Tag Archives: குகை மேல் நிலை பள்ளி

லட்சியம், கனவு டாக்டர் ரமேஷ்

ambition-dreams

ஒரு மாதத்திற்கு முன்னர் புது நம்பரில் இருந்து ஒரு போன். வழக்கம் போல் வேலை கொடுக்க அல்லது வேலை கேட்க்க யாரேனும் ஒருவர் அழைக்கிறார்கள் என்று தான் எடுத்தேன்.

“ஹலோ பிரவீன். எப்படி இருக்க?”

“நல்லா இருக்கேன். நீங்க யார் பேசறீங்க?”

“நான் டாக்டர் ரமேஷ் பேசறேன்.”

“சொல்லுங்க டாக்டர். என்ன விஷயம்?”

“நான் உங்களை மீட் பண்ணனும்”

“நீங்க எதுக்கு என்னை மீட் பண்ணனும் டாக்டர்? பொதுவாக உடம்பு சரியில்லைனா நாங்க தான் உங்களை மீட் பண்ணனும்!”

“என்னை நியாபகம் இல்லையா பிரவீன்?”

“மன்னிக்கவும். குரல் பரிட்சயம் இல்லை டாக்டர்.”

என்ன மச்சான் இப்படி சொல்லிட்ட. கிட்ட தட்ட 14 வருஷம் கழிச்சு உன் நம்பர் புடிச்சி பேசுறேன். மறந்துட்டயா? நான் தான் ரமேஷ். ”

(இப்போது டாக்டர் என்ற டைட்டில் இல்லாமல் பெயரை கேட்டதும் சற்றேன கொஞ்சம் நினைவுக்கு வந்தது)

ரமேஷ்… சேலம் குகை மேல்நிலை பள்ளியில் நான் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு படிக்கும் போது என்னுடன் படித்த நண்பன். படிப்பில் மிகவும் கெட்டிக்காரன். அப்போது நானும் நன்றாக படிக்கும் மாணவன் (!) என்பதால் எனக்கும் அவனுக்கும் படிப்பில் கடும் போட்டி இருந்தது. ஒன்பதாம் வகுப்பில் நான் வேறு வகுப்பு, அவன் வேறு வகுப்பு. என் வகுப்பில் அந்த வருடம் முழுவதுமே எல்லா தேர்விலும் முதல் ரேங்க்  மாணவன் நான். அவனும் அவன் செக்சனில் அப்படியே. பத்தாம் வகுப்பு ரெண்டு பேரும் ஒரே வகுப்பில் படிக்க நேர்ந்தது. ஆனால் அவனுக்கு நிகராக என்னால் ஈடு கொடுக்க முடியாமல் என் முதல் ரேங்க் பறிபோனது.

அவன் பள்ளிக்கூடம் விட்டால் வீடு, வீடு விட்டால் பள்ளிக்கூடம் என்று சதா படிப்பில் மட்டுமே கவனத்தை செலுத்தியவன். எனக்கோ அப்போது படிப்பை தாண்டி கொஞ்சம் வார/மாத இதழ்கள், நாவல், சினிமா, நட்பு வட்டம் என்று என்னை ஆக்கிரமித்து இருந்தது.   என்னைவிட  நன்றாக படிக்கும் மாணவன் என்பதால் அவன் வீட்டிற்க்கு சென்று நான் நோட்ஸ் கேட்பதும், அவன் என் வீட்டிற்க்கு வந்து படிப்பு சம்பந்தமாக டிஸ்கஸ் செய்வதும் தொடர்ந்தது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வந்தது. நான் 444 மார்க் எடுத்திருந்தேன். அவனோ 466 எடுத்திருந்தான். கம்ப்யூட்டர்  என்ஜினியர் ஆக வேண்டும் என்ற கனவோடு நானும், மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவோடு அவனும் வெவ்வேறு பள்ளிக்கூடம் மற்றலானோம். வீடும் மாறியதால் காலம் இருவரையும் தொடர்பு இலக்கிற்கு அப்பால் கிடத்தியது.

கிட்ட தட்ட 14 வருடம் கழித்து யாரிடமோ என் நம்பர் பெற்று மீண்டும் தொடர்பு எல்லைக்குள் வந்திருக்கிறான். ஆனால் இப்போது டாக்டராக. ஆம் அவன் கனவு பலித்திருக்கிறது! அதற்கு பின்னால் இருந்த உழைப்பு, போராட்டம் நிச்சயம் சாதரனமாய் இருந்திருக்கு வாய்ப்பில்லை. காலம் விசித்திரமானது. எல்லோருக்கும் எல்லாம் நடந்துவிடுவதில்லை. என் கல்லூரி/பள்ளி நண்பர்களை யோசித்துப்பார்க்கிறேன். பள்ளிக்காலத்தில் இருந்து ஏதோ ஒரு கனவோடு தான் அனைவரும் பயணிக்கிறோம். ஆனால் முடிவில் அதன் இலக்கை எட்டும் நபர்கள் இவனை போன்றவர்கள் மிகச்சிலரே. தடம் புரண்ட என்னை போன்றவர்கள் கூட ஏதேனும் கிடைத்த வாய்ப்பை கெட்டியாய் பிடித்துக்கொண்டு பிழைத்துக்கொள்கிறோம். மீதம் இருப்பவர்கள் நிலை தான் பாவம். முப்பதுகளை தாண்டியும் தன் துறை/பணி தேடல்கள் அவர்களுக்கு முடிந்துவிடுவதில்லை. இன்னும் சில நண்பர்களோ போராடத்துணிவில்லாமல், வாழ்க்கை சுமை தாங்கமுடியாமல் ஏதோ ஒரு காரணத்திற்கு இளம் வயதிலேயே உயிரை மாய்த்துக்கொண்டும் இருந்திருக்கிறார்கள்.

ஊத்து மலை கோவில் சேலம்

இரண்டு நாட்களுக்கு முன்னர் நாங்கள் இருவரும் ஊத்து மலைக்கோவிலில் சந்தித்தோம். கோவில் மூடப்படும் வரை, கிட்டத்தட்ட மூனரை மணிநேரம் பேசிக்கொண்டு இருந்தோம். இருந்தும் பதினான்கு வருட நிகழ்வுகளையும்  நினைவுகளையும் மூனரை மணி நேரத்திற்குள் எங்களால் சுருக்க முடியவில்லை. இப்போது மேட்டூர் அரசு மருத்துவமனையில் பொது அறுவை சிகிச்சை மருத்துவராக பணியாற்றிக்கொண்டு இருக்கிறான். பணத்தை நோக்கிய பயணமாக இல்லாமல் சேவை நோக்கத்தோடு பணி புரிவதாக அவன் சொன்ன போது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. தனியார் மருத்துவமனையில் லட்சங்கள் பிடுங்கப்பட இருந்த நோயாளிகளை அரசு மருத்துவமனைக்கு வைத்து இலவசமாக பல அறுவை சிகிச்சைகளை செய்திருக்கிறான். செய்துக்கொண்டு இருக்கிறான்.

பழைய நண்பர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி அவர்கள் உற்றார் உறவினர் என்று எல்லோருக்கும்  மருத்துவ சேவை/ஆலசோனை வழங்கி பயனளிக்க வேண்டும் என்று அவனுக்கு ஆசை.  அதுமட்டும் இல்லாமல், இப்போது கான்சர் அறுவை சிகிச்சை மருத்துவம் யாரும் படிப்பதில்லை  என்றும்,  அதை   மேற்படிப்பாக முடித்து கான்சர் பாதித்த மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது தான் எதிர்கால லட்சியம் என்றும் அவன் சொன்ன போது லட்சியம் என்ற வார்த்தைக்கே முதன் முறை அர்த்தம் கிட்டியது போல் உணர்ந்தேன்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவு, லட்சியம் ஆனால் மக்களுக்கு சேவை செய்யும் பணி செய்திடும் வாய்ப்பு, பிறருக்கு பயனாய் வாழ்ந்திடும் வாழ்க்கை எல்லோருக்கும் கிட்டுவதில்லை. அதை யாரும் அமைத்துக்கொள்வதும் விரும்புவதில்லை. குறிப்பாக பணம் புழங்கும் மருத்துவதுறையில்.

சில மாதங்களுக்கு முன்னர் எங்கள் வீட்டிற்க்கு ஒரு தூரத்து உறவினர் வந்திருந்தார். அவருடன் உரையாடிக்கொண்டு இருந்தபோது, தன் பெண்ணை மருத்துவம் படிக்க வைத்துக்கொண்டு இருப்பதாகவும், மேல்படிப்பிற்கு வெளிநாடு அனுப்புவதாகவும் சொன்னார்.

நானும் அதற்க்கு வாழ்த்துக்கள் தெரிவித்து விட்டு,

”நம்ம சொந்தத்துல யாருக்காவது உடல் நிலை  சரியில்லையென்றால் உங்க பெண்ணிடமே இலவசமாக வைத்தியம் பார்த்துக்கொள்ளலாம்” என்றேன் விளையாட்டாக.

பார்ட்டி கொஞ்சம் சீரியஸ் ஆனார்.

“என்ன தம்பி சொல்லறீங்க? இதுவரைக்கும் நாற்பது லட்சம் படிப்புக்கு செலவு பண்ணிட்டேன். வெளிநாட்டுல மேற்படிப்பு படிச்சாத்தான் நல்ல வேலை கிடைக்கும்னு அதுக்கும் இப்போ அனுப்ப போறேன். அவள் படிப்பை முடிக்கும் போது கிட்டத்தட்ட ஒரு கோடி செலவு ஆகிவிடும். அப்புறம் போட்ட காசை எப்படி எடுக்கறது?” என்றார் ஒரு மெல்லிய புன்னகையோடு.

பணம் பண்ண ஆயிரம் துறைகள் இருக்கும் போது மருத்துவத்துறை தேர்ந்தெடுக்கும் கார்பரேட் கம்பனிகளும், மாணவர்களுக்கும் (அவர்களின் பெற்றோருக்கும்) இருக்கும் ஒரே லட்சியம். “போட்ட காசை எடுக்கணும்”….. மருத்துவத்துறை சீர்கெட்டு அழிந்துக்கொண்டு இருப்பதற்கு இதை விட வேறு என்ன காரணம் வேணும்?  இப்போது மருத்துவர்கள் உருவாகுவதில்லை. உருவாக்கப்படுகிறார்கள். இந்த சூழ்நிலையில் ரமேஷ் மாதிரி சேவை மனப்பான்மை உள்ள ஆட்கள் நிச்சயம் இந்த துறைக்கு தேவை. உங்கள் வாழ்த்துக்களும், கருத்துக்களும் அவர்களை போன்றவர்களுக்கு ஊக்கம் அளிக்கட்டும்!

Share