Tag Archives: விஜய்

கத்தி vs ரமணா – ஒரு அலசல்

kaththi vs Ramana movie

சேலம் மாவட்டம், எடப்பாடியில் உள்ள கலையரங்கம் திரையரங்கில் முதல் நாள் முதல் காட்சி “கத்தி” திரைப்படம் சென்றேன். “ ‘ரமணா’ மாதிரி பவர்புல்லா ஒரு படம் கூட அதன் பிறகு  நீங்க பண்ணலையேனு கேட்டவங்க யாரும் ‘கத்தி’ பாத்துட்டு அப்படி சொல்லமாட்டங்க” என்ற முருகதாஸின் வார்த்தைக்காக அந்த ரிஸ்க் எடுத்தேன். ரமணா பக்கத்தில் கூட இந்த படம் நிற்கப்போவதில்லை என்று படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே தெரிந்தது. இது முதல் பாதி டிபிகல் விஜய் படம். இரண்டாம் பாதி முருகதாஸ் + விஜய் படம்.

கொல்கத்தா சிறையில் இருந்து தப்பிக்கும் கத்தி என்கிற கதிரேசன் முதல் காட்சியிலேயே தான் ஒரு இன்டலெக்ஸுவல் கிரிமினல் என்று நம்மில் ஒரு பரபரப்பை ஏற்படுத்துகிறார். கத்தி யார்? எதுக்கு சிறைக்கு செல்கிறான்? அங்கிருந்து ஏன் தப்பிக்கிறான்? என்று துவக்கதிலேயே கதை சூடு பிடிக்கிறதே என்று கொஞ்சம் நிமிர்த்து உட்கார்ந்தால் அடுத்த காட்சியிலேயே அது புஸ்ஸ்…

சதீசுடன் சேர்த்து இந்தியாவை விட்டு ஓடி தப்பிப்பதற்கு பாங்காக் கிளம்புவதும், விமான நிலையத்தில் சமந்தாவை பார்த்ததும் பாங்காக் டிக்கெட்டை கிழித்து போட்டுவிட்டு அவரை உருகி காதல் பண்ண துவங்குவதும், உடனே பாட்டு நடனம் என்று காட்சிகள் மாறும்போது நம் காதில் பூ சுற்றப்பட்டுக்கொண்டு இருக்கிறது என்று தெளிவாக புரிந்தது. ரமணாவின்  ஆரம்பம்  முதலே  ஒரு டென்ஷன் மெயின்டென் செய்யப்பட்டு  இருந்தது.  ஆனால் இங்கு  இன்னொரு விஜய், ஜீவானந்தமாக திரையில் அறிமுகமாகியும் கொஞ்சமும் சுவாரசியம் இல்லை. கத்தி ஜீவானந்தமாக மாறி அதன் பிறகு வந்த காட்சிகள் கூட எதுவுமே கதைக்குள் நுழையவில்லை.

ஏனோ இப்போது “சுறா”  படத்தை பார்த்த பாதிப்பு  வேறு எனக்குள் அப்போ அப்போ எட்டிப்பார்த்துக்கொண்டு இருந்தது.  ரமணா மாதிரின்னு முருகதாஸ் சொன்னாரே. துப்பாக்கி மாதிரி கூட இல்லையே என்று யோசிக்கும் போது, ஒரு டாகுமெண்டரி மூலம் பிளாஸ் பேக் சொல்லப்படுகிறது. ஒட்டுமொத்த மீடியாவின் கவனத்தை பெற, ஒரு நல்ல விஷயத்திற்கு, கூட்டமாக விவசாயிகள் தற்கொலை  செய்துக்கொள்கின்றனர்.  யாரும் போயிடாதீங்க. படத்தில் கதை இருக்கிறது என்ற ஒரு சிக்னல் அது. ஆனால் அந்த தற்கொலை பின்னணி நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ரமணாவின்  பிளாஸ் பேக் இன்னமும் மறக்க முடியுமா? ரமணா விஸ்வரூபம் எடுக்க, அந்த காதபாத்திரத்தின் மேல் மதிப்பு வர அது மிகவும் உதவியிருந்தது.

முதல் பாதி முடிந்ததும், இண்டர்வல் பிளாக்கில் “I am waiting” என்று துப்பாக்கி  படத்தில் வருவது போல விஜய் சொன்னதும் வெறுப்பின் உச்சத்தில் “I am Leaving”  என்று சொல்லிவிட்டு உடனே கிளம்பலாம் என்று கூட தோன்றியது.  பட் “ரமணா மாதிரி”னு முருகதாஸ் சொன்னாரே? வடகுப்பட்டி ராமசாமியிடம் பணம் வாங்கியே தீருவேன் என்று கவுண்டமணி அனைத்து இன்னல்களையும் பொறுத்துக்கொண்டு சைக்கிள் தள்ளிக்கொண்டு சென்றது போல் நானும் அந்த “ரமணா மாதிரி”யை  கண்டே ஆகவேண்டும் என்று பொறுத்துக்கொண்டு சீட்டில் உட்கார்ந்து இருந்தேன்.

ஸ்க்ரீனில்  பிரேமை அழகாக காட்ட ப்ராபர்ட்டி பயன்படுவது போல சமந்தா பயன்படுத்தப்பட்டு இருந்தார். இயக்குனர் “நீ தானே என் பொன் வசந்தம்” படத்தை பார்த்து இருந்தால் சமந்தாவை இப்படி வீணடித்திருக்கமாட்டார் . ஒருவேளை அஞ்சான் போஸ்டர் பார்த்துவிட்டு புக் செய்துவிட்டார் போல.  சதீஷையும் இந்த படத்தில் நான் ரொம்ப எதிர்பார்த்தேன். ஆனால் அவரும் சரியாக பயன்படுத்தப்படவில்லை. இரண்டாம் பாதியில் மீண்டும் வழக்கம்  போல நடக்கும் நாடகத்தன்மையான காட்சிகளுக்கு பிறகு ப்ரீ க்ளைமாக்சில் வந்தது முருகதாஸ் சொன்ன அந்த ”ரமணா மாதிரி”.

கார்பரேட் கம்பனிகளுக்கு எதிராகவும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் நம் நீர்நிலைகளை பாதுகாக்க விஜய் பேசும் அந்த வசனங்கள் இருக்கிறதே.  நமது ரத்தம் சூடேறி, நாடி நரம்பு புடைக்க, கண்கள் சிவந்து ஒரு உணர்ச்சிக்குவியலாய் நம்மை மாற்றும் தருணம் அவை. ரமணாவில் விஜயகாந்த் கூறும் புள்ளி விவரங்களை போல் இதில் விஜய் பேசி கைதட்டல்களையும், விசில்களையும் அள்ளுகிறார். கார்பரேட் கம்பனிகள் எப்படி நம் நாட்டின் வளத்தை சுரண்டுகிறது, அதனால் விவசாயிகளும், ஏழை மக்களும் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்று மிகத்துணிச்சலாய் பதிவு செய்திருக்கிறார் முருகதாஸ்.

விஜய் மல்லையாவின் கடன் பாக்கிகளும், 2 ஜி அலைக்கற்றை மோசடிகள் போன்றவைகள் அனைவரும் ஏற்கனவே அறிந்திருந்தாலும், விஜய் பேசுவதை கேட்க்கும் போது அவர் ரசிகர்களின் உடல் சிலிர்ப்பதை யாராலும் தவிர்க்க முடியாதுதான். இப்படி ஒரு கான்சப்ட்டை படமாக எடுக்க நினைத்த முருகதாஸ் அவர்களுக்கு ஹாட்ஸ் ஆப். அருமையான வசனம். யோசிக்கவைக்கும்  பல  விஷயங்களை சொல்லி இருக்கிறார். அதற்காக அவருக்கு வாழ்த்துக்கள். பட் ரமணா மாதிரின்னு சொன்னாரே. இருப்பினும் அந்த வசனக்காட்சியோடு படம் முடிந்திருந்தால் ஒரு திருப்தியோடு வெளியே வந்திருக்கலாம் ஆனால் அதன் பிறகு வந்த க்ளைமாக்ஸ் தான் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை.

கடைசி காட்சியில் “யார் பெற்ற மகனோ” என்று அந்த கத்தி கதாபத்திரம் விடைபெருவதைக்கண்டு துளியும் பாதிப்பு இல்லை. ரமணாவில் அந்த க்ளைமாக்ஸ் எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது?  எவ்வளவு நல்ல படமாக இருந்தாலும் ரசிக்க வைத்தாலும், கடைசி சில நிமிடங்களும், க்ளைமாக்ஸும் பிடிக்கவில்லை என்றால் திருப்தி இல்லாத ஒரு மனநிலையிலேயே திரையரங்கை விட்டு வெளியேறும்படி அது ஏற்படுத்தும்.(உதாரணம்: புதுப்பேட்டை). அதே போல பாதிக்கக்கூடிய அல்லது மிகவும் ரசிக்கும்படியான  கடைசி நிமிடங்களும், க்ளைமாக்ஸும் படத்தின் முந்தைய குறைகளை யோசிக்கவிடாமல் பரவசநிலையிலேயே நம்மை வீட்டிற்கு அனுப்பிவைக்கும். (உதாரணம்: சுசீந்தரனின் “ஆதலால் காதல் செய்வீர்”).  ஆனால் இந்த படம் ரெண்டாவது கேட்டகிரியில் கூட வரவில்லை.

ரமணா கேரக்டரில் ஒரு நம்பகத்தன்மை இருந்தது. அதிலும் சினிமாத்தனம் இருப்பினும், லாஜிக் குறைகள் இருப்பினும் அதை யோசிக்கவிடாமல் அந்த நம்பகத்தன்மை காப்பற்றியது. படத்தின் ஒவ்வொரு காட்சியும் சுவாரசியம் குறையாமல் அதன் திரைக்கதை பார்த்துகொண்டது. ஆனால் கத்தியில் இரண்டு  சொல்லிக்கொள்ளும்படியான காட்சிகளும்,  சமூகத்துக்கான  ஒரு  நல்ல  கருத்தும்  கிடைத்ததால்  அந்த எக்சைட்மென்டில் விஜயை மட்டும்  நம்பி  திரைக்கதையை  கோட்டைவிட்டுவிட்டார்.

முருகதாசிடம் எனக்கு மிகவும் பிடித்ததே அவருடைய கூர்மையான வசனங்களும், மேக்கிங் ஸ்டைலும். திரைக்கதையில் சொதப்பி இருந்தாலும் இந்த திரைப்படத்தில் அவருடைய வசனமும், மேக்கிங்கும் அடுத்தகட்டத்திற்கு சென்றுள்ளது. துப்பாக்கியில் ராணுவ வீரர்களின் துயரத்தை மிகவும் நுணுக்கமாக ஓரிடத்தில் வசனத்தில் சொன்ன அவர் இதில் விவசாயிகளின் துயரத்தை அதே பாணியின் இன்னும் நுணுக்காமாய் சொல்லி இருக்கிறார். மிகவும் பிசியாக உள்ள சென்னை விமானநிலையத்தில் அனுமதி வாங்கி ஒரு முழு பாடலும், சில காட்சிகளும் படமாக்கிஇருப்பது ப்ராக்டிகலாக சாதாரணவிஷயம் இல்லை. “ஆத்தி” பாடல் மேக்கிங்கும் அதற்க்கு சான்றாகும்.

ஆனால் தன்னுடைய அரசியல் கருத்துகளை முன்வைக்க விஜயகாந்தை ரமணாவில் பயன்படுத்திக்கொண்ட முருகதாஸ், கத்தியில் திரைப்படத்தில் விஜயின் அரசியல் ஆசைக்கு தானே பயன்பட்டு போனார். அது தான் மிகபெரிய வித்தயாசத்தை இதில் ஏற்படுத்தி இருக்கிறது. . இவ்வளவு ஆழமான ஒரு விஷயத்தை. அதுவும் விவசாயிளுக்கு ஆதரவான ஒரு கருத்தை எடுத்துக்கொண்டு அதை விஜய் ரசிகர்களுக்காக சினிமாத்தனம் செய்ததால் ஒரு நல்ல படைப்பை கொடுத்திருக்க வேண்டிய வாய்ப்பை அவர் தவறவிட்டுவிட்டார். இதனால் இந்த “கத்தி” இன்னொரு “ரமணா”வாக வராமல் போய்விட்டது.

“ரமணா மாதிரி”யாக வேண்டுமானால்  இது இருந்து விட்டு போகட்டும்.  ஆனால் விஜயகாந்தின் அரசியல் வாழ்க்கைக்கு ரமணா செய்ததை நிச்சயம் விஜய்க்கு இந்த கத்தி செய்யப்போவதில்லை.

Share

ஜில்லாவும் வீரமும் – இது விமர்சனம் அல்ல நிதர்சனம்

 

jilla veeram movie review

ஏற்கனவே விஜய் ரசிகர்களுக்கும் அஜித் ரசிகர்களுக்கும் ரொம்பா நாளா வாய்க்கா தகராறு, இதுல வேற கிட்ட தட்ட ஏழு வருடம் கழித்து தல-தளபதியின் திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகியிருக்கிறது. ஹ்ம்ம் ஸ்டார்ட் ம்யூசிக்… பேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் தாரத்தப்பட்டைகள் கிழிந்து தொங்க வேண்டாமா? எனக்கு ஒரு கண்ணு போனாலும் பரவாயில்லை எதிரிக்கு ரெண்டு கண்ணும் போகணும்னு என்கின்ற ரேஞ்சிக்கு இவர் படத்தை அவர்களும், அவர் படத்தை இவர்களும் முழு நேர தொழிலாய் இணையத்தில் கழுவி கழுவி ஊற்றிக்கொண்டு இருக்கிறார்கள். படம் எப்படி இருந்தாலும் இவர்களின் ஒவ்வொரு ரசிகர்களும் அதை பார்த்து விடுவார்கள். ஆனால் இவர்களின் சண்டையால் எந்த படம் சிறந்த படம் என்று உறுதிப்படுத்திக்கொண்டு திரையரங்கம் செல்ல சாமானியர்கள் தான் தடுமாறவேண்டியிருக்கிறது.

ரிலீஸ் ஆன அன்று சேலம் கைலாஸ் பிரகாஷ் திரையரங்கில் “ஜில்லா” இரவுக்காட்சிக்கு புக் செய்திருந்தேன். 10:30 மணிக்கு காட்சி தொடங்கும் என்பதால் சுமார் 10 மணிக்கே போயிருந்தோம். திருவிழா மாதிரி கூட்டம். 10:30 மணி ஆகியும் முந்தைய காட்சி முடிந்து யாரும் வெளிவரவில்லை. சாலையிலேயே அனைவரும் கூட்டம் கூடமாய் காத்திருக்கவேண்டிய சூழ்நிலை. விஜய் போஸ்டர், கட் அவுட் அருகே நின்று நிறையே பேர் தங்களை புகைப்படம் எடுத்துக்கொண்டும், அதை பேஸ்புக்கில் அப்லோட் செய்துக்கொண்டும் இருந்தனர். மணி சுமார் பதினொன்று ஆனது. இரண்டு தியேட்டருக்கான கூட்டமும் சாலையில் பொறுமையிழந்து இருந்ததால் தள்ளுமுள்ளு கூச்சல் ஏற்பட்டது.

போலீஸ்காரர் “தம்பி புரிஞ்சிக்கோங்கப்பா. ரொம்ப நீளமான படமாம்… அதுமட்டும் இல்லாமல் லேட்டா தான் போட்டாங்களாம்.. தயவு செஞ்சி வெயிட் செய்யுங்க… பணம் சம்பாதிக்கறது அவுங்க, நாங்க இங்க உங்களுக்கு பதில் சொல்லிட்டு இருக்கறோம்” என்று சொல்லி கூட்டத்தை அமைதிப்படுத்திக்கொண்டு இருந்தார். ஒருவழியாய் படம் முடிந்து எங்களுடைய காட்சி சுமார் பதினொன்று முப்பதுக்கு தொடங்கியது. வழக்கமாய் ஹாய் சொல்லி நம்மை வரவேற்கும் முகேஷ் அன்று விடுப்பு எடுத்திருந்தார். (ஒருவேளை முந்தைய காட்சி முழு படம் பார்த்து இருப்பாரோ?).

படம் மூன்று மணி நேரம் நீளம். இருபது நிமிடம் இடைவேளை வேறு. ஒருவழியாய் படம் முடிந்து வெளியே வந்த போது மணி சுமார் மூன்று. வீட்டிற்கு வந்தால் அம்மா வாசல் தெளித்து கோலம் போட்டுக்கொண்டு இருந்தார். அப்படியே இன்னும் கொஞ்ச நேரம் முழிச்சி இருந்தேன்னா கோவிலுக்கு போலாம் இன்னைக்கு ஏகாதேசி. சொர்க்கவாசல் திறக்கும் என்றார். நான் என்னுடைய ரூம் வாசலை சாத்திவிட்டு என் கனவு வாசலை திறந்துவைத்தேன். என்னா அடி… ஒரு மனுஷனுக்கு ரெஸ்ட் வேணாமா!?

ஜில்லா:

 • ஜில்லாவை பொறுத்தவரை சாதாரண கதை தான் என்றாலும் சுத்தமாய் சுவாரசியமாய் இல்லாத திரைக்கதையும், வழக்கமான டெம்ப்ளட் காட்சியும், காதை பஞ்சராக்கும் பஞ்ச் டயலாக்குகளும் நிறைந்த வழக்கமான விஜய் படம். இதை நடுநிசியில் நான் பார்க்கவேண்டும் என்று என் விதி இருந்திருக்கிறது.
 • என்னுடன் வந்த இரண்டு நண்பர்களில் ஒருவர் இடைவேளையின் போதே வீட்டிற்க்கு போய்விடலாம் தூக்கம் வருது என்றார். (ஒன்னரை மணி). இன்னொரு நபரோ இடைவேளை பிறகு காஜல் அகர்வால் டான்ஸ் இருக்கும் அதனால வெயிட் பண்ணுவோம் என்றார். விதி மீண்டும் விளையாடியது.
 • இந்த படத்தில் எனக்கு இரண்டு பாடல்கள் பிடித்திருந்தது. மீதம் ரசிகர்களிடையே அல்ரெடி ஹிட். படத்தின் பின்னணி இசையும் அபாரம். மொத்தத்தில் இமான் கொஞ்சம் இந்த படத்தை தாங்கி இருக்கிறார்.
 • இப்படி ஒரு வழக்கமான மசாலா படம் என்று தெரிந்தும் மூன்று மணி நேரத்திற்கு எடிட்டர் ஏன் ஜவ்வனே இழுத்தார் என்று தெரியவில்லை!
 • “பசங்க” ஸ்ரீ ராம் விஜயின் விடலை பருவ கதாபாத்திரத்திற்கும், விஜயின் விடலை பருவ கதாபாத்திரத்திற்கு வரும் பையன் சம்பத்திற்கும் பொருத்தமாய் இருந்தும் ஏன் மாற்றி நடிக்கவைத்தார்கள் என தெரியவில்லை.
 • படம் ஏன் நீளம்னு யோசிச்சு பார்த்தால் சரியான ஒரு காரணம் தென்பட்டது. படம் இரண்டரை மணி நேரத்திற்கு தான் எடுத்து இருப்பார்கள் போல. ஆனால் சண்டைகாட்சிகளில் விஜயிடம் அடிவாங்கும் ஒவ்வொருவரும் ஸ்லோ மோஷனில் பறந்து விழுந்து ஆளுக்கு தலா ஒரு நிமிடம் எடுத்துக்கொள்கிறார்கள். இப்படி முப்பது பேர் அடிவாங்கியவுடன் உடனே கீழே விழாததால் படம் முப்பது நிமிடம் நீண்டு விட்டது.

விஜய்க்கு உண்மையிலேயே செம மாஸ் இருக்கிறது. குழந்தைகளுக்கும் அவரை பிடிக்கும். மரணமொக்கை படங்களையும் அதை மொக்கை என்று ஏற்றுக்கொள்ளாமல் அதை கொண்டாடும் ரசிகர்கள் இருக்கிறார்கள். எப்படிபட்ட படத்திற்கும் கண்டிப்பாக ஓபனிங் காரண்டி இருக்கு. அப்படி இருந்தும் அவர் நல்ல படங்களை கொடுக்க முயலாமல் தொடர்ந்து ஒரே மாதிரி படங்கள் கொடுக்கும் ரகசியம் தான் புலப்படவில்லை. ஒரு காலத்தில் விஜய்யின் பரமரசிகனாய் இருந்திருக்கிறேன். அது திருமலை வரை.

அதுவரை ஒவ்வொரு படங்களிலும் வித்யாசமமான கதைகளில் நடித்துக்கொண்டு இருந்தவர் தனக்கான ரூட் பிடித்துவிட்டதாய் எண்ணி தொடந்து பஞ்ச் டயலாக் பேசி பேசியே வில்லன்களை பஞ்சராக்கிக்கொண்டு இருந்தார். இதை அவரும் கூட தனது பேட்டிகளில் உறுதிபடுத்தியிருக்கிறார். நடுவில் அத்தி பூத்தார் போல் கில்லி, காவலன், துப்பாக்கி போன்ற படங்களும் வரத்தான் செய்தது. பத்துவருடங்களுக்கு இவ்வளவு தான் என்றால் இது தொடரும் பட்சத்தில் அவருடைய பாதி சினிமா வாழ்க்கை நம்மை ஏமாற்றியதாகவே இருக்கப்போகிறது.

வீரம்:

 • இதுவும் சாதாரண கதை தான் என்றாலும், ரசிகர்களை குறிவைத்து எடுத்திருந்தாலும் குறைந்தபட்சம் கொஞ்சம் சுவாரசியமாய் திரைக்கதையில் சொல்ல முயற்சி செய்திருக்கிறார்கள். சந்தானம் காமடியும் அதற்க்கு நிறைய உதவி இருக்கிறது.
 • தேவையான இடங்களில் மட்டும் பஞ்ச் டயாலக் வைத்தும் சில இடங்களில் அதை ரசிக்கும்படி இருந்ததாலும் அந்த அளவுக்கு காது கிழியவில்லை.
 • பாடல்களும், பின்னணி இசையும் படு மொக்கை. பாடல்கள் நன்றாக இருந்திருந்தால் இன்னும் படத்தை சப்போர்ட் செய்திருக்கும்.
 • அஜீத் ஏன் இன்னமும் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வருகிறார் என்று தெரியவில்லை. மங்காத்தா படம் ஓகே. ஆனால் இதில் அப்படியே தமன்னாவின் அப்பா போலவே இருக்கிறார். தந்தையும் மகளும் டூயட் பாடுவதை பார்க்க கொஞ்சம் சங்கடமாக இருக்கிறது.
 • ரயில் சண்டைகாட்சி அமைப்பு மிக நன்றாக இருந்தது. மாஸ்னா என்னனு தெரியாதவங்களுக்கு அந்த காட்சிகளில் புரிந்துக்கொள்ளமுடியும்.
 • · தமன்னா வெள்ளை பொம்மைன்னு எல்லாருக்கும் தெரியும் அனால் அவர் அஜித் பக்கத்தில் நிற்கும்போது அஜித் கூட கொஞ்சம் கருப்பாக தான் தெரிகிறார். என்னா கலரு!

விஜயை போலவே அஜீத்திற்கும் செம மாஸ் இருக்கிறது. நல்ல ஓபனிங் இருக்கிறது. ஆனால் விஜய் தெளிவாய் ஒரு தப்பான ரூட் பிடித்து போய்க்கொண்டு இருக்கிறார். ஆனால் இவர் எந்த பாதையில் போவது, எந்த கதையை தேர்ந்தெடுப்பது என்று தவறான படங்கள் கமிட் செய்கிறார். இயக்குனர்களும் அவரை பயன்படுத்திக்கொள்கிறார்கள். இவருக்கும் எப்போவாவது அத்திபூத்தார்போல் நல்லா படம் அதுவாக அமைகிறது.

ரசிகர்களை மட்டுமே குறிவைத்து படம் எடுக்கும் போக்கை விட்டு விரைவில் இவர்கள் மாற வேண்டும். புறக்கணிப்பு இல்லாமல் மாற்றம் நிகழப்போவதில்லை. குறைந்தபட்சம் இன்னொரு ரசிகர்களிடம் சண்டை போடாத அளவிற்கு முதிர்ச்சி ஏற்பட்டு அங்கிருத்து அந்த மாற்றம் ஏற்படவேண்டும். ஆனால் அதற்கான சாத்தியம் இருப்பதாய் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை.

ஒரு வேலை நீங்கள் தல-தளபதி ரசிகர்கள் அல்லாத பட்சத்தில் நிச்சயம் இந்த இரண்டு திரைப்படமும் பார்த்தே தீரவேண்டிய படம் இல்லை. அப்படி எதோ ஒரு படம் குடும்பத்தோட பொங்கலுக்கு போகணும்னு விருப்பம் இருந்தால் வீரம் “முயற்சி” செய்யலாம். ரிஸ்க் எடுக்க “வீரம்” இல்லாதவங்க பொங்கல் சாப்பிட்டுவிட்டு சன் டிவியிலோ, விஜய் டிவியிலோ இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக எனப்படும் ஏதேனும் ஒன்றை பார்க்கவும். எப்படியும் அடுத்த தீபாவளிக்கு இந்த இரண்டு படமும் உங்கள் வீடு தேடி வரும்! குமுதா ஹாப்பி அண்ணாச்சி?

 

Share

சுறா விமர்சனம் – சொந்த காசில் சூனியம்

பெரியோர்களே, தாய்மார்களே இதனால் தெரிவிப்பது என்னவென்றால் சுறானு ஒரு உலக தமிழ் சினிமா வந்திருக்கிறது. தெரியாம அந்த தியேட்டர் பக்கம் கூட போயிடாதீங்க. நாலு நாளைக்கு தூங்க மாட்டீங்க.  நானும் விஜய் விசிறியாக தான் இருந்தேன். அது இஸ்கூல் காலேஜு படிக்கும் போது. இப்போ மட்டும் அந்த உலக நடிகனை நேரில்  பார்த்தேன் அவ்ளோதான். ஒரு மனசாட்சியே இல்லாம ஒரு படத்தை எடுத்து இருக்காங்க. பொறுமைக்கும் ஒரு அளவு இருக்கு மிஸ்டர் விஜய். கடந்த ஐந்து வருடமா ஒரே படத்தை அதுவும் உங்க படத்தையே ரீமேக் பண்ணிட்டு இருக்கீங்களே. இது உங்களுக்கே நியாயமா?

ஒரு வருசமா ரூம் போட்டு யோசிச்சு எழுதின  சுறா கதை என்னன்னா, விஜய் ஒரு மீனவ குப்பத்துக்கே தலைவர். அவரை  கேட்காமே அந்த ஊர்ல குழந்தை கூட சூ சூ போகாது. அவ்ளோ பவர்புல் ஆள் அவரு. அதுக்கு கைமாறாக அங்க இருக்க ஆயிரம் குடும்பங்களுக்கும் வீடு கட்டி கொடுக்கறது தான் அவருடைய வாழ்க்கை லட்சியம். இதுல வில்லன் அந்த குப்பத்த அழித்து தீம் பார்க் கட்ட திட்டம் போடுறார். அதை தடுத்து, வில்லன் பணத்தையே லவுட்டி குப்பத்தில் வீடு கட்டுகிறார் விஜய். இடையில் ஐந்து சண்டை, ஐந்து பாட்டு… பாட்டுக்கு முன்னாடி தமன்னா வந்து அட்டண்டன்சு போட்டுடுவாங்க. அப்பேற்பட்ட சென்சிடிவ் கதையை தன்னுடைய ஐம்பதாவது படத்திற்கு தேர்ந்தெடுத்த விஜயின் வியூகம் புல்லரிக்கிறது. நான் இயக்குனரை குறை கூற மாட்டேன். விஜய்கிட்ட கால்ஷீட் வாங்கனும்னா எப்படிப்பட்ட கதை பண்ணனும்னு அவருக்கு தெரிஞ்சி இருக்கு. ஆக மொத்தம் ரெண்டு பெரும் சேர்ந்து பொது மக்களை மொக்க போட்டுட்டாங்க.

வடிவேலு அப்போ அப்போ தனி ட்ராக்ல வந்து காமெடி பண்ண ட்ரை பண்ணி எரிச்சல் பண்றார். ரெண்டு வாட்டி சிரிக்கலாம் அவ்ளோதான். தமன்னா பாவம் படத்துல வேலையே இல்ல. விஜய் படத்துல எந்த நடிகைக்கு வேலை இருக்கும். விஜய் பேசறதுக்கே இரண்டரை மணி நேரம் போதவில்லை அப்படி இருக்க தமன்னா என்ன பண்ணுவாங்க? தமன்னாவினுடைய தற்கொலை முயற்சி அறுவையோ அறுவை. விஜய் தம்பி  படம் முழுக்க பஞ்ச் டயலாக்கு பேசியே கொல்றார். பேசற ஸ்டைல் இருக்கே சான்சே இல்ல. கொடுமை. அப்போ மழை மட்டும் பேயவில்லை என்றால் பாதி படத்துலேயே எந்திரிச்சு வந்து  இருப்பேன்.

படத்துல எனக்கு பிடிச்ச ஒரே விஷயம் வில்லன் தான். சூப்பரா நடிச்சிட்டு இருந்தார் விஜயை பார்க்கும் வரை. ஆனால் அவர்கிட்ட பஞ்ச் டயலாக்கு பேசி பேசியே அவரையும் ஒரு வழி பண்ணிட்டார் நம்ம விஜய். யாரை தான் பேச விடறார் படத்துல. ஒரு சாம்பில் “உன் வலைல மாட்ட நான் ஒன்னும் இறா இல்லடா. சுறா….”. இந்த படத்துக்கு செலவு பண்ணின தண்ட காசுக்கு மேற்கூறிய அந்த ரெண்டு ஆயிட்டதையும் ஒரு நல்ல ஹோட்டல்ல வாங்கி சாப்பிட்டுவிட்டு போயிருக்கலாம். அப்புறம் ஏன் இந்த படத்துக்கு போனிங்கன்னு கேட்பது எனக்கு புரியுது. இன்டர்நெட்ல ஒரு ப்ளாகுல விமர்சனம் படிச்சிட்டு ஏமாந்துட்டேன். இனிமேல் விஜய் படத்த பார்க்கப்போறதா இல்லை.அப்படியே பார்க்கறதா இருந்தால் விஜய் ரசிகர் அல்லாத பிளாக் தேடி கண்டு பிடித்து படித்து விட்டு முடிவு செய்வேன்.

எப்புடி நடிச்சாலும் தியேட்டருல கூட்டம்  கூடுதுன்னு ஒரு காரணத்துக்காக விஜய் பண்ற அட்டகாசம் தாங்கல. அவரிடம் யாரும் உலக சினிமாவை யாரும் எதிர்பாக்கல ஜஸ்ட் ஒரு உருப்படியான சினிமா கொடுத்து ரசிகர்களை முட்டாளாக்காமல் இருக்க வேண்டாமா? கடைசியாக  ஒரே ஒரு வேண்டுகோள். சுறாவை டிஸ்கவரி சேனலில் பாருங்க தப்பே இல்லை. அட கடலுக்கு சென்று நேரில் கூட பாருங்கள் ஒன்னும் பண்ணாது. ஆனால் தியேட்டர்ல பார்த்துடாதீங்க அது பெரிய ரிஸ்க். விஜய் அவருடைய ஒரு ரசிகரை இழக்க வேண்டியது வரும்.

Share