவிதை

 

tax

உழைத்து சம்பாதித்தால் “வருமான வரி”.
தங்கறதுக்கு “வீட்டு வரி”.
தாகம் தணிக்க “தண்ணி வரி”.
வெளிய போகணும்னா “சாலை வரி”.
சந்தோஷமா இருக்க “கேளிக்கை வரி”.
என்ன வாங்கினாலும் “விற்பனை வரி”.
எதை பண்ணினாலும் “சேவை வரி”.
சேர்த்துவச்சா “சொத்து வரி”.
தரமா வேணும்னா “சுங்க வரி”.
எதுவும் பத்தலைன்னு “மதிப்புகூட்டு வரி”.
இத்தனையும் மீறி நீ ஜாலியா இருந்தா,
மவனே கட்டுறா “சொகுசு வரி”.

இத்தோட இல்லாம,
அடுத்து வரும்பார் “சிறப்பு வரி”.
புள்ள பொறந்தா “பிறப்பு வரி”.
புட்டுகிட்டாலும் “எறிப்பு வரி”.
காசு வாங்கி ஒட்டு போட்ட நாட்டுல
யார் எக்கேடுகெட்டாலும் எல்லாம் சரி…

– பிரவீன் குமார் செ.

பிகு: 15% சேவை வரி உயர்வை கண்டு காண்டானதில் கிறுக்கியது.

Share

நண்பர்கள் தின வாழ்த்துக்கள் – கவிதை

friendship day tamil poem

மனைவி மட்டும் அல்ல…
நண்பர்கள் அமைவதும் இறைவன் கொடுத்த வரம் தான்.

என் சந்தோசத்தை தன் சந்தோசமாக
நினைத்து மகிழும் என் நலம் விரும்பிகளுக்கும்,

துக்கங்களிலும், தோல்விகளிலும் என்னை துவண்டுவிடாமல்
தோள்கொடுத்து உற்சாகப்படுத்தும் சக்திமான்களுக்கும்,

தவறுகளை கண்டும் காணாமல் போய்விடாது
அதை சுட்டிக்காட்டி என்னை நெறிப்படுத்தும் புத்திமான்களுக்கும்,

பேசத்துடித்தும் பேசமுடியா தூரத்தில்
காலத்தால் கடத்தப்பட்டபட்ட நல்லுள்ளங்களுக்கும்,

வேறுவழியில்லாமல் என்னிடம் பேசியே ஆகவேண்டிய
நிர்பந்தத்தில் கிடத்தப்பட்ட பாக்கியவான்களுக்கும்,

நட்பின் போர்வையில் இன்னும் தன் சுயரூபத்தை
வெளிக்காட்ட வாய்ப்புகிடைக்காத புண்ணியவான்களுக்கும்,

என் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!

– பிரவீன் குமார் செ.

Share

செய் அல்லது செத்து மடி – கவிதை

 

IMG_7829

எங்கு நோக்கினும் சுயநலவாதிகள்.
எங்கு கேட்டினும் பொய்கள், புரட்டுக்கள்.
எங்கு சென்றினும் நம்பிக்கை துரோகிகள்.
நம் வெற்றியை கண்டு
உளம் மகிழ யாருமில்லை என்றாலும்
நம் தோல்வியை கொண்டாட
பெரும் கூட்டமே இங்கு காத்திருக்கிறது…
சற்று தடுமாறினாலும்,
நம்மை உயிரோடு விழுங்க
அது தூங்காமல் விழித்திருக்கிறது.

“காலம் கனியும்”
என காத்திருத்தலும் பயனுக்கில்லை.
“வாழ் அல்லது வாழவிடு”
என்ற அறசீற்றமும் பிரயோஜனமில்லை.
உனக்கு இருக்கும் ஒரே வழி,
“செய் அல்லது செத்து மடி..”

– பிரவீன் குமார் செ

Share

மௌனக்கதறல்கள்

work.2155729.3.flat,550x550,075,f.guilt-or-blaze-with-anger-burn-with-shame

பெண்ணே!
உன் செவியில் கேட்கிறதா?
உன் விரல் படாத பூக்களின்
மௌனக்கதறல்களை.

பெண்ணே!
உன் கண்ணில் தெரிகிறதா?
உன் பாதம்படாத மண்துகள்களின்
ஏக்கப்பெருமூச்சுகளை.

பெண்ணே!
உன் மனம் அறிகிறதா?
உன் ஸ்பரிசம் படாத காற்றின்
அழுகை அலைவரிசையை.

பெண்ணே!
உன் இதயம் புரிகிறதா?
உன் பார்வைபடாத என் ஜீவனின்
மரண அவஸ்தைகளை.

பெண்ணே!
உன் ஆறாம் அறிவு உணர்கிறதா?
உன்னால் ஏங்கும் என் தேகத்தின்
உயிர் கசிவுகளை!

– பிரவீன் குமார்

Share

கி.பி 2020 – கவிதை

Future India

கதிரவன் பூமிக்கு கரம் தந்த நேரம்.
இயந்திர வாழ்க்கை தொடங்குகிறது என்று
அலாரம் அடிக்க தொடங்கியது.
எழுந்ததும் படிக்கும் நாளிதழ் பழக்கம்
இப்போது உருமாறி விட்டது என்பதினால்
செய்தி காண கணினித்திரை விரிந்தது!

செவ்வாய் கிரகத்தில் ஆராய்ந்து முடித்து
பூமி திரும்புகிறான்  இந்தியன் என்றும்,
வேலை தேடி இந்தியாவிற்கு
படையெடுக்கும் அமெரிக்கர் என்றும்
விரிந்து சென்றது இணையவலை.

லஞ்சம் இல்லா அரசியலால்
எதுவும் சாத்தியம் என்றேதான்
நெஞ்சம் சொல்லியது என்னோடு
அது உண்மையானது இன்றோடு.

இந்த சந்தோஷ அலையில்
மனம் பயணித்த வேளையில்
ஏதோ ஞாபகம் வந்தது போல்
இணையதளத்தை மாற்றினேன்.
இந்தியாவின் தலைசிறந்த பள்ளியொன்றின்
இணயதளம் தான் அது.

என் மகனை அதில் சேர்க்க
விண்ணப்ப படிவத்தை திறந்து பார்த்தேன்.
பெயர்
முகவரி
புகைப்படமென்று
நீண்டு சென்ற அதன் நடுவே,
ஜா….தி நின்றது வெறியோடு
அது இன்னும் அழியவில்லை மனிதச்சதையோடு!

இரும்பாக இந்தியா மாறினாலும்
துருவொன்று இருக்கத்தானே செய்யுமென்று
மனதை தேற்றிய நேரத்தில்
வெளியே யாரோ அழைப்பது கேட்டது.

கதவை திறந்து நான் பார்த்தேன்
ஒரு முறை தேற்றிய என்மனதை
மறுமுறை தேற்ற முடியவில்லை.
வெளியே
திருவோட்டோடு பிச்சைக்காரன்!

– பிரவீன் குமார் செ

பி.கு: இது 2003ம் வருடம் நான் எழுதியது.. அதற்குள்ளே இதோ 2011 வந்துவிட்டது. நல்லவேளை 2020 வருவதற்குள் இதை பதிவித்துவிட்டேன்.

Share