Archive for July, 2011

    என் பார்வையில் தெய்வத்திருமகள் – தரிசிக்க வேண்டியவள்

    deiva thirumagal

    ரிலீசான முதல் நாள் காலையிலேயே, ப்ரீமியர் ஷோவில், சென்னை சத்தியம் திரையரங்கில் தெய்வத்திருமகள் திரைப்படத்தை பார்த்தேன். டைரக்டர் விஜய் அவர்கள் பிரத்தியேகமாக திரையிட்ட காட்சியில் ஓசியில் பார்த்ததால்  அதை விமர்சனம் பண்ணுவது சரியல்ல என உள்ளுக்குள்ளே ஒரு உணர்வு. படம் வந்து பத்து நாள் ஆகிவிட்ட நிலையில்,  அதன் பாதிப்பில் இருந்து இன்னும் மீளாதவனாய் அதை பதிவு செய்தே ஆகவேண்டும் என இப்போது எழுதத்தொடங்குகிறேன்

    நிலா.. நிலா வேணும்… என மன நலம் பிறழ்ந்த விக்ரம், நிலாவை தேடி சென்னையில் அலைவதாக கதை தொடங்குகிறது.   யார் அந்த நிலா? எதற்கு இவர் நிலாவை தேடுகிறார்? அதற்கு விடை இடைவேளையில். அவர்கள் இருவருக்கும் நடக்கும் பாசப்போரட்டம் தான் கதை. கடைசியில் விக்ரம் அந்த நிலாவை கண்டுபிடித்து சேருகிறாரா இல்லையா? அதுதான் முடிவு.இப்படி ஒரு கதைக்கருவை வைத்துக்கொண்டு அதில் பார்வையாளனை முடிந்த வரையில் உருக வைத்து, சிலிர்க்க வைத்து, பரிதவிக்க வைத்து சிரிக்க வைத்து, அழ வைத்து வைத்து, கடைசியில் மனதில் ஒரு பாரத்தை ஏற்றி வீட்டிற்கு அனுப்பி வைக்க முடியுமென்றால், அதன் இயக்குனர் நிச்சயம் ஒட்டு மொத்த தமிழ் சினிமாவும் கொண்டாடப்பட வேண்டிய ஒரு நபர்.

    படத்தின் சில காட்சிகளை நான் பார்த்துக்கொண்டு இருந்தபோது என் உடல் சிலிர்த்து போவதை நான் உணர்ந்தேன். மூன்று முறை என்னை அறியாமல் என் கண்கள் கலங்கியது. சத்தியமாய் நம்புங்கள், படம் முடிந்து வெளியே வந்து வெளிச்சத்தில் பார்த்தால்  ஜீன்ஸ் போட்ட பெண்கள் முதல், சுரிதார் மாட்டிய தாய்க்குலங்கள் வரை கண்ணில் கண்ணீர் கரைபுரண்டு ஓடிக்கொண்டு இருந்தது.

    அதனால்  இது வழக்கம் போல டிராஜிடி உள்ள அழுகாச்சி படமா என்று நீங்கள் நினைத்தால் அது தான் இல்லை. இது முற்றிலும் ஒரு எமோஷனல் படம். டிராஜிடிக்கும் எமோஷனுக்கும் நிறைய வித்யாசம் இருக்கு. தான் உயிருக்கு உயிராய் நேசித்த காதலியை, ஒருநாள் தன் கண்ணெதிரே கொடூரமாய் கொலை செய்யப்படுவதை காண்பதற்கும், அவளை வேறொருவன் மணப்பதை காண்பதற்கும் உள்ள வித்யாசம் தான் அது. நிச்சயம் இந்த படம் டிராஜிடி படம் அல்ல ஆனால் உங்கள் மனதை கனக்கச் செய்வாள் இந்த தெய்வத்திருமகள்.

    ஐந்து வயது சிறுவனுக்கு இருக்கும் மனவளர்ச்சி தான் இதில் கிருஷ்ணாவாக நடித்த விக்ரமிற்கு. முதல் காட்சியிலே தன்னுடைய கதாபாத்திரத்தை கட்சிதமாக அனைவருக்கும் உணர்த்தி விடுகிறார். எனக்கு ஏற்கனவே அப்படிப்பட்ட நிலையில் ஒரு நபரை சிறு வயது முதல் தெரியும் என்பதால், விக்ராமின் கதாபாத்திரம் என்னை மிகவும் ஆச்சர்யப்படுதியது. அவர் நடப்பது முதல் பேசுவது ,சிரிப்பது வரை அனைத்தும் உண்மையான மன வளர்ச்சி குன்றிய ஒரு நபரை காண்பது போலவே இருந்தது. எங்கேனும் இம்மியளவு அவர் நடிக்க முயற்சித்து இருந்தால் கூட  படம் வேறு திசையில் தடம் புரண்டு போய் இருக்கும்.

    deivathirumagal

    கனக்கட்சிதாமாக கிருஷ்ணா கதாபாத்திரதித்லேயே பொருந்தி வாழ்ந்து இருக்கிறார் விக்ரம்.  படம் ஆரம்பித்து கடைசி வரை அதில் நடித்தது விக்ரம் தானா என யோசிக்க தோன்றுகிறது. இந்த பாத்திரத்திற்கு வேறு யாரேனும் பொருந்துவார்களா என்று மனதிலேயே ஒவ்வொரு நடிகரை வைத்து யோசித்து பார்த்தேன். விக்ரமை தவிர கண்டிப்பாக யாருமில்லை. அதுவும் உடல் நிலை சரியில்லாத குழந்தைக்கு மருந்து வாங்கி கொடுத்து விட்டு, அந்த அறையில் தானாகவே சென்று நுழைந்து கொள்வதும், உச்சம்.

    இந்த படத்தின் அடுத்த முக்கிய கதாபாத்திரம் நிலா என்ற சாரா. அது குழந்தை இல்லை, குட்டி தேவதை. அவளின் பெற்றோர் கடவுளிடம் வாங்கிய வரம் தான் அவள்.   இந்த வயதில் இப்படி ஒரு அசாதாரண நடிப்பு ஆச்சர்யப்படுத்துகிறது. விக்ரமிடம் கோபித்துக்கொண்டு முகத்தை சுளிக்கும்போதும், வகுப்பறையில் கையெடுத்து கும்பிட்டு விக்ரமை வீட்டிற்கு போகச்சொல்லும் போதும், கிளைமாக்சில் விக்ரமை பார்த்து நடன அசைவுகளோடு காட்டும் முகபாவங்களும் வார்த்தைகள் இல்லை. அந்த குழந்தையை நான் நேரில் பார்த்த போது, செம க்யூட்.

    முதன் முறையாக அனுஷ்கா இதில் உண்மையாகவே நடித்து இருக்கிறார். படத்தில் வக்கீலாக விக்ரமிற்காக அவர் போராடுவது தான் கதாபாத்திரம். வழக்கமான அனுஷ்கா இதில் இல்லை. அப்பாவிடம் பேசாமல் இருந்து பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நெருங்குவதும் போல காட்டி இருப்பது அருமை! எதிரணி வக்கீலாக வரும் நாசரும் கொஞ்சமும் சளைக்கவில்லை. க்ளைமாக்ஸ் காட்சியில் அவரின் அந்த முகபாவம் போதும், அனைவரையும் தூக்கி சாப்பிட்டு விட.

    ஆனா ஒன்னு வச்சுகோங்க. உங்களுக்கு இந்த படம் பார்க்கும் வரையில் ஆவின் பால், பசும் பால் புடிக்கிதோ இல்லையோ  நிச்சயம் அமலா பால் புடிக்கும். மைனாவிற்கு பிறகு அவர் நடிக்கும் படம் இது. அந்த முட்டை கண்ணை வைத்து செப்படி வித்தை செய்து அனைவரையும் வசீகரித்து இருக்கிறார். ஸ்வேதாவாக அவர் நடித்திருக்கும் அந்த பள்ளிக்கூட கரெஸ், கரெஸ் கரெஷ்பாண்டென்ன்ட் பாத்திரம் கலர்புல்.

    Deiva-Thirumagal review

    சந்தானதிற்கு கூட அருமையான கதாபாத்திரம். அமைதியாக ஆர்பாட்டம் இல்லாமல் ரசிக்கும்படி காமெடி செய்து இருக்கிறார்.  “நான் லாயர் இல்லை டீக்கடை நாயர்” என்று திரையரங்கில் முதல் சிரிப்புச்சத்தத்தை தொடங்கி வைக்கிறார். அதன் பிறகு தொடர்ந்து காமடி தான். எம்.எஸ்.பாஸ்கரும் தன் பங்கிற்கு கலக்கி இருக்கிறார்.  இப்படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களுமே சும்மா வந்து போவது இல்லை. செதுக்கி இருக்கிறார்கள். ஒரு மூளைவளர்ச்சி குறைவுடைய ஹீரோவை வைத்து இவ்வளவு காமடி படத்தில் பண்ண முடிந்திருக்கிறது என்றால் ஆச்சர்யம்தான். அதற்கு டயலாக் நன்றாக உதவி இருக்கிறது.

    படத்திற்கு உயிரோட்டமே ஜீ.வி.பிரகாஷின் இசையும், நீரவ் ஷாவின் காமிராவும் தான். ஊட்டியை அப்படியே செதுக்கி காமேரவில் எடுத்து வந்துவிட்டார். திரையரங்கில் உள்ள ஏ.சியில் அமர்ந்து பார்க்கும் போது ஜில்லுனு ஊட்டி குளிரில் பார்க்கும் ஒரு உணர்வு. பாடல்களும் பின்னணி இசையும் இதில் பெரும் பங்கு வகிக்கின்றன.   படம் பார்ப்பதற்கு முன்பு நான் ஒரு முறை தான் கேட்டேன், எதுவும் பிடிக்கவில்லை. ஞாபகமும் இல்லை. ஆனால் படம் பார்த்த பிறகோ அதன் பாடல்களை தினமும் கேட்கிறேன். நா.முத்துக்குமார் வரிகள் மனதை கொள்ளை கொள்ளுகின்றன. அதுவும் அந்த ஆரிரோ பாடலும், தீம் இசையும் ஒவ்வொரு முறை கேட்க்கும் போது மனதை என்னவோ செய்துதொலைக்கிறது. உடனே கிருஷ்ணா, நிலா வந்து போகிறார்கள். .

    கிருஷ்ணா வந்தாச்சு, நிலா வந்தாச்சு என்று விக்ரமும் நிலாவும் விளையாடுவது கவிதை. எல்லா குழந்தைகளும், சிறு வயதில் ,உலகத்தை அறிந்து கொள்ளும் ஆர்வம் வருகையில், பார்ப்பதை எல்லாம் காட்டி “அது என்ன”, “இது எப்படி” என்று கேள்விகள் கேட்டு துளைத்து எடுக்கும். நானும் இருந்திருக்கிறேன். நீங்களும் இருந்திருப்பீர்கள். இது இயற்கை. அதே போல் இந்த குழந்தையும், இன்னொரு குழந்தையான கிருஷ்ணாவிடம் கேள்வி கேட்கும் போது வரும் பதில் எப்படி இருக்கும்? “அந்த மரம் ஏன்பா பெருசா இருக்கு?”. “ஏன்னா அவங்க அப்பா பெருசா இருக்குல்ல”. “காக்க என்பா கறுப்பா இருக்கு?” “ஏன்னா அது வெயில்லையே சுத்துது இல்ல அதான்”…. வாவ் ப்ரில்லியன்ட் விஜய்.. ப்ரில்லியன்ட்!!!!

    இயக்குனரின் இன்னொரு புத்திசாலித்தனம் உள்ள காட்சி சொல்ல வேண்டும் என்றார். நாசரின் ஜூனியர், ரெஸ்ட் ரூமில், யுரிநெல்சில், சிறு நீர் கழித்தவாறு நாசர் பேசுவதை ஒட்டு கேட்பார். சந்தேகம் வரமால் இருக்க, அவர்கள் பேசும் போது “போவதை” நிறுத்தியும், அவர்கள் அமைதி ஆகும் போது “போவதை” தொடருவதும் பின்னணி சப்தத்தில் உணர்த்தி இருப்பார்கள். இந்த சின்ன விஷயத்திற்கு கூட மெனக்கெடல்!

    இப்படத்தை பற்றி ஏகப்பட்ட விமர்சனங்கள் இணையத்திலும், மீடியாவிலும் உலவுகின்றன. அது அனைத்தையும் உற்று கவனித்தால் அது இந்த படத்தின் உருவாக்கத்திலாகத்தான் இருக்குமே தவிர இந்த படத்தின் தரத்தில் இருக்காது.  விக்ரமையும், சாரவையும் கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள்.  குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது இத்திரைப்டத்திற்கு நிச்சயம். ஆனால் அது அந்த குழந்தை சாராவிற்கா அல்லது விக்ரமிற்கா என்று தான் தெரியவில்லை.  மொத்தத்தில் தெய்வத்திருமகள் கண்டிப்பாக ஒவ்வொருவரும் தரிசிக்க வேண்டியவள்.

    சகோதர சேலம் நகரங்களை இணைப்போம் வாரீர்!

    சேலம்  டூ சேலம்: உலகில் உள்ள அனைத்து சேலம் நகரத்தையும் இணைக்க நட்பு பாலம் அமைப்போம் வாரீர்.

    நம் நகரம் போலவே, சேலம், அமெரிக்காவில் 24 பிற மாகாணங்களிலும் உள்ளது. அது மட்டுமில்லாமல், சேலம் என்று பெயரிடப்பட்ட நகரங்கள்  ஸ்வீடன், ஜெர்மனி, மற்றும் தென் ஆப்பிரிக்காவிலும் கூட உள்ளது. மற்றுமொரு சுவாரசியமான  தகவல் என்னவென்றால், அமெரிக்காவில் ஒரிஜான் மாகாணத்தில், நம் தமிழகத்தின் மதராஸ்( தற்போது சென்னை) போலே மற்றொரு நகரும் பெயர் கொண்டுள்ளது.

    1960இல் அமெரிக்காவின் ஒரிஜான் மாகாணத்தின் நூலகரும், ரோட்டரி சங்க உறுப்பினருமான திரு ஹக் மாரோ, மற்றும் தமிழக சேலத்தில் நன்கு அறியப்பட்ட நூலகரான டாக்டர் புஸ்நாகி ராஜண்ணன் இருவரும் சேர்ந்து இரு நகரங்களை இணைக்க “சகோதர நகரம்” திட்டத்தை நடைமுறை படுத்த முற்பட்டனர்.

    1962இல் டாக்டர் ராஜண்ணன்  அமெரிக்காவின் ஒரேஜான் மாகாணத்தில் உள்ள சேலத்திற்கு சென்ற போது அங்குள்ள ரோட்டரி உறுப்பினர்களும், நகர முக்கியஸ்தர்களும், செனட்டர்கள், மற்றும் ஓரிகான் மாநில கவர்னரரும்அவரை வரவேற்று உபசரித்தனர். தனது விஜயத்தின் போது, டாக்டர் ராஜண்ணன் அமெரிக்க சேலத்தில் ஆற்றிய தனது உரையில் இரு நகரங்களையும் இணைக்கும் முக்கியத்துவத்தை தெரிவித்தார்.

    salem sister cities
    இந்த கூட்டத்தில் இரண்டு நகரங்களும்  சகோதர நகரங்கள் என முறையாக அறிவிக்கப்பட்டது. 1964இல் அமெரிக்காவின் ஒரிஜான் மாகணத்தின் சேலம் மேயாரான திரு வில்லராட் சி மார்ஷல் தனது குடும்பத்துடன் தமிழ்நாட்டில் உள்ள சேலத்திற்கு வருகை புரிந்தார். அப்போது இங்குள்ள ரோட்டரி சங்க உறுப்பினர்கள், பொது மக்கள், கலெக்டர், நகராட்சி தலைவர் மற்றும் நகர கவுன்சிலர்களின் உட்பட முக்கிய அதிகாரிகள் அனைவரும் அவரை வரவேற்றனர்.

    அவர் அமெரிக்க திரும்பிய பிறகு “சகோதர நகரங்கள் ஒருங்கிணைப்பு குழு” ஒன்றை அங்கு தொடங்கிவைத்தார். அதன் பிறகு, நம்முடைய சேலத்தின் தொழிலதிபரும், ரோட்டரி சங்க உறுப்பினருமான ஜே.ஆர்.மெஹதா நம் சகோதர நகரமான ஒரிஜான் மாகணத்தின் சேலத்திற்கு சென்று அவர்களின் விருந்தோம்பலை ஏற்று அவர்களிடம் நம் நல்லெண்ணங்களை தெரிவித்துவிட்டு வந்தார்.

    எதிர்பாராவிதமாக இந்த பயணங்களுக்கு பிறகு சகோதர நகர திட்டத்தை  தொடர முடியாமல் போயிற்று. ஆதலால் டாக்டர் பி.ராஜண்ணன் அவர்கள் தமிழக சேலத்தையும் மற்ற சேலத்தையும் இணைக்க ஏற்படுத்தப்பட்ட முயற்சி ஒரு முன்னோடியாக இருக்கிறது.

    இப்போது, கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக, முன்னால் சேலம்வாசி, தர்மபுரி திரு கே.பால சுந்தரம் அவர்கள், உலகில் உள்ள அனைத்து சேலம் நகரங்களை இணைப்பதை தனது வாழ்நாள் நோக்கமாக கொண்டு அதற்காக முழு ஈடுபாட்டோடு முயற்சி எடுத்துக்கொண்டு இருக்கிறார்.  1963 முதல், அவர் சர்வதேச-சகோதர-நகர அமைப்பு (www.sister-cities.org) மற்றும் மக்களுடன்-மக்கள் தொடர்பு (www.ptpi.org) அமைப்புடன் இணைந்து இந்தியா மற்றும் அமெரிக்கா சேலத்தின் உள்ளூர் பத்திரிகைகளில் அவரது எழுத்துக்களின் மூலம் இந்த பணியை செய்து கொண்டு இருக்கிறார்.

    tim king

    அவரது இந்த முயற்சியின் பலனாக, அமெரிக்காவின் ஒரிஜான் மாகணத்தில் உள்ள சேலத்தின் பிரபல தொலைக்காட்சி நிருபரும், பத்திரிக்கையாளருமான திரு. டிம் கிங் அவர்களின் தொடர்பு கிடைத்தது. அவர் www.Salem-News.com  எனும் பிரபல இணையதளத்தின் நிறுவனரும் ஆவார்.

    அனைத்து சேலம் நகரங்கள் இணைக்க ஒருவருக்கொருவர் இடையிலான பரஸ்பர ஆர்வம் காரணமாக, திரு. டிம் கிங் அவர்களை தமிழக சேலத்திற்கு மரியாதை நிமித்தமாக விஜயம் செய்யவும், நம் நகரத்தை பற்றிய ஆவண படமொன்றை எடுக்கவும் அழைப்பு விடுத்து இருந்தார். இந்த ஆவணப்படம் ஒரிஜான் மாகணத்தின் சேலம் நகரம் உட்பட பிற மாநிலங்களான அலபாமா, ஆர்கன்சாஸ், கனெக்டிகட், இல்லினாய்ஸ், இண்டியானா, அயோவா, கென்டக்கி, மாஸ், மிசவுரி, நியூ ஹாம்ப்ஷயர், நியூ ஜெர்சி, நியூயார்க், ஓகியோ, தென் கரோலினா, உட்டா, விர்ஜினியா, மேற்கு வர்ஜீனியா, விஸ்கான்சின், மிச்சிகன், மினசோட்டா, பென்சில்வேனியா, வட கரோலினா, ஒன்டாரியோவில் உள்ள அனைத்து சேலம் நகரங்களிலும் திரையிட திட்டமிடபட்டுள்ளது.

    praveen bala arasu

    இந்த முயற்சியை ஆதரித்து, அவருக்கு உறுதுணையாக www.Salemjilla.com இணையதள நிறுவனரும், இணைய தொழில்முனைவருமான திரு.பிரவீன் குமார் அவர்களும் மற்றும் சேலம் லீ பஜாரில், விதை ஏற்றுமதி இருக்குமதி செய்துவரும் ஆறுமுக பண்டாரம் நிறுவனத்தின் தொழிலதிபருமான திரு. திருநாவுக்கரசு அவர்களும் திரு.கே.பால சுந்தரம் அவர்களோடு இணைத்து உள்ளனர். இதில் முதல் கட்டமாக அமெரிக்க ஒரிஜான் மாகணத்தின் பிரதிநிதியாக திரு.டிம் கிங் அவர்களை அழைக்க ஒரு குழுவை அமைக்கும் வேலை தொடங்கப்பட்டு உள்ளது.

    இந்த முயற்சி மூலம் அமெரிக்க மற்றும் இந்திய சேலம் மக்களின் நட்புறவும், ஒத்துழைப்பு ஊக்கபடுவது மட்டுமல்லாது அனைவருக்கும் இடையே தொழில் முறை தொடர்பு கொள்ளவும், திறமையை உருவாக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இதன் நோக்கமே சேலம் நகரம் உள்ள அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, ஜெர்மனி மற்றும் ஸ்வீடன் போன்ற நாடுகளில் உள்ள இதே எண்ணங்கள் உடைய மக்களையும், நிறுவனங்களையும் தொடர்பு ஏற்படுத்தி இணைப்பதேயாகும்.

    இந்த நோக்கம் நிறைவேற உருவாக்கப்படும் குழுவில் இதில் ஈடுபாடு இருக்கும் தனி நபர்களும், தொழிலதிபர்களும், நிறுவனங்களும் யார் வேண்டுமாலும் இணையலாம். இந்த குழுவின் மூலம் திரு டிம் கிங் அவர்கள் வந்து செல்வதற்கான நிதியை திரட்டவும், அவருடைய சேவையை முடிந்தவரையில் பயன் படுத்தி நம்முடைய சேலத்தை பற்றிய ஆவணப்படங்களை மற்ற சேலத்தில் திரையிடப்படவும் முயற்சி மேற்கொள்ளப்படும்.

    இந்த ஆவணப்படத்தில் நம் சேலத்தின் வரலாற்றையும், கலாச்சாரத்தையும், பலதரப்பட்ட தொழில் சமூகங்களும், பல்வேறு தொழில் நிறுவனங்களும், கல்வி நிறுவனங்களும், சுற்றுலா தளங்களும், அருங்காட்சியகம், கலை மற்றும் விளையாட்டுகளும் பதிவு செய்யப்படும். இந்த திட்டத்திற்கான முயற்சி லாப நோக்கமற்று, வியாபார நோக்கமற்று முற்றிலும் நம்முடைய சேலத்தை சர்வதேச அளவில் எடுத்துச்சென்று உலக மக்களிடைய நட்புக்கொள்ளச்செய்வதே ஆகும். இது நிச்சயம் வணிக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் வெளி உலகில் இருந்து ஒத்துழைப்பு பெற்று பயன்பெற உதவும்.

    sister cities international

    இதில் இணைத்து பணியாற்ற நம்முடைய சேலத்தில் ஆர்வம் உள்ள மக்கள், நிறுவனங்களை வரவேற்கிறோம். தொடர்பு கொள்ள திரு.அரசு மொபைல்: 9443247822 மின்னஞ்சல்: vaparasu@gmail.com, திரு பிரவீண்: 9894834151 மின்னஞ்சல்: praveen @ salemjilla.com
    திரு.பால சுந்தரம். மொபைல்: 95 246 59 164 மின்னஞ்சல்: kbsundram@yahoo.co.in இதற்கு கிடைக்கப்பெறும் ஆதரவு மற்றும் பதிலை பொறுத்து, குழு அமைத்து இந்த திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல கூட்டம் ஏற்பாடு செய்யப்படும்.

    மடிகணினி வாங்கும் முன்னர் முக்கியமாய் யோசிக்க வேண்டியது

    things before buying laptop

    “லாப்டாப் வாங்கலாம்னு முடிவு பண்ணி இருக்கேன் ஆனா எந்த கம்பனி லாப்டாப் வாங்கறதுன்னு தெரியல”. “வாங்கும்போது நிறைய இலவசம் கொடுத்தானுங்கப்பா பின்னால பிரச்சனைன்னு போனா கண்டுக்கவே மாட்டேங்கறாங்க”. இது எப்போதும் லாப்டாப் எனும் மடிகணினி வாங்குபவர்களும், வாங்கியவர்களும் அடிக்கடி புலம்பும் வார்த்தைதான்.  அவர்களுக்கு உதவும் வண்ணம் என் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளவே இந்த இடுக்கை.

    எல்லா கம்பனியிலும் நாம் தேவைப்படும் கான்பிகுரேசனில் மடிகணினி வாங்கிவிடலாம் தானே. காசு இருந்தால் சந்தைக்கு வந்தவுடனே அந்த மாடலை வீட்டிற்கு வரவைத்து விடலாம் தானே என நாம் எண்ணலாம்.. அது சரி. ஆனால் மடிகணினி வாங்குவதில் நாம் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விதி ஒன்று இருக்கிறது. அது தான் “ஆப்டர் சேல்ஸ் சர்விஸ்” – After Sales Service.

    எவ்வளவு விலைகொடுத்து மடிகணினி வாங்குகிறோம் என்பது முக்கியமல்ல யாரிடம் வாங்குகிறோம் என்பது தான் முக்கியம். இல்லையேல் பின்னால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நாம் கொடுக்கும் விலை கொஞ்சம் கொஞ்சமாக அந்த மடிக்கணினியின் உண்மையான விலையை விட பல மடங்கு அதிகமாக இருக்கும். தெரியாமல் மாட்டிக்கொண்டால், தேவையற்ற பண விரயமும், நேர விரயமும், மன உளைச்சலும் தான் மிஞ்சும்.

    சாதாரண கணிப்பொறி என்றவுடன் நாம் கண்களை மூடிக்கொண்டு அசம்பெல் பண்ணி வாங்கி விடுகிறோம். குறைந்த பட்ஜெட் வைத்திருப்போருக்கு அதுவே சாலச் சிறந்த வழி. ஏதேனும் பாகம் பழுதடைந்தால் கூட விற்பன்னரே கியாரன்டியில் அந்த பாகத்தை மட்டும் மாற்றி வாங்கி தருவார். இல்லையேல் குறைந்த விலைக்கு அதனை தனியே வாங்கி, அதுவும் உடனே வாங்கி பொருத்திவிடலாம்.

    ஆனால் மடிகனினியில் இந்த எளிமை இல்லை. பிராண்டட் மடிகனினி தான் வாங்க முடியும். சாதாரண கணிப்பொறி போலில்லாமல் இது பழுதடைவதற்கான சாத்திய கூறுகள் மிக  அதிகமாக  இருக்கிறது. வெப்பம், தூசி, கீழே விழுதல்  இதுவே மூல காரணம். அப்படி ஏதேனும் பழுது ஏற்படின் அந்த பாகத்தை மட்டும் தனியே வெளியே வாங்கி நாம் மாற்ற முடியாது. ஒரிஜினல் பாகம் தேவை. இதற்கு அந்த கம்பனியின் உதவி வேண்டும். இங்கே தான் நாம் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

    சேலத்தின் என் நண்பர் ஒருவர். இவர் ஆப்பில் பிரியர் (இது திங்கற ஆப்பிள் இல்லைங்னா). இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆப்பில் மாக் மடி கணினிதான் வேண்டுமென ஒற்றை காலில் நின்று பெங்களூர் சென்று வாங்கி வந்தார். ஆப்பில்’னு பேரு வச்சா ஒரு நாள் அழுகி தானே தீர வேண்டும். அந்த ஒரு நாள் வந்தது. முக்கியமாக ஒரு வேலைக்காக அதை ஆன் செய்தார். ஆன் ஆக வில்லை. பல முறை முயற்சித்தும் பலனில்லை. என்ன செய்ய?

    தான் வாங்கிய அந்த ஆப்பிள் ஸ்டோருக்கு அலைபேசியில் அழைத்தார். அவர்கள் போனில் சொன்ன சில முறைகளை கையாண்டு பார்த்தார். பலனில்லை. சேலத்திலும் ஆப்பிள் சர்விஸ் சென்டர் இல்லை. உடனே எடுத்துக்கொண்டு ஓடினார் பெங்களூருக்கு.. ஒரு சின்ன பழுதிற்கு. இன்னொரு நண்பர் ஒருவருக்கு தன்னுடைய காம்பாக் லாப்டாப் பழுதடைந்து இருந்தது. அதை சரி செய்வதற்கு அலையோ அலை என்று பல நாட்கள் அலையவைத்ததை நான் பார்த்து இருக்கிறேன்.

    இப்படி நிலைமை இருக்கும் இருக்கும் பட்சத்தில், மடிகணினியையே தினமும் சார்ந்து தொழில்/வேலை  என்னை போன்றோர்களுக்கு அது பெரிய பிரச்னையாகவே இருந்தது. ஏதேனும் பழுது ஏற்படின் எங்கேனும் எடுத்துக்கொண்டு ஒடுவதில் எனக்கு இஷ்டமில்லை. அதே சமயம் பழுதடைந்த பாகத்தை மாற்ற ஓரிரு நாளுக்கு மேல் ஆகக்கூடாது.  இரு வருடங்களுக்கு முன்னர் நான் என் முதல் மடிக்கணினியை வாங்கும்போது எனக்குள் உள்ளுக்குளே ஓடிக்கொண்டு இருந்த கேள்வி அது தான். ஆப்பில் மாக் புக், ஹெச்.பீ, டெல், விப்ரோ, சோனி, லெனோவா, காம்பாக், ஆசுஸ் போன்ற கம்பனிகளில் யார் சிறந்த சேவை வழங்குபவர்கள்?

    பல கட்ட இணைய தேடலிற்கு பிறகு அன்று நான் எடுத்த அந்த முடிவு மிகச்சிறந்த முடிவாகவே நான் இப்போது கருதுகிறேன். இந்த மூன்று வருடங்களில் மட்டும் பல முறை எனக்கு தொலைபேசியில் அந்த மடிகணினி கம்பனியின் உதவி தேவைப்பட்டு இருக்கிறது, பல முறை  அது பழுது பார்க்கப்பட்டு உள்ளது. பல முறை பாகம் மாற்றப்பட்டும் உள்ளது.

    ஐம்பத்தி ஐயாயிரம் விலை போட்டு வாங்கிய என் மடி கணினியிற்கு இது வரை லச்சரூபாய்க்கு மேலே மதிப்புள்ள அளவிற்கு பாகங்கள் மாற்றப்பட்டு உள்ளது. எல்லாம் என் இருப்பிடத்தில் இருந்தே..  அதுவும் இலவசமாக. என்ன நம்ப முடியவில்லையா? ஏன், எதற்கு, எப்படி? அடுத்த பதிவில்…