என்னென்ன செய்தோம் இங்கு இதுவரை வாழ்விலே!

life-purpose

அரைக்கால் ட்ரவுசர் வயதில், பிறந்த நாள் என்றால் புத்தாடை கிடைக்கும் ஒரு மகத்தான நாளாகவே கருதினேன். என்றுமே இல்லாமல் அன்று மட்டும் பள்ளி கூடம் செல்லுவதற்கு  மனம் மிகவும் சுறு சுறுப்பாகிவிடும். அரை கிலோ, ஒரு கிலோ சாக்லேட் பாக்கெட்டுகளை வாங்கி, புத்தகப்பைகளுக்குள் துருத்தி, புது கலர் சட்டை அணிந்து, பள்ளிக்கூடம் சென்று உள்ளே நுழையும்போது, அடேங்கப்பா என்ன ஒரு மிடுக்கு வந்துவிடுகிறது! எல்லோரும் சீருடையில் வரும் போது நான் மட்டும் தனித்து கலர் சட்டை அணிந்து நடந்து செல்வது அப்போது ஒரு இனம் புரியா மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

பள்ளிக்கூட மைதானத்தில், கடவுள் வாழ்த்திற்காக அனைவரும் கூடி இருக்கும் அந்த காலை நேரத்தில், நான் மட்டும் அனைவரின் முன்னால் நிறுத்தப்படுவேன். அன்று பிறந்த நாள் கொண்டாடுபவர்கள் அனைவரும் அப்படி தான் நிற்க வைப்பார்கள். என் பேரை ஒலி பெருக்கியில் சொல்லுவார்கள். குட்டி தம்பிகள் முதல், பெரிய அண்ணன்கள் வரை எல்லோரும் என்னை பார்பதற்காக வரிசையை நிற்பது போல் இருக்கும். அனைவரும் எனக்காக “ஹாப்பி பார்த் டே டூ யூ” என பாடும் போது பார்பதற்க்கே ஒரு கர்வம் வரும்.

பிறந்த நாள் அன்று  யாரும் திட்ட மாட்டார்கள்.  டடீச்சர் நம்மை அடிக்க மாட்டார்கள். என்னை சுற்றி தான் அன்று முழுவதும் நண்பர்கள் கூட்டம் இருக்கும்.  போதா குறைக்கு அன்று ஒரு நாள் முழுதும்  நான் தான் என் பள்ளியில் ஹீரோ என்ற நினைப்பு வேறு தொற்றிக்கொள்ளும். தினமும் அப்படியே இருந்தால் நான்றாக இருக்குமே என்று கூட நினைத்ததுண்டு. எல்லாம் என்னிடம் இருந்து சாக்லேட் காலியாகும் வரைதான் என்று அந்த பிஞ்சு மனதிற்கு தெரியாது. அடுத்த நாள் நிலைமை தலை கீழாக மாறி, கலர் சட்டை அணிந்து வரும் இன்னொருவன் பின்னால் நானும் அலையை வேண்டி வரும் என்பதும் அப்போது  புரியாது.

அரைக்கால் ட்ரவுசர் நீண்டு முழுக்கால் ட்ரவுசராய் மாறிய ஆரம்ப காலங்களிலும் அந்த பிறந்த நாள் ஹீரோயிசம் முழுதாக மறைந்ததாக நினைவில்லை. தட்டு நிறைய சாக்லேட் வைத்துக்கொண்டு.. இல்லை இல்லை.. இப்போது சாக்லேட்டுகள் அனைத்தும் கேக்காய் மாறி இருந்தது.  தட்டு நிறைய கேக்கை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள தெரிந்தவர்கள், உறவினர்கள் வீட்டுக்கு எங்க ஏரியா நண்பர்கள் பட்டாளத்துடன் சென்று கொடுப்பேன். அவர்களும் வெறும் கையுடன் என்னை அனுப்ப மாட்டார்கள். நான் விடா பிடியாய் வாங்க மறுத்தும், ஒவ்வொரு வீட்டிலும் பத்து ரூபாய் முதல் நூறு ருபாய் தாள்கள் வரை என் பாக்கட்டில் திணித்து அனுப்புவார்கள். அப்போது பணத்தின் அருமை எனக்கு தெரியாததாலும், வீட்டிற்கு வந்தால் அதற்காக அம்மா திட்டுவார்கள் என்று எண்ணியதாலும் தான் பணம் வாங்க மறுத்தேன் என்று நினைக்கிறேன்.

லிட்டில் சூப்பர் ஸ்டார் (உண்மையாலுமே அப்போ அவர் லிட்டில் தான்) சிலம்பரசன் ஒரு  குட்டி  பைக்கை ஏதோ ஒரு படத்தில் ஓட்டுவதை அப்போது பார்த்ததாய் ஞாபகம். பார்க்க குட்டி சைக்கிள் அளவிற்கு அச்சு அசலாக பைக்கை போல தான் இருந்தது அது.  அதை நானும் வாங்கியே தீர வேண்டும் என்று முடிவெடுத்தேன். சரி அதற்க்கு காசு? அதான் ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் வருமானம் வருதுல்ல!

அதிலிருந்து எல்லா  பிறந்த நாளின் போதும் கலெக்சன் ஆகும் பணத்தை அப்படியே பைக் வாங்கும் ஆசையில் அம்மாவிடம் சேமிப்பதற்கு கொடுத்து வைத்தேன். அப்போது அந்த பைக் எவ்வளவு விலை இருக்கும் என்று எனக்கு தெரியாது. என்றாவது ஒரு நாள் வாங்கி விடுவேன் என்ற நம்பிக்கையில் பல வருடங்கள் அந்த பணத்தை அப்பாவியாய் அவர்கள் கை செலவிற்கு கொடுத்துக் இருந்திருக்கிறேன் என்று வளர்ந்த பிறகு தான் விளங்கியது. இப்போது பெரிய பைக்கும் வாங்கியாச்சு, காரும் வாங்கோயாச்சு. இருந்தும் பத்து, பன்னிரண்டு வயதில் அந்த குட்டி பைக் கிடைத்து இருந்தால்  நான் அடைந்திருக்கக் கூடிய அந்த சந்தோசத்தை எதுவும் இன்று வரை கொடுக்கவில்லை!

சரி மீண்டும் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு வருவோம். ஜீன்ஸ் பான்ட், டி ஷர்ட் என்று மாறிய டீனேஜ், காலேஜ்  பருவங்களில் அதுவும் சுத்தமாக மாறி இருந்தது. பிறந்த நாள் என்றாலே  “மச்சான் ட்ரீட் எப்போ? “ என்று தான் அன்று சந்திக்க நேரிடும் அனைவரின் வாயிலும் வந்து விழும். இப்போது வளர்ந்து தொலைத்த காரணத்தினால் முதல் மாதிரி பிறந்த நாள் கலெக்சன் இப்போ வாய்ப்பே இல்லை. அப்படியே இருந்தாலும் ஐம்பது நூறு எல்லாம் இப்போது பத்தாது. அப்பாவிடம் கையேந்த வேண்டியது தான் ஒரே வழி. இவ்வளவு பணம் எதுக்குடா? என்று அவர் கம்மியாக கொடுத்தாலும் ஐஸ் வைத்து அம்மாவிடம் இருந்து இன்னும் கொஞ்சம் தேத்தி விடலாம். என்ன செய்வது! அந்த வயதில் நண்பர்களுக்கு ட்ரீட் கொடுக்கவில்லை என்றால் அய்யோ அது தெய்வ குத்தம் ஆகி விடுமே! பாக்கட்டில் காசு கூட இல்லை என்றால் அவ்வளவு தான் அது கொலை குத்தம் ஆகி விடும்! பிறந்தாளன்று பள்ளிக்கு விரும்பி சென்ற கால்கள் இப்போது கல்லுரி வாசலை மிதிக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறது. அதுவரை பிறந்த நாளின் போது பெற்றோர், உறவினர்கள் என்பது இருந்து  நண்பர்கள் தான் உலகம் என்று மாறி போகும் காலம் அது!

வருடத்தின் அந்த ஒரு நாளை நாம் அணுகும் விதமே ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறுபடுகிறது. அனைத்தையும் கடந்து சென்று நமது கடைசி பிறந்த நாளையும் ஏதோ ஒரு வகையில் கொண்டாடியே தீருவோம் நாம். அது சரி கடைசி பிறந்த நாள் என்று ஒன்று உண்டா என்ன?

சில வருடங்களுக்கு முன்பு என்னுடைய நெருங்கிய உறவினர் ஒருவருக்கு பிறந்த நாள்.  இன்னும் சொல்ல வேண்டுமானால் என்னுடைய தாய் மாமன் அவர். அன்று வழக்கம் போல் அவர்கள் வீட்டில் குதூகலம் இல்லை. அவருடைய குழந்தைகள் அவரை வெளிய அழைத்துச்செல்ல வற்புறுத்தவில்லை.  கோவிலுக்கு செல்ல அவருடைய மனைவியும் அவரை அழைக்கவில்லை. தினமும் வீட்டிற்கு வரும் நண்பர்கள் கூட அன்று மட்டும் யாரும் வரவில்லை. உறவினர்கள் யாரும் பிறந்நாள் வாழ்த்து சொல்ல அவரை தொலைபேசியில் அழைக்கவில்லை.

இத்தனைக்கும் பிறந்த நாளை பெரிதாய் பொருட்படுத்தாமல் ஒதுக்கும் அளவிற்கு அவருக்கு பெரியாதாய் வயது ஒன்றும் ஆகி விடவில்லை. சொல்லப்போனால் அன்று அவருக்கு 37வது பிறந்த நாள். கோவில், குழந்தைகள் , நண்பர்கள் என்று பிறந்தநாளை நம்மை போல் கொண்டாடும் சாராரி மனிதர் தான் அவரும். ஆனால் முடிந்த வரை தனிமையிலே அந்த நாள் முழுவதும் அவர் செலவிட்டார். காரணம்…..?

அது அவருடைய கடைசி பிறந்த நாள் என்று அவருக்கு தெரிந்து இருந்தது. புற்றுநோயால் தன் நாட்களை எண்ணிக்கொண்டு இருந்த அவருக்கு அது தெரியாத என்ன.  அன்று முழுவதும் அவருடைய மனநிலை எப்படி இருந்து இருக்கும் என்று நம்மால் யூகிக்க  முடியாது . ஆனால் அதை விட கொடுமை உலகில் இல்லை என்று புரிந்து கொள்ள முடியும்.

ஒவ்வொரு வருடமும் வாழ்கையை பற்றிய ஒரு புரிதலை மேலும் மேலும் நமக்கு கற்றுக்கொடுக்கிறது. அது நமக்கு மிகப்பெரிய பெரிய பாடத்தை கற்றுக்ககிறது . இப்பொழுதெல்லாம் ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் இதுவரை என்ன சாதித்து விட்டாய் என்று உள்ளே மிஸ்டர் மனசாட்சி கேள்விகளால் துளைத்தெடுக்கிறார்! நேற்றைய எனது பிறந்த நாளும் எனக்கு ஒரு வித பயம் கலந்த வேகத்தை ஏற்படுத்தியது. பயம் என்பது இன்னும் எத்தனை பிறந்த நாள் இருக்கிறது என்பதல்ல. கடைசி பிறந்தாளிற்கு முன்  பிறந்த பயனை அடையும் நிம்மதி கிடைக்க வேண்டும் என்பதே அது! அந்த ஒரு நிம்மதி தான் சிறு வயதில் கலர் சட்டை அணிந்து சாக்லேட் பாக்கட் வாங்கி பள்ளிக்கு சென்ற அந்த ஹீரோவை நமக்குள் மீண்டும் அழைத்து வரும்!

சென்ற பிறந்த நாளின் போது கண்களை தானமாக பதிவு செய்தேன். இம்முறை உடல் தானம் செய்ய பதிவு செய்துஇருக்கிறேன். இறந்த பின்னும் உயிர்வாழ, பிறருக்கு பயனுற இதை விட வேறு ஏதேனும் வழி உன்டா என்ன? நீங்களும் உங்கள் அடுத்த பிறந்த நாளன்று இதை செய்திட எண்ணி பாருங்களேன்! பிரபலங்களை போல் பிறந்த நாளன்று இதை செய்வது நிச்சயம் மற்றவர்களுக்கு உறுத்தலை வர வைக்க வாய்பிருக்கிறது. ஆனால் சரா சரி மனிதர்களாகிய நாம் நம் அன்றாட வாழ்க்கையில் இதற்காக நேரம் ஒதுக்குவது நிச்சயம் சற்று கடினம் தான். பிறந்த நாளன்று இதை செய்தே தீர வேண்டும் என்று எண்ணுவது நமக்குள் உந்துதலை ஏற்படுத்தும். அதை செய்து முடித்த அந்த பிறந்தநாள் மிகவும் திருப்திகரமாக இருக்கும்.  கண் தானம் பதிவு செய்வது போல் உடல் தானம் செய்வது அவ்வளவு சுலபமான வழி முறை கொண்டிருக்கவில்லை.  அதை பற்றி விரிவாக விரைவில் ஒரு பதிவிடுவதாக உள்ளேன்.

இந்த பிறந்த நாளின் போது முகப்புத்தகத்தில், குறுஞ்செய்திகளில், சாட்டிங்கில், அலைபேசியில், மின்னஞ்சலில் என்று வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். எனக்கே தெரியாமால் கேக் வாங்கி வைத்து மாலை அதை வெட்டி கொண்டாட வைத்த என் தம்பி. அதற்கும் மேலாக காலையில் நான் கண் விழிக்கும் நேரம் உணர்ந்து, அதற்கு முன்னமே என் அருகே வந்து அமர்ந்து, நான் கண் திறக்கும் வரை காத்திருந்து, கண் திறந்ததும் முகம் மலர்ந்து கைபிடித்து வாழ்த்திய என் தாயின் அன்பிற்கு எதுவும் நிகரில்லை இவ்வுலகில்.

என்னென்ன செய்தோம் இங்கு இதுவரை வாழ்விலே…

எங்கெங்கு போனோம் வந்தோம் விதி என்னும் பேரிலே….

நான் அடிக்கடி கேட்கும் மயக்கமென்ன திரைப்படத்தின் பாடல் நேற்று முழுவதும் காதில் ஓயாமல் ஒலித்துக்கொண்டே இருந்தது!

Share

7 Responses to என்னென்ன செய்தோம் இங்கு இதுவரை வாழ்விலே!

  1. பிரவீன் உங்க எழுத்தின் மதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டிருக்கு
    வாழ்துக்கள் கட்டுரையில் மிக நல்ல சேதிகள் சொல்லியிருகீங்க நானும் கடைபிடிக்க முயற்சி செய்றேன்

  2. மிக்க நன்றி அஜயன் சார்!

  3. rathnavel says:

    நல்ல பதிவு.
    மனப்பூர்வ பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
    http://rathnavel-natarajan.blogspot.com/2011/10/blog-post_21.html

  4. ARUL says:

    தியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்

    http://arulgreen.blogspot.com/2011/10/blog-post_19.html

  5. நன்றி ரத்னவேல் 🙂

  6. நான் இயக்குனர் செல்வராகவனின் கனா காணும் காலங்கள் தொடர் மூலம் இன்று தான் அறிமுகம் ஆனேன். நானும் சேலம் தான். நீங்கள் பஸ் ஸ்டேண்டில் ஏமாந்தது போல் நானும் ஏமாந்திருக்கிறேன். என் வசதிக்கு முப்பது ரூபாய். அதில் நீங்கள் கெட்ட கேள்வியே தான் நானும் கேட்கிறேன். உண்மையிலேயே கஷ்ட படுபவர்களுக்கு மீண்டும் உதவி செய்ய மனம் எப்படி ஒத்துழைக்கும்..

  7. தங்கள் வருகைக்கு நன்றி ஷண்முகம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)