Tag Archives: பிரவீன்

பூரணி weds பிரவீன் – எனக்கு கல்யாணம் :-)

அன்பு நண்பர்களே….

அம்மாவின் கைப்பிடித்து நடை பழகிக்கொண்டேன்.
அப்பாவின் கைப்பிடித்து உலகம் அறிந்துகொண்டேன்.
ஆசான் கைப்பிடித்து அறிவை வளர்த்துக்கொண்டேன்.
தாய் மாமாவின் கைப்பிடித்து வாழ்வை உணர்ந்துகொண்டேன்.

இப்போது கனவு, லட்சியம், தொழில் என்று
யார் கையையும் பிடிக்காமல்,
நான்  தனியாக ஓடிக்கொண்டு இருக்கையில்,
வாழ்க்கை ஓர் அதிசயத்தை நிகழ்த்தியது.
“பூரணி” என்ற தாரகை மூலம்
என் வாழ்க்கை ”பூரணம்” ஆகவேண்டும் என்று அது உணர்த்தியது.
என்னவளைக் கண்டுபிடித்துவிட்டேன்.
மோதிரம் அணிவித்து இருவரும் ஓர் உறுதி ஏற்றுக்கொண்டோம்!

அதன்படி 29 மே 2015 அன்று,  கோயம்புத்தூர் (சாமளாபுரம்), முத்துசாமி-வேலுமணி  அவர்களது புதல்வியும், சிவகுமார் அவர்களின் சகோதரியுமான, பூரணி என்கின்ற பெண்ணை, அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில் திருமணம் செய்து, என் வாழ்க்கையின் அடுத்த பரிணாமத்தை துவங்க இருக்கிறேன். அதைத்தொடர்ந்து 31 மே 2015 ஞாயிற்றுக்கிழமை அன்று, சேலம் அன்னதானபட்டியில் உள்ள, ராஜம்மாள் திருமண மஹாலில் (11AM to 3PM) நடக்கும் திருமணவரவேற்பு  நிகழ்ச்சியில்,  நீங்கள் உங்கள் குடும்பத்துடன்  கலந்துக்கொண்டு எங்களை ஆசிர்வதித்து வாழ்த்துமாறு அன்புடன் அழைக்கிறேன்.

என்றும் அன்புடன்,
செ.பிரவீன் குமார்.
செல்பேசி – +91-98948-34151

பி.கு:  இடத்தின் வரைபடம் மற்றும் இந்த நிகழ்வை பற்றிய மேலும் விவரங்களுக்கு http://www.PooraniPraveen.com

Poorani weds Praveen - Wedding Reception Invitation

Share

நாடு கடந்த சேலம் – நக்கீரன் இதழில் எங்கள் பேட்டி

“நாடு கடந்த சேலம்” என்னும் தலைப்பில் நக்கீரன் செப்டம்பர் 14, 2011 இதழில் எங்களுடைய முயற்சி பதிவு செய்யப்பட்டு உள்ளது!  மேலும் படிக்க கீழுள்ள படத்தை கிளிக் செய்து பெரிதாக்கவும். இம்முயற்சியில் எங்களுடன் இணைய ஆர்வமுள்ளோர் இவ்வலைப்பூவில் உள்ள “தொடர்பு கொள்க” பகுதியில் மூலம் எனக்கு செய்தி அனுப்பவும் அல்லது கீழே கருத்திடவும்.

Nakkeran Salem 28 Project news

இம்முயற்சியை பற்றிய மேலும் தகவலுக்கு கீழுள்ள பதிவுகளை வாசிக்கவும்.
1. சேலம் 28 – ஆனந்த விகடனில் வெளியான என் பேட்டி
2. சகோதர சேலம் நகரங்களை இணைப்போம் வாரீர்!

Share

சேலம் 28 – ஆனந்த விகடனில் வெளியான என் பேட்டி

“சேலம் 28 – சேலங்களைத் தேடி ஓர் உலக உலா!” – உலகம் முழுக்கப் பரவி இருக்கும் சேலங்களைக் கண்டுபிடிக்க கிளம்பி இருக்கும் பிரவீன்குமாரின் முயற்சிக்குச் சூட்டியிருக்கும் பெயர் இது! உலகம் முழுக்க சேலம் என்கிற பெயரில் இருக்கும் ஊர்களைத் தேடிப் பிடித்து அங்கு உள்ளவர்களுடன் ஒரு வலைப் பின்னல் ஏற்படுத்தும் முனைப்போடு செயல்படுகிறார் பிரவீன்குமார்.

”ஊர்ப் பாசம் அதிகம் எனக்கு. சொந்த மண்ணை விட்டுப் போக மனசு இல்லாமல் வெளியூரில் கிடைச்ச நல்ல வேலையை ஏத்துக்கவே இல்லை. ஏற்கெனவே பாலசுந்தரம்னு ஒருத்தர் 1960-ல் சேலத்தைப் பத்தி ஆராய்ச்சிப் பண்ணி இருக்கார்னு கேள்விப்பட்டு அவரைச் சந்திச்சேன். ‘உலகம் முழுக்க பல நாடுகள்ல சேலம்ங்கிற பேர்ல ஊர்கள் இருக்குது. அந்த ஊர்களில் வசிக்கும் முக்கிய நபர்களை எல்லாம் ஒருங்கிணைச்சு ஒரு இணைப்புப் பாலத்தை ஏற்படுத்த முயற்சி செஞ்சேன். என்னால் முடியலை. வயசாயிடுச்சு. நீயாவது செய்’னு சொன்னாரு.

அவரை மானசீக குருவா ஏத்துக்கிட்டு உலகத்துல சேலங்களைத் தேட ஆரம்பிச்சேன். அமெரிக்காவில் மட்டும் சேலம் என்கிற பேரில் 24 ஊர்கள் இருக்குது. தென் ஆப்பிரிக்கா, சுவீடன், ஜெர்மனி ஆகிய நாடுகளில் தலா ஒரு ஊர் இருக்கு. கணக்குப் போட்டுப் பார்த்தா, நம்ம ஊரோடு சேர்த்து உலகத்துல 28 சேலம் இருக்கு. இந்த 28 சேலத்தையும் ஒரு வட்டத்துக்குள் கொண்டுவரும் முயற்சியில் இறங்கி இருக்கேன்.

praveen salem 28 vikatan interview

அமெரிக்காவின் ஓரிஸான் மாகாணத்தைச் சேர்ந்த சேலத்தில் இருக்கும் ஜர்னலிஸ்ட் டிம்கிங் என்பவர் அறிமுகம் ஆனார். அவருக்கும் என் ஐடியா பிடிச்சுப் போயி என்னோடு கைகோத்துக்கிட்டார். சீக்கிரமே நம்ம சேலத்துக்கு அவர் வரப் போறார். நம்ம சேலத்து மக்களின் வாழ்க்கை முறை, கலாசாரம் போன்றவற்றை ஒரு குறும்படமாக இயக்கி  அவங்க ‘சேலத்தில்’ ஒளிபரப்பும் திட்டத்தோடு வர்றார்.

இதனால் என்ன லாபம்னு நீங்க கேட்கலாம். எல்லா சேலத்திலும் இருக்கும் சமூக சேவகர்கள், வர்த்தகர்கள்,  அதிகாரிகள் போன்ற பிரபலங்களை ஒருங்கிணைச்சா எவ்வளவு நல்லா இருக்கும். அந்நகர மக்களுக்குள்ள நட்பு உணர்வு ஏற்படும். வர்த்தகரீதியிலான தொடர்பில் துவங்கி கலாசாரப்  பகிர்தல் வரை ஏகப்பட்ட நன்மைகள் உண்டாகும். இந்த அமைப்புக்கு ‘மை சேலம்’னு பேருவெச்சிருக்கோம்.  இந்த அமைப்பில் சேர ஒரே தகுதி சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

www.salemjilla.com என்ற தளத்தில் சேலம் பற்றிய செய்திகள், புகைப்படங்களை தினமும் அப்டேட் பண்ணிட்டே இருப்போம். இப்போ உலகம் முழுக்க இருக்கும் சேலங்களை பத்தின செய்திகளையும் கொண்டுவரப் போறோம். எங்கேயும் சேலம்… எப்போதும் சேலம்… இதுதான் எங்க தாரக மந்திரம்!” சிலாகிக்கிறார் பிரவீன்.

– நன்றி “ஆனந்த விகடன் (10/08/2011) – என் விகடன்”

 

பெரிது படுத்தி பார்க்க கிளிக் செய்யவும்.

Praveen salem 28 vikatan interview coverPraveen salem 28 vikatan interviewPraveen salem 28 vikatan interview 1

Share

ஜெயா டீவியில் ஒளிபரப்பான என் முதல் நேர் காணல்

 

Praveen Kumar C In Jaya T.V

ஜனவரி 26, 2011 அன்று சென்னை ஈக்காடுதாங்கலில் உள்ள ஜெயா டீ.வி அலுவலகத்தில் நுழைகிறேன். ஏதோ ஒரு ஐ.டி கம்பனியில் நுழைந்த ஒரு எண்ணத்தை தோற்றுவித்தது அங்கே இருந்த பாதுகாவலர்களின் அணுகுமுறையும், அதன் அலுவலகத்தின் நுழைவாயிலும். குடியரசு தினம் என்பதாலோ என்னவோ அன்று அவர்களின் வரவேற்பறையில் நடமாட்டம் கொஞ்சம் கம்மியாக இருந்திருக்க வேண்டும். சிறிது உரையாடலுக்கும், சிறிது காத்திருத்தலுக்குப் பின்பு நான் உள்ளே ஸ்டுடியோவிற்குள் அழைத்துச்செல்லப்படுகிறேன்.

சேலம்ஜில்லா.காம் என்ற இணைய தளத்தின் நிறுவனர் என்பதாலும், கூகிள் சான்றளிக்கப்பட்ட  ஆட்வோர்ட்ஸ் நிபுணர் என்பதாலும் அதை பற்றி “தகவல்டெக்” என்ற நிகழ்ச்சிக்காக கலந்துரையாட வந்ததுதான் இந்த அழைப்பு. எதை பற்றி பேச போகிறோம், என்ன கேள்வி கேட்கப்படும் என்று எதுவுமே என்னிடம் கூறப்படவில்லை. குளிரூட்டப்பட்ட நிசப்தமான அறை. எனக்கான இடத்தில் அமர்த்து மைக் மாட்டப்பட்டு குரல் சரிபார்க்கப்படுகிறது. பளிச்சென்ற வெளிச்சம். மூன்று காமிராக்கள் என்னையே நோட்டமிடுகிறது. இது முகப்புதிது எனக்கு.

உள்ளே நுழையும் வரை என் மனதுக்குள் ஓடிக்கொண்டு இருந்தது இது தான். முதன் முறை காமிரா முன்பு அமர்கிறோம், சரியாக வருகிறதா என்று இரு நிமிடம் மானிடர் பார்ப்பார்கள் என எண்ணினேன். ஒவ்வொரு கேள்விக்கும் இடையே என்னை நான் தாயார் செய்துக்கொள்ள அவகாசம் கிடைக்கும் என நினைத்தேன். பதிலளிக்கும் போது ஏதேனும் தவறு நேர்ந்தால் மீண்டும் அதை பதிவு செய்வார்கள் என கருதினேன். ஆனால் அவற்றிற்கு எதுவும் வாய்ப்பளிக்காமல் “ரெடி, ஸ்டார்ட்” என்று மட்டும் தான் வந்தது ஒரு குரல்.  காமிரா  ஓடத்துவங்குகிறது. நிசப்தம் உடைகிறது. நினைத்ததிற்கு முற்றிலும் நேர்மாறாக  ஒரே டேக்கில் பதிவு செய்யப்பட்டது முழு நேர்காணலும்.

அதில் பிப்ரவரி 09 அன்று ஒளிபரப்பான சேலம்ஜில்லா.காம் பற்றி நான் பேசியதன் முதல் பகுதி தான் உங்கள் பார்வைக்கு இங்கே. பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்!

பின்குறிப்பு: என் முதல் தொலைக்காட்சி நேர்காணலிற்கு வாய்ப்பளித்த நிகழ்ச்சியாளர் பழனி அவர்களுக்கும், ஜெயா தொலைக்காட்சிக்கும் என் நன்றிகள்.

Share