Tag Archives: அனுஷ்கா

“லிங்கா” தரிசனம் – விமர்சனம்

lingaa-rajini-tamil-review

டிக்கெட் விக்கிற விலைக்கு மூணு நாளைக்கு தியேட்டர் பக்கமே போக வேண்டாம்னு முடிவோட தான் இருந்தேன்.  ஆனால் முதல் நாள், காலை காட்சியே எனக்கு “லிங்கா தரிசனம்” கிடைக்கவேண்டும் என்று ப்ராப்தம் இருந்திருக்கிறது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால், படம் தொடங்குவதற்கு  ஐந்து நிமிடம் வரை நான் அந்த ஷோவிற்கு போவேன் என்று எனக்கே தெரியாது. அப்போது நண்பர் வீட்டில் அவருடன் பேசிக்கொண்டு இருந்தேன்.  திடீரென உறவினர் ஒருவரிடம் இருந்து போன். ஏ.ஆர்.ஆர்.எஸ் மல்டிப்ளெக்ஸ் திரையரங்கின் வாசலை கடந்து செல்கையில் காலை காட்சிக்கு டிக்கெட் இருப்பதாக தியேட்டர் ஊழியர் ஒருவர் வழிமறித்து சொல்லியதாக  கூறினார்.

விலை எவ்வளோ என்றேன்? முதல் வகுப்பு டிக்கெட் இருநூறு ருபாய் என்றார். அங்கேயும் கூடுதல் விலை தான் ஆகவே வேண்டாம் என்றேன். நான் இந்த பக்கம் வேண்டாம் என்று கூறுவதை டிக்கெட் விற்கும் நபர் அறிந்துக்கொண்டு நூறு ரூபாய்க்கு (!) தருவதாக விலையை பாதி குறைத்துக்கொண்டான். ஆனால் படம் ஐந்து நிமிடங்களில் தொடங்குவதாக இருந்தது. இது  நல்ல டீல் என்பதால் உடனே டிக்கெட்டை வாங்கசொல்லிவிட்டு அவசர அவசரமாய் தியேட்டரை நோக்கி வண்டியை செலுத்தினேன். படம் ஒரு பத்து நிமிடம் ஓடி இருந்தது கொஞ்சம் வருத்தம் தான்.

சரி புராணத்தை விட்டுவிட்டு கதைக்கு வருவோம். 1990களில் துவக்கத்தில் ஆரம்பித்த அதே ரஜினி பார்முலா படம் தான். அதே ரவிக்குமாரின் ட்ரேட்மார்க் மசாலா கலவைதான். ஆனால் படம் எப்படி என்று பார்ப்போம். லிங்காவாக அறிமுகமாகும் ரஜினி – சந்தானம் மற்றும் கருணாகாரன் கூட்டணியுடன் சேர்த்து திருட்டு வேலை செய்யும் ஒரு ஹை-டெக் திருடன்.  பிரிட்டிஷ் காலத்தில் மதுரை மகாராஜாவாக, மதுரை கலெக்டராக இருந்த தனது தாத்தா லிங்கேஸ்வரன் அணைத்து சொத்துக்களையும் வீணாக்கிவிட்டார் என்ற வெறுப்பில் லிங்கேஸ்வரன் என்ற தன் பெயரையும் லிங்கா என்று மாற்றிக்கொண்டவர்.

இந்த சூழ்நிலையில் சோலையூர் என்ற கிராமத்திற்கு லிங்காவை அழைத்து செல்கிறார் அனுஷ்கா. மிக பிரமாண்டமாக கட்டப்பட்ட அணை ஒன்று அந்த ஊரில் இருக்கிறது. தன் தாத்தா வாழ்ந்த போது மழைகாலங்களில் வெள்ளஓட்டத்தில் அழிந்தும், கோடைகாலங்களில் வறட்சியிலும் அழிந்துக்கொண்டு இருந்த கிராமம் அது. மக்களை காப்பாற்றுவதற்கு அணையை கட்டித்தர போராடுகிறார் தாத்தா லிங்கேஸ்வரன்.

பிரிட்டிஷ் அரசாங்கத்தில் நயவஞ்சகத்தால் கலெக்டர் உத்தியோகத்தை உதறித்தள்ளிய லிங்கேஸ்வரன், ஒரு கட்டத்தில் தன் அனைத்து சொத்துக்களையும் விற்று அணையை மக்களுக்கு கட்டிகொடுத்து  ஆண்டியாக தன் வாழ்க்கையை  முடிக்கிறார். ஆனால் அப்பேர்பட்ட அணையை இடித்து தரைமட்டம் ஆக்க அரசியல்வாதி ஒருவன் இப்போது திட்டமிடுகிறான் என்பது பேரன் லிங்காவிற்கு தெரியவருகிறது.  அந்த திட்டத்தை தவிடுபொடியாக்கி, அணையை காப்பாற்றி, தன் வம்சத்தின் நற்பெயரை எப்படி நிலைநாட்டுகிறார்  என்பது தான் கதை

linga-rajini-anushka

அருமையான  கதை என்றாலும்  கட்டிமுடிக்கப்பட்ட ஒரு அணையை எப்படி கட்டினார்கள் என்று திரையில் சொல்லுவது போன்ற திரைக்கதை அமைப்பில் சுவாரசியம் கொஞ்சம் கம்மி தான்.  பிளாஸ் பேக்கை நீளமாக சொன்னதால் அணையை வெற்றிகரமாய்  கட்டுவது தான் கதை என்ற தோற்றம் உருவாகிறது. லேட்டாக சென்றதாலோ என்னவோ, எனக்கு மட்டும் தானோ எனவோ தெரியவில்லை – என்னால் படத்தில் முழுவதுமாய் ஒன்ற முடியவில்லை. ரவிக்குமார் – ரஜினி படங்களில் கதைக்குள் வரும் அந்த மெல்லிய காதல் காட்சிகளும் இதில் இல்லை. தாத்தா மற்றும் பேரன் இருவருடைய  காதலிலும் ஒரு உயிர்ப்பு இல்லை.

அனைத்தையும் இழந்து போகும் தாத்தா லிங்கேஸ்வரனை பார்க்கையில் முத்துவில் வரும் பாதிப்பு போல் இதில் ஏற்படுத்த தவறுகிறது.  ஆதவன் திரைப்பட க்ளைமாக்ஸில் சம்பந்தமே இல்லாமல் சூர்யாவை வானத்தில் வித்தைகாட்ட வைத்த ரவிக்குமார் இதிலும் அதே மாதிரி ஒரு  க்ளைமாக்ஸ் காட்சி வைத்து தேவையில்லாமால்  ரஜினியை படுத்திஇருக்கிறார். ரஜினி என்ற ஒரே காரணத்திற்காக அந்த காட்சிகள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

அனுஷ்காவும் சோனாக்ஷி சின்ஹாவும் அனாடமிகலி அக்கா தங்கை போல் தான் இருக்கிறார்கள். ஆனால் நம்ம ஊர் பெண் முகத்தில் உள்ள கலை போல் அவிகளுக்கு இல்லை. நடிப்பில் தமிழ்  தெரியாதவர் போல் தெரியாமால் கஷ்டப்பட்டு நடித்திருந்தாலும்,  சோனாக்ஷி அந்த பாத்திரத்தில் ஏனோ ஒட்ட மறுக்கிறார். ஹீரோவிற்கு நிகரான வில்லன்களும் வில்லதனங்களும் இல்லாததாலும் படம் கொஞ்சம் பொறுமையாய் போகிறது.  அணையை காட்டும் காட்சிகளிலும், ரயில் சண்டைகாட்சிகளிலும் ஒளிப்பதிவு மற்றும் கிராபிக்ஸ் அபாரம். வசனங்களும் காமடிகளும் பல இடங்களில் பளிச்சென்று இருக்கிறது. ஆனால் சந்திரமுகி, சிவாஜி, எந்திரன்  என்ற வரிசையில் இந்த படம் கொஞ்சம் சறுக்கல் தான். என்ன காரணத்திற்காகவோ இந்த படத்தை அவசரமாக துவங்கி இருக்கிறார்கள். அந்த அவசரம் திரைக்கதையிலும், மேக்கிங்கிலும் நன்றாகவே தெரிகிறது.

இருப்பினும் அனைவரையும் திருப்திபடுத்தும் வகையில் ரவிக்குமாரை தவிர யாராலும் இந்த அவசர சமையலை  தயார்செய்து இருக்கமுடியாது. ஆறு மாதங்களில் இந்த கதையை பிரமாண்டமாக படமாக்கி திரைக்கு கொண்டுவந்திருப்பது உண்மையிலேயே பெரிய சவால் தான். அதுவும் அந்த பிரம்மாண்ட அணையை கட்டும் காட்சிகள் வியப்பில் ஆழ்த்துகின்றன.   நீண்ட வருடங்களுக்கு பிறகு, ரஜினியை புதுப்பொழிவுடன் திரையில் காண்பதில் இருந்த உற்சாகம் ரகுமானிடம் இருந்து பெறமுடியவில்லை. மிகக்குறுகிய காலங்களில் ரகுமானை ரசிக்க ஆரம்பித்தவர்களுக்கு நிச்சயம் இது புரியப்போவதில்லை. இது ரஜினி என்ற ஒரு ஒற்றை மனிதனால் மட்டுமே தோளில் தூக்கிநிறுத்தப்பட்டுள்ள படம். தீவிர ரஜினி ரசிகர்களை தவிற  மற்றவர்களும் இதை கொண்டாடவதற்கு தேவையான மாஜிக் இதில் மி ஸ்ஸிங்.   ஆனாலும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் போனால்  அனைவரும்  நிச்சயம்  இப்படத்தை ரசிக்கலாம்.

Share

என் பார்வையில் தெய்வத்திருமகள் – தரிசிக்க வேண்டியவள்

deiva thirumagal

ரிலீசான முதல் நாள் காலையிலேயே, ப்ரீமியர் ஷோவில், சென்னை சத்தியம் திரையரங்கில் தெய்வத்திருமகள் திரைப்படத்தை பார்த்தேன். டைரக்டர் விஜய் அவர்கள் பிரத்தியேகமாக திரையிட்ட காட்சியில் ஓசியில் பார்த்ததால்  அதை விமர்சனம் பண்ணுவது சரியல்ல என உள்ளுக்குள்ளே ஒரு உணர்வு. படம் வந்து பத்து நாள் ஆகிவிட்ட நிலையில்,  அதன் பாதிப்பில் இருந்து இன்னும் மீளாதவனாய் அதை பதிவு செய்தே ஆகவேண்டும் என இப்போது எழுதத்தொடங்குகிறேன்

நிலா.. நிலா வேணும்… என மன நலம் பிறழ்ந்த விக்ரம், நிலாவை தேடி சென்னையில் அலைவதாக கதை தொடங்குகிறது.   யார் அந்த நிலா? எதற்கு இவர் நிலாவை தேடுகிறார்? அதற்கு விடை இடைவேளையில். அவர்கள் இருவருக்கும் நடக்கும் பாசப்போரட்டம் தான் கதை. கடைசியில் விக்ரம் அந்த நிலாவை கண்டுபிடித்து சேருகிறாரா இல்லையா? அதுதான் முடிவு.இப்படி ஒரு கதைக்கருவை வைத்துக்கொண்டு அதில் பார்வையாளனை முடிந்த வரையில் உருக வைத்து, சிலிர்க்க வைத்து, பரிதவிக்க வைத்து சிரிக்க வைத்து, அழ வைத்து வைத்து, கடைசியில் மனதில் ஒரு பாரத்தை ஏற்றி வீட்டிற்கு அனுப்பி வைக்க முடியுமென்றால், அதன் இயக்குனர் நிச்சயம் ஒட்டு மொத்த தமிழ் சினிமாவும் கொண்டாடப்பட வேண்டிய ஒரு நபர்.

படத்தின் சில காட்சிகளை நான் பார்த்துக்கொண்டு இருந்தபோது என் உடல் சிலிர்த்து போவதை நான் உணர்ந்தேன். மூன்று முறை என்னை அறியாமல் என் கண்கள் கலங்கியது. சத்தியமாய் நம்புங்கள், படம் முடிந்து வெளியே வந்து வெளிச்சத்தில் பார்த்தால்  ஜீன்ஸ் போட்ட பெண்கள் முதல், சுரிதார் மாட்டிய தாய்க்குலங்கள் வரை கண்ணில் கண்ணீர் கரைபுரண்டு ஓடிக்கொண்டு இருந்தது.

அதனால்  இது வழக்கம் போல டிராஜிடி உள்ள அழுகாச்சி படமா என்று நீங்கள் நினைத்தால் அது தான் இல்லை. இது முற்றிலும் ஒரு எமோஷனல் படம். டிராஜிடிக்கும் எமோஷனுக்கும் நிறைய வித்யாசம் இருக்கு. தான் உயிருக்கு உயிராய் நேசித்த காதலியை, ஒருநாள் தன் கண்ணெதிரே கொடூரமாய் கொலை செய்யப்படுவதை காண்பதற்கும், அவளை வேறொருவன் மணப்பதை காண்பதற்கும் உள்ள வித்யாசம் தான் அது. நிச்சயம் இந்த படம் டிராஜிடி படம் அல்ல ஆனால் உங்கள் மனதை கனக்கச் செய்வாள் இந்த தெய்வத்திருமகள்.

ஐந்து வயது சிறுவனுக்கு இருக்கும் மனவளர்ச்சி தான் இதில் கிருஷ்ணாவாக நடித்த விக்ரமிற்கு. முதல் காட்சியிலே தன்னுடைய கதாபாத்திரத்தை கட்சிதமாக அனைவருக்கும் உணர்த்தி விடுகிறார். எனக்கு ஏற்கனவே அப்படிப்பட்ட நிலையில் ஒரு நபரை சிறு வயது முதல் தெரியும் என்பதால், விக்ராமின் கதாபாத்திரம் என்னை மிகவும் ஆச்சர்யப்படுதியது. அவர் நடப்பது முதல் பேசுவது ,சிரிப்பது வரை அனைத்தும் உண்மையான மன வளர்ச்சி குன்றிய ஒரு நபரை காண்பது போலவே இருந்தது. எங்கேனும் இம்மியளவு அவர் நடிக்க முயற்சித்து இருந்தால் கூட  படம் வேறு திசையில் தடம் புரண்டு போய் இருக்கும்.

deivathirumagal

கனக்கட்சிதாமாக கிருஷ்ணா கதாபாத்திரதித்லேயே பொருந்தி வாழ்ந்து இருக்கிறார் விக்ரம்.  படம் ஆரம்பித்து கடைசி வரை அதில் நடித்தது விக்ரம் தானா என யோசிக்க தோன்றுகிறது. இந்த பாத்திரத்திற்கு வேறு யாரேனும் பொருந்துவார்களா என்று மனதிலேயே ஒவ்வொரு நடிகரை வைத்து யோசித்து பார்த்தேன். விக்ரமை தவிர கண்டிப்பாக யாருமில்லை. அதுவும் உடல் நிலை சரியில்லாத குழந்தைக்கு மருந்து வாங்கி கொடுத்து விட்டு, அந்த அறையில் தானாகவே சென்று நுழைந்து கொள்வதும், உச்சம்.

இந்த படத்தின் அடுத்த முக்கிய கதாபாத்திரம் நிலா என்ற சாரா. அது குழந்தை இல்லை, குட்டி தேவதை. அவளின் பெற்றோர் கடவுளிடம் வாங்கிய வரம் தான் அவள்.   இந்த வயதில் இப்படி ஒரு அசாதாரண நடிப்பு ஆச்சர்யப்படுத்துகிறது. விக்ரமிடம் கோபித்துக்கொண்டு முகத்தை சுளிக்கும்போதும், வகுப்பறையில் கையெடுத்து கும்பிட்டு விக்ரமை வீட்டிற்கு போகச்சொல்லும் போதும், கிளைமாக்சில் விக்ரமை பார்த்து நடன அசைவுகளோடு காட்டும் முகபாவங்களும் வார்த்தைகள் இல்லை. அந்த குழந்தையை நான் நேரில் பார்த்த போது, செம க்யூட்.

முதன் முறையாக அனுஷ்கா இதில் உண்மையாகவே நடித்து இருக்கிறார். படத்தில் வக்கீலாக விக்ரமிற்காக அவர் போராடுவது தான் கதாபாத்திரம். வழக்கமான அனுஷ்கா இதில் இல்லை. அப்பாவிடம் பேசாமல் இருந்து பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நெருங்குவதும் போல காட்டி இருப்பது அருமை! எதிரணி வக்கீலாக வரும் நாசரும் கொஞ்சமும் சளைக்கவில்லை. க்ளைமாக்ஸ் காட்சியில் அவரின் அந்த முகபாவம் போதும், அனைவரையும் தூக்கி சாப்பிட்டு விட.

ஆனா ஒன்னு வச்சுகோங்க. உங்களுக்கு இந்த படம் பார்க்கும் வரையில் ஆவின் பால், பசும் பால் புடிக்கிதோ இல்லையோ  நிச்சயம் அமலா பால் புடிக்கும். மைனாவிற்கு பிறகு அவர் நடிக்கும் படம் இது. அந்த முட்டை கண்ணை வைத்து செப்படி வித்தை செய்து அனைவரையும் வசீகரித்து இருக்கிறார். ஸ்வேதாவாக அவர் நடித்திருக்கும் அந்த பள்ளிக்கூட கரெஸ், கரெஸ் கரெஷ்பாண்டென்ன்ட் பாத்திரம் கலர்புல்.

Deiva-Thirumagal review

சந்தானதிற்கு கூட அருமையான கதாபாத்திரம். அமைதியாக ஆர்பாட்டம் இல்லாமல் ரசிக்கும்படி காமெடி செய்து இருக்கிறார்.  “நான் லாயர் இல்லை டீக்கடை நாயர்” என்று திரையரங்கில் முதல் சிரிப்புச்சத்தத்தை தொடங்கி வைக்கிறார். அதன் பிறகு தொடர்ந்து காமடி தான். எம்.எஸ்.பாஸ்கரும் தன் பங்கிற்கு கலக்கி இருக்கிறார்.  இப்படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களுமே சும்மா வந்து போவது இல்லை. செதுக்கி இருக்கிறார்கள். ஒரு மூளைவளர்ச்சி குறைவுடைய ஹீரோவை வைத்து இவ்வளவு காமடி படத்தில் பண்ண முடிந்திருக்கிறது என்றால் ஆச்சர்யம்தான். அதற்கு டயலாக் நன்றாக உதவி இருக்கிறது.

படத்திற்கு உயிரோட்டமே ஜீ.வி.பிரகாஷின் இசையும், நீரவ் ஷாவின் காமிராவும் தான். ஊட்டியை அப்படியே செதுக்கி காமேரவில் எடுத்து வந்துவிட்டார். திரையரங்கில் உள்ள ஏ.சியில் அமர்ந்து பார்க்கும் போது ஜில்லுனு ஊட்டி குளிரில் பார்க்கும் ஒரு உணர்வு. பாடல்களும் பின்னணி இசையும் இதில் பெரும் பங்கு வகிக்கின்றன.   படம் பார்ப்பதற்கு முன்பு நான் ஒரு முறை தான் கேட்டேன், எதுவும் பிடிக்கவில்லை. ஞாபகமும் இல்லை. ஆனால் படம் பார்த்த பிறகோ அதன் பாடல்களை தினமும் கேட்கிறேன். நா.முத்துக்குமார் வரிகள் மனதை கொள்ளை கொள்ளுகின்றன. அதுவும் அந்த ஆரிரோ பாடலும், தீம் இசையும் ஒவ்வொரு முறை கேட்க்கும் போது மனதை என்னவோ செய்துதொலைக்கிறது. உடனே கிருஷ்ணா, நிலா வந்து போகிறார்கள். .

கிருஷ்ணா வந்தாச்சு, நிலா வந்தாச்சு என்று விக்ரமும் நிலாவும் விளையாடுவது கவிதை. எல்லா குழந்தைகளும், சிறு வயதில் ,உலகத்தை அறிந்து கொள்ளும் ஆர்வம் வருகையில், பார்ப்பதை எல்லாம் காட்டி “அது என்ன”, “இது எப்படி” என்று கேள்விகள் கேட்டு துளைத்து எடுக்கும். நானும் இருந்திருக்கிறேன். நீங்களும் இருந்திருப்பீர்கள். இது இயற்கை. அதே போல் இந்த குழந்தையும், இன்னொரு குழந்தையான கிருஷ்ணாவிடம் கேள்வி கேட்கும் போது வரும் பதில் எப்படி இருக்கும்? “அந்த மரம் ஏன்பா பெருசா இருக்கு?”. “ஏன்னா அவங்க அப்பா பெருசா இருக்குல்ல”. “காக்க என்பா கறுப்பா இருக்கு?” “ஏன்னா அது வெயில்லையே சுத்துது இல்ல அதான்”…. வாவ் ப்ரில்லியன்ட் விஜய்.. ப்ரில்லியன்ட்!!!!

இயக்குனரின் இன்னொரு புத்திசாலித்தனம் உள்ள காட்சி சொல்ல வேண்டும் என்றார். நாசரின் ஜூனியர், ரெஸ்ட் ரூமில், யுரிநெல்சில், சிறு நீர் கழித்தவாறு நாசர் பேசுவதை ஒட்டு கேட்பார். சந்தேகம் வரமால் இருக்க, அவர்கள் பேசும் போது “போவதை” நிறுத்தியும், அவர்கள் அமைதி ஆகும் போது “போவதை” தொடருவதும் பின்னணி சப்தத்தில் உணர்த்தி இருப்பார்கள். இந்த சின்ன விஷயத்திற்கு கூட மெனக்கெடல்!

இப்படத்தை பற்றி ஏகப்பட்ட விமர்சனங்கள் இணையத்திலும், மீடியாவிலும் உலவுகின்றன. அது அனைத்தையும் உற்று கவனித்தால் அது இந்த படத்தின் உருவாக்கத்திலாகத்தான் இருக்குமே தவிர இந்த படத்தின் தரத்தில் இருக்காது.  விக்ரமையும், சாரவையும் கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள்.  குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது இத்திரைப்டத்திற்கு நிச்சயம். ஆனால் அது அந்த குழந்தை சாராவிற்கா அல்லது விக்ரமிற்கா என்று தான் தெரியவில்லை.  மொத்தத்தில் தெய்வத்திருமகள் கண்டிப்பாக ஒவ்வொருவரும் தரிசிக்க வேண்டியவள்.

Share