Tag Archives: கௌதம் மேனன்

நீ தானே என் பொன்வசந்தம் – விமர்சனம்

Jeeva-Samantha-Neethane-En-Ponvasantham-Movie-review

மிகவும் எதிர்பார்புக்கிடையில் வெளியான படம் இந்த “நீ தானே என் பொன்வசந்தம்”. சொல்லபோனால் இளையராஜாவின் பாடல்களின் ஈர்ப்பின் காரணமாகத்தான் நான் இந்த படத்திற்கே சென்றிருந்தேன். அதுவும் குறிப்பாக சாய்ந்து.. சாய்ந்து பாடல்… அனைவரின் எதிர்பார்ப்பை உடைக்கும் ஒரு யுக்தியாய் படத்தின் கதையை ஏற்கனவே அதன் இயக்குனர் பல மேடைகளிலும், நேர்காணல்களிலும் சொல்லி இருக்கிறார். இருப்பினும் அந்த படத்தின் கதை இது தான்.

வருண் & நித்யா. இவர்களின் குழந்தை பருவம் முதல் பள்ளிப்பருவம், கல்லூரிப்பருவம், வேலை தேடும் இளைஞர் பருவம் வரை நடக்கும், நட்பு, சந்தோஷம், துக்கம், காதல், ஊடல் போன்ற உணர்வுகளை பதிவு செய்கிறார்கள். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மிகவும் நெருக்கமாகி பின்பு சண்டையிட்டு பிரியும் இவர்கள் இறுதியில் வரன் தேடும் கல்யாணப்பருவத்தில் ஒன்று சேர்கிறார்களா, இல்லையா என்பது தான் கதை.

சாய்ந்து சாய்ந்து பாடல்.. எவ்வளவு மென்மையாக, மனதை வருடுகிற ஒரு பாடல் இது. கவுதம் மேனன் ஏமாற்றிவிட்டார். என்னை கேட்டால் அதை படமாக்கி இருக்கவே வேண்டாம். சில பாடல்கள் வெறும் ஆடியோவில் அப்படியே விட்டுவிடுவது உத்தமம். வெறுமனே கண்களை மூடி அந்த பாடலை கேட்டாலே எவ்வளவு விஷுவல்கள். அதே மாதிரி “பெண்கள் என்றால்” பாடல், மிகவும் அழுத்தமான வரிகள். ஆனால் அதற்கான சிச்சுவேசனோ, எமோஷனோ காட்சிகளில் இல்லை.

படம் ஆரம்பம் முதல் இறுதிவரை வரை வருணும், நித்யாவும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஆண், பெண் இருவருக்கும் நட்பிலும், காதலிலும் நடக்கும் அத்தனை இனிமைகளும், கசப்புகளும் இவர்களுக்கும் நடக்கிறது. அழகான நிகழ்வுகள் அவை. ஆனால் சுவாரசியமான சம்பவங்களின் மூலம் திரைக்கதை நகராமல் அவர்களது உரையாடல்களின் மூலமாகே நகர்கிறது. இது பல இடங்களில் தொய்வை ஏற்படுத்தி பார்ப்பவர்களை போரடிக்க வைக்கிறது. அவ்வப்போது சந்தானம் வந்து கொஞ்சம் அந்த தொய்வை தாங்கிப்பிடிக்கிறார். ஆனால் இடைவேளைக்கு பிறகு வரும் அந்த சந்தானம்-ஜெனி லவ் பயங்கர கிளிசே. தற்சமயம் மாய்ந்து மாய்ந்து காதலிப்பவர்களும், சமீபத்தில் பிரிந்தவர்களும் ஒரு வேலை இந்த படம் மிகவும் பிடிக்கும் என நினைக்கிறேன்.

Jeeva-Samantha-Neethane-En-Ponvasantham-review

இத்தனையையும் மீறி படத்தின் கிளைமாக்ஸ் என்னை மிகவும் பாதித்தது. நித்யாவின் பார்வையில் படத்தை பார்த்தோமானால் மனதை கனக்கவைக்கும் தருணங்கள் அவை. வருணிற்கு திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. அந்த திருமண வரவேற்பிற்கு நித்யா செல்கிறாள். சிறு வயது முதல் அவன் தான் உலகம் என்று வாழ்ந்துவிட்ட அவளுக்கு இப்போது அனைத்தும் கை மீறி சென்று விட்டது. மேடையேறி கைகுழுக்க அவனிடம் கை நீட்டுகிறாள். வருண் அதை உதாசினப்படுத்த அப்போது அவள் முகத்தில் தோன்றும் அந்த ஒரு நொடி வெறுமையும், கண்கலங்கியவாறே அங்கிருந்து வெளியேறுவதும், ரியலிஸ்ட்டிக் டச். வலி மிகுந்த காட்சி அது.

இரவு வரவேற்ப்பு முடிந்து, விடிந்தால் வருணிற்கு திருமணம். இரவு வருணை காரில் அழைத்துக்கொண்டு சிறுவயதில் அவர்கள் சந்தித்த இடங்களுக்கு சென்று அந்த தருணங்களை நினைவு கூறுகின்றனர். அப்போது நித்யாவிற்குள் நடக்கும் மனப்போராட்டங்களும், உரையாடல்களும் எமோஷனின் உச்சம். எப்பேர்பட்ட மேஜிக் கிரியேட் பண்ணியிருக்க வேண்டிய படம். அனைத்து சரிவர இருந்தும் அழகான வாய்ப்பை கவுதம் தவறவிட்டுவிட்டார் என்றே எனக்கு தோன்றியது.

Share

என் பார்வையில் விண்ணைத்தாண்டி வருவாயா

கடந்த வெள்ளிக்கிழமை இரவு காட்சிக்கு விண்ணைத்தாண்டி வருவாயா  படத்திற்கு சென்றேன். படம் பார்த்துட்டு வரும்போது எனக்கு ஒன்னு மட்டும் தெளிவா புரிஞ்சிது.. கௌதம் மேனன் காலேஜ் படிச்சிட்டு சினிமா இயக்குனராக முயற்சித்த வேளையில் ஒரு ஓமன பெண்ணை “வீட்டை தாண்டி வருவாயா” ன்னு கேட்டு இருக்கார். மேடம் வரவில்லை. அந்த பீலிங்க்ஸ் தான் இப்போ “விண்ணைத்தாண்டி வருவாயா” வாக வெள்ளித்திரையில்…  இது முழுக்க முழுக்க கௌதம் மேனனின் சுயசரிதம். சுயசரிதம்னு சொல்றத விட அந்த பொண்ணு இந்த படத்த பார்த்து பீல் பண்ணனும்ன்னு எடுத்திருப்பார் போல.. “நான் ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்ணினேன்? நான் ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்ணினேன்?” படம் முழுக்க ஒரே பீலிங்குதான்.  எது எப்படியோ… அவர் ஒரிஜினல் மனைவி அவர பார்த்து வடிவேலு தோனியில “ஏய்… என்ன பீ…லிங்கு? ராஸ்கல்”ன்னு  கேட்காமல் இருந்தால் சரி.. அவ்வளோ உருகி இருக்கார் மனுஷன்….

சரி படத்துக்கு வருவோம்…. படம் நல்லா இருக்கா இல்லையா? ஓடுமா ஓடாதா? பதில்.. படம் “ஓடும் ஆனா ஓடாது” ரகம். எப்படின்னு கேட்கறீங்களா?… உங்களுக்கு ஏற்கனவே ஒரு முதல் காதல் தோல்வியில் முடிந்து உள்ளதா? அதுவும் கேரள பெண்ணா? மென்மையான காதல் படம் பிடிக்குமா? அட இதை விட ஒரு சூப்பர் படம் உலகத்துல இல்லை. காதலை பத்தி இதுக்கு மேல மென்மையாக, கவிதைத்துவமாக யாராலும் எடுக்க முடியாது. அவ்ளோ நுணுக்கமான எமோசனல் பிலிம்.

உங்களுக்கு காதல் தோல்வி வந்தது இல்லையா? மென்மையான(!!??) காதல் பிடிக்காதா? உங்களுக்கு பொறுமையாக படம் பார்க்க முடியாதா? காமடி, சண்டை வச்ச மசாலா படம் தான் புடிக்குமா? நீங்கள் அந்த ரகம் என்றால் தயவு செஞ்சு போயிடாதீங்க.. இத விட பெரிய மொக்கை படம் உலகத்து இல்லைன்னு பீல் பண்ணுவீங்க. படம் முழுக்க கடைசி வரைக்கும் சிம்பு திரிஷா பேசிகிட்டே இருப்பாங்க. என்ன பேசறாங்க எதுக்கு பேசறாங்கன்னு உங்களுக்கு சத்தியமா புரியாது.. சோ  வேணாம் விட்டுடுங்க.

முதலில் சொன்ன ரசிகர்களுக்கு படத்தை பற்றி மேலும்.. இது ஒரு இசை விருந்து.. ரஹ்மான் பின்னி இருக்கார். பின்னணி இசை மனதை வருடும் ரகம். கேமரா அருமையோ அருமை.. அதுவும் முக்கியமாக கேரளாவில் எடுக்கப்பட்ட காட்சிகள்.. சிம்பு படத்திற்கு தேவையான அளவு நடித்திருக்கிறார்.. பெரிய பிளஸ் அது.. இந்த படத்திற்கு பிறகு சிம்புவிற்கு ரசிகர் பட்டாளம் அதிகரிக்கும் என்பது நிச்சயம். ஆனா த்ரிஷாவ பத்தி தான் என்ன சொல்றதுன்னு தெரியல.. ஒரு சீன்ல நல்லா இருக்கு.. இன்னொரு சீன்ல நல்லாவே இருக்க மாட்டேங்குது.. ஒரு சீன்ல நல்லா நடிக்கிது. ஆனா இன்னொரு சீன்ல ஓவரா நடிக்குது.. இத நான் சொன்னா யாரும் நம்ப மாட்டேன்கிறாங்க. ஒரே  வார்த்தைல த்ரிஷா இந்த படத்துல சூப்பர்ங்கறாங்க!!! கடவுளே….

படத்தோட கதை என்னனு கேட்டீங்கனா.. கார்த்திக்.. அதாவது சிலம்பரசன், மெகானிகல் இன்ஜினியரிங் முடிச்சிட்டு உதவி சினிமா இயக்குனராக வேலை செய்ய முயற்சித்து கொண்டு இருக்கும் வேளையில், ஜெஸ்ஸி.. அதாவது த்ரிஷாவை பார்கிறார். பார்த்தவுடன்.. லவ்.. டூயட்…. “உலகத்துல எவ்ளோ பொண்ணுங்க இருக்கும் போது நான் ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்ணினேன்?.” படம் முழுக்க இதே வசனம் தான். த்ரிஷா படத்துல ஒரு சராசரி லூசு பொண்ணு. கொஞ்சம் நேரம் சிம்புவ லவ் பண்றாங்க.. கொஞ்ச நேரம் கழிச்சு இது ஒத்து வராது.. நீ கெளம்பு காத்து வரட்டும்னு மாத்தி மாதி பேசும் ரகம். சிம்புவே ஒரு கட்டத்துல “நீ கடைசில என்ன தான் சொல்லவர? லவ் பண்றியா இல்லையான்னு” கோவப்படுவாப்ள. கடைசில மேடம் சிம்புவ விட்டுட்டு வேற யாரையோ கல்யாணம் பண்ணிட்டு போய்டுவாங்க. சிம்பு அந்த பொண்ண நெனச்சி அவர் காதலை திரைக்கதை வசனம் எழுதி ஒரு படத்த எடுப்பாரு.. படம் சூப்பர் டூபர் ஹிட்.  படத்தோட பேரு “ஜெஸ்ஸி”.. படத்தோட கதைக்கரு “உலகத்துல எவ்ளோ பொண்ணுங்க இருக்கும் போது நான் ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்ணினேன்?”…

தியேட்டர் கமெண்ட்ஸ்:
(பொறுமை இழந்த) பக்கத்து இருக்கை அன்பர்:  “சேலத்துல எவ்ளோ படம் ஓடும் போது நான் ஏன் இந்த படத்துக்கு வந்தேன்??!!!”

Share