Tag Archives: கே.பி.என்

கே.பி.என் ட்ராவல்ஸ் எனக்கு காண்பித்த உயிர் பயம்

k.p.n. travels

கே.பி.என் ஆம்னி பஸ்கள் தொடர் விபத்தின் காரணமாக அதில் பிரயாணம் செய்வதை சமீபகாலாமாக தவிர்த்து வந்தேன். சென்ற மாதம் கூட ஒரு முக்கிய விஷயமாக சென்னை செல்வதற்கான அவசியம் ஏற்பட்டது. ரிட்டர்ன் ரயில் டிக்கெட் உறுதி செய்யப்பட்டும், புறப்படுவதற்கான டிக்கெட் கன்பார்ம் ஆகாமல் கடைசி நேரத்தில் கே.பி.என்’னையே நாட வேண்டி இருந்தது. எனக்கும், என்னுடன் வரவிருந்த ஒரு நண்பருக்கும் அதில் துளியும் இஸ்டமில்லை. அதனால் அந்த பிரயானத்தையே ரத்து செய்தோம். கே.பி.என்’னின் அலட்சியத்தால் ஏற்பட்ட தொடர் விபத்துகளும், உயிர் இழப்புகளுமே அதற்கு காரணம்.

சென்ற வாரம் மீண்டும் அவசரமாக சென்னை செல்ல நேரிட்டது. சென்னையில் இருந்து நண்பர் ஒருவர் சேலம் வந்திருந்தார். அன்று இரவே புறப்பட்டு மறுநாள் காலை இருவரும் சென்னையில் இருக்க வேண்டிய சூழ்நிலை. காலையிலேயே தட்கலில் இருவருக்கும் ரயில் டிக்கெட் பதிவு செய்தேன். இரண்டும் வெயிட்டிங் லிஸ்ட்டில் இருந்தது. இரவுக்குள் கன்பார்ம் ஆகிவிடும் என்று நம்பிக்கை இருந்தது. மாலையில் எனக்கு மட்டுமே டிக்கெட் கன்பார்ம் ஆனது, நண்பருக்கு கடைசி வரை கன்பார்ம் ஆகவில்லை.  மாலை வரை இதையே நம்பி இருந்தது தான் தப்பு!

வேறு வழி இல்லாமல் இருவருக்கும் உடனே கே.பி.என்’னில் டிக்கெட் பதிவு செய்தேன். குளிர் சாதனமற்ற பேருந்தில் கடைசி இரண்டு சீட் தான் கிடைத்தது. அதுவும் ஒரு டிக்கெட் ரூபாய் நானூறு என்று. விலை கொஞ்சம் அநியாயம் தான். அவ்வளவு விலை கொடுத்து ரிஸ்க் எடுக்கனுமா? தினமும் நாளேடுகளில் படித்த கே.பி.என் பேருந்துகளின் விபத்து செய்திகளும், புகைப்படங்களும் மனத்திரையில் விரிந்து மறைந்தது. எத்தனயோ பேருந்துகள் இவர்கள் இயக்குகிறார்கள், எல்லா பேருந்துமா விபத்தில் சிக்கியது? ச்சே ச்சே ஒன்னும் ஆகாது என மனதிலேயே நினைத்துக்கொண்டு பேருந்தில் ஏறினோம்.

நேரம் சுமார் இரவு பத்துமணி.. பேருந்து புறப்பட சில நிமிடங்களே இருந்ததால் ஒரு நபர் வந்து அனைவருடைய பயணச்சீட்டையும் ஒவ்வொன்றாக சரி பார்த்துக்கொண்டு இருந்தார். அப்போது தான் தெரிந்தது நான் அமர்ந்துள்ள சீட்டை என்னால் பின்னால் சாய்க்க முடியவில்லை. எவ்வளவோ முயற்சித்து பார்த்தும். ம்.ஹும்.. அசையவில்லை. ஒரு வேலை என்னால் அதை செய்ய முடியவில்லையா? முதன் விமான பயணத்தில் கூட சீட்டை பின் புறம் சாய்ப்பதில் எனக்கு சிரமம் இருந்ததில்லையே. ஒரு வேலை பேருந்தின் கடைசி சீட் என்பதால் அந்த வசதி இல்லையோ? சரி நண்பரின் சீட்டை சோதித்தால் தெரிந்துவிடும் என்று அருகில் திரும்பி பார்த்தேன். அவர் ஏற்கனவே தன் சீட்டை பின்னால் சாய்ந்து சொகுசாக தூங்க ஆயத்தமாகிக்கொண்டு இருந்தார்.

“அப்போ எனக்கு மட்டும் தான் இந்த சோதனையா!” என நினைத்துக்கொண்டு பேருந்து டிக்கெட் சரிபார்த்துக்கொண்டு இருந்த அந்த நடத்துனரை அழைத்தேன்! அவர் பல முறை அதை சாய்க்க முயற்சித்தும் கூட பலனில்லை. வேறொருவரை உடனே அனுப்பி வைக்கிறேன் என்று கூறி அவர் சென்றார். இரு நிமிடங்களில் பேருந்து நகர ஆரம்பித்தது. ஆனால் யாரும் அதுவரை வரவில்லை.  வேறென்ன செய்ய? அதனால் ஒன்னும் பாதிப்பில்லை என விட்டுவிட்டேன். அது தான் நான் செய்த தவறு என்பதை பின்பு உணர்ந்தேன். பேருந்து புறப்பட்டு அறை மணி நேரம் இருக்கும். முதுகும், கழுத்தும் சுள்ளென வலிக்கத் தொடங்கியது. தூக்கம் என் கண்ணை துளைத்தது. ஆனால் உறங்க முடியவில்லை. சீட் கொஞ்சம் சாய்ந்தவாறு பழுது அடைந்து இருந்திருந்தால் கூட இந்த பிரச்சனை இருந்திருக்காது. அதுவோ 90 டிகிரி நேர்கோட்டில் நின்று என்னை பாடாய்படுத்தியது.  என் நிலை புரிந்தவராய் நண்பர் தன் சீட்டில் இடம்மாற என்னை அழைத்தார். இது மிகவும் சிரமமாக இருக்கிறது, அவராவது நிம்மதியாக உறங்கட்டும் என மறுத்தேன்.

ஒருமணி நேரம் கூட இருக்காது, வலி உச்சமடைந்தது. என்னால் பொறுக்க இயலவில்லை. ஆத்திரம் அதிகரித்தது அந்த நடத்துனர் மேல்.  உடனே யாரேனும் அனுப்பி சரி செய்கிறேன் என்று கூறினாரே. எங்கே போனார்? சட்டென எழுந்து, முன்பக்கம்  நோக்கி நடந்தேன். அப்போது அனைவரும் தூக்கக்கலக்கத்தில் என்னை வித்யாசமாக பார்ப்பதை உணர்ந்தேன். ஏன் என தெரியவில்லை.  அனைத்து பார்வைகளையும் தாண்டிச்சென்று முன்பகுதியில் இருந்த கதவை தட்டினேன். ஓட்டுனரை தவிர மூவர் அங்கு அமர்ந்து இருந்தனர். ஆனால் நான் தேடிச்சென்ற அந்த நபரை காணவில்லை. பல முறை தட்டிய பிறகு கதவு திறக்கப்பட்டது.  திறந்தவர் ஒரு இருபது வயது மதிக்கத்தக்க இளைஞன். “என்ன சார் யூரின் போகனுமா” என கதவை திறந்தவாறு அவர் கேட்க, ஓட்டுனர் அவராகவே வண்டியின் வேகத்தை குறைத்து ஓரங்கட்டினார். ஆஹா இப்போது புரிந்தது அந்த பயணிகளின் பார்வையின் அர்த்தம். அது இல்லை பிரச்சனையை என கூறி என் நிலையைச்சொன்னதும் வண்டி மீண்டும் வேகமெடுத்து.

அந்த நபரும் வந்து நான் அமர்ந்திருந்த அந்த சீட்டை பின்னால் சாய்க்க முயற்சித்து பார்த்தார். அவராலும் இயலவில்லை. “பேருந்தில் ஏறியபோதே சொல்ல வேண்டியது தானே சார், இவ்வளவு தூரம் வந்த பிறகு சொல்லறீங்களே” என சலித்துக்கொண்டார். “டிக்கெட் சரி பார்க்க  வந்த அவரிடம் சொன்னேனே… ஆள் அனுப்புறேன் என்று அவரும் சொன்னாரே” என்றேன் நான். “சரியா போச்சி சார், அவர் வேலை அங்கேயே முடிஞ்சிது. என்னிடம் சொல்ல வேண்டிது தானே” என்றார். ஹம்ம்.. பயணிகளை பற்றி கவலை ஏதும் இன்றி, தன் வேலை முடிந்தால் சரி என புறப்பட்டு சென்ற அந்த நபரை என்னவென்று சொல்ல?.

“சரி, இப்போ நான் என்ன செய்ய. என்னால் உறங்க முடியவில்லை. கழுத்து மிகவும் வலிக்கிறது. இங்கே சத்தியமாக உட்கார முடியாது. அதுவும் சென்னை வரை சான்சே இல்லை” என்றேன். “இப்போதைக்கு இந்த பேருந்தில் வேறு சீட் ஏதும் இல்லை சார். அப்படி இருந்தால் மாத்தி கொடுத்து விடுவேன். இன்னும் சிறுது நேரத்தில் உளுந்தூர் பேட்டை வந்து விடும். அங்கு வேண்டுமானால் வேறு பஸ் மாற்றி தருகிறேன்” என்றார். இன்னும் அங்கு சென்றடைய நீண்ட நேரம் ஆகும் என்பது எனக்கு தெரிந்திருந்ததால்,  நான் அப்படியே ஒவ்வொரு சீட்டாக, ஏதேனும் காலியாக இருக்கிறதா என பார்த்துக்கொண்டு இருந்தேன். ஒரே ஒரு சீட் நடுப்பகுதியில் காலியாக தென்பட்டது. “அவரிடம் அதை காண்பித்தேன். “ஆனால் பக்கத்தில் லேடீஸ் இருக்காங்க சார்.” என்று இழுத்தார். அப்போது தான் கவனித்தேன். தலையோடு மூக்கோடு போர்த்திக்கொண்டு அந்த சீட் அருகில் ஒரு பெண் எங்களை கவனித்துக்கொண்டு இருந்தார்.

சென்னை வரை காலியாக வரும் அந்த சீட்டை வெறுமனே பார்த்துக்கொண்டு வலியோடு உறக்கமின்றி வருவதில் எனக்கு விருப்பமில்லை.  உடனே நான் “லேடிஸ் தான் பிரச்சனைனா, ஜென்ட்சை மாத்திவிடுங்கள்” என கூறினேன்.   “அவங்களை எப்படி ஜென்ட்ஸாக  மாற்றுவது, என்ன சார் விளையாடறீங்களா” என குரலை உயர்த்தினார் அவர். “அவங்களை நான் ஜென்ட்ஸாக மாத்த சொல்லவில்லை,  வேறு சீட்டில் ஜோடியாக அமர்திருக்கும்  பெண்னருகே இவரை உட்கார வைத்து விட்டு, அந்த ஆணை இங்கே இங்கே மாற்றிவிடுங்கள்” என்றேன்.  “இல்ல சார்..  அதுக்கு யாரும் ஒத்துக்க மாட்டாங்க” என மீண்டும் இழுத்தார்.

அதுவரை இங்கு என்ன நடக்கிறது வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த அந்த பெண் இதை கேட்டதும் சட்டென முகத்தை முன்பக்கம் திருப்பிகேகொண்டார். அதிலிருந்து அவருக்கு என்னை அங்கு அமரவைக்கவும் இஷ்டமில்லை, வேறொரு சீட்டில் மாற்றி அமரவும்  இஸ்டமில்லை என்பதை உணர முடிந்தது. ஆணாக பிறந்ததால் இதையெல்லாம் அனுபவித்து தான் ஆகவேண்டும். “பெண் பாவம் பொல்லாதது” என அந்த யோசனை விட்டு விட்டு, மீண்டும் என் சீட்டிலேயே அமர்த்து ஜன்னலோர நிலவை ரசிக்க ஆயத்தமானேன்.

நேரம் நடு நிசியை கடந்து இருந்தது. அனைவரும் நித்திரையில் இருந்தனர். கழுத்துவலி இப்போது என்னை பாடாய்படுத்தியது. என்னுடைய மொபைலில், கூகிள் உலக வரைபடத்தின் மூலம் நான் இருக்கும் இடத்தை பார்த்தேன். கள்ளக்குறிச்சியை தாண்டித்தான் பேருந்து சென்று கொண்டிருந்தது! விரைவில் சென்னை போய் சேரமாட்டோமா என்று ஏக்கத்துடன் மொபைலை பாக்கட்டில் நுழைத்து விட்டு கண்களை மூடினேன்.

திடீரென ஓர் உள்ளுணர்வு. உடனே கண்விழித்தேன்.  அப்போது வலியையும் மீறி நான் கண்ணயர்ந்து இருக்கிறேன் என புரிந்தது.  சாலையெங்கும் அமைதி. அனைவரும் இன்னும் உறங்கிக் கொண்டுதான் இருந்தனர்.  பேருந்து பயனித்துக்கொண்டு இருந்தவாறு தெரியவில்லை. அது யாருமற்ற அந்த சாலையில் குறுக்கு வாக்கில் இன்ச் இஞ்ச்சாய் பின்னால் நகர்ந்துக்கொண்டு இருந்தது போல் இருந்தது. என்ன நடக்கிறது என்று எனக்கு சிறிது நேரம் வரை ஒன்றும் புரியவில்லை.  வலது பக்கம் பார்க்கிறேன்.  நாங்கள் வந்த அந்த வழி அது. கண்ணுக்கெட்டிய வரை தூரம் வரை வாகனங்கள் ஏதும் தென்படவில்லை.   பஸ்ஸை ரிவர்ஸ் எடுத்து வந்த வழியில் மீண்டும் திரும்பிச்செல்ல முயற்சித்து கொண்டு இருக்கிறார்கள் என தெரிந்தது.  இப்போது இடது பக்கம் பார்க்கிறேன். ஆனால் அந்த பக்கமோ நீண்டு செல்லும் சாலைக்கு பதில் முழுதாய் கட்டி முடிக்கப்படாத ஒரு பாலத்தின் விளிம்பு. இந்த கணப்பொழுதில் இங்கு என்ன நடக்கிறது என்பதை யூகிக்க முடிந்தது.

ஓட்டுனர் வழக்கமான சாலையை விட்டு  புதிதாய் அமைக்கப்பட்டுக்கொண்டு இருந்த ஒரு நான்கு வழிச்சாலையில் நீண்ட தூரம் சென்றிருக்கிறார். அந்த தவறை உணராமல் அங்கு கட்டி முடிக்கப்படாத ஒரு பாலத்தில் மேலும் ஏறி இருக்கிறார். பாலத்தின் உச்சியை அடைந்தபோது திடிரென சாலை முடிவடைவதை அறிந்து அதன் விளிம்பில் பேருந்தை உடனே ப்ரேக் போட்டு நிறுத்தி இருக்கிறார்.  இப்போது தான் நான் கண்விழித்து இருக்கிறேன். பாலம் கட்டப் படாததை கவனிக்காமல் இன்னும் சிறிது தூரம் சென்றிருந்தால் கூட அடுத்த நாள் பேப்பரில் எங்கள் பெயர்கள்! நினைத்தாலே குலை நடுங்குகிறது.

FLYOVER CONSTRUCTION

இது நடந்தது அந்த பேருந்தில் வேறு யாருக்கும் தெரியவில்லை. இன்னமும் அனைவரும் உறங்கிக்கொண்டு இருந்தனர். இதையெல்லாம் யோசித்துக்கொண்டு இருக்கும் போது கண்டக்டர் கடைசி ஜன்னலின் அருகே, எங்களுக்கு கீழே நின்று கொண்டு விசில் ஊதுவது கேட்டது. அருகில் இருந்த என் நண்பரும் அந்த சப்தம் கேட்டு இப்போது கண்விழித்து இருந்தார். ஜன்னலில் வெளியே எட்டிப் பார்த்த என் நண்பர் பதட்டமாகி டிரைவரை நோக்கி கத்த ஆரம்பித்தார்.

நானும் உடனே வெளியே எட்டி பார்த்தேன். இப்போது இன்னொரு பிரச்சனை. எங்கள் சீட்டின் கீழே 50 அடி அல்லது அடி  100 அடி பள்ளம் இருந்தது. அதாவது  பேருந்து இப்போது ரிவர்ஸ் எடுத்து திரும்பும்போது பாலத்தின் ஓரத்தில் இருந்தது. எனக்கு மீண்டும் தூக்கி வாரி போட்டது. கண்டக்டர் நிறுத்தச்சொல்லி விசில் அடித்தும் பஸ் இன்னும் இன்ச் இஞ்சாய் பின்னால் நகர்ந்தது. இன்னும் ஓரிரு அடிகள் பின்னால் வந்தால் கூட டயர் கீழிறங்கி பஸ் கவிழ்ந்து விடும் நிலை. பதட்டம் இப்போது எனக்குள்ளும். நண்பரோடு சேர்ந்தும் நானும் ஓட்டுனரை நோக்கி நிறுத்தச்சொல்லி கத்த ஆரம்பித்தேன். பஸ் சட்டென நின்றது. இப்போது முன்னோக்கி இன்ச் இஞ்சாக நகர ஆரம்பித்தது. அப்பாடா மீண்டும் உயிர் தப்பினோம் என்ற நிம்மதி.

பேருந்தை திருப்புவதற்கு போதுமான அளவிற்கு அந்த பாலத்தின் அகலம் இல்லை. சரியாக அந்த பேருந்தின் நீளத்திற்கு தான் பாலத்தின் அகலம் இருந்திருக்கிறது.  எங்களின் பின்பக்கம் இருந்த சாலையோரத்தில் நெடுகிலும் பாதுகாப்பிற்காக சிறு தூனைப்போன்ற தடுப்பு எழுப்பப்பட்டு இருந்தது. பஸ்ஸை இந்த பாலத்தில் திருப்ப வாய்ப்பே இல்லை. ஒரு இடத்தில் மட்டும் ஒரு பத்து அடிக்கு அந்த தடுப்பு இல்லை. அந்த இடைப்பட்ட இடத்தில் தான் பேருந்தை  இப்போது முன்னேயும், பின்னேயும் மெதுவாக நகர்த்தி வந்த வழியில் திரும்ப முயன்றுக்கொண்டு இருந்தார் ஓட்டுனர். முன்னேயும் ஆபத்து. பின்னேயும் ஆபத்து. நிலைமை இன்னும் மோசமாவதை உணர்த்தேன்.

இப்போது சுமார் இரண்டு அடி முன்னே நகர்ந்த பேருந்து அதேபோல் மீண்டும் மெதுவாய் பின்னால் நகர்ந்து வந்தது. மறுபடியும் அது அந்த சாலை ஓர விளிம்பை தொட்டது. இந்த முறையும் பேருந்தை நிறுத்தச்சொல்லி கண்டக்டர் விசில் அடித்தும் அதை காதில் வாங்காமல் அந்த ஓட்டுனர்  மெதுவாக விட்டு விட்டு பின்னால் நகர்த்திக்கொண்டு இருந்தார். இப்போது நாங்கள் அமர்ந்து இருந்த அந்த பின் சீட் பகுதி அந்த அதல பாதாளத்தில் மீது. ஜன்னலோரத்தில் நாங்கள் கீழே பார்க்க, மீண்டும் எங்களுக்கு உயிர் பயம். இருவரும் சேர்ந்து ஓட்டுனரை நோக்கி மறுபடியும் கத்த ஆரம்பித்தோம். அவர் உடனே ப்ரேக் போட்டு நிறுத்தி பேருந்தை முன்னே செலுத்தினார். சப்தம் கேட்டு எங்களுக்கு முன் சீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தவர் மட்டும் எங்களை வித்யாசமாக பார்த்து விட்டு மீண்டும் தூங்கினார். வேறு யாரும் இன்னமும் நிஜ உலகத்திற்கு வரவில்லை. உயிர் தப்பியது எங்களை தவிர அந்த பேருந்தில் வேறு எந்த பயணிகளுக்கும் கடைசி வரை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இப்போது பேருந்து முழுதாக திருப்பப்பட்டு வந்த வழியே மீண்டும் சீறிப்பாய்ந்தது.

கழுத்து வலி, முதுகு வலியை விட உயிர் பயம் என்னை தூங்க விடவில்லை. உளுந்தூர் பேட்டையை பேருந்து வந்தடைந்த போது ஒரு மன நிம்மதி. இரவில் அந்த வழியில் பயணம் செல்லும் அனைத்து கே.பி.என் பேருந்துகளும் வந்து நிற்கும் இடம் அது. வாழ்க்கை கனவுகள் நிறைய இருக்க இந்த பேருந்தில் என்னுடைய கடைசி இரவை  முடித்துக்கொள்ள விருப்பமில்லை. ஓட்டுனர் முன்பு சொன்னது போல் இங்கு சென்னை செல்லும் வேறு பேருந்தில் மாற்றிக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை பிறந்தது.

கண்டக்டரிடம் போய் வேறு பேருந்தில் சீட்டை மாற்றி தருவதாகச்சொன்னதை மீண்டும் ஞாபகப்படுத்தினேன். இதை சற்றும் எதிர்பார்க்காதவராய் அவர் முகம் மாறியது. நான் அதை மறந்து விடுவேன் என்று நினைத்திருந்தாரோ என்னவோ. அங்கு அனைத்து பேருந்துகளின் சீட்டுகளை சரி பார்த்து அனுப்பும் பணி செய்து கொண்டு இருந்த இன்னொருவரை  காண்பித்து, அவர் தான் இதற்க்கு பொறுப்பு அகவே அவரிடம் சொல்லுகிறேன் என கூறிவிட்டு அவரை நோக்கி நடந்தார். நானும் அவர் பின்னாலேயே சென்றேன். மீதி இருக்கும் சில மணி நேரமாவது சென்னை போவதற்குள் தூங்கிவிடலாம் என்கிற நப்பாசை.

“சீட்டை பின்னால் தள்ள முடியவில்லையாம், கழுத்து வலிக்கிறதாம், பெசன்ஜெர் வேறு பஸ்சில் மாற்றி தரும்படி கேட்கிறார்” என அவரிடம் கூறினார். சரியாக அப்போது அவர்கள் அருகே சென்றேன். அதற்க்கு அந்த புதிய நபர் கூறிய பதிலை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.  நான் அருகில் இருப்பதை அந்த இருவரும் உணரவில்லை. “வலிச்சா அதுக்க நான் என்ன பண்றது,  அப்படியே ஒக்காந்து போக சொல்லு. பஸ் எல்லாம் மாத்தி தர முடியாது” என்ற தோரணையில் கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் இருந்தது அந்த பதில். இங்கு மனிதாபிமானம் என்பது கூட அவசியமில்லை. அனைவரும் நானூறு ருபாய் செலுத்தி செல்லும் அதே பேருந்தில், அதே பணம் செலுத்தி முதுகு வலியோடு செல்வது எவ்விதத்தில் நியாயம்? நான் ஒன்னும் இலவசமாக செல்லவில்லையே? அந்த சீட் பழுதடைந்து இருப்பது தெரிந்தும் வருமானத்தை இழக்க மனமில்லாமல் எனக்கு அந்த சீட்டை விற்றது யார் தப்பு? எனக்கு கோபம் பயங்கரமாக வந்தது. இருப்பினும் அவரிடம் பொறுமையாக என் நிலையை விளக்கி வேறு பேருந்து மாற்றி தருமாறு கேட்டேன்.

நான் அருகில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் இப்போதும் அதே தோணியில் “வேற பஸ் எல்லாம் இல்ல சார். எல்லா சீட்டுலயும் ஆளுங்க இருக்காங்க. அஜ்ஜெஸ் பண்ணிகோங்க” என்று என்னை அனுப்புவதிலேயே குறியாக இருந்தார். பெயருக்கு கூட மற்ற பேருந்துகளை அவர் விசாரிக்கவில்லை. தன்னுடைய பதிவேடுகளையும் அவர் புரட்டி பார்க்கவில்லை. இத்தனைக்கும் அங்கு இருபது அல்லது  முப்பது கே.பி.என் பேருந்துகள் நின்று கொண்டு இருந்தது. எப்படியும் அதில் பாதி சென்னை செல்வதாகத்தான் இருக்க வேண்டும்.

எனக்கு அவர் பதிலில் திருப்தி இல்லை. அதுவரை கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாமல் இருந்தது அவர் செயல். வேறு பேருந்து மாற்றி தர வேண்டும் என்று என் தரப்பு நியாயங்களை கூறி நான் பிடிவாதமாய் இருந்தேன். உடனே அவர் மேலும் கோபமாகி, மீண்டும் பொறுப்பற்ற பதிலையே கூறிக்கொண்டு இருந்தார்.  நீண்ட நேர வாக்குவாதத்திற்கு பின்பு கடைசியில் அவர் அருகில் இருந்த சென்னை பேருந்துகளை விசாரிக்க சென்றார். ஐந்து நிமிடத்தில் மீண்டும் திரும்பி வந்து “அந்த பேருத்தில் சீட் இருக்கிறது, நீங்களும் உங்கள் நண்பரும் போய் ஏறிக்கொள்ளுங்கள்” என்று ஒரு பேருந்தை காண்பித்தார். அவர் வார்த்தைகளில் கோபம் தெரிந்தது, அவர் உடல் மொழி அசாதாரணமாய் இருந்தது.

நானும் நண்பரும் அவர் கூறிய அந்த பேருந்தில் ஏற முயன்றோம். நடத்துனர் எங்களை ஏற விடவில்லை. நாங்கள் தூரத்தில் சென்று கொண்டிருத்த அந்த நபரை காண்பித்து, அவர் தான் இதில் மாற்றி அமர சொன்னார் என்றோம். எங்களுடைய டிக்கெட்டையும் காண்பித்தோம். “டிக்கெட் காண்பித்தால் ஏற்றிவிடுவோமோ? யாரும் எங்களிடம் இதை பற்றி சொல்லவில்லை” என்றனர். அவர்கள் பேச்சும் கடுமையான தோனியில் இருந்தது. மீண்டும் அந்த நபரை அழைத்து வந்து சொல்லச்சொல்வோம் என்று நான் தூரத்தில் இருந்த அவரை நோக்கி நடந்தேன்.

என்னை மீண்டும் பார்த்ததும் என்ன  நினைத்தாரோ தெரியவில்லை, சம்பந்தம் இல்லாமல் கடுமையாக பேச ஆரம்பித்து விட்டார்.  நான் இன்னும் பேருந்தில் ஏறாமல் அவரிடம் நடந்து வந்தது அவருக்கு எரிச்சலை தந்து இருக்கிறது. நான் அந்த பேருந்தில் எங்களை ஏற விடவில்லை என்று கூறுவதை கூட அவர் காதில் விழாமல் தடுத்தது அவர் கோபம். இதை பார்த்த அந்த பேருந்து ஓட்டுனரும், நடத்துனரும் சம்பந்தமே இல்லாமல் இவருடன் சேர்ந்து எங்களுடன் வாக்குவாதத்தில் இடுபட்டனர். அவர்கள் யாருமே அந்த சூழ்நிலையை புரிந்து கொள்ளும் மன நிலையில் இல்லை.  அவர்கள் நோக்கம் எங்களை காயப்படுத்த்துவதாக மட்டுமே இருந்தது.   நீண்ட நேர வாக்குவாதத்திற்கு பிறகு தான் நாங்கள் அந்த பேருந்தில் அனுமதிக்கபட்டோம். பேருந்தில் ஏறியவுடன் என் மனதில் இருந்தது ஒன்றே ஒன்றுதான். கே.பி.என்’னில் என் உயிர் போய் விடக்கூடாது என்பது மட்டும் தான். உயிருடன் இருக்கும் மனிதர்களுக்கே அவர்களிடம் மதிப்பில்லை!

 

பின் குறிப்பு:

இந்த பதிவை பொறுமையுடன் படித்ததற்கு நன்றி.  கே.பி.என் டிராவல்ஸில் இந்த போக்கு ஏற்புடையதா? இது போல் உங்களுக்கோ அல்லது உங்கள் நண்பர்களுக்கோ ஏதேனும் அனுபவம் நிகழ்ந்து இருக்கிறதா? இந்த சம்பவத்தை பற்றி உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.

Share