Tag Archives: கண் தானம்

இறந்த பின்னும் உயிர் வாழ்வதற்கு ஒரு அருமையான வழி

eyes

மூப்படைந்து இறப்பவர் கூட அடுத்த ஜென்மத்தை பற்றி கடைசி  நிமிடமாவது சிந்தித்தே உயிர் விட்டிருப்பர். வாழ்க்கையை வெறுத்து இளம் வயதில் உயிர் துறப்பவன் கூட அடுத்த பிறவியின் எதிர்பார்ப்பிலேயே இறந்திருப்பான்.  யாருக்குத்தான் அந்த ஆசையில்லை. அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருக்கிறதா என்று நிச்சயம் கிடையாது.  இறந்தபின்பு சொர்க்கம் போகிறோமா இல்லை நரகம் போகிறோமா என தெரியாது. அப்படி ஒன்று இருக்கிறதா என்றும் கூட பார்த்து சொன்னவர்கள் இதுவரை கிடையாது. இருப்பினும் இறந்த பின்பு அனைவருக்கும் வாழ ஒரு வாய்ப்பிருக்கிறதென்றால் முயற்சித்து தான் பார்க்கலாமே..

சரியாக ஒரு வருடத்திற்கு முன்னர்  எனக்குள்ளே ஒன்று உந்திக்கொண்டு இருந்ததது. ஆனால் யாரை தொடர்பு கொள்வது, எங்கே அதை செய்ய முடியும், அதற்கான வழிமுறை என்ன என்று எனக்கு சுத்தமாக தெரிந்திருக்கவில்லை. அப்படியே அந்த எண்ணத்தைத் தற்காலிகமாக கிடப்பில் போட்டு விட்டேன். 19-10-2010 நான் பிறந்து சரியாக இருபத்தைந்து வருஷம் நிறைவடைடைகிறது. உருப்படியாக ஒன்று பண்ணலாமே என்று தோன்றியது. இப்போது தான் கிடப்பில் போட்ட அந்த எண்ணத்தை நோக்கி மீண்டும் முயற்சிக்க ஆரம்பம் செய்தேன். பெரிதாக மெனக்கெடவில்லை. சிறிது இணைய தேடலும் ஒரு சில தொலைபேசி அழைப்புகளின் மூலமாகவும் அறிந்து கொண்டேன். அது கண்தானம் எங்கே செய்வது, அதற்கான வழிமுறைகளும் தான். மிகவும் சுலபமானது. ஆனால் ஞாபகமாக பிறந்தநாளன்று செய்து விடலாம் என்று பொறுத்திருந்தேன்.

19 அக்டோபர் 2010.

செவ்வாய் கிழமை

மாலை ஏழு மணி

லோட்டஸ் கண் மருத்துவமனை, சேலம்.

என் கண்ணை தானம் செய்ய என் பெற்றோர்களின் சாட்சி கையெழுத்தோடு பதிவு செய்தேன்.

நான் ஆரம்பத்தில் குறிப்பிட்டபடி இறந்த பின்பும் உயிர் வாழ இதை விட சிறந்த வழி ஏதேனும் இருப்பதாய் தெரியவில்லை. தானத்திலும் சிறந்தது அன்னதானமென்பர். ஆனால் பார்வை இல்லாதவன் பெரும் அன்னதானமென்பது, தனக்கு அன்னமிட்டவரையும், அரவணைதவர்களின் உருவமும் தன் வாழ்நாளின் கடைசி வரை காணக்கிடைக்காத ஒரு வலியை அவனிடத்தில் ஏற்படுத்தவல்லது. அது அவனுக்கு பசியின் வலியை விட அதிக வலியையும் ஏக்கத்தையும் கொடுப்பது நிச்சயம். தான் இருக்கும் போது தன்னிடம் மிஞ்சியதை அன்னதானமாக கொடுப்பதை விட தான் இறந்த பிறகு தன்னுடலில் எஞ்சியதை கண்தானமாக கொடுப்பதே சிறந்தது. இது என்னுடைய தாழ்மையான கருத்து.

உங்களுக்கும் இறந்த பிறகும் அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும் என்னும் எண்ணம் இருந்தால் நீங்களும் தயவு செய்து நிச்சயம் கண்தானம் செய்ய முன்வரவும். இந்த இடுக்கையை படித்த யாரேனும் ஒருவருக்கு கண்தானம் செய்ய எண்ணம் நேர்ந்தால் இங்கே மறுமொழியிட்டு அதை பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன். அப்படி பொது நலம் ஏதும் தோன்றவில்லை என்றாலும் பரவாயில்லை. நீங்கள் சுயனலவாதியாகவே இருந்து விட்டு போங்கள்.  இந்த பொது நலத்திலும் ஒரு சுய நலம் இருக்கிறது உங்களுக்கு புரிகிறதா? நீங்கள் இறந்த பிறகு, இந்த பூமியில் உங்கள் உடலரித்து போய் விடினும் உங்கள் கண்களை இன்னொருவரிடம் பத்திரமாக விட்டுச்செல்லுங்கள். புத்திசாலியான சுயநலவாதியாக இருந்துவிடுங்களேன்!

மேலும் விவரங்கள்

1, இறப்பு ஒரு மனிதனுக்கு எப்போது வேண்டுமானாலும் நேரிடலாம். ஆகவே கண்தான முடிவை தயவு செய்து தள்ளி போட வேண்டாம்.

2, உங்கள் கண்கள் நீங்கள் இறந்த பின்னரே தானமாக பெற்றுக்கொள்ளப்படும். நீங்களே விரும்பினாலும் நீங்கள் உயிரோடு இருக்கும் பொது சட்டப்படி உங்கள் கண்ணை தானமாக யாரும் பெற முடியாது. ஆகவே பயப்படமால் பதிவு செய்யவும்.

3, நான்கு முதல் ஆறு மணி நேரத்திற்குள் கண் அறுவை செய்து எடுக்கப்படாவிட்டால் பிறருக்கு பயன் படாமல் போய்விடும். ஒருவர் இறந்த பின்னர் அவர்கள் உறவினர்களோ அல்லது நண்பர்களோ உடனாடியாக கண் வங்கிக்கு தொடர்புகொண்டு தெரியப்படுத்த வேண்டும்.

4, இதை நீங்கள் நேரிடையாக உங்கள் நண்பர்களிடமோ கூறுவது சற்று கடினமாக தான் இருக்கும். அதுவும் இல்லாமல் நீங்கள் சொல்லி வைக்கும் நபர் அந்நேரத்தில் பதட்டத்தில் கண் வங்கியிற்கு தெரிவிக்கவும் மறந்து விட வாய்ப்பு உள்ளது. ஆகவே உங்கள் வாழ்நாளில் ஒருமுறையேனும் உங்கள் நெருங்கியவர்கள் அனைவருக்கும் நீங்கள் கண் தானம் செய்திருப்பதையும்  அவர்கள் பின்பற்ற வேண்டியவற்றையும் (தங்களுக்கு நேர்வதை போலில்லாமல்) பொதுவான மொழியில் கூறவும். நானும் கூட அதை என் பிறந்த நாளன்று கூறாமல் அடுத்த நாளே என் குடும்பத்தாரிடம் கூறினேன்.

5. கண்ணை அகற்றுவது பதினைந்து முதல் அறை மணி நேரமே ஆகும். ஆகவே மதச்சடங்குகள் பாதிக்க வழி இல்லை.

6, கண் தானம் செய்தவரின் பெயரும், கண் வழங்கப்பட்டவரின் பெயரும் மறைக்கப்பட்டுவிடும். இருவர் குடும்பத்தாருக்கும் கடைசிவரை தெரியப்போவதில்லை.

7, கண்தானம் செய்ய விரும்புவோர் லோட்டஸ் ஐ கேர், ஷங்கர் நேந்திராலையா போன்ற மருத்துவமனையின் இணைய தளத்தில் விவரங்களை காணலாம். அல்லது அருகில் உள்ள கண் மருத்துவமனைக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு விவரங்கள் கேட்கவும்.

donate-your eyes

Share